லேபிள்கள்

ஞாயிறு, 26 ஜூலை, 2020

ஒற்றுமையைக்கொண்டுபற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்

  டாக்டர் ஏ.பீ.முஹம்மது அலி, பிஎச்.டி.ஐ.பீ.எஸ்(ஓ)  
புனித குர்ஆனின் ஆலு இம்ரான் அத்தியாயத்தில், "இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;" என்று ஒற்றுமையினை வலியுறுத்தி உள்ளது.' அதனையே கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் அலிகார் முஸ்லிம்களிடையே 5.5.1970 ஆம் ஆண்டு பேசும்போது 'நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம், சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக, மிக அவசியம். சிறுபான்மை மக்கள் பிரிந்து வாழ முடியாது, அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருப்பது குர்ஆனின் கட்டளையாகும்' என்றும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
இந்திய அரசியல் வானின் இரு துருவங்கள் இருக்கின்றன. ஒன்று ஹிந்துத்துவா கொள்கை கொண்ட நரேந்திர மோடி அவர்கள், மற்ற இருவரும் ஹிந்துத்துவா கொள்கைக்கு எதிரான பீகாரினைச் சார்ந்த லாலுப் பிரசாத் யாதவும், உத்தரப் பிரதேசத்தினைச் சார்ந்த முலாயம் சிங் யாதவும் ஆகும்.
அரசியல் வானில் இரு துருவங்களானாலும், 20.2.2015 அன்று நடந்த குடும்ப நிகழ்வில் மூன்று தலைவர்களும் சிரித்து, மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள் அதே போன்ற நிகழ்ச்சியில் நமது சமூதாய தலைவர்கள் வேற்றுமைகளைக் களைந்து ஒருவரோடு ஒருவர் பேசி நட்புடன் பழகியதினை நான் பார்த்ததில்லை, நீங்களும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்ற முடிவில் இந்தக் கட்டுரையினை வரைகிறேன்.
உள்ளன்புள்ள நட்பு என்பது ஒருவருக்கொருவர் முகமன் கூறுவது, பண்புடன் நடந்து கொள்வது, அன்பு பாராட்டுவது ஆகும்.
பலவகையாகும் உறவு:
1) நண்பருடன் பழகுவது, சக ஊழியர்களுடன் பழகுவது, குடும்பத்தில் உறவு கொள்வது ஆகும்.
2) நண்பர்களுடன் உறவு கொள்வது ஏனென்றால் ஒரு செயல் நல்லதா அல்லது கேடு விளைவிப்பதா என்று எடுத்துச் சொல்ல ஒருவரின் துணை ஒவ்வொருவருக்கும் அவசியம் என்பதனால்.
3) நல்ல நட்பு வேலை பார்க்கும் இடத்தில் வெற்றிக்கு வழி வகுக்கும்.
4) பெற்றோர், உற்றார், உறவினர், உடன் பிறந்தோர் உறவு குடும்பத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும்.
சிலர் வானளாவிய ஒற்றுமையினைப் பற்றியெல்லாம் வாய் கிழியப் பேசுவர். ஆனால் நடைமுறையில் அவர்கள் எதனையும் கடைப் பிடிப்பதில்லை. நாமெல்லாம் ஒரு மரத்தில் உள்ள இலைகள் என்றோ, அல்லது மொழி, இனம் நிறத்தால் வேறு பட்டிருந்தாலும் மார்க்கத்தால் ஒன்று பட்டிருக்கின்றோம் என்றோ நினைப்பதில்லை. இஸ்லாம் என்ற மார்க்கம் இருப்பதால் தான் பல்வேறு இயக்கங்களை நாம் நடத்தி வருகிறோம், ஆகவே அந்த மார்க்கத்தினர் ந ல்வழி, நட்புடன், நலத்தோடு வாழக் கற்றுக் கொடுப்பது ஒவ்வொரு தலைவரின் கடமை என்று நினைத்துப் பணியாற்றுவதில்லையே, அது ஏன் என்று உங்களுக்கு கேள்வி கேட்கத் தோனுமல்லவா?
22.2.2015 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஆர்.ஆர்.எஸ். சக்கா என்ற ஊழியர் பேரணியில் அதன் தலைவர் மோகன் பகவத், 'அனைத்து ஹிந்து அமைப்பினரையும் ஒருங்கிணைக்க ஒவ்வொரு கிராமத்திலும் கிளைகள் அமைக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விட்டிருக்கின்றார். அந்த ஒற்றுமை உணர்வினை ஒருவரும் குறை கூறமுடியாது. அதே ஒற்றுமை அறைகூவல் ஏன் சமூதாய இயக்கங்களிடையே அதன் தலைவர்கள் வேண்டுகோள் விடக்கூடாது. குறைந்தது பொது நன்மைக்காவது இனைந்து வேண்டுகோள் வைக்கக்கூடாது. அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர உறவு வைத்துக் கொண்டால் தானே அவர்கள் மற்றவர்களுக்கு போதிக்கப் போகின்றார்கள் என்று கேள்வி கேட்க உங்களுக்கு தோனுகின்றதல்லவா?
21/22.2.2015 ஆகிய நாட்களில் சென்னைக்குப் பக்கத்தில் உள்ள அலமாதி என்ற ஊரில் 'இஸ்த்திமா' நடந்தது.
மார்க்க செற்பொழிவினைக் கேட்க ஆயிரக் கணக்கானோர் திரண்டதாக அங்கே சென்று வந்த நண்பர்கள் சொல்ல மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மாநாட்டின் நிறைவேற்றிய தீர்மானம் என்ன என வினவினேன். அதற்கு மார்க்க பயான்கள் நடந்தன, ஐந்து தம்பதிகளுக்கு திருமணம் நடந்தது, இறுதியாக துவா ஓதப்பட்டது என்றார்கள். ஏழு சதவீத தமிழ் மக்களில் ஆயிரக் கணக்கானோர் ஒரு சேரப் பார்ப்பதே அரிது. அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இன்று சிறுபான்மையினர் இந்தியாவில் எதிர் கொள்ளும் சவால்கள், உலக முஸ்லிம்களின் நிலைப்பாடு, இளைஞர்கள் சிறந்த வழியில் நடப்பதிற்கு உரிய அறிவுரைகள் ஆகியவற்றினை போதித்திருந்தார்கள் என்றால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்குமல்லவா?
உதாரணமாக:
1) 1) முத்துபேட்டை தர்கா புது வருடப்பிறப்பு அன்று தாக்குதல், புது டெல்லி சர்ச், நாகர்கோவில் ஜெபக் கூடாரம் தாக்குதல் போன்ற சிறுபான்மையினர் வழிபடும் தளங்களை தாக்குதலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்ற அறிவுரை.
2) உ.பி. போன்ற மாநிலம் முசாபர் நகரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம், பெண்கள் பாலியல் குற்றத்திற்கு ஆளாக நேர்ந்த சம்பவம் போன்று சிறுபான்மையினர் வாழும் கிராமம், நகரங்களில் எவ்வாறு பாதுகாப்புடன் நடந்து கொள்வது.
3) முஸ்லிம்கள் தனிப்பட்ட விரோதங்கள், மொழி, இனத்தால், குடும்பத்தால் வரும் பிரிவினைகள் மறந்து ஒற்றுமையுடன் வாழ என்ன செய்யலாம்.
4) இளைஞர்கள் தீவிர வாத கொள்கைகளுக்கு தங்களை பலிகிடாவாக்கக் கூடாது என்ற போதனைகள் சொல்லலாம். சமீபத்தில் பெங்களூரு நகர முஸ்லிம் பொறியியல் எஞ்சினீயர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கப் போய் பட்ட துன்பங்கள், இங்கிலாந்து நாட்டின் முஸ்லிம் பள்ளி சிறுமிகள் மூவர் ஐ.எஸ்.தீவிர வாத கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்க பள்ளிப் படிப்பு, குடும்ப பாசத்தினை விட்டு சிரியா சென்றிருப்பதும், 22.2.2015 அன்று நைஜீரியா நாட்டில் ஏழு வயது சிறுமி வெடிகுண்டாக மாறி பலரை சாகடித்திருப்பது போன்ற சம்பவங்கள் முஸ்லிம்கள் இடையே அதிர்ச்சியில் ஆழ்த்தாமலில்லை! அதுபோன்ற தீய போதனைகளிடமிருந்து இளைஞர்களை காப்பது எப்படி என்று அறிவுரை புகன்றிருக்கலாம்.
5) இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நமது கோரிக்கைகள் மக்கள் பிரதிநிதிகள் மூலம் தான் நிறைவேற்ற வேண்டும்.
முஸ்லிம்கள் பிரதிநிதிகளாக இருந்தால் தான் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறும். ஆகவே பிரிந்து கிடக்கும் சமூதாய தலைவர்களை எவ்வாறு ஒருங்கிணைக்கலாம் என்று அங்கு கூடியிருந்த அமைப்பாளர்கள் சொல்லி இருந்தால் சாலச் சிறந்ததாக இருந்து இருக்கும்.
ஆகவே இனி வரும் காலங்களில்லாவது சமூதாய ஒற்றுமை, தலைவர்கள் ஒருங்கிணைப்பு, வழிபாடு தளங்கள் பாது காப்பு, முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு, இளைஞர்கள் நல் வழிப் படுத்துதல் போன்ற செயல்களில் முஸ்லிம்கள் கூடும் கூட்டங்களில் கொள்கை முடிவெடுத்தால் சிறப்பாக இருக்குமல்லவா?

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts