லேபிள்கள்

திங்கள், 29 செப்டம்பர், 2014

யா அல்லாஹ்! கசக்கிப் போடுவாயாக!

யா அல்லாஹ்! கசக்கிப் போடுவாயாக!

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
சரித்திரப் புகழ் பெற்ற ஒரு சாம்ராஜ்யத்தைச் சரித்து வெறும் சருகாக மாற்றிய மகத்தான பிரார்த்தனை இது! பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து கொள்ள ஆட்சி அதிகாரத்தை விட அல்லாஹ்வின் அங்கீகாரம் வலிமை மிக்கது என்பதை உணர்த்தும் அழகிய நிகழ்வொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
ஹுதைபியா உடன்படிக்கையின் பின்னர் நபியவர்கள் அண்டை நாட்டு மன்னர்களுக்குக் கடிதங்கள் மூலம் தஃவா செய்தார்கள். சிலர் கடிதத்தை மதித்தனர், பலர் மிதித்தனர். இவ்வாறே அன்றைய இரு பெரும் வல்லரசுகளில் ஒன்றான பாரசீகச் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திக்கு ஒரு மடலை எழுதி அதனை பஹ்ரைன் மன்னரிடம் ஒப்படைத்து அவர் மூலமாக அது பாரசீக சக்கரவர்த்திக்குச் சென்றடைவதற்கான ஏற்பாட்டைச் செய்தார்கள். இந்தக் கடிதம் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா(வ) அவர்கள் மூலமாக பஹ்ரைன் மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டது. பாரசீகப் பேரரசின் மன்னர்கள் பொதுவாக குஸ்ரூ-கிஸ்ரா (Cbosroes Eparws) என்று அழைக்கப்படுவார்கள். கடிதம் அனுப்பும் போது "இப்னுவேஸ் பின் ஹுருஸ்" (590-628) என்ற மன்னனே பாரசீகப் பேரரசை ஆண்டதாக நம்பப்படுகின்றது.
இம்மன்னனுக்கு நபி(ச) அவர்கள் எழுதிய மடல் பின்வருமாறு அமைந்திருந்தது.
"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்!
தூதர் முஹம்மதிடமிருந்து பாரசீகப் பேரரசர் கிஸ்ரா அவர்களுக்கு, சத்திய வழியைப் பின்பற்றுவோர் மீது சலாம் உண்டாகட்டுமாக!
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நீங்கள் விசுவாசியுங்கள். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லையென்றும், நான் மனித குலம் அனைத்தையும் எச்சரிக்க அனுப்பப்பட்ட இறைத் தூதர் என்றும் சாட்சி கூறுங்கள். (இதை நம்பி) ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அமைதி பெறுவீர்கள். மாற்றமாக மறுத்தால், பாவம் உங்களைச் சாரும்"
(
தபரி பா3: 90)
இந்த மடல் பஹ்ரைன் ஆளுனர் மூலமாக கிஸ்ராவைச் சென்றடைந்ததும் அவன் ஆத்திரமுற்றான். எனது அடிமை ஒருவன் எனக்கு இப்படிக் கடிதம் எழுதுவதா? என்று கொதித்தான். கடிதத்தை அவமதித்துக் கசக்கிப் போட்டான். இந்தச் செய்தியறிந்த நபி(ச) அவர்கள் "அல்லாஹ் அவனது ஆட்சியினை கசக்கிப் போடுவானாக!" என்று பிரார்த்தித்தார்கள். (பார்க்க: புஹாரி 4424)
நபிகளாரின் திருவாயிலிருந்து வெளிப்பட்ட இவ்வார்த்தைகளின் வலு என்ன என்பதை வரலாறு நிரூபிக்கின்றது.
நபிகளாருக்குப் பிடி ஆணை:
பாரசீக மன்னன் தனது அரசியல் ஆதிக்க வெறியின் உச்சக் கட்டத்தில் தனது யெமன் நாட்டு கவர்னருக்கு நபி(ச) அவர்களை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். யெமனின் பாரசீக ஆட்சியின் கவர்னர் "பாதான்" என்பவன் பலம் பொருந்திய இருவரை நபி(ச) அவர்களை அழைத்து வருவதற்காக ஹிஜாஸ் மாகாணத்திற்கு அனுப்பினான். அவர்கள் இருவரும் தாயிபில் வைத்து குறைஷிக் குல வியாபாரிகளிடம் நபி(ச) அவர்களைப் பற்றி விசாரித்த போது "அவர் மதீனாவில் இருக்கிறார்" என குறைஷிகள் கூறினார்கள். பாரசீக மன்னன் முஹம்மதைத் தீர்த்துக்கட்டிவிடுவான் என எண்ணிய அவர்கள், மக்களே! அதோ முஹம்மதைத் தேடி பாரசீகப் பேரரசர் ஆள் அனுப்பியுள்ளார். முஹம்மதின் கதை முடியப் போகின்றது. அவரால் எமக்கு ஏற்பட்ட தொல்லைகள் தீரப்போகின்றன. குறைஷிக் குலத்தவரே! குதூகலம் அடையுங்கள், உங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று மக்கத்து மக்களுக்கு நற்செய்தி கூறினர்.
தூதுவர்களும் தூதர் முஹம்மதும்:
யெமனிலிந்து வந்த இருவரும் மதீனா வந்து மனித குல மாணிக்கமாம் முஹம்மத்(ச) அவர்களைச் சந்தித்தனர்.
எச்சரிக்கையும் ஆசையூட்டலும் கலந்த தொனியில் பின்வருமாறு கூறினர்.
"முஹம்மதே! எமது மன்னர் கிஸ்ரா அவர்கள் எமது தலைவர் பாதான் அவர்களுக்கு "உம்மை அவரிடம் அழைத்து வருமாறு நிரூபனம் அனுப்பியுள்ளார். நீர் இதற்குக் கட்டுப்பட்டு எம்மிடம் வந்தால் கிஸ்ராவிடம் சலுகையளிக்குமாறு எமது தலைவர் பேசுவார். அதுதான் உமக்கு நல்லது. நீர் மறுத்துவிட்டால் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நீரே அறிவீர். கிஸ்ராவின் பலத்தை அவரது பிடியின் கடினத்தையும் நீர் அறிவீர். எனவே, எமக்குக் கட்டுப்படும். உன் சமூகம் அவரது கோபப் பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் என எண்ணுகின்றோம் என்று கூறினர்."
இவர்களின் இந்த எச்சரிக்கை கலந்த வேண்டுகோளுக்கு அண்ணல் நபியிடமிருந்து அழகிய புன்னகையொன்றே பதிலாகக் கிடைத்தது. எதுவும் கூறாமல் நாளை வாருங்கள் என்றார்கள்.
தூதுவர்களோ வந்த வேலை இவ்வளவு இலகுவாக முடிந்துவிட்டதே என்ற ஆறுதலுடன் நகர்ந்தனர்.
அழிவின் ஆரம்பம்:
மறுநாள் காலையில் முஹம்மத்(ச) அவர்கள் தம்முடன் வருவதற்குத் தயாராக இருப்பார் என்ற எண்ணத்தில் இருவரும் நபி(ச) அவர்களிடம் வந்தனர். நீர் எம்முடன் வந்து கிஸ்ராவைச் சந்திக்கத் தயாராகத்தானே இருக்கின்றீர் என்று கேட்டனர்.
இதற்கு நபி(ச) அவர்கள் கூறிய பதில் இடி தாக்கியது போன்று அவர்கள் மீது அதிர்ச்சியை அள்ளி வீசியது.
"இன்றைய தினத்திற்குப் பின்னர் நீங்கள் கிஸ்ராவைச் சந்திக்கப் போவதே இல்லை. அவரது மகன் ஷீராவைஹ் மூலமாக அல்லாஹ் கிஸ்ராவைக் கொன்றுவிட்டான்" என்றார்கள்.
இதனைக் கேட்ட அவ்விருவரும் கிஸ்ரா கொல்லப்பட்டுவிட்டாரா? அதிர்ச்சியில் மூழ்கினர். கிஸ்ராவை அவரது மகனே கொன்றுவிட்டானா? இதை எப்படி நம்புவது என்று முளித்தனர்.
இன்று ஒரு நிகழ்ச்சி நடந்தால் அடுத்த வினாடியே தொலைக்காட்சியில் "Flash News" என்ற பெயரில் அது உலகெங்கும் பரவிவிடும். தொலைத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி விண்ணளவு விரிந்துவிட்டதன் விளைவு இது. ஆனால், அன்று பாரசீகத்தில் நடந்த ஒரு செய்தி அரபு நாட்டுக்கு வருவதற்கு மாதங்கள் சில தாண்ட வேண்டும். இந்த மனிதர் நேற்று எதையும் கூறவில்லை. இன்று கிஸ்ரா கொல்லப்பட்டான். கொலை செய்தது அவனது மகன் "ஷீராவைஹ் என்ற தகவலை உடனுக்குடன் கூறுகின்றாரே என்ற ஆச்சரியத்துடன் இவர் எம்முடன் வருவதைத் தவிர்ப்பதற்காக இப்படிக் கதை கட்டுகின்றாரோ என்ற ஐயமும் எழுந்துவிட்டது போலும்.
அவர்களுள் ஒருவர் இதனை யெமன் நாட்டு கவர்னருக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஆம் அறிவியுங்கள். அத்துடன் அல்லாஹ்வின் இந்த மார்க்கம் கிஸ்ராவின் ஆட்சிப் பரப்பை யெல்லாம் வெற்றி கொள்ளும்; யெமன் கவர்னர் இஸ்லாத்தில் இணைந்து கொண்டால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை அவரிடமே ஒப்படைத்து அவரை அவரது ஆட்சியில் நிரந்தரமாக நீடிக்கச் செய்வேன் என்பதையும் சேர்த்துக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள்.
பாதானின் மாற்றம்:
இந்தச் செய்தியை உண்மை என்பதா, பொய் என்பதா, எனப் புரியாது பாதானிடம் தகவல் கூறினார். இது கேட்ட பாதான் ஒரு முடிவுக்கு வந்தார். "முஹம்மத் கூறியது உண்மையென்றால் அவர் ஓர் இறைத்தூதர் தான். அப்படி இல்லையென்றால் நிச்சயமாக அவரது முடிவு கஷ்டமாகத்தான் அமையப் போகின்றது என்ற உறுதியான தீர்மானத்துக்கு வந்தான்.
நாட்கள் சில நகர்ந்தன. பாரசீகத்திலிருந்து யெமன் கவர்னருக்கு ஒரு நிரூபம் வந்தது. அது கிஸ்ராவின் மகன் அனுப்பிய மடல். அதில்,
"நான் என் தந்தையைக் கொன்றுவிட்டேன். என் சமூகத்தின் நலனுக்காகவே இதை நான் செய்தேன். அவர் என் சமூகத்தின் கண்ணியமிக்கவர்களை அழித்தார்; பெண்களைக் கற்பழித்தார்; பொருட்களைச் சூறையாடினார். எனது இந்த மடல் வந்ததும் நீயும் உம்முடன் இருப்பவரும் இதன் பின் எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்" என்று மகன் "ஷீராவைஹ் எழுதியிருந்தான்.
கசக்கப்பட்ட ஆட்சி:
நபியவர்களின் துஆவின் பிரகாரம் கிஸ்ரா கொல்லப்பட்டான். கிஸ்ராவுக்கென்று சில விசுவாசிகள் இருந்தனர். அவர்கள் "ஷீராவைஹுக்கு எதிராகச் செயற்பட்டனர். தனது தந்தையைத் தான் கொன்றது போல் தனது சகோதரர்கள் தம்மைக் கொன்று விடுவார்கள் என்று அஞ்சிய "ஷீராவைஹ் தனது சகோதரர்கள் அனைவரையும் கொலை செய்தான். பிறகு கிஸ்ராவின் விசுவாசிகள் "ஷீராவைஹைக் கொன்றனர். அதன் பின்னர் ஆண் வாரிசு இல்லாததால் கிஸ்ராவின் மகள் "பூராண்" பாரசீகத் தலைவியானாள். இச்சந்தர்ப்பத்தில்தான் "தன் ஆட்சி அதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த ஒரு சமூகம் ஒருபோதும் உருப்படாது" என்ற ஹதீஸை நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
(
பார்க்க: புஹாரி 4425)
பல ஆண்டுகளாக பாரசீகப் பேரரசு கட்டிக் காத்து வந்த கண்ணியம், பெருமையெல்லாம் சிதைந்து கிஸ்ரா குடும்பக் குழந்தைகளின் கையில் அவர்களது மூதாதையர்கள் விட்டுச் சென்ற ஆட்சி விளையாட்டுப் பொருளாக மாறியது. தொடர்ந்தும் அரசியல் கொலைகளால் கிஸ்ராவின் ஆட்சி கசக்கிப் போடப்பட்டது. ஈற்றில் நபி(ச) அவர்கள் கூறியது போல் பாரசீகம் முஸ்லிம்களின் கையில் வீழ்ந்தது.
ஒரு வல்லரசையும் வல்லாதிக்கம் மிக்க மன்னர் குடும்பத்தையும் ஒரேயொரு பிரார்த்தனை சிதைத்து சின்னாபின்னமாக்கிய அற்புத வரலாறு பிரார்த்தனையின் வலிமையை எமக்கு உணர்த்துகின்றது.
எனவே, ஒருமித்த மனதுடன், தூய எண்ணத்துடன் உருக்கமாக, உளப் பூர்வமாக அல்லாஹ்விடம் கையேந்துங்கள்!
இன்ஷா அல்லாஹ்! வெற்றி நிச்சயம்!…..


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts