லேபிள்கள்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

வலியில்லாத பிரசவம்!


 மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்க முடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி.
பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
  • 1. குழந்தையின் எடை.
  • 2. கருவறையில் குழந்தையின் நிலை.
  • 3. இடுப்பு எலும்பின் தன்மைகள்.
  • 4. சுருங்கும் தன்மையின் வலிமை.
  • 5. முன் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு -
என்ற ஐந்து காரணங்களின் அடிப்படையில் வலியின் அளவு மாறுபடும். எவ்வளவு வலி இருக்கும் என்பதை முன்பே அறிந்து கூறமுடியாது. சிலர் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவில் வலியை உணர்கிறார்கள். சிலர் தியானம், மூச்சுப் பயிற்சி, வென்னீர் குளியல், மசாஜ், நர்ஸ் கவனிப்பு, நிற்பது, நடப்பது, அமர்வது போன்ற நிலைமாற்றம்.. என்று மருத்துவ முறை அல்லாத பழக்கங்கள் மூலம் வலியை குறைக்க முயல்கின்றனர். பலர், எந்த முறையையும் பின்பற்ற முடியாத அளவுக்கு வலியால் திணறுகிறார்கள்.
இப்படி சொல்லி விளங்க வைக்க முடியாத வலியை, மாயமாக மறைய வைத்து, குழந்தை பிறப்பதை அனுபவித்து மகிழ வைக்கும் ஒரு உபாயம்தான் எபிடியூரல் டெலிவரிஎன்பது! இதில் அமெரிக்காவில் பிரபலமான டாக்டர் பேக்ரே ரிடம் பேசியபோது இந்த முறை பற்றி விளக்கினார்..
எபிடியூரல் டெலிவரிஎன்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.
நன்கு பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணரால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதைப் பற்றி தெளிவாக விளக்கப்படும். ஒப்புதல் அளித்தால் மட்டுமே எபிடியூரல் கொடுக்கப்படுகிறது. 4 செ.மீ. இடைவெளியில் ஒழுங்கான பிரசவத்துக்குரிய அறிகுறிகள் தென்பட்டாலன்றி இது கொடுக்கப்படுவது இல்லை. வலியும் தொடங்கியிருக்க வேண்டும்.
எபிடியூரல் கொடுக்கும்போது, பக்க விளைவாக ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளதால், ரத்தக்குழாய் வழியாக திரவங்கள் செலுத்தப்படும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை டாக்டரின் நேரடி கண்காணிப்பு அவசியமாகிறது. குழந்தையின் இதயத் துடிப் பும் மானிட்டரில் கண்காணிக்கப்படும்.
ஒருக்களித்து படுத்தவாக்கில் அல்லது படுக்கை நுனியில் குனிந்து உட்கார்ந்த வாக்கில் தண்டுவடத்தின் மத்தியில் எபிடியூரல் பொருத்தப்படும். முதுகை ஆன்ட்டிசெப்டிக் திரவத்தால் சுத்தம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஊசியை குத்துவார் கள். ஊசி வழியே எபிடியூரல் கதீட்டர் என்கிற சன்னமான, மிருதுவான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும். ஊசியை எடுத்து விட்டு, அந்த குழாயை முதுகின் மேல் டேப் போட்டு ஒட்டி விடுவார்கள். இதன் பிறகு சோதனைக்காக மிகக்குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்டு, பக்க விளைவு ஏற்படுகிறதா என பார்க்கப்படும். பிறகு, தேவையான மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்துவார்கள்.
எபிடியூரல் பொருத்தியபின், எழுந்து நடமாட முடியாது. கால்கள் கனம் தெரியாத அளவுக்கு மரத்துப் போகும். திரும்பி படுக்கலாம். செயற்கை முறையில் சிறுநீர் வெளியேற்ற வழி செய்யப்படும். எளிதான பிரசவத்துக்கு இது மேலும் துணை புரிகிறது. எபிடியூரல் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு முறை கருவறை சுருங்கி, விரிந்து, குழந்தை இறங்கி வருவதை உணரும்போது வலியே தெரியாது!
குழந்தை பிறந்தவுடன் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். மயக்க மருந்து நிபுணரால் கதீட்டர் அகற்றப்படும். ஓரிரு மணி நேரத்தில் மருந்தின் வீரியம் குறைந்து உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறது.
ஏதாவது அவசர நிலையால் சிசேரியன் செய்ய நேர்ந்தால், இதே முறையில் மயங்கவைக்கும்போது குழந்தையை எடுப்பதை எந்த வலியும் இல்லாமல், ஆனால் சுயநினைவுடன் உணர முடியும். இதற்கான மனப் பக்குவத்தை டாக்டர் அவருக்கு முன்பே ஏற்படுத்தி விடுகிறார்.
இருந்தாலும், எபிடியூரல் பற்றி மாறுபட்ட கருத்து கொண்ட அமெரிக்கப் பெண் களும் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்கள் குறித்து மயக்க மருந்து நிபுணர் கேட்டர் பாலுடன் பேசினோம். இவர் இந்தியாவில் பிறந்து, மருத்துவம் பயின்று, 20 வருடமாக அமெரிக்காவில் பம்பரமாக சுழன்று பணிபுரிந்து வருகிறார்.
இங்கே பெரும்பாலான பெண்கள் எபிடியூரல் டெலிவரியை வரவேற்கிறார்கள். முதல் பிரசவத்தில் எபிடியூரல் பற்றி உணர்ந்தவர்கள் இரண்டாவது பிரசவத்துக்கு இயற்கை முறை பற்றி யோசிப்பதுகூட இல்லை!‘‘ என்றார் டாக்டர் பால். பக்க விளைவுகள் பற்றி கேட்டோம்.
எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதது. இதில் 2% வரை யிலேயே தலைவலி, முதுகுவலி போன்ற விளைவுகள் உண்டாகிறது. இந்தியாவில் பின் விளைவுகளை மட்டும் கணக்கிலிட்டு சிகிச்சையையே ஒதுக்கி விடும் போக்கு அதிகம். எபிடியூரல் டெலிவரியை பொருத்த வரை நன்கு பயிற்சி பெற்ற டாக்டர், மயக்க மருந்து நிபுணர் ஆகியோரைக் கொண்டு செயல் படுத்தினால் கண்டிப்பாக முழு பயனையும் அடையலாம்.‘‘
தண்டுவடத்தில் ஊசி குத்துவதால் வலி அதிகமாக இருக்குமே? இதற்கான (மயக்க) மருந்துகள் சுலபமாக கிடைக்கிறதா?
பிரசவ வலியை ஒப்பிடும்போது, முதுகில் ஊசி குத்தும் வலி பெரிதல்ல. இதற்கு பயன்படுத்தக்கூடிய மார்பின், டெமரால் போன்ற மருந்துகள் எளிதாக கிடைக்கக் கூடியவை.‘‘
எபிடியூரல் அனெஸ்தீஸியாமூலம், வலி இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்ட மிசஸ் டோனி சொன்னார்
பிரசவத்தின்போது கணவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்பதால், அதுவே தைரியமும் நம்பிக்கையும் அளிக்கிறது. எபிடியூரல் பற்றி தெளிவாக, பொறுமையாக எடுத்துக் கூறி, சிலருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை சொல்லி முழு ஒப்புதல் பெற்ற பின்பே செய்கிறார்கள். விடியோ கேசட் மூலம் விளக்குவதால் நன்கு விளங்குகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டது இனிய அனுபவம்தான்!
இந்தியாவிலும் மருத்துவ சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் எபிடியூரல் அனெஸ்தீஸியாமட்டும் ஏன் பரவலாகவில்லை என்று ஈரோடு மகப்பேறு மருத்துவர் சிறீமதி முருகேசன், மயக்க மருந்து நிபுணர் சித்ரா சௌந்தர் ராஜன் ஆகியோரிடம் கேட்டபோது
டாக்டர் சிறீமதி: எபிடியூரல் அனெஸ்தீஸியா மூலம் வலி இல்லாத பிரசவம் என்பது, நம் நாட்டில் சமீபத்தில்தான் கண்டு கொள்ளப் பட்டுள்ளது. பரவலாக நடைமுறைப்படுத்த இயலாமைக்கு காரணம், பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர்கள் போதிய அளவு இல்லாத குறைதான். பிரசவ நேரம் முழுவதும் அவர்கள் உடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஸ்டிரைல் செய்யப்பட்ட, படுசுத்தமான பிரசவ அறை, மானிட்டர், ஆபரேஷன் தியேட்டர் என்று அனைத்தும் முழுமையாக உள்ள ஒரு மருத்துவமனையில்தான் இதுபோன்ற முறைகள் சாத்யமாகும். இங்கே வலி எடுத்த பின்பு தான் எங்களிடம் வருகிறார்கள். அந்த நேரத்தில் இது தேவைப்படுவதில்லை.
டாக்டர் சித்ரா: கர்ப்பிணிகள் கடைசி நேரத்திலோ அல்லது காலங்கடந்த நிலையிலோ வரும்போது அவசரமாக தாயையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய முயற்சி மட்டுமே செய்ய முடிகிறது. தினம் 50 பிரசவ கேஸ் வருகிறது. முழுநேரப் பணியில் தகுதியான மயக்க மருந்து நிபுணர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் இருந்தால்தான் இந்த முறை இங்கே பரவலாக முடியும். அந்த அளவுக்கு வசதிகள் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் உடனே வந்துவிடாது.
நன்றி: - பவள சங்கரி குமுதம்

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts