லேபிள்கள்

திங்கள், 24 பிப்ரவரி, 2014

பிஸினஸை வளர்த்தெடுப்பது எப்படி

பிஸினஸை வளர்த்தெடுப்பது எப்படி

இப்படி ஒரு கேள்வி பலர் மனதிலும் இருக்கும். பால் ஹாவ்கென் என்பவர் எழுதிய 'குரோயிங் ய பிஸினஸ்' புத்தகம் இந்தக் கேள்விக்கான தெளிவான பதிலை நமக்குச் சொல்கிறது.
பால் ஹாவ்கென் எழுதிய இந்தப் புத்தகம் 1988-ல் வெளியானது. புத்தகம் வெளியாகி 25 வருடம் ஆனபோதிலும் இன்றைக்கும் புதிதாக பிஸினஸ் ஆரம்பிக்க நினைப்பவருக்கு மிகவும் உதவியாக இருக்கும் புத்தகம் இது.
அமெரிக்காவில் ஆண்டுக்கு 10 லட்சம் சிறிய நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றில் பல தோல்வியைச் சந்திக்கின்றது என்கிறது ஒரு புள்ளிவிவரம். இருப்பினும் ஜெயிக்கும் பல நிறுவனங்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்கிறது அதே புள்ளிவிவரம்.
அமெரிக்கா என்றில்லை; எல்லா நாடுகளிலும் சிறிய பிஸினஸ்கள் நிறைய வேலை வாய்ப்பை அள்ளித் தருகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆக, சிறிய அளவில் பிஸினஸ் ஆரம்பிப்பதை நாம் எந்தவகையிலும் இளக்காரமாக நினைக்கத் தேவையே இல்லை.
ஒரு பிஸினஸ் எப்படி பிறக்கிறது என்பதற்கு ஆசிரியர் தன்னுடைய அனுபவத்திலிருந்தே சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்கிறார். ஒவ்வாமையினால் வரும் ஆஸ்துமாவினால் அவதிப்பட்டு வந்த பால் ஹாவ்கென் தனது உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தால் பிரச்னை தீரும் என்று தெரிந்துகொண்டு, அவருடைய உடலுக்கு ஒவ்வாமை தரும் உணவுகளைத் தவிர்த்து இயற்கையான உணவுகளை வாங்கி உட்கொள்ள முடிவு செய்தாராம். இயற்கையான உணவு தேடி கடை கடையாக ஏறி இறங்க, எல்லாக் கடையிலும் ரசாயன உரங்கள்கொண்டு வளர்க்கப்பட்ட காய்கறிகளே கிடைத்தன. இயற்கையாக விளைவிக்கப்பட்ட பல  விளைபொருட்களை ஒரே இடத்தில் வைத்து விற்கிற மாதிரி ஒரு கடை இல்லையே! பேசாமல் நாமே அப்படி ஒரு கடையை ஆரம்பித்தால் என்ன என்று யோசித்ததன் விளைவுதான், பாஸ்டனில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட இயற்கை விளைபொருட்களுக்கான கடை.
'தொழில் சிறியதாக இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். கஸ்டமர்களுக்கும் சப்ளையர்களுக்கும் மிக அருகாமையில் இருந்ததால் மிகவும் பெர்சனல் டச்சுடன் இருந்தது பிஸினஸ்' என்று இயல்பாக தன் கதையைச்  சொல்ல ஆரம்பிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் பால் ஹாவ்கென்.
"வருடங்கள் உருண்டோட ஆரம்பித்தது. கம்பெனி நிறைய லாபம் பார்த்தது.  சில சமயம் நஷ்டமும் வந்தது. நிறைய தொழிலாளர்களை வேலைக்குச் சேர்த்தேன். லாரிகள் வாங்கினேன். கிளைகளைத் திறந்தேன். வேர்ஹவுஸ் மற்றும் குடோன்களைத் திறந்தேன். நிறையப் போட்டிக் கம்பெனிகளை உருவாக்கினேன் அதில் பலர் என்னுடைய முன்னாள் பணியாளர்கள்  - பலர் என்னுடைய நண்பர்கள். ஒரு நாள் என்னுடைய பிஸினஸ் திவாலும் ஆனது" என்று தன் வாழ்க்கைக் குறிப்பிலிருந்தே வெற்றி, தோல்விக்கான காரணங்களை எடுத்துச் சொல்லும் பால் ஹாவ்கென், பிஸினஸை வளர்ப்பது எப்படி என்பதைச் சொல்லித்தர சகலவிதங்களிலும் தகுதியானவர்.
தன்னுடைய பிஸினஸை விற்ற ஆசிரியர் பெரும்பாலான இளமைப் பருவத்தை பிஸினஸில் தொலைத்ததால் வேலைக்குப் போகலாமா என்று நினைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் வேலை வாய்ப்பு விளம்பரங் களைப் பார்க்க ஆரம்பித்தார். எல்லா கம்பெனிகளுமே வேலைக்கு வரும் நபர்களுக்கு வேலையில் முன்அனுபவம் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இவருக்கோ ஒரு தொழிலை நிறுவி நடத்திய அனுபவம் மட்டுமே இருந்தது. ஆனால், ஒரு விளம்பரம்கூட எங்களுக்கு ஒரு தொழிலை நிறுவி நிர்வகித்துத் தரவேண்டும் என்று சொல்லவில்லை. என்ன செய்வது! வேலைக்குப் போவதற்கான தகுதி எதுவும் இல்லாமல் இருக்கின்றோமே என நினைத்து வருத்தப்பட்ட பால் மீண்டும் தொழிலதிபராக மாறினார்.
இந்த முறை நேரடியாகத் தொழிலில் இறங்காமல் மறைமுக மாக இறங்கினார். உணவுப் பொருள், பப்ளிஷிங் மற்றும் வேஸ்ட் கன்வர்ஷன் துறைகளில் ஏற்கெனவே செயல்படும் மூன்று கம்பெனிகள் சிரமத்தில் இருந்தன. அதற்கு ஆலோசனை தந்து அந்த மூன்று நிறுவனங்களையும் மறுபடியும் லாபத்துடன் செயல்பட வைத்தார். அதன் பின்னர் ஸ்மித் அண்ட் ஹாவ்கென் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.
'முதன்முதலாக தொழில் ஆரம்பிக்கும்போது தொழில் ஞானம் ஏதுமில்லை எனக்கு. ஆனால், ஆரம்பித்தத் தொழில் என் கைக்குள்ளே இருந்தது. தொழில் ஞானம் பெறவேண்டும் என நினைத்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் படித்தேன். ஃபார்ச்சூன் 500 மேகஷினைப் படித்தேன். அவையெல்லாம் பெருந்தொழில்கள் பற்றிப் பேசின. நானோ சிறிய பிஸினஸ்மேன். ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூல் நடத்தும் பயிற்சிகளுக்குக்கூடச் சென்று பார்த்தேன். இவற்றிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட விஷயங்களையும் என்னுடைய பிஸினஸையும் இணைத்து ஒப்பீடு செய்து பார்த்தால், நான் பிஸினஸில்தான் இருக்கின்றேனா என்று எனக்கே சந்தேகம் வந்தது. அவர்கள் சொல்வதற்கும் நான் செய்வதற்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது.
நான் செய்ததோ சிறிய தொழில். அதை வளர்க்க நிறைய விஷயங்கள் தேவைப்படும். சிறுதொழிலை வளர்க்கவேண்டுமெனில், முதலில் உலகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவேண்டும்; அடுத்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது மற்றும் உங்களை மாற்றிக் கொள்வது என்பதற்கும் பெரும்பங்கு இருக்கிறது" என்று சிறுதொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை வளர்த்தெடுக்கத் தேவையான விஷயங்களை புட்டுப்புட்டு வைக்கிறார்  ஆசிரியர்.
இந்தப் புத்தகம் உங்களுக்கு சரியான மாற்று மற்றும் எதிர்மறை ஐடியாக்களைத் தரும் என்று சொல்லும் ஆசிரியர், உதாரணத்திற்கு ஒரு விஷயத்தை விளக்குகிறார்.
"புதிய பிஸினஸ்களில் பெரும்பான்மையானவை முதலீடு (கேப்பிட்டல்)  குறைவான காரணத் தினால் கஷ்டப்படும் என்பது பொதுவாக பல எக்ஸ்பர்ட்கள் சொல்லும் கருத்து. இது  தவறு என்கின்றார் ஆசிரியர். அதிகப் பணம் இருப்பதே ஒரு புது பிஸினஸிற்கு பிரச்னை என்கின்றார் அவர்.
அது மட்டுமல்ல, புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், கருத்தரங்குகளுக்குச் செல்வதன் மூலமும் புதிய பிஸினஸ் ஐடியாக்களை வேகமாகப் பெறலாம் என்று சொல்லும் ஆசிரியர், புதிய நூதனமான (இன்னோவேட்டிவ்) ஐடியாக்கள் அனுபவத்தினால் வருவதே, வெறும் படிப்பினால் மட்டும் வந்துவிடுவதில்லை என்கிறார்.
இறுதியாக ஒரு குட்டிக் கதையுடன் முடிகிறது இந்தப் புத்தகம். பிரிட்டனில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் உதவியாளராக வேலைபார்த்த ஒருவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. நீண்டநாள் வேலை பார்த்தபின்னர் சட்டதிட்டங்கள் மாறியதால் மூன்று மாதத்துக்குள் எழுதப்படிக்க கற்றுகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வேலையைவிட்டு அனுப்பிவிடுவோம் என்றார்கள்.
அவரால் அந்த மூன்று மாதத்தில் எழுதப் படிக்க கற்றுக்கொள்ள முடியவில்லை. மூன்றாவது மாதம் முடிந்தபின் அவரை வேலையைவிட்டு அனுப்பிவிட்டார்கள்.
வேலைபோன சோகத்தில் ஒரு தம் போடலாமே என்று நினைத்து சிகரெட் கடையைத் தேடி நடந்தாராம். ஒரு கடையும் இல்லை. இவ்வளவு பெரிய ரோட்டில் எத்தனைபேர் போகின்றார்கள். ஒரு கடையில்லையே என நினைத்து தன்னுடைய சேமிப்பில் இருந்து அந்த ரோட்டில் ஒரு கடையைத் தொடங்கினாராம்.
கொஞ்சநாளில் அந்த ஏரியாவின் நியூஸ் பேப்பர் ஏஜென்டாகவும் மாறிவிட்டாராம். கடை நன்றாக நடக்க லாபம் கிடைக்க ஆரம்பித்தது. இன்று அந்த ஏரியாவிலேயே அவருடைய கடைதான் பெரிது!
அன்றைக்கு அவர் கஷ்டப்பட்டு எழுதப் படிக்கத் தெரிந்துகொண்டிருந்தால், ஒரு  உதவியாளராக மட்டுமே இருந்திருப்பார். அதற்கான முயற்சியை எடுக்காமல், அவரால் இயல்பாகச் செய்ய முடிந்ததை அவர் செய்ததால்தான், பெரிய பிஸினஸ்மேனாக அவரால் முடிந்தது.
உங்கள் பிஸினஸின் நோக்கம், எதையாவது உருப்படியாகச் செய்வது என்பதற்காக இருக்கட்டும் என்று முத்தாய்ப்பாக முடியும் இந்தப் புத்தகத்தை பிஸினஸ் துவங்க நினைப்பவர்களும், ஏற்கெனவே பிஸினஸில் இருப்பவர்களும் கட்டாயம் படிக்கவேண்டும்.
- நாணயம் விகடன் இதழில் இருந்து


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts