லேபிள்கள்

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

வருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி!

''வருமான வரி செலுத்துவது என்பது, ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதேபோல, வருமான வரிவிலக்குப் பெறுவதும், அதற்குத் தகுதியானவர்களின் உரிமை. ஆனால், பலரும் அதை பயன்படுத்திக்கொள்ளும் வழியை அறியாமல், பின்பற்றாமல், ஆண்டு இறுதியில் கிட்டத்தட்ட தங்களின் ஒரு மாதச் சம்பளத்தை வரியாகச் செலுத்துகிறார்கள்'' என்று சுட்டிக்காட்டும் சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார், வருமான வரிவிலக்குப் பெறும் முறைகளை விரிவாக விளக்குகிறார்...

கல்விக்கடன் அல்லது கல்விக் கட்டணம்
(UNDER SECTION 80C)
''பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களை முன்னிறுத்தி, பெற்றோருக்கு வருடத்துக்கு ` 1.5 லட்சம் வரை வரிவிலக்கு உண்டு. இரண்டு பிள்ளைகள் எனில், கணவன் ` 1.5 லட்சத்துக்கும், மனைவி ` 1.5 லட்சத்துக்கும் என தனித்தனியாக மொத்தம் மூன்று லட்சத்துக்கு வரிச்சலுகை பெற முடியும். இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் கல்விக்கட்டணங்களுக்கு வரிச்சலுகை கிடையாது.
மாணவர் பெயரில் பெறப்படும் வங்கிக் கடனுக்கான வட்டிக்கும், SECTION 80E-ன்படி வரி விலக்கு உண்டு. இதற்கு வரம்பு இல்லை, எவ்வளவு ரூபாய் வட்டி செலுத்துகிறோமோ அனைத்தையும் வரிவிலக்குக்கு எடுத்துக்கொள்ளமுடியும். கடன் பெற்றதில் இருந்து ஏழு வருடங்கள் வரை இதை பெற முடியும்.
பயணத்துக்கான (சுற்றுலா) வரிவிலக்கு
(LTC - Leave Travel Concession - 10(5) செக்‌ஷன்)
ஒவ்வொரு வருடமும், ஏப்ரல் முதல் மார்ச் வரை (உதாரணம்: 2016 ஏப்ரல் முதல் 2017 மார்ச்), LTC கணக்கு முடிக்கப்படுகிறது. பயணத்துக்கான செலவுகளை நான்கு வருடத்துக்கு ஒருமுறை வரிவிலக்குக்காக க்ளெய்ம் செய்யலாம். ஒருவேளை, நான்கு வருடங்களில் சுற்றுலா செல்ல முடியாமல் இருந்திருந்தால், அதை சமன் செய்ய, அடுத்த நான்கு வருடத்தின் முதல் வருடத்தில் சுற்றுலா சென்று, க்ளெய்ம் செய்ய முடியும். கூடவே, வரவிருக்கும் நான்கு வருடத்துக்கான வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சலுகையைப் பெறுவதற்கான விதிமுறைகள் சிலவற்றைப் பார்ப்போம். வெளிநாடு செல்ல அனுமதி இல்லை. இந்தியாவுக்குள் எங்கும் பயணம் செய்யலாம். ரயில், விமானம், பேருந்து டிக்கெட்டுகளை மட்டுமே சமர்ப்பிக்க முடியும். கார், கால் டாக்ஸி, ஷேர் ஆட்டோ, தங்கும் விடுதி, உணவுச் செலவுகள் இதில் சேர்க்கப்பட மாட்டாது. அனைத்தையும் ஒரிஜினல் ரசீதுகளாகச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். LTC க்ளெய்முக்கு கட்டாயமாக மெடிக்கல் லீவில் போகமுடியாது. பெற்றோரைச் சார்ந்திருக்கும் இரண்டு குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லலாம். ஒருவேளை இரண்டாவது டெலிவரியில் இரட்டைக் குழந்தை எனில், மூன்று குழந்தைகளுக்கு அனுமதி உண்டு.
வேலைக்குச் செல்லும் பிள்ளைகள்/திருமணமான பிள்ளைகளின் செலவுகளை வரிவிலக்குக்குச் சமர்ப்பிக்க முடியாது. இன்னொரு முக்கியமான விஷயம்... கணவன், மனைவி இருவரும் ஒரே ரசீதுகளை வரிவிலக்குக்குப் பயன்படுத்த முடியாது. எனவே, யார் பெயரில் க்ளெய்ம் செய்ய வேண்டுமோ, டிக்கெட் பதிவுகளை அவர் பெயரிலேயே செய்ய வேண்டும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் (மெடிக்கல் இன்ஷூரன்ஸ்) பிரீமியத்துக்கான வரிவிலக்கு
- UNDER SECTION 80 D):
மெடிக்கல் இன்ஷூரன்ஸுக்காக நீங்கள் செலுத்தும் பிரீயமித்தொகைக்கு வரிவிலக்கு உண்டு. உதாரணமாக, ஒரு குடும்பத் தலைவன் இரண்டு லட்சம் ரூபாய் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, வருடத்துக்கு சீனியர் சிட்டிசன்களான தன் பெற்றோருக்கு 20,000 ரூபாயும்... தான், தன் மனைவி, குழந்தைகள் என தன் குடும்பத்துக்கு 15,000 ரூபாயும் (2015 பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு ` 30 ஆயிரம், மற்றவர்களுக்கு ` 25 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது) ஹெல்த் இன்ஷூரன்ஸ் (மெடிக்கல் இன்ஷூரன்ஸ்) பிரீமியமாகக் கட்டி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்கான பில்களை வரிவிலக்குக்கு சமர்ப்பிக்கலாம்.

ஆயுள் காப்பீடு பிரீமியத்துக்கான (லைஃப் இன்ஷூரன்ஸ்) வரிவிலக்கு - 80 சி
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நீங்கள் எடுத்துள்ள பாலிசிக்காக கட்டிவரும் பிரீமியத் தொகைக்கு வருமான வரிவிலக்கு உண்டு. உதாரணமாக, 10 லட்ச ரூபாய் பாலிசிதாரராகச் சேர்கிறீர்கள் என்றால், அதன் பிரீமியத் தொகையை குறிப்பிட்ட மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், வருடம் ஒரு முறை என்று வசதியைப் பொறுத்து செலுத்தி வரலாம். அதற்குரிய வருமான வரி விலக்கு உண்டு. உதாரணமாக, சிங்கிள் பிரீமியம் எனும் வகையில் அந்த 10 லட்சத்தையும் ஒரே தொகையாகக் கட்டுகிறவர்கள், இதில் 10% (`1 லட்சம்) வரிவிலக்குப் பெறலாம். ஆனால், அதற்கான வருமான வழிகளை சரியாகச் சமர்ப்பிக்கவில்லை எனில், வருமானத்துக்கு அதிகமாக பிரீமியம் கட்டப்பட்டிருந்தால், 30% வருமான வரி கட்ட வேண்டிவரும்.
கணவனின் வருமானத்தை, மனைவியின் பெயரில் சேமிக்கலாமா?
மாதந்தோறும் கட்டும் பிரீமியத் தொகையை மனைவிக்கு... கணவன், கணவனுக்கு... மனைவி, பெற்றோருக்கு... மகன் என வருமானம் பெறும் எவரும், பிறர் பெயரில் செலுத்தி, அந்தத் தொகைக்கான வரிவிலக்கைப் பெற்றுக்கொள்ளலாம். அதில் கவனிக்க வேண்டிய விஷயம், கணவர் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறுகிறார் என்றால், மனைவிக்கு மூவாயிரம் அல்லது ஐயாயிரம் போன்று சிறிய தொகையைத்தான் பிரீமியமாகக் கட்ட வேண்டும். தன் வருமானத்தை தாண்டி, மனைவியின் பெயரில் முதலீடு செய்தால், வருமானம் எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி எழுப்பப்படும். எனவே, கணவன் மனைவிக்கு பிரீமியம் செலுத்தி வந்தால் கணவன் பெயரிலேயே காண்பிக்க வேண்டும்'' என்று தகவல்கள் தந்த சதீஷ்குமார், ``வரிவிலக்கை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!'' என்று விடை கொடுத்தார்.

வரி... சில வரிகள்!
2014-ல் இருந்து ஆண், பெண் பாகுபாடின்றி இருபாலரும் தங்களின் வருட ஊதியம் 2.5 லட்ச ரூபாய்க்கும் மேல் போனால் வரிசெலுத்தி ஆகவேண்டும் என்பது கட்டாயம். இதில் பெண்களுக்கென எந்தவித வரிச்சலுகையும் கிடையாது.
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும்போது, உதாரணத்துக்கு 15,000 ரூபாய் சம்பளதாரருக்கு, நிறுவனம் 1,500 ரூபாயும், சம்பளதாரர் 1,500 ரூபாயும் எதிர்கால ஓய்வூதியத்துக்கு செலுத்தி வர வேண்டும். இதுதான் பிராவிடண்ட் ஃபண்ட் எனப்படும் பி.எஃப். இதில் நிறுவனம் செலுத்தும் தொகைக்கு வரிவிலக்கு இல்லை. ஆனால், சம்பளதாரர் செலுத்தும் தொகை 1.5 லட்சத்துக்குள் செலுத்தும்வரை வரிவிலக்கு உண்டு.
சுயதொழில் செய்பவர்கள், அஞ்சலகத்தில் பப்ளிக் பிராவிடண்ட் ஃப்ண்ட் மூலமாக பணம் செலுத்தி, 1.5 லட்சம் வரை வரி விலக்குப் பெறலாம்.
80 சி ஃபிக்சட் டெபாசிட் ஸ்கீம் (நிரந்தர வைப்பு நிதி - 80C fixed deposit scheme):  இந்த ஸ்கீம் வழியாக டெபாசிட் செய்து வரும் பணத்தை ஐந்து வருடம் வரை இடையில் எடுக்க முடியாது. இதற்கும் அதிகபட்ச தொகையாக ஒரு வருடத்துக்கு 1.5 லட்சம் ரூபாய் வரி விலக்கு உண்டு (பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணம், பிராவிடண்ட் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் பிரீமியம் இவை அனைத்தையும் சேர்த்து).
காலக்கெடு
பொதுவாக வருமானவரிக் கணக்கை ஒவ்வொரு வருடமும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts