லேபிள்கள்

சனி, 19 ஜூலை, 2014

உங்க வீட்டுல ஏ.சி.இருக்கா..?

உங்க வீட்டுல ஏ.சி.இருக்கா..?





நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி, குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. விடிந்துவிட்டாலும் கூட, ஏ.சி. மெஷினை அணைக்க மனமில்லாமல், குதூகல தூக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலரும். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வந்த பத்திரிகை செய்தி, ஏ.சி-க்கார பார்ட்டிகளை எல்லாம் திகிலில் ஆழ்த்தியிருக்கிறது.

சென்னை, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீவள்ளி, முதல் நாள் இரவு தன் இரண்டு குழந்தைகளுடன், ஏ.சி. அறையில் தூங்கச் சென்றதுதான் தெரியும். மறுநாள் காலையில் அந்த வீட்டிலிருந்து புகை மட்டும் வந்து கொண்டிருக்க... ஆள் அரவம் எதையும் காணோம். அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து, கதவை உடைத்துக் கொண்டு போய் பார்த்தால்... ஸ்ரீவள்ளியும் அவர் மகனும் மயங்கிக் கிடக்க.. ஒன்றரை வயது பெண் குழந்தை மோனிஷா கட்டிலிலேயே பரிதாபமாக இறந்து கிடக்க... இந்தக் காட்சியைக் கண்ட அத்தனை பேருமே அதிர்ந்துதான் போனார்கள்.


'ஏ.சி-யில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம்' என்று சொல்லியிருக்கிறது போலீஸ். இந்தச் செய்தியையும், புகைப்படங்களையும் பார்த்த பலரும், அந்தக் குடும்பத்துக்கு இரண்டு நிமிட அனுதாபத்தை வஞ்சகம் இல்லாமல் செலுத்திய அதேநிமிடம், 'ஆகா... ஏ.சி. மேல ஒரு கண் வெச்சிக்கிட்டேதான் தூங்கணும் போல...' என்று பதைபதைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எலெக்ட்ரானிக்ஸ் அயிட்டங்கள் என்றாலே எச்சரிக்கை தேவைதான். அதற்காக நிம்மதியான உறக்கத்தை தரும் ஏ.சி., உயிருக்கே உலை வைக்கும் சாதனமாக மாறுமா?
இந்தக் கேள்விக்கு... ஏ.சி. மெஷின்களைப் பொருத்துவது, பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்துவரும் சென்னையைச் சேர்ந்த 'ஃபெர்ஃபெக்ட் ஏ.சி. சர்வீஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் மைக்கேல் பதில் சொல்கிறார்...

''அந்தச் செய்தியை படிச்சதும் எனக்கும் திக்னு ஆயிடுச்சு. எரிஞ்சு போனது ஸ்பிலிட் ஏ.சி. எனக்கு தெரிஞ்சு, ஸ்பிலிட் ஏ.சி. கோளாறு காரணமா இப்படி ஒரு சோக சம்பவம் நடந்ததுங்கிறதே இதுதான் முதல் தடவை. ஸ்பிலிட் ஏ.சி-யில் மூணு விதமான ஒயர் கனெக்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அது சரியா பொருத்தப்படாம இருந்தா, ஒண்ணோட ஒண்ணு உரசி விபத்து நடந்திருக்கலாம். பொதுவா...

ஸ்பிலிட்டைவிட, விண்டோ ஏ.சி-யி லதான் பாதிப்பு அதிகம்'' என்று சொன்னவர், ஏ.சி. மெஷின்களை பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு டிப்ஸ்களை வாரி வழங்கினார்...

புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள். 1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.

உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்காதீர்கள். நல்ல விலையில் தரமானவற்றை வாங்குங்கள். ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். மலிவான விலைகளில் வாங்கினால், உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும். உதாரணத்துக்கு ஸ்பிலிட் ஏ.சி. 1.5 டன் எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும்.

ஏ.சி. வாங்கும்போது இலவசமாகக் கொடுக்கப்படும் ஸ்டெபிலைசர்கள் தரம் குறைந்தவையாக இருக்கக் கூடும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்குங்கள்.

எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு
போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனாலும் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரியில் ஏ.சி-யை கொண்டு போகாதீர்கள்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும்.

ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி, சீக்கிரத்தில் மெஷினை ரிப்பேராக்கிவிடும்.

நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள். ஃபேன் காற்று, ஏ.சி காற்றை திசை திருப்பி விடும். ஏ.சி காற்று வருவதற்கு சரியான ஃப்ளோ கிடைக்காது.

27 டிகிரியிலும், நல்ல குளுமையை தரக்கூடிய ஏ.சி.தான் தரமானது. 27 டிகிரியில் வைக்கும்போது மூச்சு திணறுவதுபோல் உணர்ந்தால், அந்த ஏ.சி. சரியாக சர்வீஸ் செய்யப்படாததாக இருக்கலாம்.

ஸ்பிலிட் ஏ.சி. எனில் அறையை முழுவதையும் மூடிவிடக்கூடாது. கதவுக்கு அடியில் இருக்கும் வழியிலாவது காற்று போகும் அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும். சிறிய துவாரமாவது போட்டு வையுங்கள். இதனால் ஒரு நாளைக்கு ஒரு யூனிட் கரன்ட் மட்டுமே கூடுதலாகச் செலவாகும்.

உங்கள் ஏ.சி. கூலாக இல்லையெனில் உடனடியாக சர்வீஸ் ஆட்களை அழைத்து, மெஷினில் கேஸ் போதுமான அளவோடு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நிரப்பச் சொல்லுங்கள்.

ஏ.சி. மெஷின்களைப் பொறுத்தவரை எவாபிரேட்டர் காயில், கண்டன்ஸர் காயில், ஏ.சி. மெஷினுடைய ஃபேன் இந்த மூன்றும் மிகவும் முக்கியம். இந்த பாகங்கள் சுத்தமாக வேலை செய்கின்றனவா என்பதை கண்காணித்துக் கொண்டே இருங்கள். இவை மூன்றும் சரியாக வேலை செய்தாலே மின்சாரம் வீணாகாமல் இருக்கும்.

ஏ.சி-யை வாங்கும்போது அதுபற்றிய டெக்னிக்கலான விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டும். இதனால், ஏ.சி. சர்வீசுக்கு வருபவர்கள் மேலோட்டமாக சரி செய்வதையும் நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். சர்வீஸ் ஆட்கள் வந்தால் கூடவே இருந்து கவனிப்பது உங்கள் ஏ.சி. மெஷினுக்குப் பாதுகாப்பானது.
பின்குறிப்பு: 'ம்.. வேப்ப மரத்துக் காத்து... கயித்துக் கட்டிலு இதுக்கெல்லாம் ஈடாகுமா இந்த ஏ.சி.' என்று கிராமங்களில் இன்றைக்கும் காற்றாடத்தான் தூங்குகிறார்கள். வீடு கட்டும்போதே காற்று எளிதாக வந்து போகும் வகையில் அமைத்துவிட்டால்... ஏ.சி-யாவது... கீசியாவது!

''ஏ.சி. கோளாறுக்கு நிவாரணம் உண்டு!''
''புதிதாக ஏ.சி. வாங்குகிறோம். அது ஆரம்பத்தில் நன்றாக வேலை செய்கிறது. ஆனால், காலப்போக்கில் ஏதேனும் விபத்து கள் நேர்ந்தால், நுகர்வோர் நீதி மன்றத்தை நாடலாமா?'' என்று வழக்கறிஞர் பிரபாகரனிடம் கேட்டோம். அவர், ''ரைட் டு சேஃப்டி என்பது சட்டத்தில் நமக்காக உருவாக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்று. நீங்கள் ஏ.சி-யை பயன்படுத்தும்போது விபத்து ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்... அதற்கு, மின்துறையோ அல்லது ஏ.சி-யை தயாரித்த கம்பெனியோ காரணம் என்று உங்கள் தரப்பில் நிரூபிக்கப்பட்டால்... கண்டிப்பாக நிவாரணம் உண்டு. ஒரு பொருளை வாங்கும்போதே அதற்கான சேஃப்டியையும் அந்த நிறுவனம் தந்தாக வேண்டும்.
இதுபோன்ற விஷயங்களில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வாதாட வழக்கறிஞர்கள் தேவையெனில், அதை இலவசமாக ஏற்பாடு செய்து தருகிறது அரசு. சென்னையைப் பொறுத்தவரை உயர் நீதிமன்றத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணையம் என்ற ஒரு பிரிவு உள்ளது. அங்கே விண்ணப்பித்தால் வழக்கறிஞரை நியமிப்பார்கள். அவர்கள் மூலமாக அரசாங்கத்தைக்கூட எதிர்த்து வழக்குத் தொடரலாம்'' என்று சொன்னார்.


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

தேனை சூடாக்குவது அல்லது சமைப்பது பாதுகாப்பானதா?

நாம் சர்க்கரைக்கு மாற்றாக தேனைப் பயன்படுத்துகிறோம் , குறிப்பாக அதன் செழுமையான சுவை மற்றும் அமைப்புக்காக. ஆனால் தேனை சமைத்தால் அல்லத...

Popular Posts