லேபிள்கள்

சனி, 19 ஏப்ரல், 2014

தும்மல் வராமல் தடுக்க…!

தும்மல் வராமல் தடுக்க…!

வாழ்நாளில் ஆயிரக்கணக்கான முறை நீங்கள் தும்மலை சந்தித்திருப்பீர்கள். சில பேருக்கு ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறைதான் தும்மல் வரும். சில பேருக்கு தொடர்ந்து 10 அல்லது 15 தும்மல்கள் வந்துவிடும். காலையில் படுக்கையிலிருந்து எழுந்து காலை கீழே தரையில் வைத்தவுடனேயே எனக்கு தொடர்ந்து 15, 20 தும்மல் வந்து விடுகிறது என்று சொல்பவர்களும் உண்டு.
சாதாரணமாக ஜலதோஷம், மூக்கில் நீர் வடிதல், தொண்டைப் பிரச்சினை, அலர்ஜியினால் ஏற்படும் ஜலதோஷம் முதலியவைகளால் தும்மல் எல்லோருக்குமே ஏற்படுவதுண்டு. தும்மலும், மூக்கில் நீர் வடிவதும் எப்பொழுதும் ஒன்றாக சேர்ந்தே வரும். அல்லது ஒன்றன்பின் ஒன்றாக வரும்.
அதனால்தான் மிக நெருங்கிய நண்பர்களுக்கு உதாரணம் சொல்லும்போது, "இவனுக்கு சளி பிடித்தால் அவனுக்கு தும்மல் வரும்" என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. ஏதாவது எரிச்சலைப் பண்ணக்கூடிய பொருள் மூக்கின் பாதையில் இருந்தால், அந்தப் பொருள் நுரையீரலுக்குள் போனால் தொந்தரவு பண்ணிவிடும் என்பதனால், அந்தப் பொருள் வெளியே வர வேண்டும் என்பதற்காக, மிக வேகமாகவும், மிகுந்த சத்தத்துடனும் செய்யப்படும் காரியமே தும்மல் ஆகும்.
தும்முவது இயற்கைதான். ஆனால் அதிக தும்மல் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிகமான தும்மல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதென்றால் மூக்கின் உள்ளே போன எரிச்சலூட்டிய பொருள் இன்னும் வெளியே வரவில்லை என்று அர்த்தம். தும்மும்போது ஏற்படும் சத்தம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும். தும்மலை வைத்தே இவர்தான் தும்முகிறார் என்று ஆளைக் கண்டுபிடித்துவிடலாம்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், நான் தும்மினால், என் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள், டாக்டர் வீட்டில் இருக்கிறார் என்று கண்டுபிடித்து விடுவார்கள். எனவே தும்மல் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட சத்தத்தோடுதான் வரும். விலா எலும்பு அதாவது மார்பெலும்பு ஏற்கனவே உடைந்திருந்தாலோ அல்லது கீறல் ஏற்பட்டிருந்தாலோ, அவர்களுக்கு தும்மல் வந்தால், உயிரே போய்விடும் அளவுக்கு வலி ஏற்படும்.
அதோடு இந்த தும்மலினால் ஒட்டியிருக்கும் எலும்பு சற்று விலகவும் வாய்ப்புண்டு. ப்ளூரிசி, நிமோனியா போன்ற நோய்கள் நெஞ்சிலே இருப்பவர்களுக்கும் தும்மல் வந்தால் உயிர் போய்விடும். தொப்புள் பக்கத்தில் ஹெர்னியா (அதாவது குடல் வெளியே வருவது), தொடையிடுக்கில் ஹெர்னியா உள்ளவர்களுக்கு தும்மல் அடிக்கடி, அதிகமாக வந்தால் இந்த ஹெர்னியா அதிகமாகி விடும்.
கர்ப்பமாயிருக்கும் எல்லாப் பெண்களுக்கும் கொஞ்சம் மூச்சுத்திணறல், கொஞ்சம் அசவுகரியம், அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். கர்ப்பமாயிருக்கும் நேரத்திலும் சிலருக்கு தும்மல் வருவதுண்டு. 2-வது வாரத்தில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நாலாவது வாரத்தில் காணாமல் போய்விடும்.
இந்த மாதிரி நேரத்தில் தும்மல்போடும்போது, கைபிடித்துக் கொள்ளும்; அல்லது கால் பிடித்துக் கொள்ளும்; அல்லது முதுகு பிடித்துக் கொள்ளும்; அல்லது தாடை பிடித்துக் கொள்ளும். இப்படி ஏதாவது ஒரு பிரச்சினையை தும்மல், கர்ப்பகாலத்தில் உண்டுபண்ணிவிடும். தும்மல் இப்படிச் சின்னச்சின்ன பிரச்சினையை உண்டு பண்ணுகிறது என்பதற்காக தும்மலை நிறுத்த முயற்சி செய்வதோ தும்மலை தடுக்க முயற்சி பண்ணுவதோ கூடாது.
கர்ப்ப காலத்தில் வரும் வாந்தி, மசக்கை, தலை சுற்றல் போல தும்மலும், கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்தினாலே தவிர, வேறொன்றுமில்லை. தும்மும்போது உடலிலுள்ள தசைகள், மிக வேகமாக மிக அதிகமாக இழுத்துப் பிடிக்கின்றது. இப்படி இழுத்துப் பிடிக்கும்போது உடலில் ஏதாவதொரு இடத்தில் ஏதாவதொரு தசை நன்றாகவே இழுத்துப் பிடித்துக் கொள்ளும்.
அதனால் தும்மலை நிறுத்த வேண்டும் என்று முயற்சிக்காமல் தும்மல் வரும்போது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். உங்களுக்கு நோய் ஏதாவது இருந்தால் அதிக தும்மலினால் அந்த நோய் எதிரிலிருப்பவர்களுக்கு வர வாய்ப்புண்டு, அதனால் நீங்கள் தும்மும்போது உங்கள் முகத்தை துண்டு அல்லது கர்சீப்பை வைத்து லேசாக மூடிக் கொண்டு தும்முங்கள். தும்மலை சட்டென்று உடனே தடுத்து நிறுத்த முயற்சி செய்யாதீர்கள். அடுத்து தும்மல் வருவது போலிருக்கிறது என்றால் அதைத் தடுக்க முயற்சிக்கலாம். இதோ சில வழிகள் உங்களுக்காக:
  •  தும்மல் வருகிற மாதிரி இருந்தால், வாயை மூடிக் கொண்டு மூக்கின் வழியாக நன்றாக வேகமாக காற்றை வெளியேற்றுங்கள்.
  •  உங்கள் கட்டை விரலாலும். உங்கள் ஆள்காட்டி விரலாலும் உங்களது மேலுதட்டை நன்றாக கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உதட்டை, மூக்குத் துவாரங்களை நோக்கி, மேலே நன்றாகத் தூக்கி அமுக்குங்கள்.
  • மூக்கை நன்றாக, வேகமாக பல முறை சிந்துங்கள்.
  •  தும்மல் வருகிற மாதிரி இருக்கும்போது இரண்டு கண்களுக்கும் இடையில் முன்பக்கத் தலையை தட்டுங்கள். இதைத்தான் நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் அடிக்கடி செய்வார்கள்.
  • நெஞ்சிலிருக்கும் காற்றை நன்றாக வாயைத்திறந்து, ஊதி வெளியே தள்ளிவிடுங்கள். அதற்கப்புறம் தும்மல் வந்தாலும் அந்தத் தும்மல் ரொம்ப வேகமாக இருக்காது.
  • தும்மல் வரும்போது மூக்கின் வழியாக தும்மிப் பழகுங்கள். வாயின் வழியாக தும்மிப் பழகாதீர்கள். குழந்தைகள் மூக்கின் வழியாகத்தான் தும்முவார்கள். பெரியவர்கள்தான் வாய் வழியாகவும் தும்முவார்கள்.
  • கையில் கர்சீப்பையோ, டிஸ்யூ பேப்பரையோ, துண்டையோ வைத்துக்கொண்டு தும்முங்கள். வெறும் கையில் தும்மினால் கையை அடிக்கடி கழுவ வேண்டி வரும்.
  • உள்ளங்கைப் பகுதியை முகத்துக்கு கிட்டே கொண்டு வந்து, தும்முவதைவிட கைமுட்டிப் பகுதியை முகத்துக்கு கிட்டே கொண்டு வந்து தும்முவது பாதுகாப்பானது. ஏனெனில் ஓரளவு கிருமிகள், உள்ளங்கை மூலம் பரவுவதை தடுக்கலாம்.
  • எப்பொழுதும் கையில் துண்டு கர்சீப், டிஸ்யூ பேப்பர், ஏதாவதொன்றை வைத்துக்கொள்ளுங்கள். இது கையில் இருந்தால் தும்மலை நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டீர்கள்.
  • அலர்ஜியினால் ஏற்படும் தும்மலை மூக்கை உப்பு நீரில் கழுவுவதன் மூலம் தடுக்கலாம்.
  • வீட்டில் வளர்க்கும் பிராணிகளால் தும்மல் வருகிறதென்றால் பிராணிகளைப் பிரிந்து ஒரு வாரம் இருந்து பாருங்கள். தும்மல் வராமல் இருக்கிறதென்றால் உங்கள் தும்மலுக்கான காரணம் வீட்டுப் பிராணிகள் தான்.
  • ஜன்னல் கதவுகளை மூடி விடுங்கள். வெளியிலிருந்து வந்தவுடன் ஒரு குளியல் போட்டு விடுங்கள்.துணியை மாற்றி விடுங்கள்.
  • சிலபேருக்கு தும்மல் வந்தால், அடுத்து ஜலதோஷம் வரப்போகிறது என்று அர்த்தம்.
  • முகத்துக்கு ஆவி பிடியுங்கள். சூடான ஆவியை நன்றாக மூச்சிழுத்து, மூச்சிழுத்து விடுங்கள்.
  • நீங்கள் தூசிக்கு அலர்ஜி உள்ளவராக இருந்தால் வீட்டை தூசி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டிலுள்ள சோபா, அதன் மேலிருக்கும் கவர் எல்லாவற்றையுமே ரெகுலராக துவைத்து எடுங்கள். பெட், படுக்கை விரிப்பு, தலையணை கவர், கார்பெட் ஆகியவைகளையும் துவைத்து எடுங்கள்.
  • படுக்கும் துணி, தரைவிரிப்பு, கார்பெட் ஆகியவைகளை வெயிலில் காயப்போடுங்கள்.
  • தூசி பட்டால் தும்மல், ஏசி காற்று பட்டால் தும்மல், காலையில் குளிர்ந்த காற்று பட்டால் தும்மல் முதலியவைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஏ.சி. மெஷினிலுள்ள பில்டர்களை எடுத்து, கழுவி, துடைத்து மறுபடியும் மாட்ட வேண்டும். பேன்களை வாராவாரம் துடைக்க வேண்டும்.
  • தொழிற்சாலைகளுக்கு மிக அருகிலும், விவசாய நிலங்களுக்கு மிக அருகிலும் வசிக்காமல், சற்று தள்ளி வாழ முயற்சி செய்யுங்கள்.
  • சில பேருக்கு தும்மல், ஒரு சந்தோஷத்தையும், ஒரு ஆனந்தத்தையும் கொடுக்கும் என்பதால் தும்மலை நிறுத்த முயற்சிப்பதில்லை. உங்களையும், சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். தும்மல் உங்களிடம் வராது.
நன்றி: மாலைமலர்


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts