லேபிள்கள்

புதன், 13 மே, 2020

கல்வியும் ஒழுக்கமும்

இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் போதிக்கக்கூடிய மார்க்கம் மனித வாழ்க்கையில் அனைத்து கட்டத்திலும் ஒழுக்கம் பேண இஸ்லாம் வலியுறுத்துகிறது
அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் மனிதர்களுக்கு வணக்க வழிபாடுகளை மட்டும் போதிக்க வரவில்லை மாறாக கொள்கை,வழிபாடுகள் சட்டங்கள் என்பதையெல்லாம் தாண்டி உயர்வான ஒழுக்கத்தை மக்களுக்கு போதித்து ஒழுக்கத்துடன் கூடிய சமுதாயத்தை கட்டியெழுப்புவதும் அவரின் வருகையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
அல்லாஹ் கூறினான்
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.62:2
அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ஒழுக்கத்திற்கும் நற்குணத்திற்கும் மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.
அல்லாஹ் கூறினான்:
நிச்சயமாக நீங்கள் மகத்தான நற் குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்.68:4
அதிய்யா ஓஃஃபி رحمه الله அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கையில் மகத்தான ஒழுக்கத்தின் மீது இருக்கின்றீர்கள் என்று கூறினார்.(பார்க்க தஃப்ஸீர் இப்னு கஸீர்)
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஒழுக்கம்,மற்றும் நற்குணத்தின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்தார் .
நான் (சஅத்) "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!" எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா رضِي الله عنها அவர்கள், "நீர் குர்ஆனை ஓதவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (ஓதியிருக்கி றேன்)" என்றேன். ஆயிஷா رضِي الله عنها அவர்கள்,"நபி صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது" என்று கூறினார்கள்.நூல் ஸஹீஹ் முஸ்லிம் 1357
இஸ்லாம் மனிதன் தன் வாழ்கையில் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு ஒழுக்கங்களைக்குறித்து பேசுகிறது என்றாலும் நாம் இங்கே இக்கட்டுரையில் கல்விகுறித்து மார்க்கம் கூறியுள்ள ஒழுக்கத்தை மட்டுமே பார்க்க உள்ளோம்.
ஒழுக்கமில்லாதவனுக்கு கல்வியில்லை என்று அரபியில் கூறுவார்கள்
கல்வியைத்தேட க்கூடியவர்கள் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் ஒழுக்கமில்லாமல் கல்வியைப்பெறுவதால் எவ்வித நன்மையுமில்லை கல்வியைத்தேடுபவர்களின் எண்ணம் நல்லதாக இருக்க வேண்டும்.
நிச்சயமாக 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது.ஸஹீஹுல் புஹாரி 1
நிய்யத் சரியில்லாமல் ஒருவர் கல்வியைப்பெற்றால் அந்த கல்வி அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்லாது
மறுமையில் முதலாவதாக தீர்ப்பளிக்கப்பட்டு நரகில் நுழைவிக்கப்படும் மூன்று நபர்களில் ஒருவர் கல்வியைக் கற்றவர் என்று அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ கூறினார்கள்
அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் கூறினார்கள் மகத்துவமும் மேன்மையும் மிக்க அல்லாஹ்வின் திருப்தியை நாடி கற்கவேண்டிய கல்வியை யார் உலகத்தில் ஏதாவது ஒன்றை குறிக்கோளாகக் கொண்டு கற்பானோ அவன் சொர்க்கத்தில் வாடையைக்கூடப்பெறமாட்டான்.அறிவிப்பாளர் அபூஹுரைரா நூல் சுனன் அபீதாவூத் 3664
கல்வியைத்தேடக்கூடியவர் பேண வேண்டிய ஒழுக்கத்தை மூஸா عليه السلام அவர்கள் ஹிள்ரு عليه السلام அவர்களிடம் கல்வியைத்தேடிச்செல்லும் போது பின்பற்றியதை அல்லாஹ் சூரத்துல் கஃஹ்ஃப் என்ற அத்தியாயத்தில் கூறிக்காட்டுகிறான் பார்க்க சூரத்துல் கஃஹ்ஃப் 60 முதல் 83 வரையுள்ள வசனங்கள் .
ஆசிரியரிடம் பாடம் பாயிலும் போது மாணவர்கள் அவசரம் காட்டக்கூடாது பொறுமை காக்க வேண்டும் ஆசிரியர் பாடத்தை நடத்தி முடிக்கும் முன் குறுக்கீடு செய்யக்கூடாது என்ற ஒழுக்கத்தை மாணவர்கள் இந்த நிகழ்விலிருந்து பெற வேண்டும்
மாணவன் ஆசிரியரிடம் கல்வி பயிலும் போது ஆசிரியருக்குமுன் பணிவோடு அமரவேண்டும் என்பதை ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் எடுத்துக்காட்டுகிறது அதில் வந்துள்ளது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மக்களிடம் எண்ணிடம் கேள்வி கேளுங்கள் என்று கூறிய போது மக்கள் கேள்விக் கேட்க்க அஞ்சினார்கள் அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரின் முட்டுக்கால்களுக்கு முன் அமர்ந்து கேள்விகளைக்கேட்டார்கள் ஸஹீஹ் முஸ்லிமில் 10
ஒழுக்கமில்லாத கல்வி காகித பூ போன்றது அது மணம் தராது
ஒழுக்கமில்லாமல் கல்வி பயில்வதனால் எவ்வித பயனுமில்லை என்வே தான் இந்த சமுதாயத்தின் சிறந்த முன்னோர்கள் ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த ஆசிரியர்களிடம் கல்வி தேடினார்கள் நபி صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் தம்மை ஒர் ஆசிரியராக அறிமுகப்படுத்தினார்கள் நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரைக்குறித்து கூறும்போது அவரை விட சிறந்த ஒர் ஆசிரியரை நாங்கள் கண்டதில்லை என்றார்கள்
இமாம் இப்னுல் முபாரக் رحمه الله அவர்கள் கூறினார் முப்பது வருடம் நான் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன் அதன் பின் இருபது வருடம் கல்வி பயின்றேன்
நல் அறிஞர்கள் கல்வியை கற்பதற்கு முன் ஒழுக்கத்தை கற்றுக்கொள்பவர்களாக இருந்தார்கள் .காயத்துன் நிஹாயா ஃபி தபக்காத்தில் குர்ரா 1/446
இமாம் இப்ராஹிம் பின் ஹபீப் பின் ஷஹீத் رحمه الله கூறியதாவது என்னுடைய தந்தை என்னிடம் கூறினார் எனதருமை மகனே நீ ஃபுகஹாக்களிடமும் உலமாக்களிடமும் சென்று அவர்களிடமிருந்து அறிவை பெற்றுக்கொள் அவர்களின் ஒழுக்கத்தையும்,நற்பண்புகளையும்,அழகிய வழிமுறையையும் எடுத்துக்கொள்ளுங்கள் நீ அதிகமான ஹதீஸ்களை கற்றுக்கொள்வதை விட அது தான் எனக்கு மிகவும் பிடித்தமானது என்றார்கள் .அல்ஜாமிஃ லில் அஹ்லாகிர் ராவி வ ஆதாபிஸ் ஸாமிஃ 1/80
இமாம் அப்துல்லாஹ் பின் வஹப் رحمه الله அவர்கள் கூறினார் நாங்கள் இமாம் மாலிக் رحمه الله அவர்களிடமிருந்து கற்ற கல்வியை விட அதிகமாக அவரின் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டோம் .ஸியரு அஃலாமின் நுப்லா 8/113
இமாம் இப்னுல் முபாரக் رحمه الله அவர்கள் கூறினார் என்னிடம் ஆரம்பம் முதல் இது நாள் வரையுள்ள தலைமுறையில் கல்வியை கற்ற ஒரு மனிதரைப்பற்றி கூறப்பட்டு அவரை நான் சந்திக்க முடியாமல் போனாலும் நான் அதற்காக வருத்தப்படமாட்டேன் ஒழுக்கமுடைய மனிதனைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரை சந்திக்க முடியாமல் போனால் அதற்காக நான் வருத்தப்படுவேன் .அல் அதாபுஷ் ஷரஈய்யா 4/207
ஒழுக்கமில்லாதவர்களிடம் கல்வி பெறலாமா?
மார்க்கத்திற்கு முரணான வெளிப்படையான ஒழுக்கக்கேடுகளை செய்யக்கூடியவர்களிடம் கல்வி கற்கக்கூடாது வெளிப்படையான ஒழுக்ககேடுகள் என்பது பொய்யுரைப்பது,மோசடி செய்வது,ஹராமான காரியங்களில் ஈடுபடுவது,
அல்லாஹ் கூறுகிறான்
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். 49:6
கல்வியைப்போதிப்பவர்கள் நல்லவர்களா தீயவர்களா என்று ஆராய்ந்து பார்த்து தான் அவர்களிடமிருந்து உபதேசத்தை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் ஒழுக்கமில்லாதவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பெயரில் பொய்யையும் புரட்டையும் மார்க்கமாக ஆக்கி மக்களை வழிகெடுத்து விடுவார்கள்
அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் கூறினார்கள் என் சமுதாயத்தின் மீது நான் அதிகம் அஞ்சுவது வழிகெடுக்கும் தலைவர்களைத்தான் .நூல் அபூதாவூத் 4252
மேலும் கூறினார்கள் உங்கள் மீது நான் அதிகம் பயப்படுவது நாவன்மைமிக்க நயவஞ்சகனின் தர்க்கத்தை தான். நூல்:இப்னு ஹிப்பான் 80,ஷுஃபுல் ஈமான் 1639
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த கல்வியை நீதமானவர்கள் சுமந்துகொள்வார்கள் அவர்கள் வரம்பு மீறுவோர்களின் கைய்யாடல்களையும் பொய்யர்களின் புறட்டு வாதங்களையும் மடையர்களின் தவறான விளக்கங்களையும் நீக்குவார்கள் .அறிவிப்பாளர் அபூஹுரைரா நூல் தப்ரானி 599 அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகி 20911
இமாம் மாலிக் رحمه الله அவர்கள் கூறினார்கள்
அறியாமையை பகிரங்கப்படுத்தும் மடையன்
மனோ இச்சையின் பால் அழைக்கும் அழைப்பாளன்
மக்களிடம் பேசும் போது பொய் பேசுபவன் என்று அறியப்பட்டவன் இவன் நபிமொழியைக்கூறுவதில் பொய் சொல்லாவிட்டாலும் சரியே
நல்லவர்,வணக்கசாலி,சிறந்தவர் ஆனாலும் ஹதீஸ்களை சரியாக மனனமிடாதவர் ஆகிய நான்கு நபரிடமிருந்து கல்வியை எடுத்துக்கொள்ளாதீர்கள் நூல் இமாம் தஹபி அவர்களின் ஸியரு அஃலாமின் நுப்லா 7/162


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நல்ல பாம்பு: பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் காணப்படக்கூடிய 338 பாம்பினங்களில் 71 (22 சதவீதம்) பாம்புகள் தான் நஞ்சுடையவையாக அறியப் பட்டிருக்கின்றன. இவற்றில் 4 (...

Popular Posts