லேபிள்கள்

வெள்ளி, 5 அக்டோபர், 2012

காலைக்கடனை ஒரு போதும் தள்ளிப் போடாதீர்கள்!


மனிதனுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, உறக்கம் எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி `காலைக்கடனை' ஒழுங்காக முடிப்பதும் ரொம்ப ரொம்ப முக்கியம். ஒவ்வொரு வேளை சாப்பிடும் உணவும் முழுவதுமாக ஜீரணமாகி, மீதமுள்ள உபயோகமில்லாத கழிவுப் பொருள்கள், மறுநாள் காலையில் உடலை விட்டு வெளியே வந்தாக வேண்டும். உயிருள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இது இயற்கை. 

காலையில் உடலை விட்டு, கழிவுப் பொருள் `மலம்' என்ற பெயரில் ஆசனவாய் வழியாக வெளியேறுவதைத்தான் `காலைக்கடன்' என்று நாம் சொல்வதுண்டு. இந்த செயலை, பலபேர், பல விதமாக அழைப்பதுண்டு. எந்த நாட்டில், எப்படி அழைத்தாலும், செயல் ஒன்றுதான். இதையே டாய்லெட், டூபாத்ரூம் என்றும் நாசூக்காகச் சொல்வதுண்டு. டூ பாத்ரூம் ஒழுங்காகப் போகவில்லையென்றால், வயிற்றுக்கும், உடலுக்கும் பிரச்சினை ஏற்பட ஆரம்பித்து விடும்.
 

காலையில் சரியான நேரத்துக்கு சூரியன் தினமும் உதிப்பதைப்போல் காலைக் கடனும், காலையில் எழுந்த சில நிமிடங்களில் தினமும் ஒழுங்காகப் போயாக வேண்டும் சிலபேருக்கு காலைக்கடன், ஒவ்வொரு நாளும், அலாரம் அடிப்பதுபோல், மிகச்சரியாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து விடும். இது ரொம்ப ஆரோக்கியமான உடம்பு என்று அர்த்தம். அந்த நபர் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கிறார் என்றும் அர்த்தம்.
 

நேரம் தவறிக் காலைக்கடனை முடிப்பது, நினைத்த நேரங்களில் காலைக்கடனை முடிப்பது, சில நாட்கள் காலைக்கடனையே முடிக்காமல் விட்டு விடுவது- இவையெல்லாம் ஜீரண விஷயங்கள் சரியாக நடக்கவில்லை என்பதைக் காட்டும் அறிகுறிகள் ஆகும். குறிப்பிட்ட நேரத்துக்கு காலைக்கடன் வரவில்லை என்றால், அதற்காக `டீ குடிக்கிறேன், காபி குடிக்கிறேன், வெந்நீர் குடிக்கிறேன், தண்ணீர் குடிக்கிறேன், சிகரெட் குடிக்கிறேன்' என்று பலபேர் பலவிதமான விஷயங்களைக் கடைப்பிடிப்பதை நாம், நம் வீட்டிலும், வெளியிலும் நிறையவே பார்த்திருப்போம்.
 

காலைக்கடனை தூண்டுவதற்காக செய்யப்படும் விஷயங்கள்தான் இவை யாவும். என்றாலும் இவையெல்லாமே நமக்கு நாமே செய்து கொள்ளும் ஏமாற்று விஷயங்கள் தான். இயற்கைக்கு மாறாக, செயற்கையாக நாம் திணிக்கும் விஷயங்கள். காலைக்கடனை, குறிப்பிட்ட நேரத்துக்கு, தினமும், ஒழுங்காக, சரியாக முடித்தாலே, அதனால் உடலில் ஏற்படும் உற்சாகமும், சந்தோஷமும் தனி. டூ பாத்ரூம் போகாமல் நிறைய பேர், டூ பாத்ரூம் போக முடியாமல் நிறைய பேர்- இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்.
 

மொத்த ஜனத்தொகையில் ஐம்பது சதவீதத்துக்கும் மேலே, இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, வெளியில் காட்டிக் கொள்வதில்லை. ஒழுங்காக காலைக்கடன் கழிக்காமல், வயிறு சுத்தமாக காலியாகாமல், வயிற்றில் ஏற்படும் ப்ரஷரை, வீட்டிலுள்ளவர்களிடமும், ஆபீஸில், கூட வேலை பார்ப்பவர்களிடமும் கோபத்தைக் காட்டுபவர்கள் நிறைய பேர்.
 

எனக்கு ரொம்ப வேண்டியவர் ஒருவர், வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் டிரெயினில் பயணம் செய்து கொண்டிருந்தாலும் சரி, காலைப்பொழுது வந்து விட்டாலே, படுக்கையிலிருந்து எழுந்த அடுத்த ஐந்தாவது நிமிடம், டாய்லெட்டில் இருப்பார். வயிறை சுத்தமாக காலிபண்ணி விட்டுத்தான் வெளியே வருவார். அந்த நேரத்தில் டாய்லெட்டில், வேறு யாராவது போய் புகுந்து கொண்டாலோ, டாய்லெட் ப்ரீயாக இல்லையென்றாலோ, அவருக்கு பயங்கரக் கோபம் வந்து விடும். மிகவும் டென்ஷனாகி விடுவார்.
 

இவரைப் போல், காலையில் எழுந்தவுடன் எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமல், இயற்கையான முறையில் டாய்லெட் போகும் பழக்கத்தை, எல்லோரும் உண்டாக்க வேண்டும். அதற்கு போதுமான தண்ணீர், போதுமான நார்ச்சத்து உள்ள உணவு, வேளாவேளைக்கு ஒழுங்காகச் சாப்பிடுதல் முதலியவை உபயோகமாக இருக்கும். வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும் கூட, சின்ன வயதிலிருந்தே, இந்தப் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உடல் ஆரோக்கியமே, முக்கியமாக இதை வைத்துத்தான்.

டூ பாத்ரூம் போவதென்பது, ஆளைப்பொறுத்து, உடல் எடையைப் பொறுத்து, சாப்பிடும் உணவைப் பொறுத்து வேறுபடும். ஒரு மனிதன், ஒரு நாளைக்கு ஒருமுறை, கண்டிப்பாக டாய்லெட் போய் வரவேண்டும். ஒரு சராசரி மனிதன், ஒரு நாளைக்கு மூன்று முறை டாய்லெட் போய் வருவதென்பது சரியே. இதில் தப்பில்லை. அவன் சாப்பிடும் உணவை பொறுத்துத்தான் அவனது டாய்லெட் பழக்கமும் இருக்கும். அவன் சாப்பிட்ட உணவு, கழிவாக வெளியேற, சுமார் இருபது மணி நேரம் எடுத்துக் கொள்கிறது என்று ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன்.
 

உதாரணத்திற்கு சாப்பிடும் உணவு, எப்போது வெளியே வருகிறது, என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதற்கு ஒரு வழி இருக்கிறது. சிவப்பு நிறத்திலுள்ள பீட்ரூட் காய்கறியை நிறைய சாப்பிட்டால், திடக்கழிவும் (மலம்) சிவப்பு நிறத்தில் வெளியேறும். இன்று மதியம் சாப்பிட்ட பீட்ரூட் காய்கறியின் சிவப்பு நிறம், நாளை எந்த நேரத்து மலத்தில், சிவப்பு நிறத்தில் வெளியே வருகிறது என்பதை வைத்து, பீட்ரூட் காய்கறி ஜீரணமாகி, மீதியுள்ள சக்கைப்பொருள், கழிவாக வெளியே வர, எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதை சரியாகக் கண்டுபிடித்து விடலாம்.
 

நீங்கள் தண்ணீர் அதிகமாகக் குடிக்கவில்லை என்றாலோ, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை, அதிகமாக சாப்பிடவில்லை என்றாலோ, ஜீரணம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சாப்பிட்ட உணவு, கழிவுப்பொருளாக கடைசியில் மாறிய பிறகு, உடலை விட்டு வெளியே வந்து விட வேண்டும். கழிவுப்பொருளாக மாறி, பெருங்குடலின் கடைசிப் பாகத்திற்கு வந்த பிறகு, வெளியே வராமல், அந்த இடத்திலேயே இருப்பதும் நல்லதல்ல. குடலுக்குள்ளேயே சுற்றிக் கொண்டு இருப்பதும் நல்லதல்ல.
 

கழிவுப்பொருளாக மாறிய பிறகு, அது கெட்டுப் போன ஒரு பொருள். அது உடலுக்குள் நீண்ட நேரம் இருக்கக்கூடாது. எனவே வயிற்றுக்குள்ளேயே வைத்துக்கொண்டு இருப்பதும் நல்லதல்ல. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, டூ பாத்ரூம் போகாமல் இருப்பதும் நல்லதல்ல. ஒரு நாளைக்கு நான்கைந்து முறை போவதும் நல்லதல்ல. இந்த இரண்டு பேருமே உங்கள் குடும்ப டாக்டரைப் பார்ப்பது நல்லது. பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு சுமார் ஐந்து முறை டாய்லெட் போகும்.
 

வாரத்துக்கு ஒருமுறை டாய்லெட் போகும் குழந்தைகளும் உண்டு. எப்படியிருந்தாலும், ஒரு நாளைக்கு ஒருமுறை, அல்லது இரண்டு நாளைக்கு ஒருமுறை, குழந்தைகள் டாய்லெட் கண்டிப்பாக போகிறார்களா என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். ஒரு சராசரி மனிதன், ஒரு நாளைக்கு சுமார் நூறு கிராமிலிருந்து இருநூறு கிராம் வரை `மலம்' வெளியேற்றுகிறான். இந்த அளவு கூட, அவரவரின் உடம்பைப் பொறுத்தும், சாப்பாட்டைப் பொறுத்தும் வேறுபடும்.
 

அதிக நார்ச்சத்து உள்ள உணவைச் சாப்பிட்டால், அதிக அளவு மலம் உண்டாகும். அதிக கொழுப்புள்ள உணவைச் சாப்பிட்டால், குறைவான அளவு மலம் உண்டாகும். சுமார் நாலு டன் எடையும் சுமார் பத்தடி உயரமுள்ள, பூமியிலேயே மிகப்பெரிய விலங்காகிய யானை, ஒரு நாளைக்கு சுமார் 300 பவுண்ட்டிலிருந்து சுமார் 400 பவுண்ட் எடை அளவுக்கு உணவு சாப்பிடும். ஒரு ஆப்பிரிக்க யானை, ஒரு நாளைக்கு சுமார் 300 பவுண்ட் எடையுள்ள சாணத்தை (கழிவுப் பொருள்) வெளியேற்றும். (ஒரு பவுண்ட் என்பது 454 கிராம் ஆகும். கிட்டத்தட்ட அரை கிலோ)

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

உங்ளது ப்ளாக்கை படிக்க படிக்க பல விசயங்களை தெரிந்து கொண்டேன்.பல விதமான படப்பை வெளியிடுகிரீர்கள். நன்றீ

sahabudeen சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வரவும்

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts