லேபிள்கள்

புதன், 26 பிப்ரவரி, 2014

சாட்சி கையெழுத்து: நில்… கவனி… போடு!

சாட்சி கையெழுத்து: நில்கவனி போடு!


மீபத்தில் நில அபகரிப்பு புகாரில் மாட்டிக் கொண்டார் நண்பர் ஒருவர். யாரோ ஒருவர் போலியாக தயாரித்த ஆவணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டதுதான் நண்பர் செய்த தவறு. இதற்காக நீதிமன்றத்திலிருந்து அவரை விசாரிக்க அழைப்பு வர, நண்பரின் குடும்பமே மிரண்டு போனது. நல்லவேளையாக, அவருடைய வழக்கறிஞர் நண்பர்கள் சிலர் அவருக்குத் தைரியம் சொல்ல, நீதிமன்றத்திற்குச் சென்று, பதில் சொல்லிவிட்டு வந்தார். சாட்சி கையெழுத்து போட்ட இன்னொருவரோ, நீதிமன்ற விசாரணை என்றவுடன் ஊரை விட்டே ஓடிவிட்டார்.  

சாட்சி கையெழுத்து போடலாமா? கூடாதா? சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா? பிரச்னையில் மாட்டாமல் இருக்க வேண்டுமெனில் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பல கேள்விகளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

கையெழுத்து கட்டாயம்!

"சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டவர் இந்த நபர்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து.

 பதிவுத் திருமணம், பத்திரப் பதிவு, உயில் எழுதுவது, பாகப்பிரிப்பு பத்திரம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து போடுவார்கள். பொதுவாக குறைந்தபட்சம் இரண்டு சாட்சி கையெழுத்து வாங்குவது வழக்கமாக உள்ளது. சில ஆவணங்களில் சாட்சி கையெழுத்தைக் கட்டாயமாக வைத்துள்ளது சட்டம். உதாரணமாக, உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்.
 கட்டாயமில்லை!

சில ஆவணங்களில் சாட்சி கையெழுத்து வாங்குவது சட்டப்படி கட்டாயம் இல்லை என்றாலும், தொன்றுதொட்டு வந்த பழக்கத்தால் சாட்சி கையெழுத்து போடப்படுகிறது. இந்த ஆவணங்களில் சாட்சி கையெழுத்து இல்லையென்றாலும் அந்த ஆவணம் செல்லுபடியாகும். இதற்கு உதாரணம் புரோநோட். பொதுவாக புரோநோட்டில் சாட்சி கையெழுத்து வாங்குவது வழக்கம். ஆனால், சட்டப்படி புரோநோட்டில் சாட்சி கையெழுத்து இல்லையென்றாலும் செல்லு படியாகும். பாதுகாப்பிற்காக சாட்சி கையெழுத்து வாங்கப்படுகிறது.

 கேரன்டி Vs சாட்சி கையெழுத்து!

வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர்தான் அந்த கடனை திரும்பச் செலுத்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரன்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரன்டி கையெழுத்தின் சாராம்சம்.

 ஆனால், சாட்சி கையெழுத்து அப்படியில்லை. எந்த ஆவணமாக இருந்தாலும் அந்த ஆவணத்தை எழுதிக் கொடுத்தவர் எனக்கு முன்பாகதான் கையெழுத்து போட்டார் என்பதை ஊர்ஜிதப் படுத்த கையெழுத்து போடுவதுதான் சாட்சி கையெழுத்து. கேரன்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார்.
 சாட்சி கையெழுத்து போடும் போது அந்த ஆவணத்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவணத்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, உங்கள் வீட்டை போலியாக வேறு ஒரு நபர் விற்கிறார். அந்த ஆவணத்தில் சாட்சியாக உங்களிடமே கையெழுத்து வாங்குகிறார் எனில், நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டதனாலேயே அந்த வீட்டை விற்க நீங்கள் ஒப்புக் கொண்டதாக ஆகிவிடாது. நீங்கள் அந்த ஆவணத்தின் தரப்பினராக சட்டப்படி கருதப்பட மாட்டீர்கள்.
 ஆனால், சில விதிவிலக்கான நேரத்தில் சாட்சி கையெழுத்து போடுபவருக்குச் சிக்கல் வரவாய்ப்பிருக்கிறது. அதாவது, நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவணத்தில் கையெழுத்து போடுகையில் அந்த ஆவணத்தில் இருக்கும் தன்மை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, ஒரு தந்தை தனது மகளுக்கு ஒரு சொத்தை செட்டில்மென்ட் செய்து கொடுக்கிறார் எனில், அப்போது தனது மகனை அந்த செட்டில்மென்ட் டாக்குமென்டில் சாட்சியாக கையெழுத்து போட வைக்கிறார். இந்த சூழ்நிலையில் அந்த மகன், 'அந்த டாக்குமென்டில் இருக்கும் தன்மை எனக்கு தெரியாது' என சொல்வது நம்பும்படியாக இருக்காது.

என்ன சிக்கல் வரும்?

சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல் வரும்? தற்போது நில அபகரிப்பு மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஒரு நிலத்தை ஒருவர் பெயரிலிருந்து இன்னொருவர் பெயருக்கு விற்கும்போது அந்த நபர்கள் போடும் கையெழுத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் சாட்சி கையெழுத்து போடும் நபர் கையெழுத்து போடுவார். ஏதாவது பிரச்னை வரும்போது இந்த நிலத்தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல்லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது.அல்லது புரோநோட்டை எழுதி கொடுத்தவர் அதில் உள்ள கையெழுத்தை மறுக்கும்போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதிமன்றம் விசாரணைக்கு வரச் சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது. அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.

 எந்த விவரமும் தெரியாமல் ஒருவர் சாட்சி கையெழுத்து மட்டும் போட்டிருந்தால்  எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை சாட்சி கையெழுத்து போடுபவரும் போலி நில விற்பனைக்கு உடந்தையாக இருந்திருந்தால், பிரச்னைகளை சந்திக்க நேரிடும். போலியான ஆவணங்கள் தயாரிக்க சாட்சி கையெழுத்து போடுபவர்கள் உடந்தையாக இருந்துவிடாமல் கவனமாக இருப்பது நல்லது.
 நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற்பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும்!
நன்றி : vikatan.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts