லேபிள்கள்

புதன், 7 ஜூன், 2017

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாமா?

மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி  

-இம்தியாஸ் யூசுப் ஸலபி-
ஒருவர் திடீரென மரணித்து விட்டால் நீரில் மூழ்கி மரணித்து விட்டால் கீழே விழுந்து, விபத்தில் சிக்கி, வெட்டப்பட்டு, சுடப்பட்டு மரணித்து விட்டால் அல்லது இது போன்ற ஏதோ ஒரு விபத்தில் மரணித்தால் அந்த மரணம் சம்பந்தமாக உண்மையான நிலையை கண்டறிவதற்காக அந்த மையத்தின் உடலை அறுத்து பிரிசோதனை செய்யப்படுகிறது. இதனையே "போஸ்ட்மாட்டம்" (postmortem) பிரேதப் பரிசோதனை என கூறுவோம்.
எவருடைய மரணத்தில் சந்தேகம் எழுகின்றதோ அல்லது கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றதோ அந்த மரணத்தின் உண்மைத்தன்மையை கண்டுப்பிடிக்கவும் குற்றவாளியை கைது செய்யவும் போஸ்மாட்டம் செய்யப்படுகின்றது. இதன் நோக்கம் சடலத்தை சல்லடை போடுவதல்ல மாறாக குற்றவாளியை சட்டத்திற்கு முன் நிறுத்துவதாகும்.


யாருடைய மரணமாக இருந்தாலும் ஜாதி பேதமின்றி அரசாங்கம் இதைசெய்துதான் ஆகும். ஆனாலும், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இதை விரும்புவதில்லை.
இதற்கு இவர்கள் காட்டும் ஆதாரம் என்ன வெனில் "யுத்தம் நடை பெறும் நேரங்களில் இறந்துவிட்ட எதிரிகளின் உடல்களை சிதைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்" இதனடிப்படையில் தற்போது நடை முறையிலுள்ள பிரேதப் பரிசோனையை கூடாது என வாதிடுகின்றனர். இந்த வாதம்; தவறானதாகும்.
யுத்தம் முடிவடைந்த பின் எதிரிகள் மீதுள்ள கோபத்தின் காரணமாக பழி தீர்ப்பதற்கு இறந்துபோன உடல் உறுப்புக்களை துண்டு துண்டாக வெட்டுவது மற்றும் சிதைப்பது அன்றைய நடைமுறையில் இருந்தது. இது மனிதாபிமானமற்ற செயல். முஸ்லிம்கள் ஒருபோதும் இதை செய்யக் கூடாது என நபியவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.
யுத்தமாக இருந்தாலும் யுத்தமல்லாத ஏனைய நேரங்களாக இருந்தாலும் ஒருவரது உடல் உறுப்புக்களை சிதைப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. என்றாலும் இன்றைய காலச்சூழலில் பிரேதப் பரிசோதனை என்பது இறந்தவரின் உடல் உறுப்புக்களை வீணாக அறுத்து வெட்டி வீசுவதல்ல. இறந்தவரின் மீதுள்ள கோபத்தின் காரணமாக கீறிகிழிப்பதுமல்ல.
இது கொலையா? அல்லது மரணமா? என்பதை ஆராய்ந்து குற்றத்தை நிரூபித்து குற்றவாளியை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக செய்யப்படுகின்ற மருத்துவப் பரிசோதனையாகும். இந்த மருத்துவப் பரிசோதனைக்காக குறிப்பிட்ட உறுப்புக்கள் வெட்டி பரிசோதிக்கப்படுகிறதே தவிர மொத்த உடல் உறுப்புக்களும் யுத்தங்களில் எதிரிகள் செய்வதுபோல் வெட்டி சிதைக்கப்படுவதில்லை. எனவே, இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நன்றாகப் புரிந்துகொண்டால் பிரேதப் பரிசோதனையின் உண்மையையும் அதன் அவசியத்தையும் புரிந்து கொள்வார்கள்.
இன்னும் சில முஸ்லிம்கள், இந்த பிரேதப் பரிசோதனை மையத்திற்கு செய்கின்ற வேதனையாக இருக்கும் என்றும் கூறி தவிர்த்து விடுகிறார்கள். அல்லது மையத்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தவிடாமல் தடுப்பதற்கு சில வழிமுறைகளையும் கையாளுகின்றார்கள். இது இவர்கள் செய்கின்ற பெரும் தவறாகும்.
இதன் காரணமாக குறித்த அந்த மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய முடியாமல் போவதுடன் குற்றவாளியையும் தண்டனையிலிருந்து காப்பாற்றி விடுகின்ற ஒரு காரியமாகவும் அமைந்து விடுகிறது.
பிரேதப் பரிசோதனையை தவிர்ப்பதன் மூலமாக நாளடைவில் மொத்த சமுதாயத்தையும் பாதிப்படையச் செய்யக் கூடிய நடவடிக்கையாகக் கூட அது மாறிவிடும். அது மட்டுமன்றி குற்றவாளிக்கு சட்ட அங்கீகாரத்தை நாங்களாகவே ஏற்படுத்திக் கொடுத்தது போல் ஆகிவிடும்.
முஸ்லிம்கள் பிரேதப் பரிசோதனையை விரும்ப மாட்டார்கள் என்று எதிரிகள் தெரிந்து கொண்டால் திட்டமிட்ட முறையில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும். எதிரிகள் என்று குறிப்பிடும்போது சமூக எதிரிகளாகவும் இருக்கலாம். நண்பர்களுக்கிடையே உருவாகும் எதிரிகளாகவும் இருக்கலாம். எனவே, இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல. சமூகப் பிரச்சினை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரது உடலில் ஏற்பட்ட நோய் அல்லது காயம் காரணமாக சிலநேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. அப்போது அவரது உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோதனை செய்து மருத்துவம் செய்யப்படுகிறது. இறைவன் நாடினால் உயிர் பிழைப்பார் அல்லது மரணித்து விடுவார்.
இயற்கையாகப் பிள்ளையை பெற்றெடுக்க முடியாதபோது அறுவை சிகிச்சை (ஸீஸரின்) முறையில் குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள்.
இருதயம் ஒழுங்காக செயல்படவில்லையானால் அதனை ஒழுங்குபடுத்துவதற்காக இருதய அறுவை சிகிச்சை செய்யகிறார்கள்.
கிட்னி பழுதடைந்தால் அதனை அகற்றிவிட்டு வேறொரு கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் பொறுத்திக் கொள்கிறார்கள்.
இப்படி நூற்றுக் கணக்கான அறுவை சிகிச்சைகள் மனிதனின் நலன் கருதி செய்யப்படுகின்றன.
நிர்ப்பந்தம் கருதிதான் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறன. அப்படி செய்யும் போது உயிருள்ள மனிதனின் உடல் உறுப்புக்களை சிதைக்கிறார்கள் என்று யாரும் சொல்வதில்லை. பொலிஸில் முறைப்பாடு செய்வதில்லை. இது அவசியமான ஒன்று என்று எப்படி புரிந்து கொள்கிறார்களோ அதுபோல பிரேதப் பரிசோதனையம் அவசியமான ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும்.
மூஸா நபியின் சமூகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விடுகிறார். கொலையாளி யார் என்று தெரியவில்லை. அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் ஒருமாடு அறுக்கப்பட்டு அதன் பாகத்தினால் கொலையாளியின் மீது அடிக்கப்பட்டது. கொலையுண்டவர் உயிர் பெற்றெழுந்து தன்னை கொன்றவர் இன்னார் தான் என அடையாளம் காட்டி விட்டு மரணிக்கிறார். இச்செய்தியை குர்ஆன் மிகத் தெளிவாக விபரிக்கிறது. (பார்க்க:2:72.73.)
ஆயிரம் நிரபராதிகள் தப்பினாலும் ஒரு குற்றவாளி தப்பிவிடக் கூடாது என்பது போல் கொலையாளி தப்பிவிடக் கூடாது என்ற விடயத்தில் இஸ்லாம் காட்டும் ஆர்வத்தை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். பிரேத பரிசோதனை மூலம் குற்றம் நிரூபிக்கப்படுகிறது உண்மைத்தன்மை நிலை நாட்டப்படுகின்றது என்பது தான் சுருக்கமான செய்தி.
எனவே நிர்ப்பந்தம் காரணமாக செய்யப்படும் எந்தக் காரியத்தையும் இஸ்லாம் தடுக்கவில்லை. ஆகவே பிரேதப் பரிசோதனையும் நிர்ப்பந்தம் காரணமாகத் தான் செய்யப்படுகின்றது. அது கூடாது என்ற சொல்வது தவறான வாதமாகும்.
இதனுடன் தொடரப்பான இன்னுமொரு சந்தேகத்தை நிவர்த்தி செய்வது பொருத்தமென கருதுகின்றேன். அதாவது பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மையத்தை குளிப்பாட்டுவதா இல்லையா என்ற சந்தேகமும் பலரிடம் உண்டு.
மையத்தை குளிப்பாட்டுவது அதனது அசுத்தங்களை நீக்கி சுத்தப்படுத்துவதற்காகத்தான். ஆனால், பிரேதப் பரிசோதனைக்கு உட்பட்ட மையத்தை குளிப்பாட்டும்போது மேலும் அசுத்தங்கள் ஏற்படுவதற்கோ, இரத்தங்கள் வடிந்து ஓடுவதற்கோ இடம்பாடுண்டு. அதன் காரணமாக கபன் ஆடை கூட அசுத்தமாகி விடலாம். எனவே குளிப்பாட்டுவதற்கு பொருத்தமானதாக இல்லை எனக் கண்டால் குளிப்பாட்டுவதற்கு பதிலாக தயம்மும் செய்துவிடுவதே சிறந்த செயலாக இருக்கும்.
உயிரோடு இருக்கும்போது குளிக்க முடியாத அளவுக்கு காயம் அல்லது வேறு காரணங்கள் இருந்தால் குளிப்புக்கு பகரமாக தயம்மும் செய்யுமாறு மார்க்கம் வலியுறுத்துகிறது. அதுபோல் இறந்த உடலும் (மையத்தும்) குளிப்பாட்ட முடியாத நிலையில் இருந்தால் தயம்மும் செய்து விடுவதே சிறந்த வழிமுறையாகும்.
இதுபோல் விபத்தில் இறந்தவர்கள், உடல் சிதைந்து இறந்தவர்கள் தீயில் கருகி இறந்தவர்கள், ஆகியோர்களது உடல்கள் பிடிக்க முடியாத அளவுக்கு நசுங்கிப் போயிருக்கும்;. அப்போது குளிப்பாட்டாமலோ தயம்மும் செய்யாமலோ விட்டுவிட வேண்டியிருக்கும். சிலநேரம் அப்படியான மையத்துக்களை அரசாங்கம் சீல் குத்தி| தரும். அந்த மையத்தை யாரும் தொட்டுப்பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது மாதிரியான சூழ்நிலையில் குளிப்பாட்டாமலும் தயம்மும் செய்யாமலும் விடுவதால் குற்றமாகாது.
உங்களுக்கு நான் ஒரு கட்டளையிட்டிருந்தால் அதனை உங்களால் முடிந்தவரைச் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: புகாரி
நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக் கேற்ப நம்மால் முடியாத காரியத்தில் இவ்வாறு செய்வதால் அல்லாஹ் குற்றம் பிடிக்கமாட்டான்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 5 ஜூன், 2017

சுன்னத்தான தொழுகைகள் – 02

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
சுன்னத்தான தொழுகைகள் தொடரில் சுபஹுடைய முன் சுன்னத்து தொழுவது குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.
தொழுத பின்னர் வலப்பக்கமாக சிறிது சாய்ந்து படுத்துக் கொள்ளுதல்:
'பஜ்ருடைய அதானுக்கும் தொழுகைக்கும் இடையே நபி(ச) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். இகாமத் சொல்வதற்காக முஅத்தின் அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.'
அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி)
ஆதாரம்: புஹாரி- 626, 1160



'நபி(ச) அவர்கள் சுபஹுடைய (சுன்னத்து) இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். நான் விழித்திருந்தால் என்னோடு கதைத்துக் கொண்டிருப்பார்கள். இல்லையென்றால் (வலப்புறம்) சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.'
அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி)
ஆதாரம்: புஹாரி 1168
(இந்த ஹதீஸ்களை வைத்து முடிவெடுப்பதில் அறிஞர்கள் முரண்பட்ட பல நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.)
சுன்னத்து:
மேற்படி ஹதீஸ்களின்படி சுபஹுடைய சுன்னத்துக்குப் பின்னர் வலப்புறம் சாய்ந்து தொழுகை நேரம் வரும் வரை படுத்துக் கொள்வது சுன்னத்து என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அனஸ்(வ), அபூ ஹுரைரா(வ), அபூமூஸா அல் அஷ;அரி(வ) போன்ற நபித்தோழர்கள் இந்தக் கருத்தில் உள்ளனர்.
வாஜிப்:
இமாம் இப்னு ஹஸ்ம்(ரஹ்) அவர்கள் இவ்வாறு சிறிது படுப்பதை வாஜிப் கட்டாயம் என்று கூறுகின்றார். இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என்பதே இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) போன்றோரின் கருத்தாகும்.
மக்ரூஹ்:
சுபஹுடைய சுன்னத்தின் பின் (பள்ளியில்) படுத்துக் கொள்வது மக்ரூஹ் வெறுக்கத்தக்கது என்பது இவர்களின் கருத்தாகும். இவர்களில் இப்னு மஸ்ஊத்(வ), இப்னுல் முஸையப், நகயி, காழி இயாழ்(ரஹ்) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். நபி(ச) அவர்கள் சுபஹுடைய சுன்னத்தின் பின் பள்ளியில் படுத்துக் கொண்டதாக அறியப்படவில்லை. அவ்வாறு நபி(ச) அவர்கள் படுத்திருந்தால் பல வழிகளிலும் அது அறிவிக்கப்பட்டிருக்கும் என்பது இத்தரப்பாரின் வாதமாகும்.
இவற்றைத் தொகுத்து நோக்கும் போது பின்வரும் முடிவை எடுக்கலாம்.
சுபஹுடைய சுன்னத்தின் பின் வலப்புறமாக சாய்ந்து படுத்துக் கொள்வது பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட சுன்னா என்று கூறலாம்.
நபியவர்கள் வீட்டில் சிறிது படுத்ததாகவே வந்துள்ளது. மஸ்ஜிதில் படுத்ததாக வரவில்லை. இந்த அடிப்படையில் வீட்டில் இதை அமுல்படுத்தலாம்.
இந்த சுன்னாவைச் செய்பவர் அப்படியே தூங்கிவிடாமல் சுபஹ் தொழுகைக்கு எழக்கூடியவராக இருக்க வேண்டும். தன்னையும் மீறி தூங்கிவிடுவார் என்றிருந்தால் அவர் இதை நடைமுறைப் படுத்தலாகாது. அத்துடன், நபி(ச) அவர்கள் உறக்க விடயத்தில் எம்மை விட வித்தியாசமானவர்கள். அவர்களின் கண்கள் உறங்கினாலும் உள்ளம் உறங்காது என்பதையும் உறக்கம் அவர்களின் வுழூவை முறிக்காது என்பதையும் நபியவர்களின் வீடும், பள்ளியும் அருகருகே இருந்தன என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
சுபஹுடைய சுன்னத்தைக் 'கழா' செய்வது:
தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு தொழுகையைத் தொழ முடியாத சூழ்நிலை ஏற்படும் போது அந்தத் தொழுகையை அதற்குரிய நேரம் தாண்டி வேறு நேரத்தில் தொழுவதையே 'கழா' செய்தல் என்பார்கள். நபியவர்கள் இவ்வாறு தவறிப் போன சுன்னத்தான தொழுகைகளைக் கழா செய்துள்ளார்கள். இந்த அடிப்படையில் சுபஹுடைய முன் சுன்னத்து தவறிவிட்டால் அதைக் கழாச் செய்து கொள்ள முடியும்.
'நபி(ச) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். சூரியன் உதித்த பின்னரே அவர்கள் விழித்தார்கள். உடனே அவர்கள் நபித்தோழர்களிடம் 'இது எங்களிடம் ஷைத்தான் வந்த இடம். உங்கள் கால்நடைகளின் தலைகளைப் பிடித்துக் கொண்டு இந்த இடத்திலிருந்து வெளியேறுங்கள் என்றார்கள். பின்னர் வுழூச் செய்து சுபஹுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பின்னர் இகாமத் கூறப்பட்டது அதன் பின் சுபஹைத் தொழுதார்கள்.' (ஹதீஸின் கருத்து..)
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: முஸ்லிம்- 680-310, நஸாஈ- 623, இப்னு குஸைமா- 988
ஒருவர் பள்ளிக்கு வருகிறார். சுபஹ் தொழுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் ஜமாஅத்துடன் சேர்ந்து சுபஹைத் தொழுதுவிட்டு பின்னர் சுபஹுடைய முன் சுன்னத்தைத் தொழலாம். இதற்கு நபி(ச) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். சுபஹுடைய சுன்னத்தைத் தொழாதவர் சுபஹ் தொழுகைக்குப் பின்னர் சுபஹின் சுன்னத்தைத் தொழுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இல்லாது சுபஹுக்குப் பின்னர் சுன்னத் தொழுவது தடுக்கப்பட்டதாகும். சுபஹுக்குப் பின்னர் சூரியன் உதித்து சற்று உயரும் வரை உள்ள நேரம் தொழுவது தடுக்கப்பட்ட நேரங்களில் ஒன்றாகும் என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.
லுஹருடைய சுன்னத்து:
லுஹருடைய சுன்னத் பின்வரும் மூன்று அடிப்படைகளில் அமையலாம்.
1. முன்னர் இரண்டு ரக்அத்துகள், பின்னர் இரண்டு ரக்அத்துகள்.
'இப்னு உமர்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள் மஃரிபிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் சுபஹுக்கு முன் இரண்டு ரக்அத்கள் ஆகிய பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன். சுபஹுக்கு முன் உள்ள அந்த நேரம் நபி(ச) அவர்களிடம் யாரும் செல்ல முடியாத நேரமாகும்.'
(
புஹாரி: 1180)
2. முன்னர் நான்கு ரக்அத்துகள், பின்னர் இரண்டு ரக்அத்துகள்.
'ஆயிஷா(ரழி) அறிவித்தார். நபி(ச) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுபஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டதில்லை.'
(
புஹாரி: 1182)
'நபி(ச) அவர்கள் லுஹருக்கு முன்னர் எனது வீட்டில் நான்கு ரக்அத்துக்கள் தொழுவார்கள். பின்னர் வெளியிறங்கி மக்களுக்குத் தொழுவிப்பார்கள். பின்னர் (வீட்டில் வந்து) இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள்……'
அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி)
ஆதாரம்: முஸ்லிம்-730-105, அபூதாவூத்-1251, திர்மிதி-424, நஸாஈ-874)
03. லுஹருக்கு முன்னர் நான்கு, பின்னர் நான்கு ரக்அத்துக்கள்.
'யார் லுஹருக்கு முன்னர் நான்கு ரக்அத்துக்கள், பின்னர் நான்கு ரக்அத்துக் கள் தொழுகின்றாரோ அவரை நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக்கிவிடுவான்' என நபி(ச) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா(ரழி)
ஆதாரம்: நஸாஈ- 1814
(அல்பானி (ரஹ்) அவர்கள் இதை ஸஹீஹ் என்று குறிப்பிடுகின்றார்கள்.)
இந்த மூன்று அடிப்படைகளிலும் லுஹருடைய சுன்னத்தைத் தொழுது கொள்ளலாம்.
லுஹருடைய சுன்னத்தைக் கழா செய்தல்:
ஏதேனும் காரணத்தால் லுஹருடைய முன் சுன்னத்தைத் தொழ முடியாமல் போனால் லுஹர் தொழுத பின்னர் அதைத் தொழுது கொள்ளலாம்.
'நபி(ச) அவர்கள் லுஹருக்கு முன்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழாவிட்டால் அவற்றை லுஹருக்குப் பின்னர் தொழுவார்கள்.'
அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி)
ஆதாரம்: திர்மிதி 426
(அறிஞர் அல்பானி இதனை ஹஸன் தரத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.)
இவ்வாறே ஏதேனும் காரணத்தால் லுஹருடைய பின் சுன்னத்தை தொழ முடியாது போனால் காரணம் நீங்கிய பின்னர் அதைத் தொழுது கொள்ளலாம்.
'குரைபு அறிவித்தார். அப்பாஸ்(வ), மிஸ்வர் இப்னு மக்ரமா(வ), அப்துர்ரஹ்மான் இப்னு அஸ்ஹர்(வ) ஆகியோர் என்னிடம் ஆயிஷா(ரழி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் ஸலாமையும் அவருக்குக் கூறும்! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக! நபி(ச) அவர்கள் அதை தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க அத்தொழுகையை (ஆயிஷாவே!) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக!' என்று கூறினார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ்(வ), தாமும் உமரும், இவ்வாறு (அஸருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார்.
ஆயிஷா(ரழி) அவர்களிடம் சென்று, நான் அனுப்பப்பட்ட விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரழி) 'நீர் உம்மு ஸலமா(ரழி) அவர்களிடம் கேளும்' எனக் கூறினார். நானும் இம்மூவரிடம் திரும்பி வந்து ஆயிஷா(ரழி) கூறியதைச் சொன்னேன். உம்மு ஸலமா(ரழி) அவர்களிடம் சென்று ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் அனுப்பினார்கள். (உடனே நான் உம்மு ஸலமா(ரழி) அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறியபோது) நபி(ச) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை பார்த்தேன். தொழுதுவிட்டு என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்ஸாரிகளில் பனூ ஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபி(ச) அவர்களிடம் அனுப்பி, 'நீ அவர்களுக்கு அருகில் சென்று இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே! என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபி(ச) அவர்கள் தம் கைகளால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி(ச) அவர்கள், 'அபூ உமய்யாவின் மகளே! அஸருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை. அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்' என்றார்கள் என உம்மு ஸலாமா(ரழி) விடையளித்தார்கள்.'
(
புஹாரி: 1233)
இந்த ஹதீஸின் அடிப்படையில் லுஹருடைய பின் சுன்னத்தைத் தொழ முடியாது போய்விட்டால் அஸருக்குப் பின்னர் சரி அதைத் தொழுது கொள்ள முடியும் என்பதை அறியலாம்.
அஸரின் சுன்னத்து:
அஸர் தொழுகைக்கு என்று வலியுறுத்தப்பட்ட சுன்னத்து எதுவும் இல்லை. இருப்பினும் அதானுக்கும் இகாமத்திற்கும் இடையில் இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்து உண்டு என புஹாரி, முஸ்லிமில் பதிவாகியிருக்கும் பொதுவான ஹதீஸின் அடிப்படையில் அஸருக்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்து உண்டு.
'அஸருக்கு முன்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழுபவர் மீது அல்லாஹ் அருள் புரிவானாக!' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(வ)
ஆதாரம்: அபூதாவூத் 1271, திர்மிதி 430
(
அறிஞர் அல்பானி இதனை ஹஸனான அறிவிப்பு என்கின்றார்.)
இந்த அடிப்படையில் அஸருக்கு முன்னர் நான்கும் தொழலாம்.
அஸருக்குப் பின்னர் நபி(ச) அவர்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுததாக அறிவிப்புக்கள் உள்ளன. (புஹாரி: 592)
இருப்பினும் அது நபி(ச) அவர்களுக் கென்று தனித்துவமான தொழுகையாகவே பார்க்கப்படுகின்றது. லுஹருடைய பின் சுன்னத்து தவறிவிட்டால் அஸருக்குப் பின்னர் சரி அதைக் கழா செய்யலாம் என்பதற்கு ஆதாரமாக நாம் குறிப்பிட்டுள்ள புஹாரியின் (1233) ஹதீஸ் அஸருக்குப் பின்னர் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மஃரிபின் சுன்னத்து:
மஃரிபுக்கு முன்னர் விரும்பியவர்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவது முஸ்தஹப் விரும்பத்தக்கதாகும். இருப்பினும் இது வலியுறுத்தப்படவில்லை.
'மஃரிபுக்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுங்கள் என்று நபி(ச) அவர்கள் கூறிவிட்டு பின்னர் விரும்பியவர்கள் மஃரிபுக்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுங்கள் என்று கூறினார்கள். வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாக மக்கள் அதை எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சியே அப்படிக் கூறினார்கள்.'
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுல் முஸனீ(வ),
ஆதாரம்: அபூதாவூத் 1281,
இப்னு குஸைமா 1289,
(
அறிஞர் அல்பானி இதனை ஸஹீஹான அறிவிப்பு என்கின்றார்.
மஃரிபின் பின் சுன்னத்து:
மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்துத் தொழுவது வலியுறுத்தப்பட்ட சுன்னாவில் உள்ளதாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்ட பல ஹதீஸ்களில் இது கூறப்பட்டுள்ளது. இந்தத் தொழுகையில் முதல் ரக்அத்தில் 'குல் யா அய்யுஹல் காபிரூனையும் இரண்டாம் ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹதையும் ஓதுவது சுன்னாவாகும்.
இஷாவின் சுன்னத்து:
விரும்பியவர்கள் இஷாவுக்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழலாம். இஷாவுக்குப் பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஹதீஸ்கள் இதற்கான ஆதாரங்களாக அமைகின்றன.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 3 ஜூன், 2017

ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது?

"ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால், முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடம் (Directorate General of Foreign Trade) பெறலாம். இதற்கான அலுவலகம் சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய மூன்று இடங்களில் ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக இயங்கி வருகிறது.


IEC எண்ணை பெறுவதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதளம்http://dgft.gov.in/ ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது, இதற்கான செலவு ரூ.500 மட்டுமே. ஆனால், நேரடியாக விண்ணப்பிக்கும்போது செலவு அதிகமாக இருக்கும். முன்பு போல் அல்லாமல், IEC எண்ணை வழங்குவதற்கு வெளிநாட்டு வர்த்தக அலுவலகம் அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்ததிலிருந்து ஏழு நாட்களில் இந்த IEC எண் கிடைத்துவிடும்."
ஏற்றுமதிக்கான ஆர்டர்களை எப்படிப் பெறுவது?
"தற்போதைய நிலையில் மத்திய அரசின் அமைப்பான FIEO மற்றும் இதர ஏற்றுமதி புரமோஷனல் கவுன்சில்கள் வெளிநாடுகளில் வர்த்தகப் பொருட்காட்சிகளை நடத்தி வருகின்றன. இந்தப் பொருட்காட்சிகளில் ஏற்றுமதியாளர்கள் கலந்துகொள்வதன் மூலம், அங்கிருக்கும் இறக்குமதியாளர்களை நேரடியாகச் சந்திக்க முடியும்; நேரடியாகச் சந்திப்பதுடன் மட்டுமல்லாமல், தங்களின் ஏற்றுமதி பொருட்கள் குறித்த விவரங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி ஆர்டர்களைப் பெற முயற்சிக்கலாம். இப்படி நேரடியாக இறக்குமதியாளர்களைத் தொடர்பு கொண்டு பேசும்போது அவர்களுக்குத் தங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த வகைப் பொருட்காட்சிகளில் கலந்துகொள்ள FIEO மற்றும் ஏற்றுமதி புரமோஷனல் கவுன்சில்களை அணுகலாம்.
இரண்டாவது வழிமுறை, இணையதளம் மூலம் மார்க்கெட்டிங் மேற்கொள்வது. ஏற்றுமதித் தொழில் ஆரம்பிப்பவர்கள் முதலில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் வலைதளம் ஒன்றை உருவாக்கி, அதனுள் தாங்கள் ஏற்றுமதி செய்ய இருக்கும் பொருட்கள் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை வைத்திருப்பது அவசியம். இந்த வலைதளங்களை இறக்குமதியாளர்கள் பார்க்கும்போது, தங்களின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்.
அதேபோல, இன்றைய இணையதள பிசினஸ் டு பிசினஸ் வலைதளங்கள் அதிகம் இருக்கின்றன. அந்த வலைதளங்களில் சென்று ஏற்றுமதியாளர்கள் தங்களை முன்நிறுத்தும்போது அங்கு வரும் இறக்குமதியாளர்களுடனான தொடர்பு கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக, கைவினைப் பொருட்கள், பட்டுச் சேலைகள் மற்றும் தஞ்சாவூர் பெயின்டிங்ஸ் போன்ற பல பொருட்களுக்கு பிசினஸ் டு கஸ்டமர் வலைதளங்கள் உதவிகரமாக இருக்கும். இந்த வலைதளங்கள் வாயிலாக அதிகமாக லாபம் சம்பாதிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.
தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இன்றைய நிலையில், Search Engine Optimization (SEO) என்கிற விஷயமும் மார்க்கெட்டிங் உத்திகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த உத்திகளைப் பயன்படுத்தி யும் ஏற்றுமதியாளர்கள் தங்களின் நிறுவனங்களை (வலைதளங்களை) முன்நிறுத்திக் கொள்வதன் மூலம் ஏற்றுமதி ஆர்டர்களை எளிதாகப் பெறலாம். அதேபோல, ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் மார்க்கெட்டிங் செய்வதன் மூலமும் ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற முடியும்."
இறக்குமதியாளர்களுடனான நம் உறவு எப்படி இருக்க வேண்டும்?
"ஏற்றுமதித் தொழில் செய்பவர்கள், தங்களின் இறக்குமதி யாளர்களுடன் நல்ல முறையில் உறவைப்  பலப்படுத்திக்கொள்வது அவசியம். அதேசமயம் ஆர்டர்களை அவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பதற்காக, ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீதான உத்தரவாதத்தை மிகைப்படுத்தி எடுத்து சொல்லக்கூடாது. தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருளானது தரமானதாகவும், இறக்குமதியாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்யும் விதமாகவும் இருக்கும்பட்சத்தில் அவர்களுடனான உறவு தொடர்ந்து இருக்கும். அதேபோல, அவர்களின் தேவை என்ன என்பதைத் தெளிவாகக் கேட்டு தெரிந்து வைத்துக்கொண்டால் ஏற்றுமதி செய்யும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. தவறுகள் ஏற்படாமல் இருக்கும்போது, ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு இடையேயான உறவு சிறப்பாகவே இருக்கும்."
ஏற்றுமதி செய்ய வங்கியில் கடன் பெற முடியுமா? எதன் அடிப்படையில் கடன் தருவார்கள்? எவ்வளவு கடன் தருவார்கள்?
"ஏற்றுமதித் தொழில் மீதான கடன்களை வழங்குவதில் அனைத்து வங்கிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போதைய நிலையில், இதர கடன்களுக்கான வட்டி விகிதத்தைவிட 1-2% வட்டியானது குறைவாகவே ஏற்றுமதி தொழில் கடனுக்கு வசூலிக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் தங்களிடம் இருக்கும் IEC எண்ணை வைத்து மட்டுமே வங்கியிடம் கடன் கேட்டு அணுக முடியாது. ஏற்றுமதிக்கான ஆர்டர்களை இறக்குமதியாளர்களிடமிருந்து பெற்றிருக்கும்பட்சத்தில், அந்த ஆர்டர் ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்துக் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். கொள்முதல் செய்ய இருக்கும் பொருளின் மதிப்பில் 80% வரைக்கும் மட்டுமே வங்கியில் கடன் பெற முடியும். மீதி இருக்கும் 20 சதவிகித தொகையை ஏற்றுமதியாளர்களே முதலீடு செய்ய வேண்டும். இதற்கான நடைமுறைகள் வங்கிக்கு வங்கி மாறுபடும். ஏற்றுமதியில்  அனுபவமுள்ள, முன்னதாகப் பல ஏற்றுமதி களை மேற்கொண்ட ஏற்றுமதியாளர்கள் வங்கியை கடன் கேட்டு அணுகும்போது, அவர்கள் தங்களின் வருடாந்திர வருமான ஆவணங்களைச் சமர்ப்பித்து, அதன் அளவில் 300% வரையில் கடன் பெறலாம்."
எந்த மாதிரியான பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்? ஏற்றுமதி செய்யக்கூடாத பொருட்கள் என்னென்ன?
"உயிருள்ள உயிரினங்கள், பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனப் பொருட்கள், ஆயுதங்கள், சந்தனக் கட்டைகள் போன்ற பல பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை செய்யப்பட்டிருக்கின்றன. கட்டுப்பாட்டுக்குள் வரும் பொருட்களான, காட்டன் போன்ற சில பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியாது. ஆனால், இந்த வகைப் பொருட்களை ஏற்றுமதி செய்ய சில அரசு அமைப்புகளுக்கு மட்டுமே உரிமம் தரப்பட்டிருப்பதால், அவர்களிடமிருந்து உரிமம் பெற்று ஏற்றுமதி செய்யலாம். மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அல்லாமல், மற்ற அனைத்துப் பொருட்களையும் ஏற்றுமதி செய்யலாம். அதேசமயம், அவ்வப்போது அரசாங்கம் தடை செய்யும் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியாது.இதுகுறித்த மேலதிகமான விவரங்களுக்கு http://indiantradeportal.in/ என்கிற வலைதளத்தைப் பார்க்கவும்."
ஏற்றுமதித் தொழிலில் பணப் பரிவர்த்தனை எப்படி மேற்கொள்ள வேண்டும்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
"இன்றைய நிலையில் ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும் ஆர்வத்தில், முழுக்க முழுக்கக் கடன் வர்த்தகத்தை மேற்கொண்டு சில ஏற்றுமதியாளர்கள் ஏமாற்றத்தைச் சந்தித்து வருகிறார்கள். இது முற்றிலும் தவறான நடைமுறையாகும். இறக்குமதியாளர்களிடமிருந்து 25 சதவிகித பணத்தை முன்னதாக வாங்கிக் கொண்டு, மீதி 75 சதவிகித பணத்தை Letter of Credit (LC) முறையின் மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். அதேபோல, இறக்குமதியாளர்களில் சிலர், ஏற்றுமதி ஆவணங்களை நேரடியாக அனுப்பும்படி கேட்பார்கள். இந்த நடைமுறையையும் தவிர்த்துவிடுவது நல்லது. வங்கிகள் மூலம் மட்டுமே அனைத்து ஆவணப் பரிமாற்றங்களையும் மேற்கொள்வது உத்தமம். அதேபோல ஆர்டர் ஆவணங்களையும் முழுவதுமாகச் சரிபார்ப்பது அவசியம்."


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 1 ஜூன், 2017

பெண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்சத்து கொடுக்க....!

பாட்டி வைத்தியம், பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்
பெண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்சத்து கொடுக் கிறோமோ, அதுதான் பிற்காலத்துல குழந்தை பிறப்புல ஆரம்பிச்சு மெனோபாஸ் வரை தாக்குப் பிடிப்பதற்கான பலத்தைக் கொடுக்குது. இந்த சமயத்துல முழு உளுந்துல செஞ்ச பலகாரங்களை நிறைய சாப்பிடக் கொடுக்கணும். அவ்வளவும் சக்தி! அதனாலதான் அந்தக் காலத்துல சின்னப் பெண்களுக்கு அப்பப்போ உளுத்தங்களி செஞ்சு கொடுப்பாங்க! இடுப்பெலும்புக்கு பலம் சேர்க்கற அருமையான உணவு இது. சாப்பிடவும் ருசியா இருக்கும்!
சரி, உளுத்தங்களி எப்படி செய்வோம், தெரியுமா




ஒரு டம்ளர் முழு உளுந்துக்கு கால் டம்ளர் பச்சரிசி எடுத்துக்கணும். முழு உளுந்தை களைஞ்சு உலர வெச்சு, வெறும் வாணலில வாசனை வர வறுத்து வச்சுக்கணும். அரிசியையும் இதேபோல தனியா வறுத்துக்கணும். ரெண்டையும் சேர்த்து மிஷின்ல கொடுத்து மாவா அரைச்சுக்கணும் (மிக்ஸில அரைச்சா நல்லா சலிச்சு எடுத்துக்குங்க. அந்தக் காலத்துல நாங்க வீட்டிலயே 'எந்திரத்துல' பிடிப்பிடியா போட்டு அரைச்சுப்போம்).

அப்புறம், அரைச்ச இந்த உளுந்து மாவுல திட்டமா தண்ணி கலந்து, வாணலில ஊற்றி, கைவிடாம கிளறணும். இன்னொரு பாத்திரத்துல ஒரு டம்ளர் வெல்லம் போட்டு, பாகு காய்ச்சிக்கணும்.
களி வெந்து வர்ற சமயத்துல தாராளமா ஒரு கை நெய் ஊத்தி, கூடவே, பாகையும் சேர்த்துப் போட்டு கிளறணும். கமகமனு களி வாசனை ஊரைக் கூட்டும். இறக்கி வச்சு சாப்பிடறப்ப இன்னும் ரெண்டு ஸ்பூன் நெய் ஊத்திக்கிட்டா, அவ்வளவு ருசியா இருக்கும்.

நெய்யைவிட நல்லெண்ணெய் சேர்த்து செஞ்சா இந்த களிக்கு இன்னும் ஊட்டம் அதிகம். அதேபோல வெல்லத்துக்குப் பதிலா கருப்பட்டி சேர்த்துக்கலாம்.
அரைச்சு வந்த இதே உளுந்து மாவுல வெல்லம் தூளாக்கிப் போட்டு, சூடா நெய் விட்டு உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம். பெண்குழந்தை வயசுக்கு வந்து ஒரு வருஷம் வரையாவது வாரத்துக்கு மூணு நாள் உளுத்தங்களி சாப்பிட்டா, பின்னால பிரசவ சமயத்துல சிசேரியன் அது இதுங்கற பேச்சே இருக்காது. சுகப்பிரசவம் சுபமா ஆகும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சிங்கமும், புலியும் சண்டை போட்டால் எது ஜெயிக்கும் என்று பார்க்கலாம்.

காட்டின் ராஜாவான சிங்கம் எப்போதும் பெண் புலி , சிங்க குட்டிகள் என குடும்பத்துடன் கூட்டமாகத் தான் வாழும். ஆனால் புலி தனிமையில் வாழும். அ...

Popular Posts