லேபிள்கள்

திங்கள், 21 ஜூலை, 2014

தெனமும் தேனைக் குடிச்சாப் போதும்

தெனமும் தேனைக் குடிச்சாப் போதும்


''என்ன வாசம்பா, முகமெல்லாம் வாடிப்போயிருக்கு'' - அம்மணி அக்கறையாய் கேட்க,
 ''அன்னம்மா வீட்டுக் கல்யாணத்துல வேலை செஞ்சதோட அலுப்பு அம்மணி. மூணு நாள் தொடர்ந்து கல்யாண சாப்பாடு சாப்பிட்டது வயித்தை என்னமோ பண்ணுது.''  
''அதானே பார்த்தேன்... பந்தி பரிமாறினதுலேர்ந்து வெத்தலைப் பாக்கு கொடுத்து வழி அனுப்பற வரைக்கும் அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டு செஞ்சேல்ல... அதான் இப்பிடி.''
''உடம்புக்குத்தானே வயசு, தவிர மனசுக்கு இல்லையே. மலையே விழுந்தாலும் தலையால தாங்கணும் அம்மணி. அன்னம்மாவுக்கும் நம்மளைவிட்டா யார் இருக்கா?''

''சரி... சரி... கவலைப்படாதே. அய்யனாரு குடுத்த தேன் இருக்கிறப்ப, அலுப்பு, கொழுப்பு எல்லாமே ஓடிரும்டி. அத்தனையும் உடம்புக்கு சத்து. மனசோட உடம்பும் இளமையா இருக்க, தெனமும் தேனைக் குடிச்சாப் போதும். அதுலயும் நாப்பது வயசுக்கு மேல, தினமும் தேன் சாப்பிடறது ரொம்பவே நல்லது. படுத்த படுக்கையாக் கிடக்கறவங்க, பால்ல கொஞ்சம் தேன் கலந்து குடிச்சிட்டு வந்தா, சீக்கிரமே தெம்பாகி, சுறுசுறுப்பா எழுந்து நடக்க ஆரம்பிச்சிடுவாங்க. கொம்புத் தேன், மலைத் தேன், குறிஞ்சித் தேன்னு தேன்ல அறுபது வகை இருக்கு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்புக் குணம் இருக்கு வாசம்பா. தேன்ல இருக்குற சர்க்கரை ரத்த ஓட்டத்தை சீராக்குறதால உடம்புல களைப்பே தெரியாது.''

''குமட்டல், வாந்திகூட இருக்கே... அதுக்கு என்ன செய்றது?'' என்ற வாசம்பாவிடம், ஒரு ஸ்பூன் தேனில், எலுமிச்சம் பழச்சாறு பிழிந்துவிட்டு தண்ணீர் சேர்த்துக் கொடுத்த அம்மணி, ''வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலைவலினு எல்லாமே சரியாப்போயிரும்'' என்றதும் வாங்கிக் குடித்தாள் வாசம்பா.

''தேன் உடம்பு எடையைக்கூட குறைக்கும்னு சொல்றாங்களே, அது உண்மையா அம்மணி?''

''தேன், கொழுப்பைக் கரைச்சிடும். தேன்ல வெந்நீர் கலந்து குடிச்சா, பருத்த உடம்பு மெலிஞ்சு, ஊளைச்சதை குறைஞ்சு உடல் உறுதியாகிரும். இஞ்சியை சாறு பிழிஞ்சு தேன் விட்டுக் கலந்து சூடுபடுத்திட்டு, ஆறவைக்கணும். இதுகூட வெந்நீர் கலந்து, காலைச் சாப்பாட்டுக்கு முன்னால ஒரு கரண்டியும், சாயாங்காலம் ஒரு கரண்டியும் குடிச்சிட்டு வந்தா, 40 நாள்ல தொப்பை கரைஞ்சிடும். வெங்காயச் சாறுல, தேன் கலந்து சாப்பிட்டா கண்பார்வை பிரகாசமாத் தெரியும். பார்லி கஞ்சியை வடிகட்டி, அதுல தேன் கலந்து குடிச்சா, இருமல், சளித் தொல்லை, நுரையீரல் சம்பந்தமான நோய் எல்லாம் ஓடிருடும். வயித்துப் புண் இருந்தா, சாப்பாட்டுக்கு முன்னால ரெண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, சீக்கிரமே குணமாகும்'' என்றபடியே தேன் பாட்டிலை அலமாரியில் வைக்கப் போனவள், அது தவறிக் கீழே விழுந்து கையெல்லாம் வழிய, அதை அப்படியே நக்கத் தொடங்கினாள்.

''தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான்னு சொல்றது உன் விஷயத்துல சரியாத்தான் இருக்கு அம்மணி. நீ பேசுறதைக் கேட்கிறப்பவே காதுல தேன் வந்து பாயுது'' என்றாள் வாசம்பா.

''தேனை வீட்டுக்குக் கொண்டுவர்றதுக்குள்ளயும், வழியிலேயே நிறையப் பேர் கேட்டாங்க. அதோட மகத்துவத்தை சொல்லிச் சொல்லியே, மொத்தத்தையும் குடுத்திட்டேன். உனக்குக் குடுத்தது போக, இருந்த கொஞ்சமும் கொட்டிருடுச்சு. இருக்கிறதையாவது சாப்பிடுறேன்.''

''ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க. தனக்கு மிஞ்சித்தான் தானம் அம்மணி.'

''ஆசையுள்ளவன் அரை வைத்தியன் வாசம்பா. நலம் விசாரிக்கிறதே நல்ல வைத்தியனுக்கு அழகு.''
''நீ சொல்றதும் சரிதான் அம்மணி. தானமா வந்ததை நாம மட்டும் சாப்பிட்டா, வயித்துவலிதான் வரும்'' என்றாள் வாசம்பா.

''வயித்துவலி வந்தாக்கூட, தொப்புளைச் சுத்தி தேன் தடவினா வலி சட்டுன்னு சரியாயிரும். கருஞ்சீரகத்தை தண்ணீ விட்டுக் காய்ச்சி, அதுல தேன் கலந்து சாப்பிட்டுவந்தா, கீழ் வாதம் போயிரும்.''
''தேன்ல இவ்வளவு விஷயம் இருக்கா? என் எள்ளுப்பாட்டி, சின்ன வயசுல என் தம்பிக்குக் கட்டி வந்தப்ப, தேனோட சுண்ணாம்பைக் கலந்து குழைச்சு கட்டி மேல பூசினாங்க. கட்டி நல்லாப் பழுத்து ரெண்டே நாள்ல சரியாயிடுச்சு. இந்தக் காலத்துல மூட்டுவலி, கால்வலி, வீக்கம், கட்டினு டாக்டர்கிட்ட போனாலே, மருந்து மாத்திரைகளை அள்ளித் தர்றாங்க.'' 

''சரியாச் சொன்ன வாசம்பா. மூட்டு வலிக்கும் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நல்லாத் தேனைத் தடவி, தேய்ச்சுவிடணும். கூடவே சாப்பாடு சாப்பிடும்போது, ஒரு ஸ்பூன் தேனையும் சாப்பிட்டு வந்தா, மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது. ரொம்ப மாத்திரைகளைச் சாப்பிட்டா, குடல் வெந்துபோயிடும். அதுக்குக்கூட தேன் உதவியாயிருக்கு. மருந்தோட வீரியம் அதிகமா இருந்தா, தேனைப் பால்ல கலந்து குடிக்கலாம். குடல்ல ஏற்படுற பாதிப்புகளை நிறுத்திடும்.'' மூச்சுவிடாமல் சொல்லி முடித்த அம்மணியிடம், கல்யாணத் தோரணத்தில் கட்டியிருந்த வாழைப் பூவை நீட்டினாள் வாசம்பா. --
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

பெண்கள் சமையலறையில் கேஸ் அடுப்பு பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

கேஸ் அடுப்பை பயன் படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமானது. கேஸ் அடுப்பை கையாளும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற...

Popular Posts