லேபிள்கள்

வியாழன், 13 பிப்ரவரி, 2014

தீண்டத்தகாத உணவா சோறு?

தீண்டத்தகாத உணவா சோறு?

அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். "சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்" என்றேன். "அப்ப சோறை நிப்பாட்டட்டோ" என்றார். நான் மனத்திற்குள் சிரித்துக் கொண்டு "சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்" என அப்பாவியாகக் கேட்டேன். "வேறை என்ன? இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்" என்றாள்.
உரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோடு கதைத்து வைத்தவர் போல "சரி நான் சோத்தை கைவிடுகிறன்" என்றார். "சோறு சாப்பிட வேண்டாம் என நான் சொல்லவில்லையே!" என நான் ஆரம்பிக்கவும், என்ன இந்த டொக்டர் மடைத்தனமாகக் கதைக்கிறார் என மனத்திற்குள் எண்ணியவர் போல ஏளனமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை என்மீது வீசினார்.
காச்சல்கார பிள்ளையோடு வந்த அம்மா நான் உணவு பற்றி எதுவும் சொல்லாத போதும் தானாகவே "இவனுக்கு சோத்தை நிப்பாட்டிப் போட்டு பாண் வாட்டிக் கொடுக்கிறேன்" என்றாள்.
ஏன் இவர்களுக்கெல்லாம் சோறு தீண்டத்தகாத உணவாக இருக்கிறது? அப்படியும் சொல்ல முடியாது. இவர்கள் யாவரும் வழமையாக சோறுதான் உண்ணுகிறார்கள். ஆனால் நோயுற்ற நேரத்திற்கு மட்டும் சோறு ஏற்புடையதல்ல என எண்ணுகிறார்கள். இவை தவறான
கருத்துத்தான்.
ஆசிய நாட்டவர்கள் அனைவரினதும் பிரதான உணவான அரிசியில் மாப்பொருள் மாத்திரமின்றி புரதம், விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் யாவுமே உண்டு. அதிலும் முக்கியமாக தீட்டாத அரிசியிலும், புழுங்கல் (நாட்டு) அரிசியிலும் இவை அதிக செறிவில் உள்ளது. உண்மையில் தாவர உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே நிறைவு செய்கிறது என்பது பலரும் உணராத உண்மையாகும்.
இடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்ற பலகாரங்கள் யாவற்றினதும் முக்கிய கூறாக அரிசிதான் இருக்கிறது. ஆனால் பருக்கைகளாக அல்லாது மாவாக இருக்கிறது. எனவே முதலாமவர் கூறியது போல சோற்றை முற்றாக நிறுத்தி இடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்றவற்றைச் சாப்பிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இரண்டிலும் உள்ளது மாப்பொருள்தான்(Starch). எனவே எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.
இரண்டாமவர் கூறியதுபோல சோற்றை கைவிடுவதிலும் எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமான காரணமும் கிடையாது. அவர் இவற்றில் எதைச் சாப்பிடுகிறார் என்பதை விட எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதே முக்கியமானது. மாப் பொருள் உணவுகளான சோறு, இடியப்பம், புட்டு, அப்பம் போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த உணவின் அளவுற்கு ஏற்ப நார்ப் பொருள் அதிகமுள்ள கீரை இலை வகைகள், மரக்கறி, பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றை அதிகரித்துச் சாப்பிட வேண்டும். இதனால் உண்டவை மெதுவாக சமிபாடடையும், விரைவில் மீண்டும் பசிக்காது. எடையும் அதிகரிக்காது.
காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதியளவு போஷாக்குள்ள உணவு உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்குள்ளது என்பதால் அதையே உட்கொள்ளலாம். விருப்பமில்லையேல் பாற் கஞ்சியாகக் குடிக்கலாம். அல்லது சக்திப் பெறுமானமுள்ள வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் காய்ச்சல் என்றவுடன் சோடா வேண்டும் என்பார்கள். சோடா என்று நாம் வழமையாகக் கூறும் மென்பானங்களில் இனிப்புத் தவிர்ந்த போஷாக்கு எவையும் கிடையாது என்பதால் அவை விரும்பத்தக்கவை அல்ல.
எனவே நீங்கள் எந்நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆயினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சோறு ஆனாலும் அளவோடு உண்ணுங்கள்.
நன்றி: டாக்டர் எம்.கே. முருகானந்தன் - பதிவுகள்


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

மைக்ரோவேவ் ஓவனில்சமைக்கக் கூடாத உணவுகள்.

மைக்ரோவேவில் நீங்கள் சிக்கன் அல்லது சிக்கன் சேர்த்து செய்யப்படும் எந்த உணவுப் பொருட்களையும் ச...

Popular Posts