புகழனைத்தும் விண்ணையும், மண்ணையும், அவற்றிற்கிடையே உள்ளவற்றையும், நம்மையும் படைத்த தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே!
எனது சகோதரியின் அழைப்பிற்கிணங்க அவளுக்கு துணையாக அவளுடைய தோழியின் திருமண வைபவத்திற்கு சென்று இருந்தேன். அங்கு உறவினர்கள் என்றோ அல்லது நண்பர்கள் என்றோ அல்லது அறிமுகமானவர்கள் என்றோ சொல்வதற்கு எவரும் இல்லை, என்னுடைய சகோதரியை தவிர. முஸ்லிம் என்ற வகையில் மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்பது. அந்த ஸலாமுக்கு பதில் கூட அளிக்க முடியாத அளவிற்கு, திருமண மண்டபத்தில் ஏகப்பட்ட பரபரப்பு. ஸலாம் சொன்னால் அதற்கு பதில் கூட அளிக்காமல், இந்த உலகில் அப்படி எதை தான் சாதிக்கப் போகிறார்கள்?. எனது சகோதரியோ, "நாம் இங்கு ஏன்டா வந்தோம்" என்பது போல என்னை பார்ப்பதை அவளது பார்வையின் மூலம் புரிந்து கொண்டேன் .
பொதுவாக நிக்காஹ் வைபவங்களில் ஆண்கள் ,பெண்கள் என்று மண்டபத்தில் பிரத்தியேகமாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இங்கு, ஆண்களும் பெண்களுமாக மண்டபமே நிரம்பி வழிந்தது .இங்கு பிரத்தியேகமாக இடம் ஒதுக்கி இருப்பர்களா? என்ற சந்தேகம் வரவே , ஓர் இடத்தில் நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். திருமண மண்டபத்தில் வந்திருந்த (மணமகள் உட்பட) அனைவரையும் காணும் பொழுது, முஸ்லிமாகிய நாம் உண்மையில் இஸ்லாமியர்களின் நிக்காஹ் என்னும் திருமண வைபவத்திற்குத் தான் வந்து இருக்கோமா என்ற சந்தேகம் ஒரு புறமும், நாளை நாமும் அல்லாஹ்விடத்தில் இதற்கு சாட்சியாக வேண்டும் என்ற எண்ணம் மறுபுறமும் என்னை ஆட்டிப்படைத்தது. நமது சமுகம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது ?
நிற்க!
தற்போதுள்ள அறியாமையில் மூழ்கி கிடைக்கும் இஸ்லாமியர்களின் திருமணத்தில் என்னன்ன கொடுமைகள் எல்லாம் நிகழ்கிறது என்பதை பார்த்துவிடலாம்!
பொதுவாக நிக்காஹ் வைபவங்களில் ஆண்கள் ,பெண்கள் என்று மண்டபத்தில் பிரத்தியேகமாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இங்கு, ஆண்களும் பெண்களுமாக மண்டபமே நிரம்பி வழிந்தது .இங்கு பிரத்தியேகமாக இடம் ஒதுக்கி இருப்பர்களா? என்ற சந்தேகம் வரவே , ஓர் இடத்தில் நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். திருமண மண்டபத்தில் வந்திருந்த (மணமகள் உட்பட) அனைவரையும் காணும் பொழுது, முஸ்லிமாகிய நாம் உண்மையில் இஸ்லாமியர்களின் நிக்காஹ் என்னும் திருமண வைபவத்திற்குத் தான் வந்து இருக்கோமா என்ற சந்தேகம் ஒரு புறமும், நாளை நாமும் அல்லாஹ்விடத்தில் இதற்கு சாட்சியாக வேண்டும் என்ற எண்ணம் மறுபுறமும் என்னை ஆட்டிப்படைத்தது. நமது சமுகம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது ?
நிற்க!
தற்போதுள்ள அறியாமையில் மூழ்கி கிடைக்கும் இஸ்லாமியர்களின் திருமணத்தில் என்னன்ன கொடுமைகள் எல்லாம் நிகழ்கிறது என்பதை பார்த்துவிடலாம்!
- திருமணத்திற்கு முன்பே திருமணத்தை போன்றே ஆரம்பரமாக நடத்தப்படும் நிச்சயதார்த்தம்!
- நிச்சயதார்த்தத்தன்று பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டில் பால்குடமும் பாலும், 100க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் முட்டையும் , இன்னபிற சீர் வகைகளும் வைப்பது!
- திருமணத்திற்கு சில இடங்களில் சுமங்கலிகளுக்கு மட்டும் வைக்கபடும் வாவரிசி விருந்து!
- மருதாணி வைக்கும் நிகழ்ச்சி! அதில் கைகால்களுக்கு சந்தனம் தடவுதல், பன்னீர் தெளித்தல், பூ தூவுதல் என ஏகப்பட்ட சடங்குகள்
- திருமணத்தன்று காலையிலேயே பெண் குளிக்க போகும் முன் தலையில் எண்ணெய், பால் ஊற்றுதல்
- அனைத்தை விடவும் ஹைலைட்டான விஷயம் தாலி தான்! ஆம்... இஸ்லாம் காட்டித்தராத இந்த வழிமுறையை இஸ்லாம் என்ற பெயரில் அரங்கேற்றி வருகின்றனர்! இதில் பெரிய காமெடி என்னன்னா மணமகனுக்கு பதிலாக வயதான ஒரு பெண் தான் மணப்பெண்ணுக்கு அந்த தாலியை அணிவிக்கின்றார்!
- நபி (ஸல்) காட்டித்தராத துஆக்கள், பாத்தியாக்கள் ஓதுதல்!
- மாலை மாற்றுதல், மெட்டி அணிதல்
- பூவால் அலங்கரிக்கப்பட்ட தொப்பி கொண்டு முகம் மூடுவது,
- திருமணம் நிகழ்வு முடிந்ததும் பாலும் பழமும் ஊட்டிவிடுதல்,
- மணமகள் வீட்டார் செலவில் நடத்தபடும் படுவிசேஷமான விருந்து,
- மடி நிரப்பாட்டுதல், அரிசி அளத்தல், வெத்தலை பாக்கு மணமகனும் மணமகளும் மூன்று முறை மாற்றிகொள்ளுதல், ஆரத்தி எடுத்தல், சம்பாயத்துக்காக வீட்டுக்குள் நுழையும் போது நிறைகுடத்தில் முழிப்பது, கண்ணாடியில் பார்ப்பது, குர் ஆனில் திறந்து ஒரு வசனம் மட்டும் ஓதிவிட்டு மூடுவது...........................
- இத்துடன் நின்றுவிடாது... மணமகன் வீட்டில் மேற்சொன்ன சம்பிரதாயங்கள் நடக்கும். அடுத்த நாள் பெண் வீட்டார் மீண்டும் பொருட்கள் அடங்கிய சீர் வரிசை, பழங்கள் அடங்கிய தாம்பூல சீர்வரிசை, உப்பு முதல் அரிசி வரையிலான மளிகை சாமான்கள் (?!!) முதலிவற்றையெல்லாம் மணமகன் வீட்டில் சமர்ப்பித்து இருவரையும் அழைத்துக்கொண்டு வரவேண்டும்.
- இஸ்லாம் பொருத்தவரை மணமகன் தான் விருந்து கொடுக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் பெண் வீட்டில் சுமையை தள்ளிவிட்டு தன் கடமையை வெறும் டீ, பிஸ்கட்டுடன் முடித்துவிட்டு இது தான் வலிமா என்பார்கள்.
- மீண்டும் 3 நாட்கள் கழித்து பெண் மீண்டும் மணமகன் வீட்டுக்கு செல்லும் போது அவர்களுக்கான துணிமணிகளுக்கான பணம் கொடுத்தனுப்புவாங்க.
- ஏழாம் நாள், பதினைந்தாம் நாள் , 30ம் நாள் என கணக்கே இல்லாமல் அடிக்கடி விசேஷம் நடத்தி மணமகள் வீட்டில் கரப்பதும் வாடிக்கை! இந்த நாட்களில் எல்லாம் பால்சோறு மணமகன் வீட்டில் செய்வார்கள். ஆனால் முந்திரி முதற்கொண்டு இதெல்லாம் மணமகள் வீட்டில் இருந்து வருவது தான் சம்பரதாயமாம்!!!!
- 40ம் நாள் தாலி பிரித்துக்கோர்க்கும் வைபவம்! தாலி என்ற ஒன்றே இல்லை... பின் எங்கே பிரித்துகோர்க்கும் வைபவமெல்லாம்???? தாலியை பாலில் நனைப்பது, அதுக்கு பூஜை செய்யும் விதமாக அனைவரும் பூ தூவுவது, பாத்திஹா ஓதுவது என இங்கேயும் ஏகப்பட்ட முட்டாள்தனங்கள் புகுத்தப்படும்!
ஆக மொத்தத்தில் இன்றைய இஸ்லாமியர்கள் செயல்படுத்திக் கொண்டிருப்பது முட்டாள்தனமே உருவான திருமணம் தான்! எவ்வித தர்க்க ரீதியான காரணங்களும் அல்லாமல் பெண்ணை அலங்காரப்பொருளாக்கி, பலியாடாக்கி நடத்தப்படும் இந்த முட்டாள்தனங்களுக்கும் இஸ்லாத்திற்கும் துளி அளவும் சம்மந்தமில்லை!
அதெல்லாம் விடுங்க. இஸ்லாமிய உடையுடன் பல்கலைகழகம் வரை கல்வியை தொடர்ந்து பட்டமும் பெற்று, இன்று இஸ்லாமிய கொள்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டு மணமேடையில் முற்றும் முழுவதுமாக அந்நிய கலாச்சார உடையில் அனைத்தையும் அவள் இன்று இழந்து நின்று கொண்டு இருக்கிறாள். இதற்கு யார் காரணம் ? சிந்தித்துப் பார்த்ததுண்டா?
திருமணம் என்ற விழா எவ்வளவு பெரிய பாவத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது? இஸ்லாமிய சம்பிரதாயம் என்று சொல்லிக்கொண்டு இங்கு நடப்பவை எல்லாம் அனாச்சாரங்களே!
இன்று நம் மத்தியில் நடக்கும் திருமணங்கள் நம் சமுதாயம் மீண்டும் அறியாமை காலத்திற்கு செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அனுதினமும் நடக்கும் திருமண வைபவங்களை பார்த்தால் மூடநம்பிக்கைகள் அற்ற இஸ்லாமிய சமூகத்திலா இப்படி இஸ்லாமிய(?) திருமணங்கள் என்று முகத்தை திருப்பிக் கொள்பவர்கள் எத்தனை பேர்? இஸ்லாமிய திருமணங்கள் என்ற பெயரில் எத்தனை சம்பிரதாயங்கள், ஜாஹிலிய போர்வையில் இஸ்லாத்தை வைத்துப் பூஜிக்க நினைக்கும் சடங்குகள்?
இஸ்லாம் என்றால் என்ன என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை உண்டாக்கிட எண்ணற்ற இயக்கங்கள் நம் மத்தியில் உலா வருகின்றன. இவ்வாறிருந்தும் இந்த கால கட்டத்தில் பாமர திருமணங்களும் ஆங்காங்கே நடந்தேறி வருவது அறியாமையின் வெளிப்பாடு .மார்க்கம் தெரிந்த மகனுக்கு பேரழகியை தேடுவதும் ஊதாரிக்கு ,ஊர்சுற்றியவனுக்கு காரோடு பெண் கேட்பதும் இன்று சர்வ சாதாரணம். இதற்கு மாற்றமானவர்கள் இருந்தாலும் அதிகமானவர்களின் நிலை இதுதான் . வெறுமனே உடல் அழகையும் செல்வத்தையும் மாத்திரம் வைத்து இன்றைய திருமணங்கள் சந்தையில் விலை பேசப்படுவதை பார்க்கிறோம் .இன்றைய திருமணங்கள் இறையச்சத்தை அழித்துக் கொண்டிருக்கிறது.
இஸ்லாம் சொல்லாத நிறைய விஷயங்களை அரங்கேற்றி விட்டு இதற்கு நிக்காஹ் வைபவம் என்று பெயர் சூட்டி விடுகின்றனர். அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் பிறந்துள்ள நாம், எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாம், அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா?
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்துள்ள இஸ்லாமியத் திருமணம் வீண் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத எளிய, அழகிய வாழ்க்கை ஒப்பந்தம். பிறப்பிலிருந்து இறப்பு வரை குர்ஆனும், நபிவழியும் சொல்கிறபடி வாழக் கடமைப்பட்டவர்கள் நாம். மாற்றுமதத்தினரின் வீண் சம்பிரதாயங்களை பின்பற்ற ஆரம்பித்ததனால் நம் சமுதாயத்தில் எத்தனைக் குழப்பங்கள்!
'குறைந்த செலவில் குறைந்த சிரமத்துடன் செய்யப்படும் திருமண நிகழ்ச்சியே சிறந்ததாகும்.' என்ற நபிமொழியைக் காலத்துக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கி விட்டார்களா?
** திருமணத்துக்கு அழைக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் அல்லாஹ்விடம் பரக்கத்தினை அருளுமாறு துஆ கேட்டு இருப்பார்கள் ?
**எத்தனை திருமணங்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்த்தோடு ஆரம்பிக்கப்படுகின்றன?
**அழகை மட்டும் குறிகோளாக வைத்து நடந்த திருமணங்கள் திருப்தியோடு நீண்ட காலம் நிலைத்திருக்கின்றனவா?
**ஊரையே அழைத்து விருந்து படைத்த எத்தனை குடும்பங்கள் கடன் நீங்கி நிமிர்ந்துள்ளன?
**நம் மத்தியில் எத்தனை திருமணங்கள் இஸ்லாமிய குடும்பத்தை உருவாக்கி பூரணப்படுத்தப் போகின்றன ?
நாம் நம்மை மாற்றிகொள்ள வேண்டும். மகத்துவமிக்க இஸ்லாமிய கொள்கைகள் நம்மிடம் இருந்தும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு ஆசைப்படும் ஒரு மரத்துப் போன சமுதாயமாக நாம் இருக்கக் கூடாது .
அந்நிய கலாச்சாரத்தின் தாக்கங்கள் நம் ஒவ்வொருவரின் வீட்டு கதவுகளையும் நிமிடம் தவறாமல் தட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. வேண்டாத விருந்தாளியை தவிர்த்துக்கொள்வது என்பதில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எதிர்வரும் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக நமது வாழ்க்கையை அமைத்து, இஸ்லாம் வளர நாமும் ஒரு காரணமாக இருக்க அல்லாஹ் உதவி செய்வானாக! ஆமீன்!.
உங்கள் சகோதரி
பாத்திமா
--
*more articles click*
www.sahabudeen.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக