லேபிள்கள்

திங்கள், 6 ஜனவரி, 2020

கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து... உடல் உறுதிக்கு உரமூட்டும் கேழ்வரகு!

நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு. முன்பெல்லாம்  கேப்பைக் களி கிண்டாத வீட்டையோ, கேப்பைக் கூழ் இல்லாத அம்மன் கோவில் திருவிழாக்களையோ பார்ப்பது அரிதான ஒன்று. இப்படி உணவாக மட்டுமல்லாமல், நமது கலாசாரத்தோடும் நீண்டகாலத் தொடர்புடையது கேழ்வரகு.
`கேப்பை', `ராகி' எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் ஒரு வகை சிறுதானியம் இது. உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் கேழ்வரகு, இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, பீகார் மற்றும் சில மாநிலங்களில் முக்கியமான பயிராகப் பயிரிடப்படுகிறது.  
பிறந்த குழந்தை முதல் 90 வயது பெரியவர் வரைக்கும் அனைவரும் சாப்பிடக்கூடிய உணவுப்பொருள் இது. குறைந்த விலையில் கிடைக்கும் இதன் மகத்துவத்தும், மருத்துவ குணங்களின் பட்டியலோ வெகு நீளம்.   இவ்வளவு சத்துள்ள நம் பாரம்பர்ய உணவு, ஆடி மாதத்திலும் அம்மன் திருவிழாக்களிலும் கூழாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது. சரி... இதைச் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? பார்க்கலாமா?
எலும்புக்கு வலிமை சேர்க்கும்!
எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் சத்து  மிக அவசியம். கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்க இது உதவும்.                                                                                  
உடல் எடை குறைக்க உதவும்!
இதில் உள்ள  ட்ரிப்டோபான் (Tryptophan) அமினோ அமிலம் பசியைக் கட்டுப்படுத்தும். அதனால், குறைவாகச் சாப்பிட்டாலே வயிறு நிரம்பியதுபோன்ற உணர்வு ஏற்படும்.  அதனால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகப் பொருத்தமான உணவு.
சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து!
அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்துகொண்டது. இது, லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்  (Low Glycaemic Index Food) உணவு வகையைச் சேர்ந்தது. அதாவது, இதை உண்ட பின்னர் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவு அதிகரிக்காது. கேழ்வரகைக் கூழாகக் குடிப்பதைவிட, களியாகவோ, ரொட்டியாகவோ உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
கொழுப்பைக் குறைக்கும்!
உடலின் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, இதில் உள்ள லெசித்தின் (Lecithin), மெத்தியோனின் ( Methionine)  போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மைகொண்டவை.
ரத்தச்சோகை வராமல் தடுக்கும்!
ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும்; ரத்தச்சோகை வராமல் தடுக்கும். எனவே, இது ரத்தசோகை, உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து.

உடற்சூடு நீங்கும்
ராகி உடல்சூட்டைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று.  எனவே, கோடை காலத்தில் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கச் செய்யும் நல்ல  உணவுப் பொருள் இது. ராகியில் உள்ள தாதுச்சத்துகள் மனதுக்கு இதம் தந்து, மனஅழுத்தம் நீங்க உதவும்.
உடலுக்கு வலிமை தரும்!
ராகியில் அதிக அளவில் புரதம் உள்ளதால்,  உடலுக்கு வலிமை கிடைக்கும். உடல் உழைப்பு உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய தானியம் இது.
மலச்சிக்கல் தீர்க்கும்!
ராகியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், உணவு எளிதில் ஜீரணமாக இது உதவும்; மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்க்கும்.
தைராய்டு நோயாளிகளுக்கு உகந்தது
தைராய்டு நோயாளிகளுக்கு மிகவும் உகந்த உணவு ராகி. குறிப்பாக, ஹைப்பர்தைராய்டு (Hyperthyroid) பிரச்னை உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டிய தானியம்.
கர்ப்பிணிகளுக்கு நல்லது!
கர்ப்பிணிப் பெண்கள், பாலுட்டும் தாய்மார்களுக்கு தேவையான சத்துகளைத் தரும்  சிறந்த தானியம் கேழ்வரகு. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்;  குழந்தைபேறு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான ரத்தபோக்கு, ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் உணவுச் சத்து குறைபாட்டை சரிசெய்யும்.  
அதே நேரத்தில், ஆண்டு முழுவதும் கேழ்வரகு உணவுகளை  கூழாகக் குடிக்காமல், இட்லி, தோசை, புட்டு, களி, கஞ்சி, ரொட்டி, பக்கோடா, இனிப்பு உருண்டை... என உணவுகளில் என்னென்ன வகைகள் உள்ளனவோ, அத்தனையிலும் ராகியைப் பயன்படுத்தி சாப்பிட்டு வரலாம், பலன் பெறலாம்!

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நல்ல பாம்பு: பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் காணப்படக்கூடிய 338 பாம்பினங்களில் 71 (22 சதவீதம்) பாம்புகள் தான் நஞ்சுடையவையாக அறியப் பட்டிருக்கின்றன. இவற்றில் 4 (...

Popular Posts