லேபிள்கள்

செவ்வாய், 26 மே, 2015

தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம்

தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம்

தொழுகைக்கு என்ன முக்கியத்துவம் கூறப்பட்டிருக்கின்றதோ அதே முக்கியம் நேரத்திற்கும் கூறப்பட்டிருக்கின்றது. சென்ற இதழில் தொழுகையின் வரிசையில் நிற்கும் ஒழுங்குகள் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த இதழில் தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
'நிச்சயமாக தொழுகை முஃமீன்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது' 4.103
மேல் கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ்வே தொழுகைக்கு நேரத்தை குறிப்பிட்டதாகக் கூறுகின்றான். ஒரு வேலைக்கு நேரம் குறிப்பிடப்படுவதென்பது அதனுடைய ஆரம்பத்தையும் முடிவையும் காட்டுவதாகும். இவ்வாறே ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்பமும் முடிவும் இருக்கின்றது. ஒவ்வொரு தொழுகையையும் அதன் நேரத்தில் தொழுதுவிட வேண்டும். இஸ்லாம் அனுமதித்த காரணமின்றி ஒரு தொழுகையை அதன் நேரம் தவறி தொழுவது பெரும் குற்றமாகும். அப்படித் தொழுவதை தொழுகையாக கணக்கிடப்படமாட்டாது. ஓவ்வொரு வணக்கத்திலும் சில தியாகங்களை அல்லாஹ் கடமையாக்கியிருக்கின்றான். தொழுகையிலுள்ள முக்கிய தியாகமே உரிய நேரத்தில் ஒவ்வொரு தொழுகையையும் தொழுவதாகும். ஒரு தொழுகை (சுப்ஹு) தூங்கும் நேரத்திலும், அதனால்தான் சுப்ஹுடைய அதானில் மாத்திரம் தொழுகை தூக்கத்தை விட சிறந்தது என்ற வாசகம் கூறப்படுகின்றது.
இன்னுமொரு தொழுகை (லுஹர்) வேலை செய்யும் நேரத்திலும் மற்றொரு தொழுகை (அஸர் மஃரிப்) ஓய்வெடுக்கும் நேரத்திலும் இன்னுமொரு தொழுகை (இஷா) சொந்த வேலைகள் செய்யும் நேரத்திலும் கடமையாக்கப்பட்டிருக்கின்றது. அடியான் தன் பலதரப்பட்ட தேவைகளுக்குரிய நேரங்களிலும் ஒருசில மணித்துளிகளை அல்லாஹ்விற்காக அற்பணிக்கின்றானா என்பதை, இத்தொழுகையின் நேரங்களின் மூலம் அல்லாஹ் நம்மை சோதிக்கின்றான். ஒரு நாளில் ஐந்து நேரத் தொழுகையை நிறைவேற்றுவது எவ்வாறு கடமையோ அவ்வாறே ஒவ்வொரு தொழுகையையும் அதன் நேரத்தில் நிறைவேற்றுவதும் கடமையே! என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்று முஸ்லிம்களில் பலர் பல தொழுகைகளை ஒரு நேரத்தில் தொழுவதை வழக்கமாக்கியிருக்கின்றார்கள். அது முற்றிலும் சரி என்றும் கருதுகின்றார்கள். இது முற்றிலும் தவறாகும். இவர் அத்தொழுகையை தொழுததாக கருதப்படமாட்டாது. அப்படித் தொழுவது கூடுமென்றிருந்தால் தொழுகைக்கு அல்லாஹ் நேரத்தை கடமையாக்கி இருப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆகவே இஸ்லாம் நமக்கு வகுத்துத் தந்த தொழுகையின் நேரத்திற்குள் ஒவ்வொரு தொழுகையையும் எப்படியாவது தொழுது விட வேண்டும். நபி(ஸல்) அவர்களுக்கு தொழுகையையும் அதன் ஆரம்ப முடிவு நேரங்களையும், தொழுகை கடமையாக்கப்பட்ட முதல் இரு நாட்களிலும் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்ற ஜிப்ரீல்(அலை) அவர்கள் இந்த நேரத்திற்குள்தான் தொழுகையை தொழ வேண்டும் என்று கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. (இத்தொடரில் அந்த ஹதீதை நீங்கள் கண்டு கொள்ளலாம்)
எந்த ஒரு தொழுகையையும் அதன் நேரம் வருவதற்கு முன் நம்மில் யாரும் தொழுவதில்லை. காரணம் அத்தொழுகைக்குரிய நேரம் இன்னும் வரவில்லை என்ற ஒரே காரணத்திற்காகத்தான். அவ்வாறுதன் அத் தொழுகையின் நேரம் முடிந்த பின்பும் அதை தொழுவது கூடாது என்பதை யாரும் மறுக்க முடியாது. காரணம் அதற்குரிய நேரம் முடிந்து விட்டது. உதாரணத்திற்கு லுஹர் தொழுகையின் நேரம் முற்பகல் 12.25 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 3.45 மணிக்கு முடிவடைவதாக வைத்து கொள்ளுங்கள். யாராவது முற்பகல் 12.00 மணிக்கு லுஹர் தொழுகையை தொழுவார்களா? அப்படி தொழுதால் அத்தொழுகை ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லை என்றே நாம் அனைவரும் கூறுவோம். காரணம் அதற்குரிய நேரம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அவ்வாறுதான் 3.45மணிக்கு பின் லுஹரை தொழுவதும் கூடாது. காரணம் அதற்குரிய நேரம் முடிந்து விட்டது. இதை புத்தியுள்ள அனைவரும் அறிவர். இதைத்தான் இஸ்லாமும் கூறுகின்றது. காலத்திற்கு காலம் தொழுகையின் நேரங்கள் மாறும் என்பதையும் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
சில குறிப்பிட்ட காரணங்களுக்காக ஒரு தொழுகையை இன்னொரு தொழுகையின் நேரத்தில் தொழலாம் அவைகள் பின்வருமாறு.
1.பிரயாணம்
அதாவது பிரயாணி லுஹர் நேரத்தில் அஸரை முற்படுத்தியும், அல்லது அஸர் நேரத்தில் லுஹரை பிற்படுத்தியும் தொழலாம். அவ்வாறே மஃரிப் நேரத்தில் இஷாவை முற்படுத்தியும் அல்லது இஷா நேரத்தில் மஃரிபை பிற்படுத்தியும் தொழலாம்.
2.தூக்கம்
ஆழ்ந்த தூக்கத்தின் காரணமாக ஒரு தொழுகையின் நேரம் முடியும் வரை தூங்கி அத்தொழுகையின் நேரம் முடிந்த பின் எழுந்திருந்தால் அவர் எழுந்ததும் அத் தொழுகையை தொழலாம். அவர் அல்லாஹ்விடத்தில் குற்றம் பிடிக்கப்படமாட்டார்.
யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
3.மறதி
ஒருவர் மறதியின் காரணமாக ஒரு தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை நிறைவேற்றாமல் இன்னுமொரு தொழுகையின் நேரத்தில் ஞாபகம் வந்தால் அவர் அதே நேரத்தில் தொழுது கொண்டால் போதுமானதாகும். அல்லாஹ்விடத்தில் அவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார்.
யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
4.அரஃபா மற்றும் முஸ்தலிபாவில்
அரஃபாவுடைய நாளில் அஸரை லுஹர் நேரத்தில் தொழுவதும் முஸ்தலிபாவுடைய இரவில் மஃரிபை இஷாவுடைய நேரத்தில் தொழுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
மேல் கூறப்பட்ட காரணமின்றி ஒரு தொழுகையை இன்னொரு தொழுகையின் நேரத்தில் தொழுவது அர்த்தமற்ற ஒன்றாகும். அவர் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாவார்.
ஆரம்ப நேரம் சிறந்தது
ஒரு தொழுகையை அதன் நேரம் முடிவதற்கு முன் தொழுது கொண்டால் போதுமென்றிருந்தாலும் அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதே சிறந்ததாகும்.
அமல்களில் சிறந்தது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தொழுகையின் நேரங்களை அறிந்து கொள்ளும் முறை
இன்று நம் நாள்காட்டிகளில் (காலண்டர்களில்) தொழுகையின் நேரம் குறிப்பிடப்பட்டிருப்பதை அனைவரும் அறிவோம். அதுவே இஸ்லாம் கூறும் தொழுகையின் நேரமாகும். நமது நலன்கருதி அறிஞர்கள் அதை நமக்கு இலகுபடுத்தியிருக்கின்றார்கள். இந்த நேர அட்டவணையை ஜிப்ரீல்(அலை) அவர்களே நபி(ஸல்) அவர்களுக்கு கற்று கொடுத்தார்கள் என்பதை பின்வரும் ஹதீது தெளிவு படுத்துகின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், கஃபதுல்லாவில் இரு முறை எனக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த போது எனக்கு லுஹரை தொழுவித்தார்கள் அப்போது (நிழல் செருப்பின்) வாரளவு இருந்தது. நிழல் அந்த பொருளின் அளவாக (நீளமாக) இருந்த போது எனக்கு அஸரை தொழுவித்தார்கள். நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் எனக்கு மஃரிபை தொழுவித்தார்கள். செம்மேகம் (சூரியன் மறைந்த போது) மறைந்த போது எனக்கு இஷாவை தொழுவித்தார்கள்.
நோன்பாளிக்கு குடிப்பதும் உண்பதும் தடுக்கப்பட்ட நேரத்தில் எனக்கு ஃபஜ்ரை தொழுவித்தார்கள். (இது முதல் நாள் தொழுவித்த நேரம்) அடுத்த நாள் ஒரு பொருளின் அளவு அந்த நிழல் வந்த போது எனக்கு லுஹரை தொழுவித்தார்கள். ஒரு பொருளின் நிழல் இரு மடங்கு வந்த போது எனக்கு அஸரை தொழுவித்தார்கள். நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் (சூரியன் மறைந்த போது) எனக்கு மஃரிபை தொழுவித்தார்கள். இரவின் மூன்றில் ஒரு பகுதி வந்தபோது எனக்கு இஷாவை தொழுவித்தார்கள்.
சூரியனின் மஞ்சள் (நிறம்) வருவதற்கு சற்று முன் எனக்கு ஃபஜ்ரை தொழுவித்தார்கள். பின்பு என் பக்கமாக திரும்பி முஹம்மதே! இது உங்களுக்கு முன் சென்ற நபிமார்களின் (தொழுகையின்) நேரமாகும். (ஆகவே உங்களுக்குரிய தொழுகையின்) நேரமும் இந்த இரண்டு நேரங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும் எனக்கூறினார்கள். (அபூதாவூத்)
மேல் கூறப்பட்ட ஹதீதிலிருந்து நமக்கு கிடைக்கும் விளக்கங்கள்:
1.ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரத்தையும் முடிவு நேரத்தையும் கற்றுக் கொடுத்தது அல்லாஹ்வே!
2.நமக்கு அறிமுகமில்லாத பகுதிகளுக்கோ நாடுகளுக்கோ நாம் பிரயாணம் செய்தாலும் யாருடைய உதவியுமின்றி தொழுகையின் நேரங்களை மேல் கூறப்பட்ட ஹதீதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
3.ஒரு தொழுகையின் நேரம் அடுத்த தொழுகைக்குரிய நேரம் ஆரம்பிக்கும் போது முடிவடைந்து விடுகின்றது. ஆனால் சுப்ஹு தொழுகையின் நேரம் அதற்கு அடுத்த தொழுகையாகிய லுஹர் தொழுகையின் நேரம் வரைக்கும் நீடிக்காது. சூரிய உதயத்தோடு அது முடிவடைந்து விடுகின்றது.
4.அஸர் தொழுகைக்கும் இஷாத் தொழுகைக்கும் முடிவடையும் நேரம் இரண்டு வகைப்படும். ஒன்று சிறப்புக்குரிய நேரம், மற்றொன்று நிர்பந்த நேரம். அதாவது நிர்பந்த சூழ்நிலைக்கு உட்படாதவர்கள் சிறப்பிற்குரிய நேரத்திற்குள் இவ்விரு தொழுகையையும் தொழுது கொள்ள வேண்டும். சிறப்பிற்குரிய நேரத்திற்கு முன் தொழ முடியாதவர்கள் நிர்பந்தமான நேரத்திற்குள் தொழுது கொள்ள வெண்டும். அஸர் தொழுகைக்கு சிறப்பிற்குரிய நேரம் ஒரு பொருளின் நிழல் அது போன்று இரண்டு மடங்காகும் வரையாகும். அதற்குரிய நிர்பந்தத்திற்குரிய நேரம் சூரியன் மறையும் வரையுமாகும். இஷாத் தொழுகைக்கு சிறப்பிற்குரிய நேரம் இரவின் மூன்றில் முதல் பகுதி வரையுமாகும். அதற்குரிய நிர்பந்த நேரம் சுப்ஹு வரையுமாகும்.
5.ஒவ்வொரு தொழுகையையும் அதற்குரிய நேரங்களுக்குள் தொழுதுவிட வேண்டும். (முற்படுத்தியோ பிற்படுத்தியோ தொழுவது கூடாது)
உரிய நேரத்தில் தொழுகையை பேணுவதற்கு வாசகர்களுக்கு நான் கூறும் சில கருத்துக்கள்.
1.தொழுகை நேரம் வருவதற்கு சற்று முன்பே தொழுகைக்காக உளு செய்து தயாராகிக் கொள்வதை வழமையாக்கிகொள்ளுங்கள்.
2.அதற்கு முடியாதவர்கள் அதான் சொல்லப்பட்டதும் தான் செய்து கொண்டிருந்த அனைத்து காரியங்களையும் நிறுத்தி விட்டு தொழுகைக்காக தயாராகி விடுங்கள்.
3.வெளியில் சென்று கொண்டிருந்தால் அதான் சொல்லப்பட்டதும் பக்கத்திலுள்ள பள்ளியில் தொழுது விடுங்கள்.
4.பெண்கள் அவர்களின் வீட்டிலே முதல் நேரத்திலேயே தொழுவதை வழமையாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு உங்களின் வீட்டு வேலைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் பாதுகாத்து தொழ நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக!
நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts