லேபிள்கள்

புதன், 29 ஜூலை, 2020

எப்படி எல்லாம் தொழுவதை விட, இப்படித்தான்தொழுவது என்பதே மேல்!

  டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)     
வாழ்வியல் நெறியினை பின்பற்றி வாழ்வது எவ்வாறு என்று அணைத்து மதங்களும், இஸ்லாமிய மார்க்கமும் சில கட்டளைகளையும், விதி முறைகளையும் விதித்துள்ளன. ஆனால் எப்படி எல்லாமும் வாழெல்லாம் என்று சிலர் நினைப்பதால் சமுதாயத்தில் ஒழுக்கக் கேடுகள் நடக்கின்றன.
அதே போன்று தான் அகிலத்தினைப் படைத்து, அனைத்துக் கண்டங்களையும் அதன், அதன் இடங்களிலேயே நிறுத்தி, கடலைப் படைத்து மனிதன் பயணம் செல்லும் கப்பலையும், எண்ணெய், வாயு, ஆபரண முத்து போன்றவையினயும், உணவு வகைகளையும் படைத்து, மனிதன் பூமியில் வசதியாக வாழ பொன்னும், பொருளும் வாரி வழங்கிய, ஏக இறைவனுக்கு நன்றி செலுத்த வசதியாக தொழுகையினை அல்லாஹ் கட்டாயப் படுத்தியுள்ளான்.
வீட்டில் இருந்து தொழுவதினை விட பள்ளிக்கு நடந்து வந்து ஜமாத்துடன் தொழுபவர்களுக்கு அல்லாஹ் பல நன்மையினை வழங்குவதாக இமாம் புகாரி சொல்லி உள்ளார்கள்.
தொழும்போது நெற்றி, இருக்கைகள், இரண்டு கால்கள், இரண்டு கால் மூட்டுகள் ஆகிய ஏழு உறுப்புகள் சஜ்தா செய்யும் அளவிற்கு தொழ வேண்டும் என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
மன அமைதிக்காகவும், உடல் உறுப்புகள் கட்டுபாடுடன் வைதிருப்பதிற்காகவும் சிலர் பணத்தினை செலவழித்து 'யோகா' கற்றுக் கொள்கிறார்கள். சென்னையில் சில பூங்காக்களில் யோகா பயிற்ச்சியில் முஸ்லிம் சகோதரர்களும், சகோதரிகளும் கூட கலந்து கொள்கிறார்கள். ஆனால் பயிற்சி முடிந்ததும் யோகா குருக்கள், 'பாரத் மாதாகி கி ஜே' என்று சொல்லும் போதும் முஸ்லிம் சகோதரர்களும் அறியாமல் சொல்லுகிறார்கள். அவர்களுக்கு நமது நாடு இந்திய நாடு என்று தெரியாமலில்லையே! பின் ஏன் பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்ல வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழாமலில்லைதானே! அப்படி யோகா நடத்தும் பயிற்சியில் யோகா குரு ராம்தேவ் படம் பெரிதாக வைக்கப் பட்டு இருக்கும். ஆகவே உருவமில்லா இறைவனுக்கு உருவம் கொடுத்து முஸ்லிம்களையும் அதற்கு ஆள் சேர்க்கும் வேலை அல்லவா இது?
ஏன் அதே அமைதியினையும், உள், புற சுத்ததினையும் தொழுகை தரவில்லையா? மனதில் பல்வேறு அலை பாயும் முஸ்லிம்கள் தான் தொழுகையினைப் புறக்கணித்து வேறு பயிற்சிகளை தேடுவார்கள். ஈமானுள்ள எவரும் யோகா பக்கம் தலைக் காட்டாது தொழுகையில் அத்தனை உடல், உளப் பயிற்சியும் உள்ளது என்று ஐவேளை தொழுகையினை கட்டாயமாக கடைப் பிடிப்பார்கள்.
சிலர் எப்படி எல்லாம் தொழலாம் என்ற கொள்கையினை கொண்டுள்ளதினை சில எடுத்துக் காட்டுதல் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன்:
1) வெள்ளி தோறும் ஜும்மா தொழுகைக்கு முந்தி அடித்துக் கொண்டு வருவதினைப் பார்க்கலாம். 'ஜும்மா தொளுகையினைப் பற்றி முஸ்லிம் 1500 யில் ரசூலல்லாஹ் கூறியிருப்பதாக சொல்லும்போது, 'மக்கள் ஜும்மா தொழுகையினை கைவிடுவதினை விலகியிருக்கட்டும், ஏனென்றால் அவர்கள் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை குத்தி அலட்சிய வாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவார்கள்' என்று கூறியதாக சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அப்படி முந்தி அடித்துக் கொண்டு பள்ளிக்கு வருகிறவர்கள், குத்பா பிரசங்கத்தினையும், குத்பாவினையும் செவி மடுத்துக் கேளாது எங்கிருந்துதான் அந்தத் தூக்கம் வருமோ, அதில் ஆழ்ந்து விடுவார்கள். அதற்கு வசதியாக தற்போது பள்ளிகளில் குளிர் சாதன வசதியும் செய்துள்ளார்கள பின் கேட்கவா வேண்டும்.
திர்மிதி 484-இல் ரசூலல்லா கூறியிருப்பதாக சொல்லப் பட்டுள்ளதாவது, 'ஜும்மா நாளில் உங்களில் எவருக்கும் உறக்கம் வந்தால், அவர் தம் இடத்தை மாற்றிக் கொள்ளட்டும்' என்பதினை கூட அவர்கள் செய்வதில்லை.
ஆகவே தூக்கமும் கண்களை 'தழுவட்டுமே' என்ற நிலையினை மாற்றி தூக்கமும் கண்களை விட்டு ஜும்மாத் தொழுகையில் 'அகலட்டுமே' என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
இடம் பிடிப்பதிற்காக பிந்தி வந்தவர்கள் இடம் இல்லாவிட்டாலும் உட்கார்ந்து இருப்பவர்கள் முதுகினை மிதித்துக் கொண்டு முன்னே செல்வது மட்டு மல்லாமல், ஜும்மா பயான் இமாம் உரத்தக் குரலில் சொல்லும்போது விட்ட தொழுகையெல்லாம் எனக்கென்ன என்று உட்கார்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் வரும் அளவிற்கு தொழுது கொண்டு இருப்பார்கள்.
அது மட்டுமா! சிலர் தொழ தக்பீர் கட்டும்போது இரண்டடி அகலத்திற்கு காலை விரித்துக் கொண்டு அடுத்தவர்க்கு இடைஞ்சல் செய்யும் அளவிற்கு நின்று கொண்டிருப்பதினைக் காணலாம். ரசூலல்லா சபைக்கோ அல்லது தொழுகைக்கோ பின்னால் வந்தால் பின் சப்பில் அமருவதையும், தொழுவதையும் கடைப் பிடித்தார்கள் என்று ஹதீசுகள் சொல்கிறதே! பின் ஏன் நாம் ரசூலல்லா வழி பின்பற்றக்கூடாது? ஒரு சிலர் பய பக்தி இல்லாமல் காலை கிப்லா நோக்கி நீட்டிக் கொண்டும், சுவரிலோ, தூணிலோ சாய்ந்து கொண்டும் உட்கார்ந்து இருப்பதினை ஜும்மா தொழுகையினில் காணலாம். அப்படி நடப்பவர்கள் 'எப்படி எல்லாம் தொழலாம் என்ற கொள்கையினை கொண்டவர்கள் என்று உங்களுக்குத் தோனவில்லையா?
2) 2011 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா நாட்டின் ஹான்ஸ்பி நகரில் உள்ள ஜும்மா தொழும் இடத்திற்கு சென்றேன். அது சிட்டி கவுன்சில் கம்யுனிட்டி சென்டர் ஆகும். வெள்ளி அன்று வாடகைக்கு எடுத்து தொழுகை நடத்துகிறார்கள். வருகை தந்தவர் மொத்தம் முப்பது பேர் ஆகும் அதில் நான்கு பேர் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு லெபனான் நாட்டுக் காரர் ஆங்கிலத்தில் பயான் செய்து கொண்டு இருந்தார். அப்போது தொழிலாளர் மூவர் மஞ்சள் ஜாக்கெட் அணிந்து வந்தார்கள். அதில் இருவர் பேகி என்ற முழங்கால் வரை உள்ள அரை ஆடையும், ஒருவர் முழங்கால் மேல் உள்ள கால் சட்டையும் அணிந்து இருந்தார். அப்போது நாற்காலியில் அமர்ந்து இருந்த ஒருவர் உட்கார்ந்து கொண்டே தனது கைலியினை கழட்டிக் கொடுத்துக் கட்டிக்கொள்ள கேட்டுக் கொண்டார். அப்போது அவருடைய கால்கள் முட்டிக்குக் கீழ் செயற்கைக் கால்கள் பொருத்தப் பட்டு, பேகி என்ற முட்டுக்குக் கீழ் உள்ள டவுசர் அணிந்து இருந்தார். தொழுகை முடிந்ததும் அவரை சந்தித்து நலம் விசாரித்து அவர் பெயர் ஹுசைன் என்றும் அவர் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தில் பணியாற்றும்போது கால்களை இழந்ததாக சொன்னார். நான் அவருடைய ஈமானையும், ஈகைக் குணத்தினையும் பாராட்டாமல் இருக்கவில்லை. அவர் தனது கைலியினைக் கொடுக்காவிட்டால் அந்த வாலிபரும் முழங்காலுக்கு மேலுள்ள டவுசரை அணிந்து தொழுதிருப்பார்.
3) 5.5.2012 அன்று இளையான்குடி மேலப் பள்ளிக்கு தொழுகச் சென்றேன். அங்கு ஒரு ஹாலில் முப்பது சேர்களுக்கு மேல் போடப்பட்டு அதில் பலர் உட்கார்ந்து தொழுதும், சஜ்தாவில் தரையில் நெற்றி வைப்பதிற்க்குப் பதிலாக எழுதும் மரப் பலகையில் நெற்றியினை வைத்து தொழுவதினையும் கண்டேன். தொழுகை முடித்து வெளியே வரும்போது என் பள்ளித்தோழன் கமால் கையில் ஒரு துணிப் பையினை கொண்டு வந்தான். அவனிடம் பையில் என்ன என்று கேட்டேன். அவன் சொன்னான், 'முன்பு நானும் கால் வலியால் நாற்காலியில் உட்கார்ந்து தொழுவேன். ஆனால் ஒரு தடவை இமாம் பயான் செய்யும் பொது நெற்றி தரையில் பட தொழுவது நல்லது என்பதால், நான் தரையில் தொழும்போது முட்டி வலிக்காமல் இருப்பதிற்காக துண்டை முட்டிக்குக் கீழ் வைத்துத் தொழுவேன் என்றான். முடியாவிட்டாலும் எனது பள்ளித் தோழனின் ஈமானை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
4) சென்னை மண்ணடி செம்புதாஸ் பள்ளிக்கு ஜும்மா தொழுகச் செல்வேன். அங்கு ஒரு 22-25 வயது மதிக்கத் தகுந்த வாலிபர் சிறிது தாமதித்து தொழுக வந்தார். அவருடைய இடது கால் முட்டிக்கு மேல் 'ட' வடிவில் வளைந்து இருந்து, வலது காலில் மாடிப் படிகளில் தத்தி தத்தி ஏறி இரண்டாவது மாடிக்கு தொழுகச் செல்வதினைக் கண்டேன். அவர் நினைத்து இருந்தால் முதல் மாடியிலே ஒரு நாற்காலியினை தயார் செய்து உட்கார்ந்து கொள்ளலாம். ஆனால் சற்று காலந்தாழ்த்தி வந்ததால் அவர் இரண்டாவது மாடிக்கு செல்வதுதான் சிறந்தது என்று நினைத்து சென்றார். அங்கு தொழுகச் செல்லும் பலரும் ஜும்மா நாள் அன்று காணலாம். அவருடைய ஈமானும், தொழுகையின் ஒழுக்கமும் எவ்வளவுச் சாலச் சிறந்தது என்று எண்ணி வியந்தேன்.
தொழுவதினை ஒரு சடங்காக கருதும் சிலர் இனிமேல் வாகனத்தில் அமர்ந்து சினிமா பார்ப்பது போல் வாகனங்களில் பள்ளிவாசல் முன்பு உட்கார்ந்து தொழுதாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை. ஆகவே தொழுவது ஒரு சடங்காகக் கருதாது, அது கடமையாகக் கருதி, நம்மைப் படைத்து, பலன் பல வகை தந்து, அழகு பார்க்கும் வல்ல அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதிற்காக செய்யும் கடமையாக கருதி பய பக்த்தியுடன் நாமும் தொழுது, நமது சந்ததிகளையும் தொழச் செய்வது நமது கடமையல்லவா?
-posted by: AP Mohamed Ali,

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts