லேபிள்கள்

சனி, 9 ஜனவரி, 2016

நீரும்... ஆரோக்கிய வாழ்வும்...


நீர் இன்றி அமையாது உலகு. நம் அன்றாட வாழ்வில் குளிப்பது, துவைப்பது, சமைப்பது என நீரின் அவசியம் என்ன என்பது நமக்குத் தெரியும். ஆனால், நம் ஆரோக்கியமான வாழ்வுக்கு நீரின் அவசியம் பற்றிய விழிப்பு உணர்வு போதுமான அளவு இல்லை. 'ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்?' என்ற ஒரு கேள்விக்குக் கூட நம்மில் பலராலும் எளிதில் பதில் சொல்ல முடியாது. தனி மனித ஆரோக்கியத்தில் தண்ணீர், எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி சிறுநீரகவில் மருத்துவர் சேகரிடம் கேட்டோம்.

'நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் நீரைச் சார்ந்தே உள்ளன. நம் உடலில் 60 சதவிகிதம் நீர்தான் உள்ளது. உடலில் நீரின் அளவு மாறுபடும்போது, அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் 85 சதவிகிதம் நீர்தான் உள்ளது. அதனால்தான் உணவைக் காட்டிலும் நீர் மிகவும் அவசியமானது என்கிறோம். 

சுவாசம், வியர்வை, சிறுநீர், செரிமானம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளால் நீர் இழப்பு ஏற்படுகிறது. இதைச் சரிக்கட்ட, இந்தச் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க, அன்றாடம் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். நீர்ச் சத்து அதிகம் உள்ள காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவு செரிமானம் ஆக, செரிமானத்தில் இருந்து ஊட்டச் சத்துக்கள் கிரகிக்க, உடலின் வெப்பநிலையைத் தக்கவைக்க, சீரான ரத்த ஓட்டம் இருக்க, செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவு சென்று சேர, திசுக்களில் உருவாக்கப்படும் நச்சுக்களை வெளியேற்ற என நீரின் பயன்பாடு நீண்டுகொண்டே செல்லும். 

உடலில் போதுமான நீர்ச் சத்து இல்லை என்றால், ஏற்படக்கூடிய மிக மோசமான பிரச்னை, டிஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு. நீரிழப்பால், மூட்டு, வயிறு, முதுகுப் பகுதியில் வலி என உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பை உண்டாக்கி, மனநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். சரியான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளவில்லை எனில், அது நம்முடைய உடலின் முழு இயக்கத்தையும் பாதிக்கும்.

ஒவ்வொருவரின் உடல் உழைப்பைப் பொருத்து, நீரின் தேவை அமையும். ஆரோக்கியமான வாழ்வுக்கும், அன்றைய தினத்தை நல்லபடியாகக் கடப்பதற்கும் ஒரு நாளைக்கு, இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. 

நாம் வசிக்கும் பகுதி வெப்ப மண்டலம் என்பதால், இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் (எட்டு கிளாஸ்) தண்ணீர் என்பது கட்டாயம். போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறோமா என்பதை, சிறுநீரின் நிறத்தைக் கொண்டே முடிவு செய்துவிடலாம். 

சற்று மங்கலான வெள்ளை நிறத்தில் சிறுநீர் இருந்தால், போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறோம் என்று அர்த்தம். 

மஞ்சள் நிறத்தில், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், நாற்றத்துடன் இருந்தால், இன்னும் அதிக அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.

நீர்ச் சத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?
காலையில் எழுந்ததும், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், தூங்கச் செல்வதற்கு முன்பும் தண்ணீர் அருந்த வேண்டும்.

 உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன்பு, செய்து முடித்த பிறகு தண்ணீர் அருந்த வேண்டும்.

தாகம் எடுக்கிறதோ, இல்லையோ, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

 சாப்பிடுவதற்கு முன்பு, பயணத்தின்போது தண்ணீர் குடிக்க வேண்டும்.
 தொடர்ந்து தண்ணீர் குடிக்கப் பிடிக்கவில்லை என்றால், தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறுவிட்டு அருந்தலாம். புத்துணர்வு கிடைக்கும். 

நீர்ச் சத்து நிறைந்த காய்கனிகள்
 வெள்ளரிக்காயில், 96 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது. சுரைக்காய், முள்ளங்கி, செலரியில் 95 சதவிகிதமும், தக்காளியில் 94 சதவிகிதம், முட்டைக்கோஸில் 93 சதவிகிதம், காலிஃபிளவர், சிவப்பு கோஸ், கீரையில் 92 சதவிகிதமும் நீர்ச் சத்து உள்ளது.

 தர்பூசணி, ஸ்ட்ராபெரி பழங்களில் 92 சதவிகிதமும், திராட்சையில் 91 சதவிகிதம், அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் 88 சதவிகிதமும், ஆப்பிளில் 84 சதவிகிதம், வாழையில் 74 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது.

பச்சைக் காய்கறி, பழங்களை ஒரு நாளைக்கு ஐந்து கப் வீதம் எடுத்துக்கொள்ளலாம். இது புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும். உடலில் நீர்ச் சத்தை நிலைத்திருக்கச் செய்யும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts