ஈமானின் அடிப்படைகள்
எமது ஆத்மா இறைவனுடன் சிறந்ததொரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்ற விதத்திலும், மறுமையில் நாம் நிச்சயமாக நமது இறைவனைச் சந்திப்போம் என்பதில் அசையாத அழுத்தமான நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலும், மறுமையில் இறைவனைச் சந்திக்கும்போது, 'நாம் இவ்வுலகிற் செய்த எல்லாச் செயல்களுக்கும் அவனிடத்தில் உரிய விளக்கம் தந்தாக வேண்டும்' என்ற உறுதியை உள்ளத்தில் ஏற்படுத்துகின்ற விதத்திலும் நம்பிக்கையை நம்முள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கை நமது ஆத்மாவில் ஊடுருவி நமது சொல், செயல் அனைத்திலும் வெளிப்பட வேண்டும்.
ஈமானின் அடிப்படைகள் 6 உள்ளன. அவற்றை யொரு மனிதன் விசுவாசங்கொண்டு, அவற்றை மேலும் உறுதிப்படுத்தக் கூடியதாகத் தனது செயல்களை மாற்றிக் கொள்ளும்போதுதான் ஈமானின் ஒளி வாழ்க்கையிற் பிரகாசிக்கத் தொடங்கும். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஈமான் பற்றிக் கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்துள்ள பதிலிற் கீழ்க் காணும் 6 அம்சங்களும் இடம்பெறுகின்றன. அவை:
1. அல்லாஹ்வை நம்புதல்
2. அவனுடைய மலக்குகளை (வானவர்களை) நம்புதல்
3. அவனுடைய வேதங்களை நம்புதல்
4. அவனுடைய தூதர்களை நம்புதல்
5. மறுமையை நம்புதல்
6. விதியின்படியே நன்மை, தீமை யனைத்தும் ஏற்படுவதை நம்புதல்
(ஆதாரம்: முஸ்லிம்)
இறை நம்பிக்கை
அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்; படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது; அவனுக்கு நிகராகவோ துணையாகவோ யாருமில்லை; வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன்தான்; அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள், பண்புகள் உள்ளன (என்ற இறை நம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயிலூடாகவே இஸ்லாத்தின்பாற் பிரவேசிக்க வேண்டும். அவனைப்பற்றி அல்-குர்ஆன் மிகச் சிறந்த அறிமுகம் தருகின்றது.
الْحَيُّ الْقَيُّومُ
(அல்லாஹ் நித்திய ஜீவன்) – என்றென்றும் வாழ்பவன் (அல்-பகறா: 255).
كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ
அவனது திருமுகத்தைத் தவிர மற்ற அனைத்தும் அழியக்கூடியவையே (அல்-கஸஸ்: 88). அவனுடைய ஆட்சி யதிகாரத்திற் பங்கு கொள்ளுமளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்குந் தகுதியில்லை.வானவர்கள்
அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது ஈமானின் இரண்டாவது அம்சமாகும். கண்களுக்குப் புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனுடைய அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது.
இவர்களுள் பிரதானமானவரது பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும். இவரது பொறுப்பு இறைச் செய்தியை இறைத் தூதர்களிடங் கொண்டுவந்து சேர்ப்பதாகும். இன்னும் பல முக்கியமான வானவர்கள் உள்ளனர். இவர்களது எண்ணிக்கையை யறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.
வேதங்கள்
அல்லாஹ் உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு கால கட்டங்களில் தனது வழிகாட்டல்கள் அடங்கிய வேதங்களை அருளியிருக்கிறான். அவற்றிற் சில வேதங்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:
¨ நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட தௌறாத்
¨ நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட ஸபூர்
¨ நபி ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட இன்ஜீல்
¨ நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்-குர்ஆன்
ஒவ்வொரு முஸ்லிமும் மேற்கூறப்பட்ட வேதங்களை அவற்றின் பெயர்களோடும் அல்லாஹ்வால் அருளப்பட்ட ஏனைய வேதங்களைப் பொதுவாகவும் நம்பிக்கை கொள்ளவது இஸ்லாத்தில் இறை நம்பிக்கை சார்ந்த மூன்றாவது அம்சமாகும். இவ்வாறு அல்லாஹ் அருளிய அனைத்து வேதங்களிலும் இறுதியானது அல்-குர்ஆனாகும். இதில் முந்திய எல்லா வேதங்களுடைய சாராம்சங்களும் அடங்கியுள்ளன.
எனவே, யாராவது அல்-குர்ஆனைத் தனது வேத நூலாக ஏற்றுப் பின்பற்றினால் அவர் முந்திய வேத நூற்களையும் ஏற்றவர் ஆகின்றார். இதன்படி முன்னைய வேதங்கள் நம்பிக்கைக்கு உரியனவாகும்போது அல்-குர்ஆன் நம்பிக்கைக்கும் நடைமுறை வாழ்விற் பின்பற்றுவதற்கும் ஏற்றதாக அமைந்துவிடுகிறது. முழு உலகத்துக்குமுரிய பொது வேத நூலாகத் திகழ்வது அல்-குர்ஆனின் தனித்துவமாகும்.
இறைத் தூதர்கள்
வேதங்களைத் தெளிவாகப் புரிந்து அவற்றுக்கேற்ப வாழ்ந்து ஈருலக நற்பயன்களைப் பெறுவதெப்படி என்பதைக் கற்றுக்கொடுத்து அதற்கு முன்மாதிரியாக வாழும் மனிதர்களை அவர்கள் வாழ்ந்த சமுதாயங்களிலிருந்தே இறைவன் தோற்றுவித்தான். அவர்களையே இஸ்லாம் இறைத் தூதர்களென அறிமுகப்படுத்துகிறது. அல்லாஹ் கூறுகிறான்:
وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ
"அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நம்முடைய தூதர் வராத எந்தச் சமுதாயத்தினரும் பூமியில் இருக்கவில்லை" (அல்-பாதிர்: 24). இப்படித் தோன்றிய தூதர்களில் 25 இறைத் தூதர்களின் பெயர்களையே அல்-குர்ஆன் கூறுகிறது. இவர்களில் இறுதியானவர் முஹம்மத் (ஸல்) அவர்களாவர்.மறுமை நாள்
மறுமையை நம்ப வேண்டும் என்பது நம்பிக்கை சார்ந்த 5 ஆவது அம்சமாகும். இவ்விடயத்திற் கீழ்வரும் விடயங்களை நம்ப வேண்டும். அவையாவன:
¨ ஒரு நாளில் அல்லாஹ் முழு உலகையும் படைப்பினங்களையும் அழித்துவிடுவான். அந்நாளின் பெயர் 'கியாமத்' என்பதாகும்.
¨ பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அப்போது அனைவரும் அல்லாஹ்வுக்கு முன்னால் ஆஜராவார்கள். அதனை 'மஹ்ஷர்' என்றழைக்கப்படும்.
¨ எல்லா மனிதர்களும் தாம் உலகில் எதைச் செய்தார்களோ, அவை முழுவதுங் கொண்ட பட்டியல் இறைவனின் நீதி மன்றத்திற் சமர்ப்பணமாகும்.
¨ அல்லாஹ் ஒவ்வொருவருடையவும் நல்ல, கெட்ட செயல்களை நிறுத்துப் பார்ப்பான். நன்மை, தீமைகளுக்கேற்ப மன்னிப்பும் தண்டனையும் அளிப்பான். யார் மன்னிப்புப் பெறுகிறார்களோ, அவர்கள் சுவர்க்கம் செல்வர். யாருக்குத் தண்டனை வழங்கப்படுகிறதோ, அவர்கள் நரகம் செல்வர்.
விதி
இந்தப் பிரபஞ்சமும் இதிலுள்ள படைப்புக்கள் அனைத்தும் அணுவும் பிசகாது அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே இயங்குகின்றன என்பது இஸ்லாத்தில் இறை நம்பிக்கை சார்ந்த 6 ஆவது அம்சமாகும். மனிதனுடைய கற்பனைகள், கருத்துக்கள்கூட அல்லாஹ்வின் நிர்ணயத்துக்கு உட்பட்டவையே.
அல்லாஹ்வின் ஞானத்திற்குப் புறம்பாகவோ அவன் நிர்ணயித்த விதிமுறைகளுக்கு மாறாகவோ எதுவும் இயங்காது. இதன் கருத்து, மனிதன் சுதந்திரமாக இயங்குவதற்கான அறிவையும் ஆற்றலையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். அதே வேளை அவற்றிற் தன் விதிமுறைகளையும் வைக்க அவன் தவறவில்லை. இது அவனது ஆற்றலில், அறிவில், திறமையில் உள்ளதாகும்.
இதுவரை ஒரு முஸ்லிம் நம்ப வேண்டிய 6 அம்சங்களையும் சுருக்கமாக நாம் பார்த்தோம். இவற்றை உறுதியாக நம்புவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். எனவே, இவற்றை விசுவாசங்கொண்டு, அவ்விசுவாசத்தின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்வோமாக
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக