லேபிள்கள்

புதன், 19 டிசம்பர், 2018

சமூக வலைத்தளங்களில் தள்ளாடும் நமது சமூகம்…..


-மவ்லவி. M. றிஸ்கான் முஸ்தீன் மதனி, அழைப்பாளர், அல்-கப்ஜி தஃவா நிலையம், (தமிழ் & சிங்கள பிரிவு)
இன்று சமூக வலைத்தளங்களுக்கு சமூகத்தில் இருக்கும் தாக்கம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதனோடு தொடர்பில்லாத மக்களே கிடையாது என்று சொல்லுமளவுக்கு குறிப்பிட்ட காலத்திற்குல் சமூகமயமாக்கப்பட்டமை பெரும் வியப்பான விடயமே!
எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அலைந்து திரியும் எத்தனையோ மக்கள் அதன் மூலம் தமக்கு பிரயோசனம் என்ற விடயத்தை விட வெறும் 'டைம் பாஸிங்' என்ற விடயத்தையே முதன்மைப்படுத்துகின்றனர். இதனூடாக பிரயோசனம் அடையக் கூடியவர்களை எடுத்துக் கொண்டால் தத்தமது ஆர்வங்களுக்கும், ஈடுபாடுகளுக்கும் ஏதுவான பல்வேறு விடயங்களை தமக்குள் பகிர்ந்து கொள்கின்றனர். விளையாட்டு, சுகாதாரம், மருத்துவக் குறிப்புக்கள், சமயம், சமூகவியல் என பல்வேறு துறைகளில் நாளாந்தம் பலதரப்பட்ட செய்திகளையும் ஆக்கங்களையும் நம்மில் பலர் சமூக வலைத்தளங்களின் ஊடாக பெற்றுக் கொள்கின்றனர்.
குறிப்பாக சுகாதாரம் மற்றும் மருத்தியல் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் தமது உடலில் இருக்கும் நோய்களுக்கு அல்லது தமது அன்புக்குரியவருக்கு இருக்கும் வியாதியை குணப்படுத்திக் கொள்ள இயற்கை வைத்தியம், பக்கவிளைவுகள் அற்ற மூலிகை வைத்தியம் மற்றும் பாட்டி வைத்தியம் என பல்வேறு கோணங்களில் பெரும் பெரும் வியாதிகளுக்கான மருத்துவக் குறிப்புக்களை பரிமாரிக் கொள்கின்றனர். இவை அனைத்தும் ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதா? இல்லையா? என்ற கேள்வி இருந்தும் அதைப்பற்றி எந்தக் கவனமும் இல்லாமல் வாட்ஸ் அப்பில் வந்தது முக நூலில் வந்தது என சொல்லிக் கொண்டு குறித்த மருத்துவக் குறிப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் சமூகவலைத்தளங்களினூடாக டாக்டர் ஆகிவிட்டனர் என்ற அளவுக்கு நிலைமை முற்றிவிட்டது.
இதே ஆர்வக் கோளாரை மார்க்க சட்டங்களை பகிரும் விடயத்திலும் நாம் பார்கின்றோம். இன்று சிலருக்கு புகாரி, முஸ்லிமில் பதியப்பட்ட செய்திகளுக்கு கொடுக்கும் அந்தஸ்தை வாட்ஸ்; அப், முகநூலில் வரும் செய்திகளுக்கு கொடுப்பதை பார்க்கின்றோம். மார்க்க அறிவில் முஸ்லிம் சமூகம் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் எதும் தேவையில்லை.
"மார்க்க அறிவை பெற்றுக் கொள்ளும் மிகப் பெரிய நல்லறத்தை மார்க்கத்தை கற்றவர்களிடம் இருந்து பெரும் நடைமுறை மலை ஏறி சமூகவலைத்தளங்களில் அறிமுகமற்றவர்கள் பதிவிடும் செய்திகளை தலை மேல் கொண்டு செயற்படும் புதிய ஸ்டைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. இந்நிலையானது எமது சமூகத்தை விட்டும் அறிவு உயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். மறுமை நெருங்கி விட்டது என்பதனையும் பறைசாற்றுகின்றது."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள்; அறிவிக்கும் செய்தி புகாரியில் 1036 ஆம் இலக்கத்தில் பதியப்பட்டுள்ளதாவதுஅறிவு உயர்த்தப்படும் வரை, பூமி அதிர்வுகள் அதிகமாகும் வரை,… மறுமை நிகழாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மற்றவர்களோடு பகிரவும், நண்பர்களுக்கு தெரியப்படுத்தி சுவனத்தை அடைந்து கொள்ளவும் அல்லது நரக நெருப்பை விட்டும் காத்துக் கொள்ளவும் என்று இறுதியில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை எந்த ஒரு கேள்வி பார்வையும் இன்றி சில வேலை குறித்த செய்தியை ஒரு யூதனனோ அல்லது கிறிஸ்தவனோ அல்லது எம்மில் இருக்கும் ஒரு நயவஞ்சகன் கூட பகிர்ந்திருக்கலாம் என்ற ஒரு ஜயப்பாடு ஏதும் இன்றி அப்படியே பகிர்வது கவலைக்கிடமான நிலையாகும்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல் ஹுஜ்ராத் 6)
சாதாரன மக்கள் நடந்து இவ்வாறு செய்திகளை எந்த ஒரு ஆய்வும் இன்றி அனுப்பினால் பரவாயில்லை. உலமாக்களின் வாட்ஸ்அப் குழுமங்கள், அசிரியர்களின், பட்டதாரிகளின் குழுமங்களிலும் இந்த நிலை நிலவுவதை காணும்போது எந்த அளவுக்கு மார்க்க அறிவில் நாம் பலகீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை சுட்டிக் காட்டுகின்றது.
குறித்த செய்திக்கு சொந்தக்காரன் யார் அல்லது இந்த செய்தியின் மூலம் இவர்கள் எதிர்பார்பது என்ன? உண்மையில் சமூக நலன் அல்லது அமல்களில் ஆர்வம் மூட்டல் என்பன இங்கு நோக்கப்படுகின்றதா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை உரசிப் பார்க்க முற்பட வேண்டும். இல்லாதவிடத்து இப்படிப்பட்ட செய்திகளைப் பகிர்வதனால் சமூக நலன், மார்க்க நலன் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய் சமூகத்தில் பெரும் குழப்பங்கள், சச்சரவுகளும் மேலிட்டு இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் இஸ்லாத்தை விட்டும் தூரமான பல்வேறு பிரிவினரின் கொள்கை கோட்பாடுகள் மிக இலகுவில் எமது சமூகத்தில் தாக்கம் செலுத்தி நாளடைவில் எது சத்தியம் எது அசத்தியம் என பிரித்தரிய முடியாது போகும்.
தூய இஸ்லாமிய கொள்கையை பாதுகாத்திட
குறிப்பாக இஸ்லாத்தை விட்டு வெளியேரிய ஷிஆ-இசம், காதியானிசம் மற்றும் முஃதஸிலா, அஷ்அரிய்யாக் கொன்கைள் சில குறிப்பிட்ட உலமாக்களை(?) தங்களது கையாற்களாக ஆக்கிக் கொண்டு கட்சிதமாக பாமர மக்களுக்கு மத்தியில் பரப்பப்படுகின்றமையை காணமுடிகின்றது. கபுரு வணக்கம், இணை வைத்தல், இன்னோரன்ன நூதன அனுஷ்டானங்கள் (பித்தஅத்துகள்) இலகுவில் ஒலி, ஒளி வடிவில் பொது மக்களை சென்றடைய இந்த சமூக வலைத்தளங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மக்கள் வெறும் வெளித் தோற்றத்தை வைத்து இவர் ஓர் இஸ்லாமிய அறிஞர் தான் என தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு அவர் வாயில் இருந்து வரும் அனைத்தையும் நம்பி அவற்றுக்கு மார்க்க அங்கீகாரம் வழங்கி தலைமேல் கொண்டு செயற்பட ஆரம்பித்து விடுகின்றனர். உண்மையில் இப்படிப்பட்ட மோசமான இயக்கஙகளின் பங்காளிகள் அல்லது இவ்வியக்கங்களிடம் இருந்த பணம் மற்றும் இன்னோரன்ன இனிப்புக்களை (வெளிநாட்டு பயணம்) பெற்றுக் கொண்டு இந்த ஆலிம்-ஷாக்கள் சில அரசியல் வியாபாரிகளை ஒத்த பெரும் கொந்தராத்தை செய்கின்றனர் என்ற உண்மை உணரப்படாத ஒன்றாகவே இன்னும் இருக்கின்றது என்ற விடயம் கவலைக்குரியது.
குறிப்பாக இநத கைங்கரியத்தை ஷியாக்கள் மிக கச்சிதமாக உலகின் எல்லாப் பாகங்களிலும் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது கொள்கைகளை பரப்புவதற்கு தரீக்கா வாதிகளை மற்றும் கபுரு வணக்கத்தை ஆதரிக்கும் மௌலவிமார்களை பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
உலகின் சில அற்ப இன்பங்களுக்காக மக்களை வழிகேடுக்க முற்படும் இப்படிப்பட்ட இயக்கங்களின் புரோகிதர்களை சமூகம் இனங்கான வேண்டியது காலத்தின் தேவையாகும். இதில் மிகப் பெரும் வேடிக்கை என்னவென்றால் நாம் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் தான் பின்பற்றுகின்றோம் என சொல்லிக் கொண்டு கிலாபத் கோஷம் எழுப்பக் கூடிய இயக்கங்கள் கூட ஷியாக்கள் விடயத்தில் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை பதிவு செய்து கேவலப்பட்டுள்ளனர். உறுதியானதும் உண்மையானதுமான நிலைப்பாட்டை சமூகத்திற்கு சொல்ல மறுக்கும் மேற்படி இயக்கங்கள் ஷியாக்களின் கொள்கைகளில் ஒன்றாகிய 'தக்கிய்யா' கோட்பாட்டை (உள்ளே ஒன்றை மறைத்து வெளியே ஒன்றை சொல்லுவது) ஷியாக்களின் விடயத்தில் எடுத்துக் கொண்டுள்ளமை மிகப் பாரதூரமான விடயமாகும். எமது சமூகத்தில் இன்னும் ஷியாஇஸசம் ஆலவிருட்சமாக வளர்ந்திட இந்த வகை மெத்தனப் போக்கு பெரும் வழிவமைக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக் கணியே
சமூகம் எக்கேடு கெட்டாலும் நமது இயக்கமும் இயக்கவாதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இருப்பதாலோ என்னவோ இஸ்லாமிய தூய கொள்கையை ஆக்கிரமிக்கும் மேற்படி ஷியஇசம், காதியானிசம் என்பவற்றை பற்றி மக்கள் தெளிவூட்டல் நிகழ்ச்சிகளை இந்த சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி மேற்கொள்வதை விட்டும் பராமுகமாக இருக்கின்றமையும் நோக்கத்தக்கது.
குடும்ப கட்டமைப்பு சீரழியும் அபயாம்
குடும்ப அழகு இன்று சமூக வலைத்தளங்களின் தாக்கத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையை பரவலாக உணரமுடிகின்றது. கணவன் மணைவி, தாய் பிள்ளை, தகப்பன் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என்று குடும்பத்தின் பிரதான அங்கங்களுக்கிடையில் தூரத்தை ஏற்படுத்திய பெருமை நவீன சமூக வலைத்தளங்களை சாரும். மனசுக்கு கவலையான அல்லது துன்பமான ஒரு நிகழ்வு நடக்கும் போது அதைப் பற்றி நெருங்கிய குடும்ப உறவுகளிடம் பேசக் கூடிய நிலை இன்று குறைந்து விட்டது. எல்லோரும் சமூகவலைத்தளங்களில் மூழ்கி இருப்பதனால் தங்களது உணர்வுகளையும் இந்த நமூக வலைத்தளங்களிலே பதிவிடுகின்றனர். வீட்டுக்குள்ளே இருந்து பேசித் தீர்க்க வேண்டியதை முழு உலக மக்களும் பார்க்கும் படி பகிர்கின்றனர். 'நான் இன்றைய காலைப் பொழுதில் கவலையாக இருக்கின்றேன்' என்று பதிவிட்டு யாராவது மனம் அறுதல் அடையும் படியான வாசகங்களை பதியமாட்டார்களா என்ற ஏக்கத்தில் இளவு காத்த கிளியாக ஏங்கி நிற்கும் எத்துனை இளசுகளை நாளாந்தம் காண்கின்றோம். அதிலும் குறிப்பாக எதிர்பால் நபரின் ஆறுதல் வார்த்தை கிடைக்கபெற்றால் (சில வேலை போலி பெயரில் கூட இருக்கலாம்) நமக்கு ஆறுதல் சொல்லிவிட்டளே! அல்லது சொல்லிடானே! என பூரிப்படைவோர் எத்தனை எத்தனை பேர்….

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால்இ அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும்இ அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (அர் ரஅத் 28)
இவ்வாறான தெளிந்த வழிகாட்டல்கள் எம்மைப் படைத்தவனிடம் இருந்து வந்திருந்தும் அல்குர்ஆன் ஊடாகவோ அல்லது தொழுகையின் ஊடாகவோ மன நிம்மதியை தேடுவதை விட்டு விட்டு இப்படிப்பட்ட சமூக வலைத்தளங்களில் திருப்தியையும், மனநிம்மதியையும் தேடுவோர் ஏராளம்! ஏராளம்!
இதனால் கயவர்கள், காமுகர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். வாலிப வயது பெண் ஒருவர் தனது மன உளைச்சலை முகநூலில் வெளியிடும் போது குறித்த பெண் தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டு அவளை துஷ்பிரயோகம் செய்யும் வரை அவள் அறிந்து கொள்வதில்லைஇவ்வாறு சீரழிந்தவர்கள் நமது சமூகத்திலும் ஏராளமானவர்கள் உள்ளனர். இஸ்லாம் அனுமதிக்காத உறவை சமூக வலைத்தளங்களின் ஊடாக ஏற்படுத்திக் கொள்வோர் சில வேளைகளில் திருமணம் வரைக்கும் தங்களது உறவு நீடித்தாலும் திருமணத்தின் பின் பல்வேறு ஜோடிகள் இந்த சமூக வலைத்தளங்களிலே தமது தலாக்கை அல்லது பிரிவை பதிவு செய்வதை பார்க்கின்றோம். எதிர்பால் நட்பு வட்டம் சர்வ சாதாரணமாக சமூக வலைத்தளங்களில் உருவாகின்றமை குடும்ப வாழ்க்கைக்கு பெரும் சவாலாக அமைகின்றது. மனைவிக்கு கணவனை விட நெருங்கிய நண்பன் அல்லது நண்பர்கள் இருப்பது, கணவனுக்கு மனைவி அல்லாத நண்பிகள் இருப்பது என்பது கூட சாதாரண விடயமாகிவிட்டது. ஐரோப்பிய கலாசரத்திற்கு ஒப்பான இந்நிலையானது திருமண பந்தத்தின் மூலம் ஏற்படும் இறுக்கமான உறவை இல்லாமல் ஆக்கி, சந்தேகம், தீய எண்ணங்கள் வளர்ந்திட காரணமாகின்றது. ஷைத்தானுக்கு மிகவும் விரும்பக்கூடிய உவப்பான செயலாகிய கணவன் மனைவிக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்துவதை சமூக வலைத்தளங்களை ஆயுதமாக பயன்படுத்தி சந்தேகம் மற்றும் புரளிகளை ஏற்படுத்தி கட்சிதமாக முடித்திக் கொண்டு இருக்கின்றான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்….
ஓய்வு நேரங்களை சமூக வலைத்தளங்களில் வீணாக கழித்துக் கொண்டிருப்போர் தனது ஓய்வு நேரம், தனது வயது, தான் சம்பாதித்தது போன்ற பல்வேறு கேள்விகளை விலாவாரியாக இறைவன் மறுமையில் விசாரிப்பான் என்பதை மறந்துவிடலாகாது. இறைவனின் சன்னிதானத்தில் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாதுநாம் உலகில் கழித்த ஒவ்வொறு வினாடியும் அங்கே பதியப்பட்டு அப்படியே எல்லோருக்கும் முன்னால் எமக்கு காண்பிக்கப்படும். கௌவரவப் பிரச்சினைக்காக தனிமையில் தவறு செய்வோரின் பார்வை அன்றைய தினம் நிலைகுத்தாகுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது போகும். உலகில் நாம் அனுபவித்த செல்வம், செழிப்பு மற்றும் இன்னோரன்ன பதவி, பட்டங்களின் மூலம் அன்றைய தினம் எந்த பிரயோசனமும் கிடையாது

خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ الْيَوْمُ الَّذِي كَانُوا يُوعَدُونَ

அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும்இ இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும்இ அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான். (அல் மஆரிஜ் 44)
எனவே இந்த நாளை பயந்து நமது மனோஇச்சைக்கு முழுமையாக கட்டுப்பட்டு வாழும் நிலையில் இருந்து மீள்வோமாக! நாம் வாழும் காலப்பகுதி இறையச்சத்திற்கு மிகவும் சவாலான காலமாகும். நாம் ரமழானில் பெற்ற இறையச்சத்திற்கான பயிற்சிகளை பெருநாளோடு மறந்து விடாது தொடர்ந்து இறையச்சம் உடைய அடியார்களாக வாழ்ந்தால் மாத்திரமே ஈருலக வாழ்க்கையின் வெற்றியும் உறுதி செய்யப்படும். இறைவனை எல்லா நிலைகளிலும் அஞ்சி சமூகவலைத்தளங்களை அவனுக்கு விருப்பமான விதத்தில் மாத்திரம் பயன்படுத்திட உறுதிபூனுவோமாக!



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts