லேபிள்கள்

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

ஊர் சுற்றலாம் வாங்க

மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும், பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்டிருந்த கீழ் நடுத்தட்டு 
குடும்பங்களை, தாரளமயமாக்கமும், வி.பி.சிங்கும், கடின உழைப்பும், படிப்பும் கடந்த இருபதாண்டுகளில், பொருளாதார ரீதியாக மேலான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. அறுபது கிலோமீட்டர் தள்ளி இருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு செல்வதே ஒரு சுற்றுலாப்பயணத்தைப்போல அனுபவத்த அன்றைய சிறார்கள் பலர், இன்று தேவைக்கு மேலே கொஞ்சம் சேமிக்கும் அளவிற்கும் வசதியாகவே உள்ளனர். கார், வீடு, மனைவி குழந்தைகள் என இன்றைய சமுதாயம் எதிர்பார்க்கும் கூறுகள் அனைத்தும் கிடைத்தபின்னர், நாம் யோசிக்க 
வேண்டியது சுற்றுலா. கையைக் கடிக்காத சுற்றுலாக்கள். இந்தியக் குடியரசில் இருக்கும் பலநகரங்களைச் சுற்றினாலே பாதி வாழ்க்கை கழிந்துவிடும் என்றாலும், நிறைய மக்களுக்கு
 
வெளிநாட்டு சுற்றுலா மேல் ஓர் ஈர்ப்பு இருக்கும். இன்றைக்கு ரேஷன் அட்டைகளைபோல ஏறத்தாழ அனைவரும் பாஸ்போர்டுகளை வாங்கி வைத்துக் கொள்வது சாதரணமாகிவிட்டது.
 

மக்களுக்கு வெளிநாட்டு பயணம் என்றால் , விசா எடுக்க வேண்டுமே, நாளாகுமே, சுற்றுலா முகவர்கள் நம்பிக்கையானவர்களா, நிறைய செலவு ஆகுமே என ஏகப்பட்ட கேள்விகளினால்
 
முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவார்கள். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 50க்கும் அதிகமான நாடுகள் விசா இன்றியோ அல்லது வந்து சேரும்பொழுது உடனடியாக விசா வாங்கிக்கொள்ளும் வசதிகளை செய்து கொடுக்கின்றன. இந்தக் கட்டுரையில் , சுற்றுலாவிற்கு ஏற்புடைய சில நாடுகளையும் அவற்றிற்கான விசா எளிமைகளையும் பார்க்கலாம்.
 

கிட்டத்தட்ட இந்தியாவின் இன்னொரு மாநிலம் போல இருக்கும் நேபாளம் நாட்டிற்கு விசா இன்றி பயணப்படலாம். எந்த நாட்டைப்பற்றி விபரங்கள் தெரிந்திருக்கோ இல்லையோ,
 
தாய்லாந்தின் சுற்றுலா சிறப்பு மக்களுக்கு தெரிந்திருக்கும். மலிவான செலவில், இரண்டு வார சுற்றுப்பயணத்திற்கு, பாங்காக், சியாங் மாய், சியாங் ராய், புக்கட் உள்ளிட்ட சில விமான
 

நிலையங்களில், வந்தவுடன் விசா எடுத்துக்கொள்ளும் நடைமுறை இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இருக்கின்றது. மடகாஸ்கருக்கு மேலெ, இருக்கும் தீவுக்கூட்டமான சீஷல்ஸ் நாட்டிற்கு ஒரு மாதம் அளவிற்கு வெறும் பாஸ்போர்ட்டுடன், திரும்ப வரும் பயணச்சீட்டு, தங்குமிடம், கொஞ்சம் பணம் ஆகியனவற்றுடன் பயணப்படலாம். மொரீசியஸ் நாட்டிற்கும் இதேவகையில் இரண்டு வாரங்களுக்குப் பயணப்படலாம்.
 

எட்டும் தூரத்தில் இருக்கும் மாலத்தீவுகளுக்கு, அங்கு போனவுடன் 30 நாட்களுக்கு விசா எடுத்துக்கொள்ளும் நடைமுறை இருக்கின்றது.
 

ஐரோப்பாவிற்கு ஷென்கென் விசாவில் வருபவர்கள் (மாணவர்கள், குறுகிய கால வேலைக்காக வருபவர்கள்) ஷென்கென் விசாவை வைத்துக்கொண்டு, ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன், ஸ்லோவாக்கியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்லொவேனியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குப் பயணப்படலாம். சென்கென் உடன்படிக்கையின்படி, மேற்கண்ட எந்த நாட்டிற்கு நீங்கள் பயணப்பட்டாலும், சென்கென் விசாவைப் பெறுவீர்கள், அதை வைத்துக்கொண்டு முடிந்தவரை ஓர் ஐரோப்பியப் பயணம் செய்துவிடலாம்.
 

ரோம் நகரத்திற்கு எந்த வகை சிறப்பு இருக்கின்றதோ, அதற்கு குறையாத மகத்துவம் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திற்கும் உண்டு. சென்கென் விசா அல்லது பிரிட்டன் அல்லது
 
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்திய பாஸ்போர்ட் குடிமக்கள், துருக்கியில் எந்த விமான நிலையத்திலும் விசா வாங்கிக்கொண்டு, 30 நாட்களுக்கு ஊர் சுற்றிப்பார்க்கலாம். அல்பேனியா, அண்டோரா, மாண்டிநிக்ரோ நாடுகளுக்கும் சென்கென் விசாவுடன் செல்லலாம்.

நெடுநெடுவென வளர்ந்திருக்கும் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள், வீசும் பவுன்ஸர்களை கிரிக்கெட் ஆட்டத்தில் நேரிடையாக பார்க்க ஆசையா, கிளம்புங்கள் ஜமைக்காவிற்கு. வெறும் பாஸ்போர்ட்டுடன் 30 நாட்களுக்கு ஊர் சுற்றலாம்.
 

மேற்கத்திய சாயல் படியாத, சென்கென் அல்லாத முன்னாள் சோவியத் நாடுகளைப் பார்க்க ஆசையா? ஜார்ஜியா, தஜிகிஸ்தான் நாட்டிற்கு போய் சுற்றலாம். விமான நிலையத்தில் வந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம்.
 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட ஆர்மீனியா, அசார்பைசான் நாடுகளுக்கு பயணம் செய்ய ஆசைப்பட்டாலும் நடைமுறைகள் எளிதுதான். விமானநிலையத்திலேயே விசாவைப் பெற்றுக்கொள்ளலாம்.
 

எத்தனை சுற்றினாலும் தென்னமெரிக்க காற்றை சுவாசிக்கவில்லை என்றால் வாழ்க்கை முழுமையடையாது. பொலிவியா நாட்டிற்கு போனதும் விசா வாங்கிக்கொள்ளலாம்.
 

சிங்கப்பூர் ஏறத்தாழ மேற்கத்திய மெட்ராஸ், ஒரு காலத்தில் அதற்கு இணையான நகர நாடான, ஹாங்காங்கிற்கு செல்ல , விசா எதுவும் தேவையில்லை. விசா இன்றி பாஸ்போர்ட்டுடன் இரண்டு வாரங்கள் ஊர்சுற்றலாம்.
 

எகிப்தில் தெற்கு சினாய் மாநிலத்திற்கு உட்பட்ட சுற்றுலா மையங்களில் தங்கி கண்டுகளிக்க இரண்டு வாரங்கள் அனுமதிக்கப்படுகிறது.
 

தொலைந்த வரலாற்று அடையாளங்களின் தொடர்ச்சியைக் காணவிரும்புபவரா நீங்கள், இருக்கவே இருக்கிறது கம்போடியா , இந்தோனேசியா. இரண்டு நாடுகளுக்கும் 30 நாட்கள் விசா வந்தவுடன் வழங்கப்படும் நடைமுறை உள்ளது.
 

மேற்சொன்ன முக்கியமான நாடுகளைத் தவிர, குட்டி குட்டித் தீவு நாடுகள் வெறும் பாஸ்போர்ட்டுடனோ அல்லது வந்தவுடன் விசா தரும் முறையின் கீழோ இந்தியக் குடிமக்களை ஊர்சுற்ற அனுமதிக்கின்றன. செயிண்ட் கிட்ஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், பிஜித் தீவுகள் ஆகியன குறிப்பிடத்தக்கன.
 

மேற்சொன்ன விபரங்கள் மாறிவரும் அரசியல் சூழல் காரணமாக மாற்றப்படலாம். இருந்தபோதிலும், உடனுக்குடன் தகவல்களைப் பெற கீழ்கண்ட தளத்தை அடிக்கடி பார்வையிடலாம். இந்தத் தளம்
 

http://www.iatatravelcentre.com/home.htm
 IATA என்ற பன்னாட்டு வான்வழிப்போக்குவரத்து அமைப்பினால் நடத்தப்படும் தகவல் இணையத்தளம். இவர்கள் தான் வான்வழி போக்குவரத்து விதிமுறைகளை, ஒருங்கிணைப்பவர்கள். 

தங்குமிடங்களை முன்பதிவு செய்ய இந்தத் தளத்தை மக்கள் பார்வையிடலாம்http://www.booking.com/

செலவுகளை மிச்சம் செய்யும் விரும்பும் தனியான சுற்றுலாப் பயணிகள்,http://www.couchsurfing.org/
 இந்தத் தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் சிறப்பம்சம் என்னவெனில், இந்தத் தளத்தின் உறுப்பினர்கள் , தங்களின் வீடுகளின் ஓர் அறையையோ அல்லது, ஹாலின் ஓரத்தில் சிறுபடுக்கையையோ ஏற்பாடு செய்து தருவார்கள். பணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. நம்பகத்தன்மையை அவர்களின் கணக்குகளில் இருக்கும் பின்னூட்டங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். 

திரைகடல் ஓடியும் திரவியம் தேடியவன் தமிழன், சேமித்தல் நலமே... சேமித்தலை தன் வாழ்நாளில் சுற்றுலாவிற்கும் பயணங்களுக்கும் பயனபடுத்தும்பொழுது, அதன் வாயிலான கற்றல்கள் சேமிக்கும் பணத்தின் மதிப்பைக் காட்டிலும் அதிகம். உங்களின் எதிர்கால பயணத்திற்கு வாழ்த்துகள்.

--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts