லேபிள்கள்

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

சிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்!

சிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்!

நமது அடிவயிற்றின் உட்பகுதியிலுள்ள சிறுநீர்ப்பையில்தான் இரண்டு சிறுநீரகங்களிலிருந்தும் வடியும் சிறுநீர், தேங்க ஆரம்பிக்கிறது. சிறுநீரைத் தேக்கி வைக்கும் இந்த சிறுநீர்ப்பை, அடிவயிற்றினுள் தொப்புளுக்குக் கீழ், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் என்கிற சுரப்பியின் மேல்பகுதியில் அமைந்திருக்கிறது.
இதே போல் பெண்களுக்கு கர்ப்பப் பைக்கு கீழே அமைந்திருக்கிறது. அடி வயிற்றில் கர்ப்பப்பை கொஞ்சம் இடத்தை அடைத்துக் கொள்வதால், பெண்களுக்கு சிறுநீர்ப்பை சற்று சிறிதாக இருக்கும். சிறிய குழந்தைகளுக்கு, சிறுநீர்ப்பை வயிற்றில் பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கும்.
அவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பியும், கர்ப்பப்பையும் அந்த வயதில் வளராததே இதற்குக் காரணம். சிறுநீரை, சிறுநீர்ப் பையிலிருந்து வெளியே அனுப்புவதற்கு பெயர்தான் `சிறுநீர் கழித்தல்' என்று நாம் சொல்வதுண்டு. இதை உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு மொழிகளில், பலவிதமாக அழைப்பதுண்டு.
அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆரோக்கியமாக இருக்கும் ஒரு ஆணுக்கு, சிறுநீர் கழித்தல் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தக் கட்டுப்பாடு கூட ஒரு அளவுக்குத்தான். அளவை மீறிவிட்டால், அப்புறம் கட்டுப்பாட்டையும் மீறிவிடும். அப்புறம் அந்த இடம் அசிங்கம்தான். இதைத்தான் கிராமங்களில், "சிந்தனையை அடக்கலாம் ஆனால் சிறுநீரை அடக்கமுடியாது" என்பார்கள்.
பிறந்த குழந்தைகள், மிகவும் வயதானவர்கள், விபத்துகளில் நரம்பு பாதிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கெல்லாம் சிறுநீர் கழித்தல் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்காது. அதனால்தான் சிறிய குழந்தைகள், அடக்க முடியாமல், அடக்கத் தெரியாமல் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் சிறுநீர் கழித்து விடுகிறார்கள்.
சிறுநீர் கழித்தல் என்பது மிகச் சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயமாக நாம் நினைத்துக் கொள்கிறோம். அப்படியல்ல. இது ஒரு சாதாரண விஷயமுமல்ல. ஒரு விளையாட்டான விஷயமுமல்ல. பெருமூளையிலுள்ள நரம்பு மண்டலப் பகுதிகளின் செயல்பாட்டில் தான் சிறுநீர் கழித்தலே நடைபெறுகிறது. நாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைவூட்டுவதே இந்த மூளையிலிருந்து வரும் சமிக்கைகள்தான்.
மூளைதான் இதை கண்ட்ரோல் பண்ணுகிறது. மிகச்சிறிய குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் சிறுநீர் கழிக்கலாம், இந்த நேரத்தில் சிறுநீர் கழிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு வருவதற்கு சுமார் இரண்டிலிருந்து மூன்று வயது வரை ஆகும். ஏனென்றால், அந்த வயதில்தான் மத்திய நரம்பு மண்டலத்தில், சிறுநீரை கட்டுப்பாட்டில் வைப்பதற்குண்டான பகுதி வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது.
எனவே மிகச்சிறிய குழந்தைகளை திட்டுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. வயது வந்த ஆண் மற்றும் பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் சிறுநீர் கொள்ளும் அளவு சுமார் 600 மில்லி லிட்டர் வரை பிடிக்கும். இந்த கொள்ளளவு ஆளுக்கு ஆள், கொஞ்சம் வேறுபடும். சிறுநீர்ப்பை நீளத்தில் ஐந்து அங்குலமும், அகலத்தில் மூன்று அங்குலமும் விரிந்து கொடுக்கும் தன்மை உடையது.
மேலிருந்து சிறுநீர் வடிய, வடிய, சிறுநீர்ப்பைகளின் தளச்சுவர்கள் மெல்லியதாகி, கொஞ்சம், கொஞ்சமாக விரிந்து கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் சுமார் 150 முதல் 200மில்லி லிட்டர் சிறுநீர் நிரம்பிவிட்டாலே, சிறுநீர் கழித்தாக வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்துவிடும்.
சுமார் 600 லிட்டர் வரை அடக்கும் சக்தி இருந்தாலும், சுமார் 200 மில்லி லிட்டர் சிறுநீர் சேர்ந்துவிட்டாலே நரம்பு மண்டலத்தின் மூலமாக மூளைக்கு செய்தி போய், மூளையிலிருந்து சிக்னல் கிடைத்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்துவிடும். ஒரு பையில் தண்ணீர் அதிகமாக இருந்தால், அழுத்தமும் அதிகமாக இருக்கும் என்று நாம் நினைப்போம்.
சிறுநீர்பையில் சிறுநீர் சொட்டுச் சொட்டாக வடிந்து சேர ஆரம்பிக்கும்போது, எல்லோரும் நினைப்பது போல் சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகமாக இருக்காது. மாறாக அழுத்தம் குறைவாகவே இருக்கும். சிலருக்கு சிறுநீர் கழிப்பது என்பதே ஒரு மிகப்பெரிய சந்தோஷம். வயிறு முழுவதும் காலியானது போல் தோன்றும்.
மிகப்பெரிய விடுதலை கிடைத்ததுபோல் மனதில் தோன்றும். இது இயற்கையே. சிறுநீர் கழிக்காமல், அப்படியே அடக்கி வைத்துக்கொண்டிருந்தால், டென்ஷன் அதிகமாகும். எதிலும் ஈடுபாடு இருக்காது. இதற்கு இடங்கொடுக்காமல் உடனே சிறுநீர் கழித்து விடுவது நல்லது.
எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அவ்வளவும் சிறுநீராக வெளியே வந்துவிடும் என்று சிலர் நினைப்பதுண்டு. இது சரியல்ல. ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு சுமார் நான்கு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். இது இயற்கை. சர்க்கரை வியாதிக்காரர்கள் நான்கு முறைக்கு மேல், அடிக்கடி பாத்ரூம் போய் வந்து கொண்டிருப்பார்கள்.
இது நோயினால் ஏற்படும் மாற்றம்.   ஒரு நாளைக்கு சுமார். 1.2 லிட்டரிலிருந்து 1.8 லிட்டர் வரை, சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர் வடிந்து, சிறுநீர்ப்பை மூலமாக வெளியேறுகிறது. மழைக்காலங்களில் அதிக தடவை சிறுநீர் கழிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. ஆண், பெண் இருவருமே தண்ணீர் நிறைய குடித்தால், அடிக்கடி சிறுநீர் போகவேண்டும் என்பதற்கு பயந்து, அதிக தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.
இது தவறு. எனக்குத் தெரிந்த ஒருவர், சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போதும் ஒரு மடக்கு தண்ணீர் கூட குடிக்கமாட்டார், "முதலில் தண்ணீர் குடித்து விட்டால், அதிகமாக சாப்பிட முடியாதாம். அதனால் சாப்பிட்டு முடித்த பின்பு தான் தண்ணீர் குடிப்பேன்" என்றார். இவர் செய்வதும் விநோதமே.
அதிகமாக சாப்பிட முடியாது என்பதால், தண்ணீர் குடிக்க பயப்படுகிறார். எது எப்படியோ, ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக சுமார் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. ஒருவருக்கு தண்ணீரின் தேவை அவரது உடல் எடையில் 4 சதவீதம் ஆகும். உதாரணத்திற்கு (70 கிலோ ல 4 % = 2.80 லிட்டர்) அதாவது 70 கிலோ எடையுள்ள அவர் சுமார் 2.8 லிட்டர் தண்ணீர் குடித்தாக வேண்டும்.
நன்றி: மாலைமலர்


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts