இதைப் புரிந்துகொள்ளப் பின்வரும் ஹதீஸை முழுமையாகப் படியுங்கள்!
அபூபக்கர்(ரலி) அவர்களது மகன்  காசிம் (ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரர்) அறிவிக்கின்றார்கள்;
(ஒருமுறை கடுமையான தலைவலியினால்  சிரமப்பட்ட) ஆயிஷா(ரலி), "என் தலை(வலி)யே!" என்று சொல்ல,  இறைத்தூதர்(ஸல்) அவர்கள், "நான்  உயிரோடிருக்கும் போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டு விட்டால் உனக்காக நான்  (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காக (மறுமை நலன் கோரிப்)  பிரார்த்திப்பேன்" என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி), "அந்தோ!  அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போய் விடுவதையே நீங்கள்  விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் இறந்து விட்டால் அந்த நாளின்  இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில்  ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)" என்று கூறினார்கள்.  நபி(ஸல்) அவர்கள் (புன்னகைத்து விட்டு) "இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது.) நான்தான்  (இப்போது) "என் தலை(வலி)யே!" என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன் மீதும்,  உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். எனவேதான் உன்  தந்தை) அபூபக்ருக்கும், அவரின் புதல்வருக்கும் ஆளனுப்பி  (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநியாகச் செயல்படும்படி) அறிவித்து விட  விரும்பினேன். (தாம் விரும்பியவரைக் கலீஃபா என) யாரும் சொல்லி விடவோ, (தாமே கலீஃபாவாக ஆகவேண்டும் என) எவரும் ஆசைப்பட்டு விடவோ கூடாது  என்பதற்காகவே (இவ்வாறு விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூ  பக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்க மாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்க மாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்  கொண்டேன். (எனவேதான் அறிவிக்கவில்லை)" என்று கூறினார்கள். (புகாரி 5666)
மேற்படி நபிமொழியில் நபி(ஸல்)  அவர்கள், "நீ மரணித்தால் உனக்காக நான்  பிரார்த்திப்பேன்" என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறுகின்றார்கள். இது கேட்டுச்  சந்தோசப்பட வேண்டிய ஆயிஷா(ரலி) அவர்கள் "அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான்  (விரைவில்) இறந்து போய் விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன்.  நான் இறந்து விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள்  உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து  விடுவீர்கள்)" என்று கூறுகின்றார்கள். அவர்கள் தலைவலி என்று தனது வருத்தத்தைக்  கூறிய போது நபி(ஸல்) அவர்கள் கூறிய சந்தோசமான வார்த்தைக்குத் தவறான அர்த்தத்தை  அவர்கள் கற்பிக்கின்றார்கள்.
இது கேட்ட நபி(ஸல்) அவர்கள்  ஆத்திரமடையாமல் அமைதியாகத் தனது கூற்றின் அர்த்தத்தையும், அதற்கான காரணத்தையும் விளக்குகின்றார்கள்.  நபி(ஸல்) அவர்கள், ஆயிஷா(ரலி) அவர்களது வார்த்தையை நூலுக்கு  நூல் சட்டப்படி அணுகினால் ஆயிஷா(ரலி) அவர்கள், நபி(ஸல்)  அவர்களது இயல்பிலும், குணத்திலும் குறை கூறி விட்டார்கள் என  அவர்களுக்கு "வழிகேட்டு" அல்லது "முர்த்தத்" பட்டம் கொடுத்திருக்கலாம்.
ஆத்திரத்திலோ, அவசரத்திலோ அல்லது உள்ளமும், உடலும் நலிந்து போகின்ற சூழ்நிலையிலோ பேசக்கூடிய பேச்சுக்களுக்கெல்லாம்  சட்டரீதியான தீர்வு காணமுடியாது.
அதேநேரம், அசாதாரணமான சூழ்நிலையில் ஒருவர் பேசிய பேச்சை  வைத்து நாட்கணக்கு-மாதக் கணக்குகளுக்கு வியாக்கியாணம் செய்து விரிசலை  ஏற்படுத்தவும் முடியாது. இதை இல்லற வாழ்வில் புரிந்துகொள்வது மிக மிக  முக்கியமாகும்.
ஆண்கள் சிலபோது பெண்களைச் சீண்டிப்  பார்ப்பதற்காக சில வார்த்தைகளை அல்லது செய்திகளை அல்லது வர்ணனைகளைச் செய்யலாம்.  அதில் விளையாட்டுணர்வுதான் காரணமாக இருக்கும். ஆண்கள் எதையும் சாதாரணமாக  எடுத்துக்கொள்வது போன்று பெண்கள் எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் அதிகம்  சென்டிமென்ட் (உணர்ச்சிபூர்வமாகப்) பார்ப்பார்கள்.
எனவே, வேடிக்கையாகப் பேசிய பேச்சுக்கள் அவர்களது நாவில்  வேம்பாகவும், நெஞ்சில் வேலாகவும் பாய்ந்து வேதனையை  உண்டுபண்ணலாம். எனவே விளையாட்டு விபரீதமாகி விடக்கூடாது என்பதில் கணவனும்  கரிசனையாக இருக்க வேண்டும். இதையெல்லாம் அலட்டிக்கொள்ளக் கூடாது என்ற விரிந்த  மனதும் மனைவியிடம் இருந்தாக வேண்டும்.
பேசும் பேச்சு மட்டுமன்றி மௌனம்  கூடச் சிலபோது தவறான விளக்கத்தைக் கொடுக்கலாம். கணவனோ, மனைவியோ ஏதோ சில காரணங்களாலோ, கஷ்டங்களாலோ மௌனமாக இருக்கலாம். இந்த மௌனத்திற்குக் கூட பல அர்த்தங்கள்  கற்பிக்கப்படுகின்றன. என்னோடு கோபித்துக் கொண்டுதான் அவர் பேசாமல் இருக்கின்றார்.  காலையில் தேனீர் கொடுக்கத் தாமதமானதற்குத்தான் உம்முண்டு இருக்கிறார். இந்தச்  சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படி முகத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இருக்க  வேண்டுமா? இப்படி ஏதோ ஒரு அர்த்தத்தை தானே கற்பித்துக்கொண்டு  கற்பனையில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருப்பார்கள். இது கூட இல்லறத்தில் சில  பிரச்சினைகள் தோன்றக் காரணமாக அமைந்து விடுகின்றது.
சிலபோது பெண்கள் உள்ளத்தில் ஒன்றை  எதிர்பார்த்து ஏதோ சில வார்த்தைகளைப் பேசுவார்கள். இது கேட்ட ஆண்கள் அவர்கள் பேசிய  பேச்சை தர்க்கரீதியாகச் சிந்தித்து எதிர்க்கேள்வி கேட்பார்கள். அந்தக் கேள்வி  எடக்கு-முடக்காகக் கூட அமைந்து விடுவதுண்டு.
சிலபோது மனைவி வேலை செய்து  அலுத்துக்கொண்டு அந்த அலுப்பில் கணவனைப் பார்த்து, "நீங்களும் கொஞ்சம் வீட்டு விடயங்களில் கவனம்  செலுத்துங்கள்!" என்று கூறலாம் அல்லது வேலைப் பழுவோடு இருக்கும் போது குழந்தைகள்  குறும்புத்தனம் செய்தால், "பிள்ளைகள் விஷயத்தில் நான்  மட்டுமா கஷ்டப்பட வேண்டும்? நீங்களும் பிள்ளைகள் விஷயத்தில்  கவனம் செலுத்துங்கள்!" என்று கூறலாம்.
இதைக் கேட்ட கணவன் வார்த்தைக்கு  வார்த்தை அகராதியைப் பார்த்து அர்த்தம் பார்த்தால் வாழ்க்கை வண்டி சீராக ஓடாது.  ஆனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கணவன், எடுத்த  எடுப்பில் "அப்ப நான் வீட்டு விஷயத்தில, புள்ள விஷயத்தில  கவனம் எடுக்கல்லண்டு சொல்றியா?" எனக் கேட்கும் போது  மனைவியும், "என்னத்தப் பெரிசா செஞ்சி கிழிச்சிட்டீங்க?"  என்று தொடரும் போது தொல்லைகள் தொடர் கதையாவது தவிர்க்க  முடியாததாகும்.
உண்மையில் வீட்டுப் பணிகளில்  கணவனும் கூட இருந்து ஒத்துழைத்தால் உதவியாக இருக்கும் அல்லது நான் வீட்டு வேலை  செய்துகொண்டிருக்கும் போது கணவன் குழந்தைகளைக் கொஞ்சம் கவனித்துக்கொண்டால் உதவியாக  இருக்குமே! என்ற ஏக்கத்தைக் கணவன் புரிந்துகொள்ள வேண்டும். தனது உணர்வை இந்த  மறமண்டை புரிந்து கொள்ளவில்லையே! என்று கோபம் கொந்தளிக்கும் போது அடுத்த கட்டமாக  அவளிடமிருந்து வரும் பதில் பாரதூரமாக அமைந்து விடுகின்றது.
சிலபோது மனைவி வேலை செய்து  கொண்டிருப்பாள்; கணவன் ஓய்வாக இருப்பார் அல்லது  பத்திரிகை வாசித்துக்கொண்டிருப்பார். இந்த நேரத்தில் மனைவி அலுத்துப் போய்,  "தனியாக இருந்து என்னால மாடு மாதிரி சாகமுடியாது!" என்ற தொணியில்  தொணதொணப்பாள். சிலபோது இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சில விளையாட்டுக் கணவர்கள்,  "ஓ! வயசு போனால் அப்படித்தான்!" என்று ஏதாவது சொல்லும் போது  மனைவிக்குப் பத்திக்கொண்டு வரும். அவளும், "நான் மட்டுந்தானே  கிழவி? இவர் மட்டும் பெரிய பொடியண்டு நினைப்பாக்கும்!.."  என்று தொடரலாம். இதை விளையாட்டாகவோ எடுத்துக் கொண்டால் வினையில்லை.
சில கணவர்கள் இதுபோன்ற  சந்தர்ப்பத்தில் விளையாட்டுக்காக "ஒனக்குத் தனியாக வேல செய்ய இயலாது என்பதற்காக  என்னை இன்னொரு கலியாணமா கட்டச் சொல்றாய்?"  என்று கேட்பார்கள். எரியும் நெருப்பில் எண்ணைய் வார்ப்பது போல்  இப்படிப் பேசும் போது, "ஒரு பொண்டாட்டிய வெச்சி ஒழுங்காப்  பாக்கத் தெரியாத ஒங்களுக்கெல்லாம் ரெண்டாம் பொண்டாட்டி கேக்குதோ!?" என்ற தொணியில் தொடரலாம். இது கணவனை உசுப்பேற்றி விட்டால், "ஒனக்கு நான் என்ன கொற வெச்சேன் சொல்லு!" என விளையாட்டு வெற்றியை நோக்கி  நகரத் துவங்கி விடும்.
சிலபோது மனைவி வீட்டை  ஒழுங்குபடுத்தி அழுத்துப் போனால், "வீடு  குப்பையாக இருக்குது. இங்கால சரியாக்கும் போது அங்கால குழம்பியிருக்குதே!" என  அலுத்துக்கொள்வாள். சில கணவர்கள் நான் வீட்டைக் குழப்பியடிப்பதைத்தான் இவள்  இப்படிச் சொல்கிறாள் என்ற தொணியில் பேசுவர். சில வேளைகளில் இதே விஷயத்தை மனைவியர்  கொஞ்சம் உப்பு-புளி சேர்ந்துச் சொல்வர். அது கணவனை உசுப்பேற்றி விட, "இந்த வீட்ட நானா குழப்பியடித்தேன்?" என்ற தொணியில்  பேசும் போது பிரச்சினையாகின்றது.
இப்படி ஏராளமான உதாரணங்களைக்  கூறலாம். இதற்கெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பார்க்காமல் அடுத்தவரது  உடல்-உள நிலவரங்களைப் புரிந்து விட்டுக் கொடுத்து அல்லது விலகிச் சென்று  பழகவேண்டும்.
இதற்கான சில வழிகாட்டல்களை  வழங்குவது நல்லது என நினைக்கின்றேன்.
(1) கணவன் – மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரின் இயல்பான  குணங்களையும், தமது வாழ்க்கைத் துணையின் இயல்புகள், குணங்கள், பழக்க-வழக்கங்களையும் தெளிவாகப்  புரிந்துகொள்ள வேண்டும்.
(2) ஆண் சிந்திக்கும் விதமும், பேசும் முறையும் பெண்ணினது சிந்தனை, பேச்சு  என்பவற்றை விட மாறுபட்டதாகும். இதையும் இரு சாராரும் இதயத்தில் இறுத்திக்கொள்ள  வேண்டும்.
(3) இருவரும் இருவரது பேச்சையும்  முறையாகப் புரிந்துகொள்ள முற்பட வேண்டும். தவறாகப் புரிந்துகொண்டு அந்தத் தவறான  புரிதலின் அடிப்படையில் தப்பான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளக் கூடாது.
(4) கணவனைப் பொறுத்தவரை மனைவியின்  பேச்சுக்குச் செவிகொடுக்க வேண்டும். ஏனெனில் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த  இருக்கும் ஒரே ஊடகம் பேச்சுத்தான். அவளது உணர்வுகளுக்கு நீங்கள்  மதிப்பளிக்கின்றீர்கள் என்பதை அவளின் பேச்சுக்கு நீங்கள் கொடுக்கும்  முக்கியத்துவத்தை வைத்தே அவள் அறியமுடியும். எனவே நீங்கள் கொஞ்சம் செவிகொடுங்கள்!
அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் சுமார் 300 வார்த்தைகள் அடங்கிய நீண்ட ஒரு சம்பவத்தைக்  கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை அப்படியே கேட்டு விட்டு ஆயிஷா(ரலி) அவர்கள்  திருப்திப்படும் அளவுக்கு ஒரு செய்தியையும் முடிவுரையாகக் கூறினார்கள்.
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
 

 
 
