லேபிள்கள்

வெள்ளி, 1 நவம்பர், 2013

பழைய கார் வாங்குவது எப்படி?

பழைய கார் வாங்குவது எப்படி?
தனக்கென ஒரு புதிய கார் வாங்கி,  அதில் குடும்பத்துடன் பயணம் செல்ல ஆசைப்படும் மிடில் கிளாஸ் குடும்பங்களின் ஆசைக்குப் பெரும் தடையாக இருப்பது பட்ஜெட்தான். கடன் வாங்கி கார் வாங்கினால், மாதா மாதம் கணிசமான இ.எம்.ஐ கட்டவேண்டி வருமே என்ற கவலைதான் பெரும்பாலான கார் கனவுகளுக்கு ஸ்பீடு பிரேக்கர். இதற்கெல்லாம் சரியான தீர்வு, 'யூஸ்டு கார், ப்ரீ ஓன்டு கார்' எனச் சொல்லப்படும் 'பழைய கார்' நல்ல சாய்ஸ். உங்கள் தேர்வு சரியாக இருந்தால், வாங்கும் பழைய காரிலும் புத்தம் புதிய காரின் ஃபீல் கிடைக்கும்!
பிளானிங் முக்கியம்!
 
புத்தம் புதிய கார் வாங்க ஷோ ரூம் போனால், அங்கு நீங்கள்தான் ராஜா. உங்களுக்கு காரைப் பற்றி எடுத்துச் சொல்ல சேல்ஸ் ஆபீஸர் இருப்பார். உங்கள் வீடு தேடி டெஸ்ட் டிரைவ் கார் வரும். ஆனால், பழைய கார் விஷயத்தில் அப்படிக் கிடையாது. நீங்கள்தான் அலைந்து திரிந்து தகவல்களைப் பெற வேண்டும். அதிலும், நீங்கள் உடனடியாக முடிவு எடுத்துவிட முடியாது. நல்ல கண்டிஷனலில் இருக்கும் காரா? ஆக்ஸிடென்ட் ஆகாத காரா? இன்ஜின், கியர் பாக்ஸ், சஸ்பென்ஷன் எல்லாம் சரியாக இருக்குமா என்று ஏகப்பட்ட கேள்விகள் மனதைக் குடையும். அதனால், கார் வாங்கச் செல்வதற்கு முன்பு, தெளிவாக முடிவு எடுக்க வேண்டும்.
பட்ஜெட் மற்றும் செக்மென்ட்! 
பழைய கார் விஷயத்தில், முதலில் நீங்கள் திட்டமிட வேண்டியது பட்ஜெட்தான். 'கார் என் கைக்கு வருவதற்கு முன் இந்தத் தொகைதான் என்னால் செலவு செய்ய முடியும். இதற்கு மேல் செலவு வைக்கும் என்றால், அந்த கார் எனக்கு வேண்டாம்' என்று திட்டவட்டமாக முடிவெடுங்கள். பட்ஜெட் விஷயத்தில் சரியாகத் திட்டமிடவில்லை என்றால் என்ன ஆகும்? ஒரு பழைய கார் ஐந்து லட்சத்துக்கு விற்பனைக்கு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். 'சார், ஒரு 75,000 எக்ஸ்ட்ரா போட்டா, அதைவிட நல்ல கார் ஒண்ணு இருக்கு. அதைப் பார்க்கலாமா?' என்பார்கள்.
லட்சங்களில் டீல் செய்யும்போது, 75,000 ரூபாய் உங்களுக்குப் பெரிதாகத் தெரியாது. அந்த காரையும் பார்க்கிறேன் என கடைசி வரை கார்களைப் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். கடைசியாகப் பார்த்த காரின் விலை 8 லட்சத்தில் வந்து நிற்கும். மதில் மேல் பூனை போல, எந்த காரையும் வாங்க மனமில்லாமல் குழம்பிக்கொண்டே இருப்பீர்கள். அதனால், பட்ஜெட் விஷயத்தில் கறாராக இருப்பதே நல்லது! பட்ஜட்டைப் பொருத்து காரின் செக்மென்டைத் தேர்வு செய்யலாம். செக்மென்டைப் பொருத்தும் பட்ஜெட்டைத் தீர்மானிக்கலாம். எம்யூவி, எஸ்யூவி, செடான், ஹேட்ச்பேக், சின்ன கார் என ஐந்து செக்மென்ட் கார் வகைகள் இருக்கின்றன!
ஓனரா, டீலரா?
 
பழைய கார் சந்தை, ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அல்ல! அரசு இதைக் கண்காணிப்பதும் இல்லை. டீலருக்கு இது தொழில். உங்களுக்கு இது கனவு. டீலர் உங்களை ஒரு வாடிக்கையாளராகத்தான் அணுகுவார். ஆனால், அவருடைய நடத்தை ஒரு நண்பனைப் போல இருக்கும். டீலரிடம் பழைய கார் வாங்கச் செல்லும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லா வியாபாரத்தைப் போல, இதிலும் ஏமாற்றுப் பேர்வழிகள் இருப்பார்கள். விபத்துக்குள்ளான காரைச் சரி செய்து, பெயின்ட் அடித்து புதிய கார் போல் மாற்றி விற்பவர்களும் உண்டு. உங்களால் இது விபத்தான கார் எனப் மேலோட்டமாகப் பார்த்தால் கண்டுபிடிக்கவே முடியாது. அதனால், உங்களுடன் ஒரு தேர்ந்த மெக்கானிக் அல்லது ஆட்டோமொபைல் விஷயங்கள் அறிந்த நண்பரை அழைத்துச் செல்வது நல்லது. அரிதான சமயங்களில், பழைய கார் டீலர்களிடம் சிறந்த விலைக்கு நல்ல காரும் வாங்கலாம்!
பழைய கார் டீலர்களில் இன்னொரு வகையினர் உண்டு. கார் நிறுவனங்களே பழைய கார் டீலர்களாகச் செயல்படுகிறார்கள். டொயோட்டா - யு-டிரஸ்ட், ஹூண்டாய் - அட்வான்டேஜ், ஹோண்டா - ஆட்டோ டெரஸ், டாடா - அஷ்யூர், மஹிந்திரா - எக்ஸ் மார்ட், ஃபர்ஸ்ட் சாய்ஸ், செவர்லே - ஓகே, மாருதி - ட்ரூ வேல்யூ போன்ற நிறுவனங்கள் இப்படிப் பட்ட அமைப்புகள். இவர்களிடம் கார் வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன. இவர்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போவதை விரும்ப மாட்டார்கள். எனவே, உங்களுக்கு இங்கே நல்ல கார் கிடைக்கும். மேலும் வாரன்டி, சர்வீஸ் போன்றவையும் கிடைக்கும். ஆனால், விலை கொஞ்சம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.
ஓனர்!
 
டீலர் வேண்டாம்; அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் மூலமாகவோ கார் வாங்க விரும்பினால், முதலில் ஓனரின் வீட்டுக்கு விருந்தாளி போலச் சென்று காரைப் பார்த்து வரலாம். அறிமுகமானவர்களுக்குள் நடக்கும் விற்பனை என்பதால், இரு தரப்பினரும் விலையில் விட்டுக் கொடுத்துப் போவார்கள். திருப்தி ஏற்படும் பட்சத்தில், கார் வாங்கும் படலம் இரு தரப்பினருக்கும் நல்ல அனுபவமாக அமையும். சில சமயங்களில், தெரிந்த நபர் மூலம் தெரியாத யாராவது கார் விற்க இருக்கும் தகவல் வரலாம். அவரிடம் நீங்கள் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், கார் வாங்கும்போது நீங்கள் குறைந்த விலைக்கு நல்ல காரை வாங்கலாம்.
பெட்ரோலா, டீசலா? 
இப்போது இருக்கும் விலை நிலவரத்துக்கு, இதுதான் எல்லோருக்கும் பெரிய கேள்வி. 'காரை அடிக்கடி ஓட்டுவீங்க, ஒரு நாளைக்கே குறைந்தது ஐம்பது கி.மீட்டருக்கு மேலே சுற்றுவேன்... அப்படீன்னா, டீசல் எடுத்துக்குங்க சார். ஆனா, காரையே எப்பவாவதுதான் ஓட்டுவேன். அதுவும் லாங் ட்ரிப்புக்குத்தான்னா பெட்ரோல்தான் உங்களுக்கு சரியா இருக்கும் சார்' - காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் இந்த வசனம் ஓரளவுக்கு உண்மை என்றாலும், இது கொஞ்சம் பழைய கார்களுக்குத்தான் சரி! டீசல் கார் என்றாலே மெயின்டெனன்ஸ் அதிகம், சத்தம் அதிகம், அடிக்கடி செலவு வைக்கும் என்பார்கள். ஆனால், இப்போது இருக்கும் லேட்டஸ்ட் டீசல் இன்ஜின்கள் ஸ்மூத்தாகவும், சத்தம் குறைவாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்படுகின்றன. பெட்ரோல் இன்ஜினுக்கும், டீசல் இன்ஜினுக்கும் இருக்கும் அடிப்படை வேறுபாடுகளைத் தவிர, இரண்டும் இப்போது கிட்டத்தட்ட ஒரே தரத்துக்கு வந்து விட்டன.
எனவே, டீசல் கார்தான் வேண்டும் என்றால், முடிந்தவரை குறைந்த கிலோ மீட்டர்களே இயங்கிய லேட்டஸ்ட் மாடலாக எடுப்பது நல்லது. பெட்ரோல் கார் என்றால், சர்வீஸ் இன்டர்வெல் சரியாக உள்ள காராகத் தேர்ந்தெடுங்கள்.
டெஸ்ட் டிரைவ்
 
மறக்காமல் டெஸ்ட் டிரைவ் செய்துவிடுங்கள். இது காரினுள் இருக்கும் பல பிரச்னைகளைக் கண்டுபிடிக்க உதவும். காரில் ஏதாவது அப்-நார்மல் சத்தம் வருகிறதா எனக் கவனியுங்கள். நீங்களேகூட சில விஷயங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்கலாம். மேடு- பள்ளங்களில் ஓட்டிப் பாருங்கள். இது சஸ்பென்ஷன் நல்ல நிலைமையில் உள்ளதா என அறிய உதவும். பிரேக், கிளட்ச் போன்றவற்றை நன்றாகச் சோதியுங்கள். வேகமாக ஓட்டிப் பார்த்து, கார் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்றும் பாருங்கள்!
வரலாறு!
 
கார் ஓனரிடம் சர்வீஸ் ரெக்கார்டுகளை வாங்கிப் பாருங்கள். இது, கார் சரியாகப் பராமரிக்கப்பட்டு இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள உதவும். மேலும், எதற்காவது இன்ஷூரன்ஸ் கிளைம் செய்திருக்கிறார்களா என்று விசாரியுங்கள். சர்வீஸ் வரலாறைப் பார்த்தால், முக்கியமான பாகம் இதற்கு முன்பு பழுதாகி உள்ளதா எனக் கண்டு பிடிக்கலாம்.
கார் வாங்கியாச்சு... அடுத்து? 
கார் வாங்கியவுடன் பலரும் வேலை முடிந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் நிஜம் அப்படி இல்லை. கல்யாணத்தில் தாலி கட்டிய பிறகும் எப்படி எண்ணற்ற சடங்குகள் இருக்கிறதோ, அது போல கார் வாங்கிய பிறகும் சில சடங்குகள் உண்டு. முதலில் என்.ஓ.சி, இன்ஷூரன்ஸ், டெலிவரி நோட், ஓனர்ஸ் மேனுவல், ஆர்.சி போன்ற சமாச்சாரங்களை எல்லாம் கைப்பற்றுங்கள். தாமதம் செய்யாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குச் சென்று, காரை உங்கள் பெயருக்கு மாற்றிப் பதிவு செய்யுங்கள். அதன் பின்பு, இன்ஷூரன்ஸ் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்ய வேண் டும். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு காரைக் கொண்டு சென்று, முழுமையாக செக்-அப் செய்து விடுங்கள்.
அப்புறம் என்ன..? ஆசைதான் நிறைவேறியாச்சே... காரில் பயணிப்பதை குடும்பத்துடன் ரசித்து அனுபவியுங்கள்!

http://pettagum.blogspot.in/2012/12/blog-post_30.html

--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts