லேபிள்கள்

புதன், 17 அக்டோபர், 2012

நம்ம டிரைவர் நல்ல ஆளா?


கைகொடுக்கும் யோசனைகள்
பல லட்ச ரூபாய் கொடுத்து, பார்த்து பார்த்து நமக்குப் பிடித்த காரை வாங்குகிறோம். சந்தோஷம்... சரி, தகுதியான டிரைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

டிரைவராக நியமிக்கப்படும் நபர் தவறான ஆசாமியாக இருந்து விட்டால் நினைத்துப் பார்க்க முடியாத விபரீதங்கள் எல்லாம்கூட நடந்துவிட வாய்ப்பு உண்டு. எனவே, டிரைவரைத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

டிரைவர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? ஒரு சாதாரண டிரைவராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, இன்றைக்கு பல நூறு டிரைவர்கள் வேலை செய்யும் ஒரு டிராவல்ஸ் கம்பெனிக்கு அதிபராக இருக்கும் பாலா டிராவல்ஸ்
  தரும் அனுபவப் பாடம் இது...

‘‘டிரைவராக வேலை கேட்டு வருபவர், இதற்கு முன்பு எங்கு வேலை செய்தார்? வேலை செய்த இடத்திலிருந்து ஏன் வெளியேறினார், என்று விசாரிக்க வேண்டும். அவர் வேலை செய்த இடங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் (முகவரி, தொலைபேசி எண்கள் உட்பட) வாங்கிக்கொண்டு இரண்டு நாள் கழித்து வரச் சொல்ல வேண்டும். அதற்குள், அவர் கொடுத்த முகவரிக்கு போன் செய்து ஆள் யார்? எப்படி? ஏன் வேலையை விட்டு நின்றார் என்பதையெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம். தகவல்கள் திருப்தி அளித்தால் அவரை வேலைக்கு வரச் சொல்லலாம்.

ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களையும், சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. நாளைக்கு ஏதேனும் பிரச்னை என்றால் அடையாளம் சொல்லவும், முகவரியைத் தெரிந்து கொள்ளவும் இந்த ஆதாரங்கள் பயன்படும்.

டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறதா? ஒரிஜினல்தானா என்பதைக் கட்டாயம் கவனிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால், காவல்துறையில் நோ அப்ஜெக்ஷன் சான்றிதழ்பெற்று வரச் சொல்லலாம். ஆனால், அது டிரைவரின் தன்மானத்தைச் சோதிப்பதாக இருக்கக் கூடாது.

குறளகம் எங்கே இருக்கிறது? எழிலகம் எங்கே இருக்கிறது? விழுப்புரத்துக்கு எப்படிப் போவது? பெல்ஸ் ரோடு செல்ல வழி எது? ஊரில் எங்கெங்கே யு&டர்ன் இருக்கிறது என்பன போன்ற விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்கிறதா என்பதைக் கேள்விகள் கேட்டு சோதித்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், டிரைவரை சில கிமீ தூரம் காரை ஓட்டச் சொல்லிப் பார்ப்பது நல்லது. நெருக்கடி நிறைந்த சாலைகளில் எப்படி ஓட்டுகிறார்? எதிரே வருபவர்களை எப்படிச் சமாளிக்கிறார்? டிராஃபிக் விதிகளைச் சரியாகக் கடைபிடிக்கிறாரா? என்பதையெல்லாம் கவனித்து டிரைவரின் திறமையைக் கணக்கிட அது வசதியாக இருக்கும்.

டிரைவருக்கு ஓரளவு கார் மெக்கானிசம் தெரிந்திருந்தால் நல்லது. ஆனால், இன்றைய நவீன யுக வண்டிகளில் ஏற்படும் ரிப்பேர்களை டிரைவர்களால் சரி செய்ய முடியாது. சர்வீஸ் சென்டருக்குத்தான் போன் செய்ய வேண்டும். அதனால், குறைந்த பட்சம் கார் சக்கரத்தைக் கழற்றி ஸ்டெப்னியை மாற்றத் தெரிந்திருந்தால் போதுமானது.

டிரைவர் நாகரிகம் தெரிந்தவரா? நேர்மையானவரா? ஒழுக்கமாக நடந்துகொள்வாரா என்பதையெல்லாம் பார்த்த உடனே தெரிந்துகொள்ள முடியாது. பழகித்தான் தெரிந்துகொள்ள முடியும்.

டிரைவரின் நேர்மையைச் சோதிக்க, அவர் அறியாதபடி சில சோதனைகளைச் செய்யலாம். காரில் சில ரூபாய் தாள்களை தெரியாததுபோல் விட்டுச் சென்றுவிட்டு, அதை எடுத்துத் திருப்பிக் கொடுக்கிறாரா? இல்லை, அவரே வைத்துக்கொள்கிறாரா? என்று கவனிக்க வேண்டும். ஆயினும் அவரும் மனிதர்தான், அவருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை மனதில் வைத்துக் கொண்டு அவரைக் காயப்படுத்தாமல் இந்தத் தேர்வுகளை நடத்த வேண்டும்.

உங்களின் அனைத்து தேர்வுகளிலும் அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்றால், அதன் பிறகு அவரைச் சந்தேகப்படக் கூடாது...இதுதான் முக்கியமான பாடம்!’’
 

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts