லேபிள்கள்

திங்கள், 11 நவம்பர், 2013

குழந்தையின் அழுகை சொல்லும் செய்தி என்ன?


குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒவ்வொரு படியையும் கவனம் நிரப்பிக் கடக்க வேண்டும் பெற்றோர்! பிறந்த குழந்தையைப் பொறுத்தவரையில்... அதன் அழுகைதான் பல மம்மி களுக்கு அலர்ஜியான விஷயம்!

ஆனால், ''அது ஒரு அற்புதமான மொழி... அதைப் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது குழந்தை வளர்ப்பின் சூட்சமம்'' என்று சொல்லும் சென்னை, எழும்பூர், குழந்தை நல மருத்துவமனையின் பதிவாளர் மற்றும் டாக்டர் ஸ்ரீனிவாசன், அந்த மொழியைப் புரிந்து கொள்ளும் சூத்திரங்களைப் பற்றி பேசுகிறார் இங்கே...

''குழந்தை அழும்போது, என்னவோ ஏதோவென்று அதைவிட அதிகமாக தவித்துப்போகும் தாய் மனது. ஆனால், அதற்கான காரணத்தைப் புரிந்துகொண்டு சரிசெய்தால், குழந்தையின் அழுகை நிற்கும், அம்மாவுக்கும் நிம்மதி பிறக்கும்!

பொதுவாக, தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவந்ததும் அழும் முதல் அழுகையை, மருத்துவத்தில் 'குட் சைன்' என்போம். அதுவரை தொப்புள்கொடி மூலமாகவே, ஆக்ஸிஜன் தேவைகளை எடுத்து வந்த குழந்தை, வெளியுலகத்துக்கு வந்தபின் முதல் முறையாக தானே சுவாசிக்க ஆரம்பிக்கும். அப்போது செயல்படத்துவங்கும் அதன் நுரையீரலின் சங்கிலித் தொடர் நிகழ்வுதான்... குழந்தையின் அழுகை. எனவே, பிறந்தவுடன் குழந்தை குரலெடுத்து அழுதால்தான்... சுவாசம் ஆரோக்கியமானதாக இருக்கிறது என்று அர்த்தம். எனவே, இது 'நார்மல் க்ரை' (Normal cry).

அடுத்த அழுகை, 'ஹங்கர் க்ரை' (Hunger cry)...பசிக்காக அழுவது. இதுவும் இயல்பானதுதான். குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை தாயின் உள்ளுணர்வே எளிதாகப் புரிந்துகொள்ளும். அழும் குழந் தையை எடுத்து பால் புகட்டினால், வயிறு நிறைந்தவுடன் அழுகை அடங்கி குழந்தை தூங்கிவிடும். சில குழந்தைகள் பால் குடித்த பின்னும் அழுவார்கள். காரணம், பால் பருகும்போது அந்த வேகத்தில் காற்றையும் சேர்த்து உள்ளே இழுத்திருப்பார்கள். இதனால் வயிற்றில் சேரும் காற்றுதான், குழந்தையின் அழுகைக்குக் காரணம். எனவே ஒவ்வொரு முறை குழந்தை பால் குடித்தபின்னும், அதை மெதுவாக தோளில் சாய்த்து, அதன் முதுகில் இதமாக தடவிக் கொடுத்தால், உள்ளே சென்ற காற்று, ஏப்பமாக வெளிவந்துவிடும்.

பால் கொடுக்கும்போது கவனிக்க வேண் டிய விஷயம் ஒன்று இருக்கிறது. தாயின் மார்பகக் காம்புகளில் குழந்தை பால் குடிக்கும்போது முதலில் வரும் 'ஃபோர்மில்க்' (Foremilk) எனப்படும் தண்ணீரானது, குழந்தையின் தாகம் தணிக்கும். பிறகு வரும் கொஞ்சம் அடர்த்தியான 'ஹிண்ட்மில்க்' (Hindmilk), குழந்தையின் பசி தணிக்கும். எனவே, மார்பின் ஒரு காம்பில் முழுக்க பால் குடித்தபின்னே, அதை அடுத்த காம்புக்கு மாற்ற வேண்டும். ஆனால், சில அம்மாக்கள் ஒரு காம்பில் 'ஃபோர்மில்க்' குடித்ததுமே, அவசரமாக அடுத்த காம்புக்கு குழந்தையை மாற்றிவிடுவார்கள். அங்கேயும் 'ஃபோர்மில்க்'கையே குடிக்கும்போது, குழந்தையின் தாகம் தணியுமே தவிர... பசி தணியாது. இதன் காரணமாகவும் குழந்தை அழும். இது புரியாமல்... 'நல்லாதான் பால் குடிச்சுது... ஆனாலும் அழுது அட்டகாசம் பண்ணுது' என்று புலம்புவதில், பலனில்லை.

பெரியவர்களுக்கு சிறுநீர்ப் பை நிரம்பிய வுடன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட, சிறுநீர் கழிக்கச் செல்கிறோம். ஆனால், பச்சிளம் குழந்தை என்ன செய்யும்? அதன் சிறுநீர்ப் பையில் சிறுநீர் சேர்ந்ததும், அந்த உணர்வை அழுகையாக வெளிப் படுத்தி, சிறுநீர் கழிக்கும். பின் அழுகையை நிறுத்தி விடும். மோஷன் போவதற்கு முன்னும் இப்படி அழும். 'யூரின், மோஷன் போகும்போது அழுதுட்டே போறான்...' என்று இதற்குப் பயப்படத் தேவையில்லை. 'நான் யூரின்/ மோஷன் போகவேண்டும். அல்லது போய்விட்டேன்... என்னை கவனியுங்கள், துணியை மாற்றுங்கள்!' என்பதைத்தான் தன் அழுகையின் மூலம் உணர்த்துகின்றன குழந்தைகள்.

மூன்று மாதக் குழந்தை, வீட்டுக்கு யாராவது புதிதாக வந்தால், பயந்து அழும். அதை தனியாக விட்டுவிட்டு நீங்கள் சமையல், வேலை என்று சென்றுவிட்டால், அந்தத் தனிமை பிடிக்காமல் அல்லது பயந்து அழும். உடை இறுக்கமாக இருந்தால் அழும். தூக்கத்தில் இருந்து எழும்போது, தன் அருகில் யாரும் இல்லை என்றால், கவனத்தை ஈர்க்க, அழும். குளிக்க வைக்கும்போது காதில் தண்ணீர் போய்விட்டால் அழும். எறும்பு, பூச்சி ஏதும் கடித்தால் அழும். குழந்தையை வண்டியில் வைத்து வெளியில் அழைத்துச் செல்லும்போது, காதில் குளிர்காற்று நுழைந்தால் அழும். எனவே, குழந்தையின் ஒவ்வொரும் அழுகைக்கும் ஒரு காரணம் உண்டு. அதைத் தெரிந்துகொள்ளாமல், 'காரணமே இல்லாம அழறான்... உரம் எடுக்கணும்' என்று கிராமத்தில் சொல்வார்கள்'' என்ற டாக்டர் ஸ்ரீனிவாசன்...

''அழுகைக்கான காரணத்தைக் கண்டுபிடித்து, குழந்தையை சமாதானப்படுத்துவது முக்கியம். 'எப்பப் பார்த் தாலும் அழுதுட்டே இருக்கு. கொஞ்ச நேரம் வேலை பார்க்க விடுதா..?' என்று சலித்து, உங்கள் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வரும்வரை குழந்தையை அழவிட்டால், அதன் பாதிப்பை பெற்றோர்தான் சந்திக்க வேண்டும். என்ன பாதிப்பு..? ஏதோ ஒரு காரணத்தினால்தான் குழந்தை அழுகிறது என்று, அழ ஆரம்பித்தவுடன் சென்று சமாதானப்படுத்தும் வீடுகளில் வளரும் குழந்தைகள், எதிர்காலத்தில் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள். 'அழுதா அழு' என்று விடும்போது, தொடர் அழுகையின் மூலம் அந்தக் குழந்தையின் பிடிவாத குணம் இறுகும். விளைவு, அது அடமன்ட் குழந்தை யாக வளரும் என்கின்றன ஆய்வுகள்.

மொத்தத்தில், அழுகை என்பது... குழந்தை யின் மொழி. அதைப் புரிந்து கொள்ள பெற்றோர்தான் பாடம் படிக்க வேண்டும்!'' என்று புரிய வைத்தார் ஆழமாக!

ஆபத்தான அழுகைகள்!

''இயல்பான அழுகைகள்... நாமே சமாளிக்கக் கூடியவை. ஆனால், அதற்கு மீறிய அழுகைகளும் குழந்தைகளிடம் உண்டு. அவை முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவை. பிறந்த மூன்று மாதங்களுக்குள் இந்த அழுகை களை இனம் காணலாம்'' என்று சொல்லும் டாக்டர் ஸ்ரீனிவாசன் தந்த அந்த அழுகைப் பட்டியல்...

'பிரெத் ஹோல்டிங் க்ரை' (Breath holding cry): தடுப்பூசி போடும்போது பெரும்பாலும், 'குழந்தை மூச்சு விடாம அழுமா..?' என்று கேட்டுவிட்டுத்தான் போடுவார்கள் செவிலியர்கள். அப்படி மூச்சு விடாமல் அழுவதற்குதான் இந்த பெயர். சில குழந்தைகள் கேவிக்கேவி அழும்போது சில நொடிகள் மூச்சு நின்று, பின் வரும். அப்படி அழும்போது அந்தக் குழந்தையின் உடல் நீல நிறமாக மாறினால், அதன் இதயம், மூளை என ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று சோதிக்க வேண்டியது அவசியம்.

'வீக் க்ரை' (Weak cry): பிறந்த 15 - 20 நாட்களில் குழந்தை எப்போதும் மெலிதாக அழுதுகொண்டே இருப்பதை இப்படி அழைப்பார்கள். ஏதேனும் தொற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பிருக் கிறது என்பதுதான் இதற்கு அர்த்தம். இதைக் குறிப்பிட்டுச் சொல்லி, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

'ஷ்ரில் க்ரை' (Shrill cry): வீல் வீல் என்று உச்சஸ்தாயில் 10 நிமிடங்கள் வரை குழந்தை நீடித்து அழுவதை இப்படி குறிப்பிடுவார்கள். இப்படி அடிக்கடி அழுதால், அதற்கு வலிப்பு நோய் அல்லது மூளை சம்பந்தமான ஏதோ பிரச்னை இருக்கலாம். மருத்துவரிடம்
எடுத்துச் செல்வது முக்கியம்.

'லோ பிட்ச் க்ரை' (Low pitch cry): கனத்த குரல் அல்லது ஹஸ்கி வாய்ஸில் குழந்தை அழுவது. இதற்கு, தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதது காரணமாக இருக்கலாம். மருத்துவப் பரிசோதனை அவசியம்.

Thanks : VASUKI MAHAL KALYANA MANDABAM blog http://www.blogger.com


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts