லேபிள்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2011

நேர நிர்வாக டிப்ஸ்!



பில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும் அதுதான். நேர நிர்வாகத்தை சரியாக கடைபிடிப்பதும், நேரத்தின் அருமையை மனத்தில் பதிய வைத்துக்கொள்வதும் உங்கள் உடனடி நோக்கமாக இருக்க வேண்டும்.

அறையில் உங்கள் கண்களில் படும்படியான ஓர் இடத்தில் சரியான நேர நிர்வாகத்தின் பயன்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

* குறித்த நேரத்தில் வேலையை முடிப்பதால் குழப்பம் இருக்காது.
* நம்மைப்பற்றி நமக்கே ஒரு பெருமை உண்டாகும்.
* சமூகத்தில் மதிப்பு கிடைக்கும்.
* வாய்ப்புகளை இழக்க மாட்டோம்.
எனக்குத் தெரிந்த கல்லூரி மாணவி ஒருத்தி சமீபகாலமாக கைக்கடிகாரம் அணியக் காணோம். கேட்டால் ‘செல்ஃபோன் இருக்கே. நேரத்தை தெரிஞ்சுக்கணும்னா அதுவே போதுமே‘ என்றாள். இப்படி ஒரு நடைமுறை வசதி இருப்பது உண்மை. ஆனாலும் நேரம் நம் கண்ணில் அடிக்கடி பட்டுக்கொண்டே இருப்பது நல்லது. செய்யும் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டியதன் அவசியத்தை அது நினைவு படுத்திக்கொண்டு இருக்கும்.
வீட்டில் உள்ள சின்னச் சின்ன பொருள்களையெல்லாம் ஒரு சின்ன சூட்கேஸ் அல்லது ஒரு பெட்டியில் போட்டு வைப்பது என்பதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். கையோடு பெட்டியிலிருக்கும் பொருள்களின் பெயர் பட்டியலையும் எழுதி பெட்டியின்மேல் ஒட்டி விடுங்கள். அப்போதுதான் அதில் எதையாவது காணவில்லை என்றால் வீடு முழுவதும் தேடவேண்டிய கட்டாயம் ஏற்படாது. அந்தப் பெட்டியை மட்டும் ஆராய்ச்சி செய்தாலே போதுமானதாக இருக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் அந்தந்தப் பொருளை அதற்கான இடத்தில் வையுங்கள்.

நாளைக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இன்றே திட்டமிடுங்கள். அப்படி செய்ய வேண்டிய காரியங்களை (எதை முதலில் செய்ய வேண்டும் எதை அடுத்தது என்கிற வகையில்) 1,2,3 என்பதுபோல் வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்தநாள் ஒவ்வொரு காரியமாக செய்து முடித்தவுடன் அந்த எண்ணுக்கெதிரே பெருமையுடன் ஒரு டிக் போட்டுக்கொள்ளலாம். இப்படி திட்டமிடுவதன் மூலம் குறித்த நேரத்தில் குறித்த வேலையை செய்த திருப்தி இருக்கும். செய்த வேலையிலும் ஒரு தெளிவு இருக்கும்
செய்யவேண்டிய காரியங்களுக்கு நேரம் ஒதுக்கும் போது கொஞ்சம் பிராக்டிகலாக யோசியுங்கள். ’நான்கு விஷயங்களைச் செய்யவேண்டும். ஒவ்வொன்றிற்கும் அரைமணி நேரமாகும்’ என்றால் நான்கை அரையால் பெருக்கி இரண்டு மணிநேரம் என்று திட்டமிட வேண்டாம். எதிர்பாராத இடையூறுகள் வர வாய்ப்புண்டு. எனவே இரண்டு மணிநேரம் என்பதற்கு பதிலாக இரண்டரை மணிநேரம் என்று கொஞ்சம் கூடுதலாகவே நேரம் ஒதுக்குங்கள். டென்ஷனின்றி வேலையை முடிக்கலாம்.

எந்த ஒரு செயலை செய்யும் போதும் உடல் - மனம்- திறன் மூன்றும் இணைந்து விருப்பத்துடன் செய்யுங்கள். நமக்குப் பிடிக்காத வேலையாக இருந்தாலும் கண்டிப்பாக செய்ய வேண்டிய பட்சத்தில், ஈடுபாடு காட்டும் போது அந்த வேலை சீக்கிரமாகவும் சிறப்பாகவும் முடியும். உடல் சோர்வும் தெரியாது.
குறித்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் போடும்போது அவசியம் செய்ய வேண்டிய, ஆனால் அதேசமயம் உங்களுக்குப் பிடிக்காத காரியம் எதுவோ அதை முதலில் ‘செய்து தொலைத்துவிடுங்கள்.’ அப்போது மனத்தில் ஒரு நிம்மதி உண்டாகி மீதிக் காரியங்களை வேகமாகவே செய்து முடிப்பீர்கள்.

எப்பொழுதும் வேலை வேலை என்றில்லாமல் உங்களுக்குப் பிடித்த இசையை சற்றுநேரம் கேட்பதோ, உற்சாகம் தரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொஞ்சநேரம் பேசுவதோ நேர நிர்வாகத்துக்கு எதிரான செயல்கள் இல்லை. சொல்லப்போனால் இதனால் கிடைக்கும் உற்சாகம் காரணமாகவே வேலைகளைத் தடையில்லாமல் நீங்கள் செய்ய வாப்புண்டு. கடும் வேலைச்சுமையின்போது ரிலாக்ஸ் செய்வதில் தவறில்லை.
நீங்கள் இன்னும் புத்திசாலித்தனமாகக்கூட இதற்கு முன் கூறிய ஆலோசனையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட காரியத்தை முடித்தவுடன் உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்கலாம். மற்றொரு காரியத்தை செய்து முடித்தவுடன் அரைமணிநேரம் டி.வி. பார்க்கலாம். இது உங்களுக்கு நீங்களே அளித்துக் கொள்ளும் உற்சாகம்! இப்படி வைத்துக்கொண்டால் பிடித்த விஷயத்தை சீக்கிரம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தில் உங்கள் கடமைகளை இன்னும் வேகமாகவே முடித்துவிட வாய்ப்பு உண்டு.

தொலைக்காட்சி பார்க்கும்போது நடுவில்தான் எத்தனை விளம்பர இடைவேளைகள்! நாளை அணிய வேண்டிய உடைகளை எடுத்து வைத்துக் கொள்வது, நாளைக்கான காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்வது போன்ற விஷயங்களையெல்லாம் அப்போது செய்தால் அடுத்தநாள் ஆரவாரமின்றி அமைதியாகக் கழியுமே!
தொலைக்காட்சித் தொடர் எதையாவது தொடர்ந்து பார்க்கிறீர்களா? வேண்டாம் என்றால் விடவா போகிறீர்கள்? ஒன்றை கவனித்திருப்பீர்கள். பல சானல்கள் சரியான நேரத்துக்கு நிகழ்ச்சிகளைத் தொடங்குவதில்லை. ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குப் பிறகுதான் தொடங்குகின்றன. அதை நடைமுறையில் தெரிந்துகொண்டு முன்னதாகவே டி.வி. பார்க்க உட்காருவதையாவது தவிர்க்கலாம். அந்த ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் எத்தனையோ காரியங்களை செய்து முடிக்கலாம். முயற்சி செய்து பாருங்கள்.

தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி உங்களைக் கவர்ந்தால் அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த அறையை ஒழுங்குபடுத்தி வைக்கலாம். உதாரணத்துக்கு டீ-பாய் மேல் இருக்கும் நாளிதழ்களை அடுக்கி வைப்பது, ஷோ-கேஸ் பொம்மைகளை அடுக்கி வைப்பது, தரையைச் சுத்தப்படுத்துவது இப்படி ஏதேனும் ஒன்றைச் செய்யலாம்
செய்ய வேண்டிய வேலைகளை அவ்வப்போது மனத்தில் மட்டும் குறித்துக் கொள்ளாமல், கையோடு பளிச்சென்று தெரியும்படி வீட்டுக் கூடத்தில் ஒரு கரும்பலகை அல்லது வெள்ளைப் பலகையை மாட்டி எழுதி வையுங்கள். வேலை முடிந்ததும் உடனுக்குடன் மறக்காமல் பலகையில் குறித்துக்கொள்ளுங்கள். மறதியில் விட்டுப் போன வேலைகள் நினைவுக்கு வரும்.

ஏதோ ஓர் இனம்புரியாத காரணத்துக்காக செய்ய வேண்டிய ஒரு செயலைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால் அது சம்பந்தப்பட்ட இரண்டு மூன்று பேரிடம் ‘நான் நாளைக்கு இந்த செயலை செய்துவிடுவேன்‘ என்று சவால்போல சொல்லிவைத்து விடுங்கள். நீங்கள் தள்ளிபோட நினைத்தாலும் அவர்களது தேவைக்காகவாது உங்களுக்கு நினைவூட்டிவிடுவார்கள்
தொலைபேசியில் உரையாடும்போது சில நேரங்களில் முகவரி அல்லது முக்கியமான குறிப்புகள் எழுத வேண்டியிருக்கும். அதனால் சில வெள்ளைத் தாள்களும் பேனாவும் எப்போதும் அருகிலேயே இருக்கட்டும்! தொலைபேசியில் பேசும் போது எதிர்முனையில் இருப்பவரிடம் காத்திருக்கச் சொல்லி பேனாவைத் தேடினால் நன்றாக இருக்காது. இதன்மூலம் நேரமும் விரயமாகும்.

குறிப்பிட்ட நேரத்துக்கு யாரையாவது சந்திப்பதாகச் சொல்லியிருந்தால் ‘நம் திட்டமிட்டபடி 11 மணிக்கு இன்னிக்கு சந்திக்கிறோம், சரிதானே?‘ என்று அன்று காலையே அவரிடம் உறுதி செய்துகொள்ளுங்கள். இதன் மூலம் சந்திக்கும் நேரத்தை வலியுறுத்துகிறீர்கள். ஒருவேளை அவரால் இன்றோ அல்லது இன்றைக்கு 11 மணிக்கோ உங்களை சந்திக்க முடியாது என்றால் அதை முன்னதாகவே தெரிந்துகொண்டு நம் திட்டங்களைத் தெளிவாக வகுத்துக்கொள்ளலாம்.
எப்போதும் நமது உறவினர்கள், நண்பர்கள் வட்டம் சூழ இருப்பது நல்லதுதான். அவர்களது வருகை நன்மையளித்தாலும் மனதுக்கு மகிழ்ச்சி கிடைத்தாலும் அவர்கள் நேரத்தின் அருமை புரியாதவர்கள் என்றால் உங்கள் வீட்டுக்கு அவர்களைக் கூப்பிடுவதைவிட நீங்கள் அவர்கள் வீட்டுக்குச் சென்றுவிடலாம். கொஞ்சநேரம் பேசிவிட்டு நீங்கள் கிளம்பிவிடலாம்.

பொதுவாக உறவினர்களாக இருந்தாலும் நண்பர்களாக இருந்தாலும் வரவேற்பறையில் அமர வைத்துப் பேசுவோம். அறையில் பளிச் என தெரியும்படி, ‘எனக்கு நிறைய வேலை இருக்கிறது. உங்களுக்கு?’, ‘தாராளமாகப் பேசுவோம். ஆனால் சீக்கிரமே பேசி முடிப்போம்’ என்பதுபோன்ற வாசகங்களை மாட்டி வைக்கலாம். நேரத்தின் அருமையுணர்ந்து அவர்கள் வேலையை முடித்து கிளம்பி விடுவார்கள்
நாட்கள், வாரம், மாதம், வருடம் என ஒவ்வொரு வேலைகளையும் பட்டியலிட்டுச் செய்வோம். இவற்றை டைரியில் எழுதி வைப்பதைவிட கணினியில் விவரங்களாகப் பதிவு செய்து கொள்வது நல்லது. டைரி தொலைந்து போகலாம். ஆனால் எத்தனை வருடங்கள் கூடினாலும் கணினியில் பதிவான விவரம் வேண்டும்போது கிடைக்கும். அடுத்த பட்டியல் போடும்போது கை கொடுக்கும்.

அடிக்கடி மின்வெட்டு நடைபெறும் பகுதியில் இருக்கிறீர்களா? மின்வெட்டு இரவில் ஏற்பட்டால் வெளிச்சம் இருக்காது. பகலில் என்றால் மின்விசிறி சுற்றாவிட்டாலும் கூட வெளிச்சம் இருக்கும். எனவே முடிந்தவரை செய்யவேண்டிய வேலைகளை பகற்பொழுதில் முடித்து விடுங்கள். கூடுமானவரை மாலை அல்லது இரவுக்குத் தள்ளிப் போடாதீர்கள். இல்லையேல் அடுத்தநாள் வேலை பளு கூடி விடும்.
எவ்வளவோ இடங்களில் நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். நாம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட புத்தகம் ஒன்றை எப்போதும் எடுத்துச்சென்றால், காத்திருக்கும் வேளையில் படிக்கலாம். வரவு செலவு கணக்கை எழுதும் நோட்டுப்புத்தகம் ஒன்றையும் எப்போதும் கைவசம் வைத்திருக்கலாம். சரி செய்ய வேண்டிய விஷயங்களை குறிப்பெடுத்துக்கொண்டால் அடுத்த முறை சிக்கலின்றி வரவு செலவு செய்யலாம்.

உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். சத்தான உணவு, உடற்பயிற்சி போன்றவை தினமும் அவசியம். நேர நிர்வாகத்துக்கும் உடல் நலத்துக்கும் என்ன தொடர்பு என்று தவறிப்போய்கூட கேட்டுவிடாதீர்கள். திட்டமிட்டு செய்யும் வேலைகள், திட்டமிட்டபடி நடக்க நம் மனம் மட்டுமல்ல; உடலும் ஒத்துழைத்தால்தான் முடிக்க முடியும். எனவே, உடல் நலம் ஒழுங்காக இருந்தால்தான் திட்டமிட்டபடி செயல்களை முடிக்கமுடியும். உங்கள் நேரப் பட்டியலில் உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குங்கள்
கடின உழைப்பாளியாக இருப்பதைவிட புத்திசாலித்தனமான உழைப்பாளியாக இருங்கள். (Hard work (vs) Smart work) செய்ய அவசியமில்லாத காரியத்தை மாங்குமாங்கென்று செய்வானேன்? எந்தக் காரியங்கள் செய்ய வேண்டியவை அதிலும் எவையெல்லாம் உடனடியாகச் செய்யவேண்டியவை என்பதில் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அனுபவமும் இதில் கிட்டலாம்.

பிறருக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால் உங்களுக்குப் பிடிக்காத, நீங்கள் செய்யத் தேவையில்லாத ஒரு காரியத்தை உங்கள் தலையில் கட்ட, உங்களுக்குப் பிடித்தவரே முயற்சித்தாலும் அதற்கு ஒத்துக்கொள்ளாதீர்கள். அவரது மனம் புண்படுமோ என்று நினைத்து உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். முடியாது என்று கனிவாக, அதேசமயம் உறுதியாக மறுத்துவிடுங்கள். நாளடைவில் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கூடும்.
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். நாம் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்ற பட்டியலை போட்டுவிட்டு, ‘நாம் இதைச் செய்தால் தப்பாகிவிடுமோ’ என்ற பயத்தின் காரணமாக சிலர் செய்ய வேண்டிய காரியங்களைத் தொடங்கமாட்டார்கள். அந்தச் செயலை செய்ய நினைக்கும் முன் அதைப் பற்றி ஆராய்ந்து யோசித்து பொறுமையாகச் செயல் படுங்கள். பயத்துக்கு நேரத்தை விரயமாக்குவதில் பெரும் பங்குண்டு.

சிலர் வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்ய தமது வீடுகளில் கடியாரத்தைக் கூட பத்து நிமிடம் ஃபாஸ்டாக வைத்திருப்பார்கள். அவர்கள் மனத்தில் இந்த உண்மை தெரியும்தான் என்றாலும் கடியாரத்தைப் பார்த்தவுடன் உண்டாகும் சுறுசுறுப்பு வேலைக்காக ஒதுக்கிய நேரத்தை அனுசரிக்க வைக்கும். அதேநேரம் நாம்தான் ஃபாஸ்டாக வைத்திருக்கிறோமே என்ற அலட்சியத்தையும் ஏற்படுத்திவிட வாய்ப்புண்டு.
தினமும் வழக்கத்தைவிட ஒரு அரை மணிநேரம் அதிகமாக விழித்திருக்கப் பாருங்கள். இரவு கொஞ்சம் அதிகமாக விழித்திருப்பதா? காலையில் கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருப்பதா? இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள்தான் அதாவது பயாலஜிகல் க்ளாக் எனப்படும் உங்கள் உடல் இயக்கம்தான் தீர்மானிக்க வேண்டும். எப்போது விழித்திருந்தால் உங்கள் காரியங்களைச் சிறப்பாகவும் வேகமாகவும் செய்ய முடிகிறது என்பதைப் பொருத்துதான் நீங்கள் இந்த அதிகப்படி நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அலாரம் வைத்துக்கொள்வதில் குறைச்சலேயில்லை. அலாரம் அடித்து கண் விழித்தவுடன் நம்மில் ஒரு பகுதி ‘எழுந்திரு’ என்று சொல்லும். இன்னொரு பகுதி ‘அலாரத்தை நிறுத்து. ஐந்து நிமிடம் கழித்து எழுந்துவிடலாம்’ என்று சலுகை கேட்கும். மனத்தை உறுதியாக்கிக் கொண்டு உட்கார்ந்துவிடுங்கள். இந்த ஒரு நொடித் தீர்மானம் உங்களுக்கு தினமுமே கொஞ்சம் அதிக நேரத்தைப் பெற்றுத்தரும். அதனால், படுத்தவாக்கிலேயே அலாரத்தை நிறுத்த முடியாத அளவுக்கு கொஞ்சம் தள்ளியும், அதேசமயம் அலார ஒலி நம்மை எட்டும் அளவுக்கு அருகிலும் அது இருக்கும்படி வைத்து விடுங்கள்

கருத்துகள் இல்லை:

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts