லேபிள்கள்

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

அழகாகப் பேசுங்கள், அழகானதைப் பேசுங்கள்


இறை விசுவாசிகளின் பேச்சில் உண்மையும் அழகும் இருக்க வேண்டும், இதயங்களின் ஆழத்திலிருந்து வரும் நேர்மையான வார்த்தைகளாகவும் அவை இருக்க வேண்டும், ஏனெனில்  உண்மையும் நம்பகத்தன்மையும் அழகான பேச்சுக்களும் ஓர் இறைவிசுவாசிக்கான சிறந்த அடையாளமாகும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!அல்குர்ஆன் (33 : 70)
(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான். அல்குர்ஆன் (17 : 53)
யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.அல்குர்ஆன் (35 : 10)
அளவற்ற அருளாளனின் அடியார்களின் பண்புகள் குறித்து குர்ஆன் பேசும் போது பின்வரும் சில முக்கிய பண்புகளை அது எமக்கு சுட்டிக்காட்டுகிறது.
வீணானதைப் புறக்கணிப்பார்கள். அல்குர்ஆன் (23 : 3)
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். "எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்" எனவும் கூறுகின்றனர். அல்குர்ஆன் (28 : 55)
அவர்கள் பொய் சாட்சி கூறமாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். அல்குர்ஆன் (25 : 72)
உண்மை பேசுதல், அழகிய வார்த்தைகளால் மக்களோடு உரையாடுதல் என்ற அம்சத்தை அளவற்ற அருளாளனின் அடியார்கள் கடைப்பிடிக்கும் அதே வேளை உண்மைக்குப் புறம்பான வார்த்தைகள், அறிவீனமான செயல்களை அவர்கள் அலட்சியம் செய்துவிடுவார்கள் என்பதனையும் மேலுள்ள வசனங்கள் எமக்கு தெளிவு படுத்துகின்றன.
உண்மை உரைத்தல், அழகிய வார்த்தைகளை உபயோகித்தல் நீதி, நேர்மையாகப் பேசுதல் என்ற உயர்ந்த குணங்களின் சொந்தக்காரராக எமது தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள், அறியாமைக்கால மக்கள் கூட அதற்கான சாட்சியத்தை வழங்கியுள்ளார்கள்.
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்" எனும் (26:214ஆவது) இறை வசனம் அருளப் பெற்ற போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா' மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, "பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!" என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வர முடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், "சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?" என்று கேட்க, மக்கள் "ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை" என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்" என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், "நாளெல்லாம் (என்றென்றும்) நீ நாசமாகுவாயாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?" என்று கூறினான். அப்போது தான் "அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்……" என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) | நூல்: புகாரி 4770
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த வேளையில் நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள், நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள்' என்று சொல்லப்பட்டது. அப்போது மக்களெல்லாம் அவர்களை நோக்கி விரைந்தார்கள். நானும் மக்களுடன் அவர்களைப் பார்க்கச் சென்றேன். அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன். அவர்களின் முகம் பொய் சொல்லும் முகமாகத் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். ஸலாத்தை பரப்புங்கள், (பசித்தவருக்கு) உணவளியுங்கள், மக்கள் உறங்கும் வேளையில் தொழுங்கள், மன அமைதியுடன் சொர்க்கம் செல்வீர்கள்' என்பது தான் அவர்களின் பேசிய முதல் பேச்சாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) | நூல்: திர்மிதீ 2409, இப்னுமாஜா 1323
அபூஸுப்யான் அவர்களிடம் ஹிரக்ல் மன்னர் நபிகளாரைப் பற்றி விசாரித்த போது அவர்களின் நேர்மைக்கும் உண்மைக்கும் அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே சான்று பகர்ந்தார்கள்.
"அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதேனும்) நீங்கள் அவரைச் சந்தேகித்திருக்கின்றீர்களா?" என்று கேட்டார். நான் இல்லை' என்றேன்
"நான் உம்மிடம் அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதேனும் நீங்கள் சந்தேகித்ததுண்டா' என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை' என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேசாத அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன்" என்று ஹிரக்ல் மன்னர் கூறினார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) | நூல்: புகாரி 7.
மிகச் சிறந்த உண்மையாளராக திகழ்ந்த நபிகளார் உண்மை பேசுதல், அழகானதைப் பேசுதல் போன்றவற்றை இறை விசுவாசத்தோடு தொடர்பு படுத்தி கூறியுள்ளார்கள், அதனால் தான் யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்கிறாரோ (ஒன்று) அவர் நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று இதனை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்கு தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) | நூல் : புகாரி (6018)
உண்மையையும் நல்லதையும் பேசுதல் இறை விசுவாசியின் உயர்ந்த பண்பு என்பது போல அது அல்லாஹ்வுக்காக அவன் செய்கின்ற மிகப்பெரும் தர்மம் என்றும் நபிகளார் எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையி­ருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­ழி) | நூல் : புகாரி (2989)
சுவனத்தை அடைந்து கொள்ள ஆசை வைக்கும் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை இறையச்சத்தின் மூலம் அலங்கரித்துக் கொள்வது எவ்வாறு அத்திய அவசியமானதோ அது போன்று தமது வார்த்தைகளையும் உண்மையைக் கொண்டும் அழகான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டும் அலங்கரித்தக் கொள்வது அவசியமாகும், அதனையே பின்வரும் நபிமொழி எமக்கு விளக்குகின்றது.
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள் என்றேன். அதற்கு அவர்கள் அனைத்தும் நீரி­லிருந்து படைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக்கொடுங்கள் என்று கூறினேன். ஸலாத்தைப் பரப்பு, நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ர­ழி) | நூல் : அஹ்மத் (9996)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலி­ருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் அழகான வார்த்தையைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்) என்றார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் ஹாதிம் (ர­ழி) | நூல் : புகாரி (6023)
உண்மையும் நல்ல அழகான வார்த்தைப் பிரயோகங்களும் இறைவிசுவாசியின் அடையாளம், மிகச் சிறந்த தர்மம், சுவனம் செல்வதற்கான வழி என்பதனையும் தாண்டி அவை எங்களை நரகத்திலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்புக் கேடயங்களாகும், சாதாரண மனிதர்கள் இதனை தமது வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களது இம்மை மறுமை வெற்றிக்கு அது மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும், எனினும் அழைப்பாளர்கள் அறிவைச் சுமந்தவர்கள் இதனை கடைப்பிடிப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும் இதன் மூலமே இம்மை மறுமை வெற்றியுடன் மனிதர்களின் உள்ளங்களைக் கவர்ந்து அவர்களை அல்லாஹ்வை நோக்கி மிக இலகுவாக அழைக்க முடியும், அழைப்பாளர்கள் தமது அழைப்புப் பணியில் வெற்றிபெறுவதற்கான அடிப்படைபைப் பண்புகளுள் இதுவும் முக்கிய ஒன்றாகும்.
அஷ்ஷெய்க். TM முபாரிஸ் ரஷாதிவிரிவுரையாளர், அல்மனார் இஸ்லாமிய நிலையம், துபாய், அமீரகம்.
xx   

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts