லேபிள்கள்

வெள்ளி, 23 மார்ச், 2018

ஆளுமைத்திறன் வளர்ப்போம்


ஆளுமை என்பது ஒருவரது ஒழுங்கமைந்த இயங்கியல் பண்புகளும் அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளை குறிக்கிறது. இவையனைத்துக்கும் நெற்றிப்பொட்டு வைத்தாற்போல சூழ்நிலைகேற்ப சரியான முடிவெடுக்கும் சக்தியும் பெரும்பங்கு வகிக்கிறது.
அணிகலன்களும் அலங்காரமும் மட்டுமே ஒருவரது ஆளுமை ஆகாது. உலகினில் எத்தனையோ மனிதர்கள் இருக்க அப்துல் கலாமும், காந்தியும், நெல்சன் மண்டேலாவும், ஆங் சான் சூகியும் ஒளிர்கிறார்கள் எனில் அதற்கு இவர்களது ஆளுமையே காரணம்.
இறைவா, இவர்கள் செய்வது என்னெவென்று தெரியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும் என்ற இயேசுவின் ஆளுமைக்கு நிகர் உண்டோ?
பர்சனாலிட்டி (Personality) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இச்சொல், முகமூடி, மறைப்பு எனும் பொருள் கொண்ட பர்சொனே (Persone) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. ஆகவே, ஆளுமை என்பது ஒருவரின் முகமூடி என்ற கருத்தை கொண்டது.
பலரும் ஒரே ஆளுமைத்தன்மையுடன் இருக்க நினைப்பது தவறு. படிப்பில் 90 மதிப்பெண் பெறும் ஒரு மாணவிக்கு ஒருவரது முகத்தைப்பார்த்து பேச இயலாது. ஒரு பெருங்கூட்டத்தின் முன்னே நின்று பேசும் திறன் கொண்ட மாணவனுக்கு படிப்பில் அக்கறையில்லை.

ஆளுமைத்தன்மையின் சில இயல்புகளாக நடத்தையில் காணப்படும் ஒழுங்கு, சீர்த்தன்மை உளவியல் உருவாக்கம் சூழலுக்கேற்ப நடப்பது மட்டுமல்லாது ஒரு குறிப்பிட்ட முறையில் நடப்பதுமாகும்.
நாம் வாழும் சமூக சூழலும் ஆளுமையை வளர்ப்பதில் பங்கு வகிக்கிறது. கிராமத்தில் படிக்கிற மாணவனுக்கும் நகரத்தில் வசிக்கும் மாணவனுக்குமிடையே பெரும் வித்தியாசமே இருக்கிறது.
கிராமச்சூழலும் நகரச்சூழலும் ஆளுமையின் அடிப்படைகளில் ஒன்று.
மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களாலே நடத்தப்படும் ஆட்சி என்று முழக்கமிட்ட ஆபிரகாம் லிங்கனின் ஆளுமையும், பழமைவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகியும் பெண்குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடிவரும் நோபல்பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் ஆளுமையும், சாதாரண அன்னையாக இல்லாமல் தள்ளாத வயதிலும் தத்தி தத்தி நடந்து மதங்களை கடந்து உலக மக்கள் அனைவர் மனங்களிலும் கருணையின் உருவமாக விளங்கும் மறைந்த அன்னை தெரசாவின் ஆளுமையும் வெவ்வேறானவை.
இன்று வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது படித்து வாங்கிய பட்டங்களையும் மதிப்பெண்களையும் மட்டுமே கருத்தில் கொள்வதில்லை. மாறாக, இவரால் நம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய முடியும், இக்கட்டான சூழ்நிலைகளில் தகுந்த முடிவெடுக்கும் ஆற்றலும் இதற்கான ஆளுமைத்தன்மையும் உண்டா என்பதே அதிகம் பரிசோதிக்கப்படுகிறது.
மார்க்கெட்டிங் துறையில் தனது பேச்சினால் பிறரை கவரும் ஆற்றலும், பிரச்னைகளை கையாளும் திறமையும் அதிகம் விரும்பப்படுகிறது.
சில நேரங்களில், நகரவாசிக்கு கிடைக்காத வாய்ப்பு குக்கிராமத்திலிருந்து வரும் ஒருவருக்குக் கிடைக்கிறது. காரணம், அவரின் ஆளுமைத்திறன்.
எப்படிப்பட்ட நவீன வாகனத்தில் சென்றாய்? எத்தனை புத்தகங்களை சுமந்தாய்? என்பதல்ல முக்கியம். எந்தளவுக்கு உன்னை தரமேற்றிக்கோண்டாய் என்பதே முக்கியம்.
ஆளுமை மேம்பாட்டுக்கு வாழும் இடம் ஒரு காரணம் என்றாலும் நாம் எப்படிப்பட்டவர்களாக நம்மை மாற்றிக்கொள்கிறோம் என்பதும் முக்கியமே.
நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணா மேடையில் முழங்குவதில் சிறந்து விளங்கவும், தமிழக முதல்வரானதும், ஆங்கிலேயருக்கு நிகராக பேசுவதில் புலமை பெற்றதும் அவரது ஆளுமையே காரணம்.
தெருவிளக்கில் படித்து, தனது திறமையால் படிப்படியாக முன்னேறி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உயர்ந்த ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயர், எதற்கும் அஞ்சாத மன உறுதி படைத்தவர்.
ஒரு சமயம், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆங்கிலேயரின் வீட்டுத்தோட்டத்தில் நுழைந்தமைக்காக ஒருவரை கடுமையாக தாக்கிவிட்டார் அந்த ஆங்கிலேய நீதிபதி. அடிவாங்கிய நபர், அந்த நீதிபதியின் மேல் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் ஐயரிடம் வந்து, குற்றம் சுமத்தப்பட்டவர் ஆங்கிலேய நீதிபதியாக இருக்கிறார். எனவே, அவரை நேரில் வந்து ஆஜராகுமாறு வற்புறுத்த வேண்டாம் என கூறினர்.
ஆனாலும், முத்துசாமி ஐயர் அந்த ஆங்கிலேய நீதிபதியை, நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அவர் செய்தது குற்றம் என தீர்ப்பளித்து, மூன்று ரூபாய் அபராதமும் விதித்தாராம்.
ஓர் இந்திய குடிமகனுக்காக, ஆங்கிலேய ஆட்சியில், ஓர் ஆங்கிலேயரை, அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதியையே தண்டித்த ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரின் நேர்மையும் துணிச்சலும் கூடிய ஆளுமை வியப்பளிக்கக்கூடியதல்லவா?
தன்னம்பிக்கையும் தலைமைப்பண்பும் இருந்தால் நம்மை யாரால் வெல்ல முடியும்? நாம் வளர்த்துக்கொள்ளும் ஆளுமைத்திறன் நம் வாழ்வில் அதிசயங்களை ஏற்படுத்தும்.
  ப. ஜஸ்டின் ஆன்றணி


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts