லேபிள்கள்

வியாழன், 13 செப்டம்பர், 2012

முனாஃபிக் யார்..?


பொதுவாக நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம் காணப்படும் பண்புகள் பலவாக இருக்கலாம். சிலரிடம் நற்பண்புகள் தீயபண்புகள் ஒருங்கே அமைந்தும் இருக்கலாம். நற்பண்புகள் நம்மை சுவனம் அழைத்துச்செல்லும். தீய பண்புகள் நரகம் இட்டுச்செல்லும்..! அவ்வாறு, நரகத்துக்கு இழுத்துச்செல்லும் ஒரு பண்புதான் இந்த நயவஞ்சகம்..! அதாவது, உள்ளத்தில் உள்ளதை உலகுக்குத்தெரியாமல் மறைத்து, தம்மைச்சார்ந்திருப்போர் மனம் மகிழும்படி நடித்து, அவர்களை வழிகெடுத்து, தம் வழிக்கு கொண்டு வரும் இந்த நாசகார பண்புதான் நயவஞ்சகம்..! இத்தீய பண்பை  கொண்டவனை 'முனாஃபிக்' (நயவஞ்சகன்) என்று அரபியில் அழைபார்கள்..! சுருக்கமாக சொன்னால், வெளிப்பார்வைக்கு தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்களிடம் உள்ளத்தில் இஸ்லாம் இருக்காது..! உள்ளங்களை அறிபவன் அல்லாஹ் மட்டுமே..!

இந்நயவஞ்சகர்கள் அன்றிலிருந்து இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களோடு பழகினால் அன்றி... இவர்களின் தோற்றங்களை வைத்து இவர்களை அடையாளம் காண நம்மால் இயலாது. இருப்பினும் இந்நயவஞ்சகத்தின் அடிப்படைகளாகத்திகழும் இவர்களின் ஒருசில நடவடிக்கைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்கு முன்னெச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.!
அல்லாஹ் முனாஃபிக்குகளின் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடும் போது...
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (அல்குர்ஆன் 4:142)
இன்னும் நபியவர்கள் கூறுகிறார்கள்:-
நயவஞ்சகர்களுக்கு மிகச் சிரமமான தொழுகை இஷாவும் ஃபஜ்ரும் தான். அவற்றின் நன்மைகளை அறிந்திருந்தால் அவர்கள் தவழ்ந்தாவது வந்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: அபுஹூரைரா(ர்லி)   நூல் : சஹீஹ் முஸ்லிம் (1041)
அக்காலத்தில், விளக்கொளி இல்லாத இருட்டு வேளையில் தொழப்படும் இஷா மற்றும் ஃபஜ்ர் இரண்டுக்கும்... யார் யார் பள்ளிக்கு ஜமாஅத் தொழ வந்தார்கள் என்று தெளிவாக தெரியாது..! மற்ற... லுஹர் & அசர் போன்ற பகலில் தொழப்படும் தொழுகைக்கும், மற்றும் ஓரளவு வெளிச்சத்தில் ஆரம்பிக்கப்படும் மஃரிபுக்கும் ஜமாஅத்துக்கு பள்ளிக்கு வருபவர்களை நன்கு தெரிந்து கொள்ள முடியும்..! இவற்றில் அந்த நயவஞ்சகர்கள் என அறியப்பட்ட சிலர், மக்களிடம் தொழுகையாளி பட்டம் சம்பாதித்துவிட்டு...  பின்னர் வரும் இருட்டை சாக்காக்கி, "யாருக்கு தெரியபோகுது... வீட்டிலேயே தனித்து தொழுதுகொள்வோம்" என்று (அல்லாஹ் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்பதை மறந்தவர்களாக...)  நைசாக வீட்டில் தங்கிக்கொள்வது கூட நயவஞ்சகமே..! போருக்கு செல்லாமலும் நயவஞ்சகர்கள் வீடுகளில் தங்கிவிடுவதுமுண்டு..!
ஆனால், சில சஹாபிக்ளுக்கு மெய்யாலுமே சில காரணங்கள் இருக்கும். அது அவர்களுக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரியும். அதை வைத்து ஒருவருக்கு முனாஃபிக் பட்டம் கட்டலாமா..? அப்படி பட்டம் கட்டினால்... பட்டம் கட்டியவரின் நிலை யாது..? அடுத்த ஹதீஸில் பார்ப்போம் சகோ..
சஹீஹ் புஹ்காரி :- பாகம் 6, அத்தியாயம் 78, எண் 610
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ ஸலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு (நபி(ஸல்) அவர்களுடன் தொழுத) அதே தொழுகையைத் தொழுகை நடத்துவது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் தொழுகை நடத்தும்போது) அவர்களுக்கு (நீண்ட அத்தியாயமான) அல்பகராஎனும் (2 வது) அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒருவர் (தனியாக விலகிச் சென்று) விரைவாகத் தொழுது(விட்டுத் தம் பணியைக் கவனிக்கச் சென்று)விட்டார். இச்செய்தி முஆத்(ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், அவர் ஒரு முனாஃபிக் (நயவஞ்சகர்) என்றார்கள். அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்களின் மூலம் நீர்ப் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களக்குத் தொழுகை நடத்தியபோது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஓதினார்கள். எனவே, நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை முனாஃபிக் (நயவஞ்சகன்) என்று சொன்னாராம்என்று கூறினார்.அப்போது நபி(ஸல்) அவர்கள் (முஆத்(ரலி) அவர்களிடம்), ‘முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும், ‘(நீர் இமாமாக நிற்கும் போது) ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வளுஹாஹா போன்ற (சற்று சிறிய) அத்தியாயங்களை ஓதும்!என்றும் சொன்னார்கள்.
நபி (ஸல்...) அவர்கள் மூன்று முறை கேட்டதிலிருந்து... பெரிய அத்தியாயங்கள் ஓதி நீண்ட நேரம் தொழவைப்பது, தன்பின்னே தொழ முடியாதவர்களின் நிலையை விளங்காதிருப்பது, அடுத்தவர்  உள்ளம் நினைப்பதை அறிய வாய்ப்பில்லா நிலையில் ஒரு முஸ்லிமை முனாஃபிக் என்பது ஆக மூன்றும் குழப்பவாதங்கள்தான் என்று நாம் அறிகிறோம்..!

ஆகவே, இப்போது... "ஒரு முஸ்லிம் பொய் சொல்கிறானா... இல்லை... நடிக்கிறானா..." என்று அவனின் உள்ளத்தை மனிதனாகிய நாம் பிளந்து பார்த்து தெரியாத நிலையில்... அவனை முனாஃபிக் என்று சொல்பவன்
 "ஃபித்னா ஃபஸாத்" எனும் 'குழப்பவாதி' ஆவான் என்று தெள்ளத்தெளிவாகிறது..!
மேலும்... இன்னும் தெளிவாக அறிய.... இன்னொரு ஹதீஸ் பார்ப்போம் சகோ..! இது.... முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பொருந்தும்..!
சஹீஹ் புஹ்காரி :- பாகம் 1, அத்தியாயம் 2, எண் 34
நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும்.
நம்பினால் துரோகம் செய்வான்; 
பேசினால் பொய்யே பேசுவான்; 
ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; 
விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப்பேசுவான் 
.....என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
மேற்படி நான்கு குணங்கள் இருந்தால்... அவற்றில் ஒன்றேனும் இருந்தால் அவன் முனாஃபிக்..! ஆனாலும், இப்படியான குணம் ஒரு முஸ்லிமிடம் இருக்கவே கூடாது..! ஒருவேளை பலகீனமான இறைநம்பிக்கை... மேம்போக்கான இறையச்சம் கொண்ட ஒரு முஸ்லிமுக்கு மேற்படி குணங்கள் இருந்தால்... அல்லது இருப்பதாக ஊகித்தால்... அவனை முனாஃபிக் என்று சொல்லலாமா..? அவனை நயவஞ்சகன் எனலாமா..?
சஹீஹ் புஹ்காரி :- பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6938
இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னுடைய இல்லத்தில் தொழுமிடம்) அமைத்துக் கொடுப்பதற்காக) என்னிடம் (நண்)பகலில் வந்தார்கள். (அப்பகுதி மக்களில் கணிசமானோர் அங்கு குழுமி விட்டனர்.) அப்போது ஒருவர், ‘மாலிக் இப்னு துக்ஷுன் எங்கே? (அவர் மட்டும் நபியவர்களைச்சந்திக்க வரவில்லையே!)என்று கேட்டதற்கு எங்களில் ஒருவர், மாலிக் இப்னு துக்ஷுன் ஒரு முனாஃபிக் (நயவஞ்சகர்); அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காதவர் (எனவேதான் அவர் நபியைக் காண இங்கு வரவில்லை)என்று கூறினார். அதைக்கேட்டவுடனே நபி(ஸல்) அவர்கள், அவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறுவதை நீங்கள் செவியேற்க வில்லையா?’ என்று அவரிடம் கேட்டார்கள். அந்த மனிதர், ‘ஆம்என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் எந்த அடியார் லாயிலாஹ இல்லல்லாஹ்எனும் (ஏகத்துவ) வாக்கியத்துடன் செல்கிறவரின் மீது இறைவன் நரகத்தை தடை செய்யாதிருப்பதில்லைஎன்றார்கள்.
இதிலிருந்து நாம் அறிவது யாதெனில், பகிரங்கமாக கலிமா சொன்ன ஒருவரை... நரகம் தடை செய்யப்பட்ட முஸ்லிமை... முனாஃபிக் என்று சொல்லலாகாது என்பதுதான்..!

ஆனால்........ நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்களின் மறுமை வேதனை பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது...
நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர்.  (அல்குர்ஆன் 4:145)
என்று கூறுவதை காண்கிறோம்..! எனில், நரகம் செல்லும் இந்த முனாஃபிக்குகள் எப்படி பட்டவர்கள்..? 

ஹிஜ்ரத் சமயத்தில், அப்துல்லா இப்னு உபை என்பவன் மதீனாவின் தலைவனாக இருந்தான். இன்னும் மதீனாவின் மணிமுடியை அலங்கரிக்க வேண்டும் என்ற ஆசையுடன் அவன் இருந்த காலத்தில் தான் மதீனாவின் அன்ஸார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவில் அகபா என்னும் இடத்தில் ஒப்பந்தம் ஒன்றைச்செய்து நபியவர்களை மதீனாவில் வந்து தங்கி விடுமாறு அழைப்பு விடுத்தார்கள். அந்த அழைப்பினை ஏற்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவினை விட்டு வெளியேறி ஹிஜ்ரத் செய்து மதீனாவில் வந்து தங்கி வரலானார்கள்.

தான் ஆட்சியாளராக வரவிருந்த நிகழ்வு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வருகையால் கெட்டு விட்டதை அறிந்து வெறுப்பிற்குள்ளானான் அப்துல்லா இப்னு உபை. மதீனாவின் அனைத்து குலங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக அப்துல்லா இப்னு உபையும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். ஆனாலும், இஸ்லாத்திற்கு எதிரான பல்வேறு செயல்களில் மறைமுகாக ஈடபடலானான்.

உஹத் போரின் பொழுது ஆயிரம் முஸ்லிம்களுடன் போர் ஆரம்பிக்க இருந்த கடைசி நேரத்தில் தனது முன்னூறு பேர் கொண்ட குழுவினரை போர் செய்ய விடாமல் தடுத்து தனது குழுவினருடன் மதீனாவிற்குத்திரும்பி வந்து விட்டான்.

இன்னும் பனீ முஸ்தலக் போரின் சமயத்தில் போரின் கலந்து கொண்ட இறைப் போராளிகளுக்கு எதிராகவும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீதும் தகாத வார்த்தைகளைக் கூறினான். இன்னும் அப்போருக்கு பின்னர் திரும்பும் வழியில்... ஆயிஷா (ரலி) அவர்களின் மீது களங்கம் சுமத்திய சம்பவத்தில் இவன் தான் முன்னணி வகித்தான்.

இந்த நிலையில் இவனைக்கொல்வதற்கு தனக்கு அனுமதி தருமாறு உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) கேட்டார்கள். கருணை உருவான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதி தர மறுத்து விட்டார்கள்.
  அப்துல்லா இப்னு உபையின் நயவஞ்சகத்தை அறிந்திருந்த வல்ல அல்லாஹ்வும்...
அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும்; அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.(குர்ஆன்-63:6)
என்ற வசனத்தை இறக்கி அருளினான்..!  அதோடு, இன்னின்னார் நயவஞ்சகர்கள் என்று நபியவர்களுக்கு அறிவித்துக்கொடுத்திருந்தான்..!

பின்னர் ஒருநாள்... அப்துல்லா இப்னு உபை இறந்த பொழுது இறைத்தூதர் (ஸல்)அவர்கள் அவனது அடக்க நிகழச்சியில் கலந்து கொண்டு ஜனாஸா தொழுகையை முன்னின்று நடத்தவும் தீர்மானித்தார்கள். இந்த நிலையில் அங்கு இருந்த உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை வழி மறித்து, அப்துல்லா இப்னு உபை யின் அடக்கத்தொழுகையில் கலந்து கொள்வதைத்தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.

அதற்கு, இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள், 'உமரே பின்னுக்கு நில்லுங்கள் என்னைத்தொழ வைக்க விடுங்கள் என்றார்கள். இந்த விஷயத்தில் எனது சொந்த விருப்பப்படி பாவமன்னிப்பு கோருவதற்கும் கோராமல் இருப்பதற்கும் இறைவன் எனக்கு அனுமதி வழங்கி இருக்கின்றான்..! எனவே நான் இந்த விஷயத்தில் இரக்கத்தோடு நடந்து கொள்ள விரும்புகின்றேன் என்பதாக, ஜனாஸா தொழவைத்து பிரார்த்திக்கலானார்கள்..!

அப்போது, முனாஃபிக்குகளின் விவகாரத்தில், பின்வரும் இறைவசனத்தை தனது தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இறக்கி அருளினான் :
அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள். (குர்ஆன்-9:84) 
இதிலிருந்து நாம் விளங்குவது யாதெனில், அல்லாஹ்... 'இன்னார் முனாஃபிக்' அறிவித்து கொடுத்தால் மட்டுமே நம்மால் நயவஞ்சகர்களை அறிய முடியும். அப்படி இருந்தும் கூட, அப்துல்லா இப்னு உபை விஷயத்தில், நபி (ஸல்) ஜனாஸா தொழ வைக்கத்தான் நாடினார்கள் என்பதை - அறிவிக்கப்பட்ட முனாஃபிக் விஷயத்தில் கூட அன்னாரின் இறையச்சத்தை- தம் உம்மத்துக்கான கடமை உணர்வை நாம் கவனிக்க வேண்டும்..! மாஷாஅல்லாஹ்..!

இன்னும்... "முனாஃபிக் யார்?" என்பதை நபி(ஸல்) அவர்களாலேயே அறியமுடியாது; அல்லாஹ் அறிவித்துக்கொடுத்தாலே அன்றி...! ---என்பது அடுத்து வரும் திருமறை வசனத்தில் தெளிவாக காணலாம்..!
உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள், இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலைபெற்று விட்டவர்களும் இருக்கிறார்கள். (நபியே!) அவர்களை நீர் அறியமாட்டீர், நாம் அவர்களை நன்கறிவோம், வெகு சீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் - பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள். (குர்ஆன்-9:101)
எனவே, அல்லாஹ்வின் நல்லடியார்களே..! வெளிப்படையாக ஒரு முஸ்லிமின் நயவஞ்சகச்செயல்களை நாம் அறிந்து விடினும்... அம்முஸ்லிமை 'முனாஃபிக்' என்று சொல்ல கூடாது/சொல்ல வேண்டாம் சகோ..! 

ஏனெனில், அல்லாஹ்வின் திருப்தியை நாடி அவர் கலிமா சொன்னாரா... இல்லையா... என்பதை நாம் அறிய முடியாது..! இது மறைவான விஷயத்தை அறியக்கூடிய அல்லாஹ் மட்டுமே அறியும் விஷயம்..! அவ்வாறு மீறி ஒரு முஸ்லிமை முனாஃபிக் என்று சொன்னால், அப்படி சொன்னதற்காக நாம் மறுமை நாளில் அவரின் கலிமா நமக்கெதிராக வந்து நாம் கைசேதப்பட்டு நிற்கும் நிலை ஏற்படக்கூடும்..!

இன்று நமது இஸ்லாமிய இயக்கங்கள், ஒருவருக்கொருவர் பரஸ்பர இயக்க வேறுபாடு காரணமாக மனம் வேறுபட்டு... காழ்ப்புணர்வில் விழுந்து...
 
'எமது இயக்கத்தில் சேராத முஸ்லிம்கள் முனாஃபிக்' என்றோ...
 
'எமது இயக்கம் ஆதரிக்கும் அரசியல் கட்சிக்கு ஓட்டு போடவில்லை என்றால் முனாஃபிக்' என்றோ...
  
'எமது இயக்கத்திலிருந்து விலகியவர்களின் ஆம்புலன்சை உபயோகிப்போர் முனாஃபிக்' என்றோ...
  
'எமது இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டோரின் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்தம்
 தானம் தருவோர் முனாஃபிக்' என்றோ...
'எதிர் இயக்க முஸ்லிம் சகோதரர்களுடன் நட்புடன் பேசிவிட்டால் கூட முனாஃபிக்' என்றோ...
அவரவர்கள் அடுத்தவரை நோக்கி சொல்லிக்கொள்வதை காண்கிறோம்..!

இவர்கள் எல்லாரும் தாங்கள் செய்வது சரியா என்று இஸ்லாமிய வழியில் தங்கள் செயலை சீர்தூக்கி பார்த்து மறுமை நன்மைக்காக திருந்திக்கொள்வது உடனடி அவசியம்..!
ஆதலால்... அவர்கள் 'முனாஃபிக்கா.. இல்லையா..' என்று அறியும் பொறுப்பை அந்த வல்ல அல்லாஹ்விடம்  விட்டு விட்டு அச்சகோதரர்களை வெறுக்காமல் அன்போடு பழகி, பண்போடு பேசி, அவர்களின் நயவஞ்சக குணங்களை களைய நம்மால் ஆன இஸ்லாமிய பிரச்சாரத்தை இனிதாக அவர்களிடம் எடுத்துவைத்து அதன்மூலம் அவர்களை சிறந்த முஸ்லிம்கள் ஆக்கி அனைவருடனும் ஒற்றுமையுடன் வாழ்வோமாக..! இதற்கு நமக்கு அல்லாஹ் பேரருள் புரிய பிரார்த்திக்கிறேன்..! ஆமீன்..!

www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து...

Popular Posts