லேபிள்கள்

சனி, 17 ஆகஸ்ட், 2013

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவிகளைப் பெற விண்ணப்பிப்பது எப்படி?

''மாற்றுத்திறனாளி மகன்... எதிர்காலம் எப்படி?''
''மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவிகளைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? யாரை அணுக வேண்டும்? மாற்றுத்திறனாளியான எனது மகன் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு வேறு என்ன முன்தயாரிப்புகள், திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்?''

ஆர்.ஜெ.ஜான்ராக், மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆர்வலர், தேனி:
''மாற்றுத்திறனாளிகளுக்கென அரசே வழங்கும் அடையாள அட்டை மிகவும் முக்கியமானது. மாற்றுத்திறனாளிகளுக்கென மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள், முன்னுரிமைகள், உதவித்திட்டங்களில் பயனடைய இந்த அடையாள அட்டைதான் அடிப்படை. பஸ், ரயில், விமானப் பயணங்களில் சலுகைகள், பல்வேறு ஸ்காலர்ஷிப்புகள், உடல் குறை பாட்டை எதிர்கொள்வதற்கான உதவி உபகரணங்களைப் பெறுதல், பராமரிப்பு ஊக்கத்தொகை, திருமண உதவித்தொகை, பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கும் கடன்கள் (மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்கும்கூட தொழில் துவங்குவதற்கான சிறப்பு கடனுதவித்திட்டங்கள் இருக்கின்றன), சுயஉதவிக் குழு வில் வழங்கப்படும் தனி நபருக்கான சிறப்புக்கடன் எனத் துவங்கி ஏராளமான உதவிகளைப் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை அடிப்படை அவசியம்.  

இந்த அடையாள அட்டையைப் பெற முதலில் அரசு பதிவு பெற்ற மருத்துவர் ஒருவரை அணுகி உங்கள் மகனின் குறைபாடு குறித்தும், அதன் சதவிகித அளவு குறித்துமான மருத்துவச் சான்றிதழைப் பெற வேண்டும். பின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தைப் பெற்று முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தலைமையில் மூவர் கொண்ட மருத்துவக்குழு உங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து, அடை யாள அட்டையை வழங்கும். நேரடியாக இந்த அலுவலரை அணுகினாலும் அரசு மருத்துவரை சந்தித்து மருத்துவச் சான்றிதழ் பெற உதவுவார். அரசு சார்பில் மாவட்டம் தோறும் குறிப்பிட்ட தினங்களில் இதற்கென சிறப்பு முகாம்கள் நடைபெறும். அங்கேயும் அணுகலாம்.

இது தவிர உங்கள் மகன் குறித்த விளக்கமான புரொஃபைல் ஒன்றை பராமரிப்பது அவரது எதிர்காலத்துக்கு பலவகையிலும் கைகொடுக்கும். அவருடைய பிறந்த நாள் துவங்கி, இன்று வரையிலான மருத்துவ வரலாறு, உடற்குறைபாட்டு விவரங்களை உள்ளடக்கிய குடும்ப வரலாறு, தனிநபர் தகவல்கள், கல்வி, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பு... என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இந்த புரொஃபைல் இருக்க வேண்டும். குடும்பத்தாராலும், சம்பந்தப்பட்டவராலும் இதில் சேகரிக்கப்படும் தரவுகள்... அவருடைய கல்வி, வேலைவாய்ப்பு, உடல்நலம் பேணல் போன்ற சந்தர்ப்பங்களில் கைகொடுப்பதோடு, உங்களுடைய காலத்துக்குப் பிறகும் அவர் வாழ்க்கையில் பேருதவியாக இருக்கும்.

கீழ்காணும் இணைய முகவரிகள் உங்கள் உதவிகளுக்கானவை...
1. மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்கள், உரிமைகள் குறித்த தகவல்களுக்கு http://www.socialjustice.nic.in மற்றும் http://www.rehabcouncil.nic.in/index.htm
2. ஆட்டிஸம் உள்ளிட்ட மனவளர்ச்சி பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு http://www. thenationaltrust.co.in/nt/index.php
3. மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு http://www.niepmd.tn.nic.in
4. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம் பாட்டு அமைச்சகத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மறுவாழ்வுக்கான திட்டங்களுக்கு http://www.nhfdc.nic.in
5. மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தின் சார்பில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் கையேடு மாற்றுத்திறனாளிகளுக்கான தகவல் களஞ்சியமாக இருக்கிறது. பல்வேறு திட்டங்கள், விளக்கங்கள், உதவிக்கு நாட வேண்டிய அரசு அலுவலர் முகவரிகள், தொலைபேசி எண், இமெயில் என அனைத்தும் இதில் கிடைக்கும்... http://www.tn.gov.in/rti/proactive/swnmp/handbook_ rehab_disabled.pdf

--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts