லேபிள்கள்

புதன், 7 நவம்பர், 2018

இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்


ரமழான் காலங்களில் நாம் இரவுத் தொழுகையில் அதிக அக்கறை செலுத்துகின்றோம். ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே! ஆனால், கியாமுல் லைல் எனும் இரவுத் தொழுகை ரமழானுக்கு மட்டும் உரியதன்று. அது பொதுவானதொரு இபாதத்தாகும். ஆன்மீகப் பக்குவத்தைப் பலப்படுத்தும் முக்கிய இந்த இபாதத்தை ரமழானுடன் நிறுத்திக் கொள்வதால் நாம் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது.
01. ரஹ்மானின் அடியார்கள்:
ரஹ்மானின் அடியார்கள் எனும் சிறப்புத் தகுதியை இதனால் இழக்க நேரிடுகின்றது.
"அர்ரஹ்மானின் அடியார்கள்தான் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால், 'ஸலாம்' எனக் கூறுவார்கள்."
"மேலும், அவர்கள் தமது இரட்சகனுக்கு சுஜூது செய்தவர்களாகவும், நின்றவர்களா கவும் இரவைக் கழிப்பார்கள்."
(25:63-64)
02. பயபக்தியாளர்கள் எனும் பட்டம் பறிபோகும்:
இரவுத் தொழுகையை விடுவதால் முத்தகீன்கள் பட்டியலில் இடம் கிடைக்காமல் போகலாம்.
"நிச்சயமாக பயபக்தியாளர்கள் தமது இரட்சகன் தமக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டவர்களாக, சுவனச் சோலைகளிலும் நீரூற்றுக்களிலும் இருப்பார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்பவர்களாக இருந்தனர்."
"இவர்கள் இரவில் குறைவாகவே தூங்குபவர்களாக இருந்தனர்."
"மேலும் இவர்கள், இரவின் இறுதி வேளைகளில் பாவமன்னிப்புக் கோருவார்கள்."
(51:15-18)
எனவே, முத்தகீன்கள் பட்டியலில் இடம் பிடிக்க இந்த இபாதத்தில் தொடர்ந்தும் ஈடுபட வேண்டும்.
03. சிந்தனையாளர்கள் பட்டியலில் இடமில்லை:
இரவுத் தொழுகையில் ஈடுபடுபவர்களை இந்த வசனம் உயர்த்திப் பேசுகின்றது. அவர்களைச் சிந்தனையாளர்கள் என்று கூறுகின்றது. இரவுத் தொழுகையில் ஈடுபடாத போது இதை இழக்க நேரிடுகின்றது.
04. உயர்ந்த அந்தஸ்து:
இரவுத் தொழுகையில் ஈடுபடுபவர்களை அல் குர்ஆன் தனித்துவச் சிறப்புடன் நோக்குகின்றது.
"அவர்கள் (அனைவரும்) ஒரே சமமான வர்கள் அல்லர். வேதத்தையுடையோரில் (சத்தியத்தில்) நிலைத்திருக்கும் கூட்டத் தினரும் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை இரவு வேளைகளில் ஓதி, சிரம்பணிகின்றனர்."
"அவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கின்றனர். மேலும், நன்மையை ஏவி, தீமையை விட்டும் தடுத்து, நல்ல காரியங்கள் பூவதிலும் விரைகின்றனர். அவர்கள் நல்லவர்களில் உள்ளவர்களாவர்."
(3:113-114)
இரவுத் தொழுகையில் ஈடுபடுபவர்களை இந்த வசனம் தனித்துவச் சிறப்புடன் நோக்குகின்றது. இந்தப் பாக்கியத்தை இரவுத் தொழுகையை விடுவதால் இழக்க நேரிடும்.
05. ஏற்கப்படும் பிரார்த்தனைகள்:
இரவுத் தொழுகை எமது பிரார்த்தனை கள் அங்கீகரிக்கப்பட ஒரு காரணமாக உள்ளது. அந்த அழகிய வாய்ப்பை இழக்க நேரிடுகின்றது.
"அவர் (தனது) தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருக்கும்போது, வானவர்கள் அவரைச் சப்தமிட்டு அழைத்து '(ஈஸா எனும்) அல்லாஹ்விடமிருந்துள்ள ஒரு வார்த்தையை உண்மைப்படுத்தக் கூடியவராகவும், கண்ணியத்திற்குரியவராகவும், ஒழுக்க நெறியுடையவராகவும் நல்லவர்களிலிருந்து ஒரு நபியாகவும் திகழக் கூடிய யஹ்யா என்பவரைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உமக்கு நன்மாராயம் கூறுகின்றான்" என்றனர்.
(3:39)
06. நபிக்குக் கிடைத்த தனி அந்தஸ்து:
நபி() அவர்களுக்கு 'மகாமு மஹ்மூதா' என்ற தனியான சிறப்பம்சம் உள்ளது. அதை அடைய இரவுத் தொழுகையைப் பேணுமர்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
"உமக்கு உபரியாக இருக்க, இரவின் ஒரு பகுதியில் தொழுகைக்காக எழுந்து நிற்பீராக! உமது இரட்சகன் (புகழப்பட்ட இடமான) 'மகாமு மஹ்மூத்"தில் உம்மை எழுப்புவான்."
(17:79)
இந்த இரவுத் தொழுகை எமக்கும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தரத் தக்கதாகும்.
07. அல்லாஹ்வின் ரிழா:
"(நபியே!) அவர்கள் கூறுபவை குறித்து நீர் பொறுமையாக இருப்பீராக! சூரியன் உதிப்பதற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் உமது இரட்சகனின் புகழைக் கொண்டு துதிப்பீராக. மேலும், இரவு வேளைகளிலும், பகலின் ஓரங்களிலும் (அவனை) துதிப்பீராக! (இதன் நன்மைகளால்) நீர் திருப்தியடைவீர்."
(20:130)
இரவுத் தொழுகை இறை திருப்தியைப் பெற்றுத் தரும். எதிரிகளின் வீணான விமர்சனங்களின் போது இதயத்திற்கு வலுவையும் இதத்தையும் தரும் என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றன.
8. அல்லாஹ்வின் கண்காணிப்பு:
அல்லாஹ்வின் கண்காணிப்பில்தான் அனைவரும் உள்ளார்கள். ஆனால், தொழுபவர்கள் அல்லாஹ்வின் விசேட கண்காணிப்பில் உள்ளனர் என்பதைப் பின்வரும் வசனங்கள் உணர்த்துகின்றன.
"இன்னும், யாவற்றையும் மிகைத்தவன், நிகரற்ற அன்புடையவன் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக!"
"நீர் நின்று வணங்கும்போதும், நீர் ஸஜ்தா செய்பவர்களுடன் இணைந்து இயங்கும் போதும் அவன் உம்மைப் பார்க்கின்றான்."
(26:217-218)
09. பொறுமையும் அல்லாஹ்வின் பார்வையும்:
"(நபியே!) உமது இரட்சகனின் கட்ட ளைக்காக, பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக நீர் எமது கண்களுக்கு முன் இருக்கிறீர். மேலும், நீர் எழுந்திருக்கும் போது உமது இரட்சகனின் புகழைக் கொண்டு துதிப்பீராக!"
"மேலும், இரவிலும் நட்சத்திரங்கள் மறையும் நேரத்திலும் நீர் அவனைத் துதிப்பீராக!"
(52:48-49)
இரவில் தொழுபவர்கள் அல்லாஹ்வின் கண்காணிப்பில் உள்ளனர். இந்தப் பாக்கியத்தை அடைய இரவு வணக்கம் துணை நிற்கும்.
10. கண் குளிச்சியான கூலி:
இரவுத் தொழுகையில் ஈடுபடுபவர் களுக்கு மகத்தான கூலியைத் தயார் செய்திருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். அந்தப் பாக்கியங்களை இழக்கக் கூடாது என்றால் இரவுத் தொழுகையில் நாம் நீடித்து நிலைத்திருக்க வேண்டும்.
"அவர்களது விலாப்புறங்கள் படுக்கை களை விட்டும் விலகியிருக்க, அவர்கள் தமது இரட்சகனை அச்சத்துடனும், ஆதரவுடனும் பிரார்த்திப்பார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவும் செய்வார்கள்."
"எனவே, அவர்கள் செய்து கொண்டி ருந்தவற்றிற்குக் கூலியாக அவர்களுக்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சியை எந்த ஆன்மாவும் அறிந்து கொள்ளாது."
(32:16-17)
11. பாவ மன்னிப்பு:
"(நபியே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு கூட்டத்தினரும் இரவில் மூன்றில் இரு பகுதியை விடக் குறைவாகவும், அதன் அரைப்பகுதியிலும் இன்னும், அதன் மூன்றில் ஒரு பகுதியிலும் (தொழுகைக்காக) எழுந்து நிற்கின்றீர்கள் என்பதை நிச்சயமாக உமது இரட்சகன் நன்கறிவான். அல்லாஹ் தான் இரவையும் பகலையும் நிர்ணயம் செய்கின்றான். நீங்கள் அதை சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதை அவன் நன்கறிந்து, உங்களை அவன் மன்னித்தான். ஆகவே, குர்ஆனிலிருந்து முடியுமானதை நீங்கள் ஓதுங்கள். நோயாளிகளும், இன்னும் அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணிக்கும் வேறு சிலரும், மேலும், அல்லாஹ்வின் பாதையில் போரிடும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பர் என்பதை அவன் நன்கறிந்துள்ளான். எனவே, அதிலிருந்து முடியுமானதை நீங்கள் ஓதிக்கொள்ளுங்கள். இன்னும், நீங்கள் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனை வழங்குங்கள். உங்களுக்காக நீங்கள் எந்த நன்மையை முற்படுத்தினாலும் அதை அல்லாஹ்விடம் மிகச் சிறந்ததாகவும், மகத்தான கூலியுடையதாகவும் பெற்றுக் கொள்வீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன்."
(73:20)
இரவுத் தொழுகையில் ஈடுபடுபவர்களுக்குப் பாவ மன்னிப்பு இருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது.
எனவே, மேற்குறிப்பிட்ட பாக்கியங்களை நாம் இழந்துவிடக் கூடாது என்றால் கியாமுல் லைல் ரமழானுக்கு மட்டும் உரியதாக முத்திரை குத்தி ஒதுக்கிவிடாமல் தொடர்ந்தும் அதை எமது வாழ்நாளில் தொடர வேண்டும்.
இந்தப் பாக்கியத்தைத் தொடர்ந்து அடையுமுகமாக இரவுத் தொழுகையில் நிலைத்திருக்கும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக!



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts