லேபிள்கள்

புதன், 13 நவம்பர், 2013

உங்க டூத் பேஸ்ட்டில் ஆரோக்கியம் இருக்கா?

உங்க டூத் பேஸ்ட்டில் ஆரோக்கியம் இருக்கா?


அந்தக் காலத்தில் திருமணத்துக்கு முன்பாக பெண் பார்க்கச் செல்லும்போது பெண்ணைப் பாடச் சொல்வார்கள். வாய் திறந்து பாடும்போது பெண்ணுக்கு எல்லாப் பற்களும் நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனிப்பார்கள். பற்களுக்கு நம் முன்னோர்கள் கொடுத்த முக்கியத்துவம் அப்படிப்பட்டது.
''பற்கள் சரியில்லை என்றால், உண்ணுகின்ற உணவில் இருக்கும் ஊட்டச் சத்து முழுமையாக நமது உடலுக்குக் கிடைக்காது. பற்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்'' என்கிறார் பல் மருத்துவர் ஜானகிராமன். ''எந்த ஒரு நல்ல பழக்கத்தையும் இளம் வயதிலேயே துவங்குவதுதான் நல்லது. அதனால்தான், முன்னேற்றம் அடைந்த பல நாடுகளிலும் பற்கள் பராமரிப்பு பற்றி பள்ளி, வீடு எனப் பல இடங்களிலும் சொல்லித்தருகிறார்கள். பற்கள் முளைக்க ஆரம்பித்ததில் இருந்து, சுமார் ஆறேழு வருடங்கள் வரை பிள்ளைகளுக்குப் பெற்றோர் பிரஷ் செய்துவிட வேண்டும். சிறுவயது முதலே பற்களைச் சரிவரக் கவனிக்காமல் விட்டுவிட்டால், சொத்தைப் பல், ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் கூச்சம் போன்ற பிரச்னைகள் வரும். அதனால், சிறுவயதில் இருந்தே பற்களைப் பராமரிப்பது அவசியம்.'' எனச் சொன்னவர், பல் துலக்கும் பக்குவத்தையும் விளக்கினார்.

பற்பசை
சொத்தைப் பல் இருப்பவர்கள் ஃப்ளோரைடு உள்ள பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். சிலருக்கு மிகவும் சூடாகவோ, மிகவும் குளிர்ச்சியாகவோ இருக்கும் உணவுகளை உண்டால், பற்கூச்சம் ஏற்படும். அவர்கள் ஸ்ரான்ட்டியம் குளோரைடு உள்ள பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். சிலருக்குப் பல் ஈறுகளில் ரத்தம் கசியும். ஈறுகள் வலிமை இழந்தாலோ அல்லது வைட்டமின் சி குறைபாடு இருந்தாலோ, ரத்தம் கசியும். அத்தகைய பற்களை உடையவர்கள் டேனிக் அமிலம் உள்ள பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். புகைபிடிப்பவர்கள், வெற்றிலை பாக்குப் போடும் பழக்கம் உடையவர்களுக்குப் பற்கள் நிறம் மாறிவிடும். தாது உப்புகள், வைட்டமின்கள், ஃபாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கும் பற்களின் நிறம் மாறக்கூடும். இத்தகைய பற்கள் உடையவர்கள் ஒயிட்டனிங் ஏஜென்ட் உள்ள பற்பசைகளை உபயோகிக்க வேண்டும். வாய் துர்நாற்றம் இருக்குமானால் நறுமணத்துடன் கூடிய பற்பசையைப் பயன்படுத்தலாம். குழந்தைகளைப் பொருத்தவரை அவர்களுக்கு என்று பிரத்யேகமாக இருக்கும் பற்பசைகளை உபயோகிக்கலாம். ஆனால், அவர்கள் அதை விழுங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். பற்பசைகளைப் பயன்படுத்தும் முன் மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்டுப் பயன்படுத்துவது அவசியம்.
டூத் பிரஷ்
டூத் பிரஷ்களில் பல வகைகள் உண்டு. பல் வரிசை சீராக இருந்தால், நேராக உள்ள பிரஷைப் பயன்படுத்தினால்தான் பற்களில் உள்ள அசுத்தங்கள் போகும்; வளையும் தன்மைகொண்ட பிரஷ் இந்த விஷயத்தில் உகந்தது அல்ல. வரிசை தப்பிய பற்கள் உடையவர்களுக்கு வளையும் தன்மைகொண்ட பிரஷ்கள் பொருத்தமாக இருக்கும். எப்போது நம் பிரஷ்ஷின் நார்கள் வளைய ஆரம்பிக்கிறதோ, உடனே பிரஷ்ஷை மாற்றியாக வேண்டும். பற்களில் கிளிப் போட்டு இருப்பவர்களுக்கு என்று ஆர்தோடான்டிக் பிரஷ்கள் உள்ளன. அவர்கள் அதை உபயோகிக்கலாம். பிரஷ்ஷை உபயோகிக்கும்போது பற்களில் மட்டும் தேய்க்காமல் ஈறுகளிலும் ஒத்தி எடுக்கவேண்டும். இப்படிச் செய்தால் ஈறுகளில் ரத்த ஓட்டம் சீராக அமையும். பற்களும் பலம் பெறும். பேட்டரி பிரஷ்கள் உபயோகிக்கும்போது நீண்ட நேரம் பல் தேய்க்காமல் இருப்பது அவசியம். பொதுவாக, பிரஷ்ஷை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம் இல்லை. நம் பற்களில் உள்ள பூஞ்சைகள் போகும் அளவுக்குத் தேய்த்தால் போதுமானது. ஒவ்வொருவருக்கும் பற்களின் மேல் படியும் பூஞ்சைகளின் அளவு மாறுபடும். அதற்கேற்ப பிரஷ்களை உபயோகப்படுத்தலாம். (ஹார்டு, மீடியம், சாஃப்ட்).
பிரஷ் பயன்பாடு குறித்துப் பட்டியல் போட்டு விளக்கும் டாக்டர் ஜானகிராமன், ''எந்த வகை பிரஷ்ஷாக இருந்தாலும் தினசரி இரு வேளைகள் பல் துலக்குவது அவசியம். அதுவும் காலை பெட் காபி குடிப்பவர்கள் கண்டிப்பாக இரவு பல் துலக்குவது அவசியம். பற்களை நாம் எந்த அளவுக்குப் பராமரிக்கிறோமோ, அந்த அளவுக்கு நம் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும். பெரியவர்கள் பயன்படுத்தும் டூத் பிரஷ்கள் குழந்தைகளுக்குக் கடைவாய்ப் பல் வரை செல்லாது. இந்த வயதுவரம்பு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் முக்கியம்'' என்கிறார் அக்கறையோடு.
குச்சிகளைப் பயன்படுத்திப் பல் தேய்த்த காலத்தில்கூட ஆல, வேல மரக் குச்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பல் நலம் பேணியவர்கள் நம் மூதாதையர்கள். சரியான தேர்ந்தெடுப்புதான் நம்மைச் சரியாக வைத்திருக்கும். பல் துலக்கும் முன் 'எந்த பிரஷ் சரிப்படும்?' என்கிற பரிசீலனையைத் துவக்குங்கள்.


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

ஹேண்ட் பேக்கால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்... பெண்களே கவனம்!

தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பெண்கள் எங்கு சென்றாலும் கைப்பையை தங்களுடன் எடுத்து செல்கின்றனர். பல்வேறு வகைகளில் தயார் செய்யப்படும் கைப...

Popular Posts