லேபிள்கள்

வெள்ளி, 23 அக்டோபர், 2020

செய்த தவறை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது

செய்த தவறை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது, இறைவனுக்கு செய்யும் விஷயத்தில் தவறிழைத்துவிட்டால் இறைவனிடத்தில் தம் தவறுகளை தனிமையில் அமர்ந்து வெட்கப்படாமல் சொல்லி மனமுருகி மன்னிப்புத் தேடுவது கூடும்.
சமுதாயத் தலைவர்களாகவோ அல்லது அரசியல் தலைவர்களாகவோ அல்லது பிரமுகர்களாகவோ அல்லது இயக்கமோ அல்லது பொதுவாழ்வில் ஈடுபடுகிற எதுவோ, எவருமோ செய்த தவறை, மக்களிடம் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டோ அல்லது பயந்துகொண்டோ அல்லது வேறொரு காரணத்திற்காகவோ மறைப்பது எந்த விதத்திலும் கூடாது.


அதேபோன்று நம்நாட்டின் அரசியல்வாதிகளும் பல்வேறு இயக்கத் தலைவர்களும் செய்த தவறை வெட்கப்படாமல் ஒத்துக் கொண்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டாலேயே நாட்டில் நடக்கிற சாதிய, மதக் கலவரங்களில் தொண்ணுறு விழுக்காடு பிரச்சினை தீர்ந்துவிடும்.
அதேபோன்று குடும்பத்திலோ இயக்கத்திலோ ஏதேனும் நிர்வாகத்திலோ தவறு செய்தவர்கள் தாங்கள் செய்த தவறை சம்பந்தப்பட்டவர்களிடம் வெட்கப்படாமல் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டால், இன்று இந்தியாவின் வழக்காடு மன்றங்களில் இருக்கிற குடும்பப் பஞ்சாயத்துகள் இன்றே தீர்ந்துவிடும்.
அதுபோன்றே எந்த நிர்வாகமும் சீராக இயங்குவதற்கு இந்தப் பண்பு மிகவும் அவசியமான ஒன்றுதான் என்பதை அறிவுடைய யாரும் மறுக்கமாட்டார்கள்.
''அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 3:135)
மேலும் இதுபோன்று வெளிப்படையாக ஒரு பிரமுகர் செய்த தவறுக்காக அவர் வெளிப்படையாகவே வெட்கமில்லாமல் மன்னிப்புக் கேட்பதினால் மீண்டும் மீண்டும் அந்தத் தவறை செய்யாமல் இருப்பதற்கு இப்பண்பு கேடயமாக அமைந்து விடுகிறது.
பொதுவாகவே இஸ்லாமிய மார்க்கம் இதற்கு சரியான தீர்வைத் தருவதாகவும் நமது ஜமாஅத்தினருக்கு இது மிகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது.
இஸ்லாத்தின் சட்டதிட்டங்களைப் பற்றி ஆராய்ந்து சரியான முடிவைச் சொல்பவர்களுக்கு இரண்டு கூலி இருக்கிறது. தவறாகச் சொன்னாலும்கூட ஒருகூலி இருக்கத்தான் செய்கிறது. தண்டனை எதுவும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே தவறாகச் சொன்னால் அது இறையச்சத்திற்கு உகந்ததில்லை. மேலும் மறுமையில் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவதாகவும் இருக்கும்.
நமது ஆய்வில் சில தவறுகள் ஆங்காங்கே ஏற்படுவதுண்டு. நபிகள் நாயகத்திற்குப் பிறகு அவர்களைத் தவிர இப்படி தவறே ஏற்படாத எந்த மனிதனும் உலகில் இல்லவே இல்லை. அதனால்தான் இமாம்களில்கூட பழைய சொல், புதிய சொல் போன்ற மார்க்கத் தீர்ப்பெல்லாம் நிகழ்ந்துள்ளது.
எனவே இவ்வளவு நாள் ஏன் தவறாகச் சொன்னீர்கள் என்ற கேள்வி அர்த்தமற்றது. அல்லாஹ்விற்கு பயந்து ஆராய்ச்சியின் முடிவு எப்படி இருக்கிறதோ அதை மக்களுக்குப் பயப்படாமல் நமது சுயகவுரவத்தைப் பார்க்காமல் அதாவது வெட்கப்படாமல் சரியானதை சரியென்றும் தவறானதை தவறு என்றும் மாற்றி திருத்திக் கொள்வதே இறையச்சத்திற்கு நெருக்கமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் என்பது இறைவனது மார்க்கம். இதில் தவறுதலாக விளங்கிவிடுவது நமது குறை என்பதை கட்டாயம் வெட்கமில்லாமல் ஒத்துக் கொள்வதே இஸ்லாத்தில் தூய்மை பேணுவதாக அமையும்.
வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:159,160)
தாம் செய்த தவறை ஒத்துக் கொண்ட நபித்தோழர்கள்
ஒரு முறை அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் தவறிழைத்ததாக எண்ணியதால் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உங்கள் தோழர் வழக்காட வந்து விட்டார்" என்று சொன்னார்கள்.
அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்க ளிடம் வந்தேன்" என்று சொன்னார்கள்.
உடனே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (அபூபக்ர் லிரலி அவர்களை மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, "அங்கே அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இருக்கி றார்களா?" என்று கேட்க வீட்டார், "இல்லை" என்று பதிலளித்தார்கள்.
ஆகவே, அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தான் (வாக்குவாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகிவிட்டேன்." என்று இருமுறை கூறினார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். "பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் அவர்களோ, "நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா?" என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை. (அறிவிப்பவர் : அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல் :புகாரி 3661)
வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு வெட்கப்படக்கூடாது
ஒருவர் தனது திறமையைக் காட்ட வேண்டிய அல்லது தன்னை நிரூபிக்க வேண்டிய தருணத்தை வாய்ப்பைப் பயன்படுத்தாமல் வெட்கப்பட்டுக் கொண்டிருப்பது நல்லதல்ல. வாய்ப்பு நம்மைத் தேடிவரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்பவனே உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியும். எனவே வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு ஒரு முஃமினுக்கு வெட்கம் தடைக்கல்லாக இருக்கவே கூடாது என்பதை ஆழமாக நம்பி செயல்படவேண்டும்.
நபிகள் நாயகம் காலத்தில் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தும் ஒரு நபித்தோழர் வெட்கத்தினால் தவற விட்டதற்கான ஆதாரங்களையும், அதே நேரத்தில் கிடைத்த அல்லது கிடைக்க இருக்கிற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி மற்றவர்களிடம் நற்சான்று வாங்கிய சஹாபிகளும் இருக்கி றார்கள் என்பதற்கான ஆதாரங்களையும் நம்மால் காணமுடிகிறது.
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள் "அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்க, "அது பேரீச்ச மரம்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை "நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்" என்றார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 131,4698,6144 முஸ்லிம் 5415,5416)
அபூவாக்கித் (அல்ஹாரிஸ் பின் மாலிரிக் அல்லைஸீலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்கி வந்தனர்.
மற்றொருவர் (அலட்சியப் படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். (பள்ளிக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வீற்றிருந்த அவை) முன்னால் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்துகொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:
இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக்கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான். (அறிவிப்பவர்: அபூவாக்கித் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 66,473,474, முஸ்லிம் 4389)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர், "எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக எங்களுடன் அமரச் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன்.
(அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "இதா ஜாஅ நஸ்ருல்லாஹிஸ.. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீங்கள் பார்க்கும் போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்)" என்னும் (திருக்குர்ஆனின் 110வது "அந்நஸ்ர்') அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக் காட்டி, "இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், "நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்" என்று (விளக்கம்) கூறினர். சிலர், "எங்களுக்குத் தெரியாது" என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை.
பிறகு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம், "இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித்தான் கூறுகிறீர்களா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்றேன். அவர்கள், "அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
நான், "அது, அல்லாஹ், தன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவிப்பதாகும். ஆகவே, "அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள "வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றிதான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்" என்று சொன்னேன்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்" என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 4264)
கல்வியைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது
பொதுவாகவே எந்த ஒன்றையும் கற்றுக் கொள்வதற்கு வெட்கம் தடையாக இருக்கவே கூடாது. கல்வியைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கப்படுகிற ஒருவனால் ஒருக்காலும் முன்னேறவே முடியாது.
அதேபோன்று எனக்குத்தான் எல்லாமே தெரியும் என்று எண்ணுபவன் ஒருக்காலும் முன்னேறவே முடியாது. நம்மில் பலர் சிறுவயதில் குர்ஆனை நன்றாக அரபியில் ஓதக் கற்றிருப்பார்கள். நாளடைவில் அறவே ஓதத் தெரியாதளவிற்கு மறந்தவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இவர்கள் நம்மை யாரும் குர்ஆனைக்கூட ஓதத் தெரியாதவராக இருக்கிறார் என்று தவறாக நினைப்பாரோ என்றெண்ணி வெட்கத்தினால் மீண்டும் ஓதுவதற்கு வெட்கப்படுவார்கள். இவர்களால் ஒருக்காலும் குர்ஆனை ஓதவோ அல்லது மனனம் செய்யவோ முடியாது.
எனவே கல்வியைக் கற்பதற்கு, பிறர் நம்மைத் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்றெண்ணி வெட்கப்படாமல், கற்றால் கண்டிப்பாக அவர் சமூகத்தினராலும் பாராட்டுக்குரியவர். மறுமைப்பேறையும் பெற்றிடுவார் என்பதில் ஐயமில்லை எனவே கற்பதற்கு வெட்கப்படக்கூடாது.
இதற்கு ஆதாரமாக மேற்சொன்ன மூவர்களின் சம்பவமே சரியான சான்றாக அமையும். மேலும் சத்தியத்தை சொல்ல வெட்கம் கூடாது என்கிற தலைப்பிலுள்ள உம்முசுலைம் நபியவர்களிடம் குளிப்புக்கடமை பெண்களுக்கும் ஏற்படுமா? என்று கேள்வி கேட்ட செய்தியையும் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: அஸ்மா பின்த் ஷகல் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியரிலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்" என்று சொன்னார்கள்.
அதற்கு அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், "அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்?" என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும்" என்று (மீண்டும்) சொன்னார்கள்.
உடனே நான், "இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்' என்று பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் லி சொன்னேன்.
மேலும், அஸ்மா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், "தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!" என்றார்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை. (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: முஸ்லிம் 552)
மார்க்கத்தைக் கற்க அறவே வெட்கப்படக் கூடாது
பொதுவான கல்வியைக் காட்டிலும் இம்மை வாழ்விற்கும் மறுமை வாழ்விற்கும் ஈடேற்றத்தைப் பெற்றுத் தரும் மார்க்கக் கல்வியைப் படிப்பதிலும் மார்க்க அறிவைக் கற்பதிலும் பெறுவதிலும் அறவே நம்மிடம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூச்சமோ வெட்கமோ ஏற்படக் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வும் ரசூலும் மனிதனால் பின்பற்ற முடிந்ததையும் மனிதன் பிறமனிதனுக்கு எடுத்துச் சொல்லத் தகுந்த செய்தியையுமே சொல்லுவார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேசமயத்தில், மார்க்கம் என்ற பெயரில் தனிமனிதக் கருத்துக்களை சொல்வதில் பரிமாறிக் கொள்வதில் இந்தச் சான்றைக் கொடுக்க முடியாது. உதாரணத்திற்கு மார்க்கம் என்ற பெயரில் குர்ஆனிலும் நபிவழியிலும் இல்லாத மத்ஹபு சட்டங்களையும் அதில் இருக்கும் ஆபாசக் கூற்றுக்களையும் சொல்வதற்கு வேண்டுமானால் வெட்கப்படாலாமே தவிர குர்ஆனையும் நபிவழியையும் சொல்வதற்கு வெட்கப்படத்தேவையில்லை என்பதை உணர வேண்டும். இந்த ஆதாரத்தை சத்தியத்தைச் சொல்ல வெட்கப்படத் தேவையில்லை என்ற தலைப்பிற்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
அபூமூசா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் ஒரு குழுவினர் இ(ரு குறிகளும் சந்தித்துக்கொண்டால் குளியல் கடமையாகுமா அல்லது விந்து வெளிப்பட்டால்தான் குளியல் கடமையாகுமா என்ப)து குறித்துக் கருத்து வேறுபாடு (கொண்டு விவாதித்துக்) கொண்டனர்.
அன்சாரிகள், "விந்து வெளியானால்தான்' அல்லது "துள்ளல் இருந்தால்தான்' குளியல் கடமையாகும்" என்று கூறினர். முஹாஜிர்கள், "இல்லை, (இரு குறிகளும்) கலந்துவிட்டாலே குளியல் கடமையாகிவிடும். (விந்து வெளிப்படாவிட்டாலும் சரியே!)" என்று கூறினர். உடனே நான், "இப்பிரச்சினைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என்று கூறிவிட்டு எழுந்து ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினேன். எனக்கு அனுமதி கிடைத்தது. நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம்,
"அன்னையே!' அல்லது "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே!' நான் தங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். ஆனால், தங்களிடம் கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது" என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், "உங்களைப் பெற்றெடுத்த தாயிடம் நீங்கள் எதைப் பற்றிக் கேட்பீர்களோ அதைப் பற்றி என்னிடம் கேட்க நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. நானும் உங்கள் தாயார்தாம்" என்றார்கள். நான், "குளியல் எதனால் கடமையாகும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: சரியான ஆளிடம்தான் நீர் வந்திருக்கிறீர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து (ஆண்)குறி (பெண்)குறியைத் தொட்டு (சந்தித்து)விட்டாலே (இருவர்மீதும்) குளியல் கடமையாகிவிடும். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 579)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: "ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். விந்தை வெளியாக்காமல் எழுந்து விட்டார். இந்நிலையில் அவர்கள் இருவர்மீதும் குளியல் கடமையாகுமா' என்று ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இதோ இவளும் நானும் அவ்வாறு செய்வோம். பின்னர் நாங்கள் குளிப்போம்" என்றார்கள். (அறிவிப்பவர்: உம்மு குல்ஸூம் பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 580)
எனவே மார்க்கம் தொடர்பான அனைத்து விஷயங்களை வெட்கப்பட்டு விட்டுவிடாமல் தகுதியுடையவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவது இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்தும் முக்கிய விஷயமாகும்.'

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தயிர் மற்றும் யோகர்ட் என்ன வித்தியாசம்? எது ஆரோக்கியமானது?

தயிர் மற்றும் யோகர்ட் இடையே உண்மையான வேறுபாடு உள்ளதா அல்லது இரண்டும் ஒன்றா ? நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்கும் மிகவும் ஒத்த அத...

Popular Posts