வீட்டில் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஞாயிற்றுக்கிழமையில் கூட விடுமுறை என்பதே கிடைப்பதில்லை. நாள் முழுவதும் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கும் அவர்களுக்கு பகல் நேர தூக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இன்று பெரும்பாலான இல்லத்தரசிகள் பகல் நேர தூக்கத்தை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல், வேலை செய்பவர்கள் கூட விடுமுறை நேரத்தில் பகல் நேர தூக்கத்தை கடைபிடிப்பது உண்டு. பகல் நேர தூக்கம் உடல் எடையை அதிகரிக்குமா? மாரடைப்பு போன்ற பிரச்சினைகளை உண்டு பண்ணிவிடுமா? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
பகல் நேர தூக்கம் என்பது பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு சிலருக்கு உடல் அதிகம் அசையாமல் மூளைக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய வகையிலான வேலையில் இருப்பார்கள். இத்தகையவர்களுக்கு மூளை அதிக சோர்வின் காரணமாக சில சமயங்களில் உறக்க நிலைக்கு இழுத்துக் கொண்டு செல்லும். இப்படி தானாகவே உறக்கம் வரும் பொழுது பத்து நிமிடம் ஓய்வு எடுத்துக் கொள்வதில் தவறில்லை.
சொல்லப்போனால் இந்த பத்து நிமிட ஓய்வு அடுத்த பத்து மணி நேரத்திற்கு உற்சாகத்தை கொடுக்கும். அந்த பத்து நிமிடம் நீங்கள் உறங்காவிட்டால் அடுத்த பத்து மணி நேரத்திற்கு உடல் பலவீனமாக தோன்ற ஆரம்பிக்கும். எனவே மூளை சோர்வு அடையும் பொழுது 10 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு எழுந்து உங்கள் வேலையை செய்து பாருங்கள், நல்ல உற்சாகம் தெரியும்.
ஆனால் தினமும் வாடிக்கையாக அல்லது அதிக நேரம் பகல் தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய ஒரு விஷயமாகும். பகல் முழுவதும் உடல் உறுப்புகள் உற்சாகமாக செயல்பட்டு கொண்டிருக்கும். இப்படி இருக்கும் பொழுது திடீரென உடலுக்கு ஓய்வு அளிக்கும் பொழுது உடலானது குழம்பிப் போய்விடும். இந்த குழப்ப நிலை புற்று நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுத்து விடும்.
இதைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்களுக்கு மற்றவர்களை விட வயது முதிர்ந்தவர்கள் பகல் நேர தூக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கருத்து கூறியுள்ளனர். பகல் நேர தூக்கத்தை விட தூக்கமின்மை பிரச்சனை 2.3% அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இரவில் சரியான தூக்கமும், பகலில் சரியான உடல் உழைப்பும் இருப்பவர்களுக்கு தேவையற்ற நோய்களும் அவ்வளவு சீக்கிரம் நெருங்குவதில்லை.
மதிய உணவை சாப்பிட்ட உடன் பலருக்கு தூக்கம் வருவது உண்டு. இதனை உண்ட மயக்கமா? என்று கிண்டல் செய்வது உண்டு. இப்படி சாப்பிட்டவுடன் படுத்து உறங்குபவர்களுக்கு உடல் எடை கணிசமாக உயர்ந்து விடுகிறது. இதனால் நீரிழிவு, இதயநோய் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பகலில் அதிக நேரம் தூங்குபவர்களுக்கு, இரவில் சரியான தூக்கம் வருவது இல்லை. இப்படி மாறுபட்ட முறையில் தூக்கம் என்கிற நிகழ்வு நிகழ்வதால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது எனவே ஆரோக்கியமான உணவு முறை பழக்கத்தையும், தூங்கும் முறையையும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக 45 வயதை கடந்தவர்கள் பகலில் அதிக நேரம் உறங்குவதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக