லேபிள்கள்

சனி, 25 ஆகஸ்ட், 2018

யார் இந்த முட்டாள்கள்?

யார் இந்த முட்டாள்கள்?

மௌலவி M.S.M.ஹில்மி(ஸலாமி),
BA(Reading) SEUSL,
DIP.IN.LIBRARY & INFORMATION SCIENCE

உலகலாவிய ரீதியில் பல கொண்டாட்டங்களும் தேசிய, சர்வதேச தினங்களும் பல்வேறு பின்னணிகள், வரலாறுகள் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ளதனையும் கொண்டாடப்பட்டு வருவதனையும் அன்றாட நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு கொண்டாடப்பட்டு வரும் தினங்களில் ஒன்றுதான் ஏப்ரல் 01 ஆம் திகதி கொண்டாடப்பட்டுவரும் உலக முட்டாள்கள் தினமாகும். உலக முட்டாள்கள் தினத்தைப்பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது காரணம் யாரோ ஒருவரால் அத்தினத்தில் முட்டாளாக்கப்பட்டிருப்பர். அல்லது அவ்வாறு நடந்த சம்பவங்களை செவிசாய்த்திருப்பர்.


இவ்வாறு எல்லலோராலும் ஜனரஞ்சகமாக அறியப்பட்ட இத்தினம் உலகின் பல்லினத்தவர்கள் மத்தியிலும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு முஸ்லிம்களும் விதிவிலக்கானவர்களல்ல. முஸ்லிம்களும் இதனை கொண்டாடுவதனை எம்மவர்களின் செயற்பாடுகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது. ஆகவேதான் இது பற்றி அறிந்து தெளிவுபெறுவது அவசியமாகும். ஏன் ? எதற்காக ? என்ற வினாக்கள் இன்றி எல்லலோராலும் அரங்கேற்றம் தொடர்கிறது. எனவேதான் முதலில் இங்கு உலக முட்டாள்கள் தினத்தின் வரலாறு பின்னணியை அறிவது அவசியமாகும்.
முட்டாள்கள் தின வரலாறு
ஏப்ரல் 1 ஆம் திகதியிலேயே ஐரோப்பிய நாடுகளில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இது பிரான்ஸ் நாட்டில் தோற்றம் பெற்றதாக கூறப்படுகின்றது. 16 ஆம் நுற்றாண்டில்(1562) போப்பாண்டவராக இருந்த 13 ஆவது கிரகரி பழைய ஜுலியன் ஆண்டு கணிப்பு முறையை நிறுத்தி கிரேகோரியன் ஆண்டு கணிப்பு முறையினை அறிமுகம் செய்தார். இதன்படி ஜனவரி 1 ஆம் திகதியை புத்தாண்டாக அறிமுகப்படுத்தினார். இதனை ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

ஜனவரி 1ஆம் திகதியை புத்தாண்டாக ஏற்றுக்கொண்ட மக்கள் பழைய வழக்கத்தை பின்பற்றிய மக்களை 'முட்டாள்கள'; என்று அழைத்ததுடன் ஏப்ரல் முதலாம் திகதியை முட்டாள்கள் தினமாக அடையாளப்படுத்தியதாக ஆய்வுகள் மூலம் அறியமுடிகின்றது.
1582 ஆம் ஆண்டிற்கு முன்பே 1508 ஆம் ஆண்டில் பிரான்சில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டதாகவும் , 1539 ஆம் ஆண்டில் முட்டாள்கள் தினம் பற்றி டச்சு மொழியில் இது பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அறியமுடிகின்றது. அதே போன்று 1466 ஆம் ஆண்டு மன்னன் பிலிப்பை என்பவரை அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு முட்டாள்கள் தினம் தோன்றுவதற்கு பல பின்னணிகள் கூறப்படுகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டே முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. இதில் ஆச்சரியத்திற்குறிய விடயம் என்னவென்றால் முஸ்லிம்களும் இஸ்லாம் தடைசெய்துள்ள இஸ்லாம் அங்கீகரிக்காத அம்சங்களை சுமந்துவரும் இத்தினத்தை அரங்கேற்றம் செய்வதாகும்.
முட்டாள்கள் தினம் ஏன் இஸ்லாத்திற்கு முரணானது?
ஒரு முஸ்லிம் ஈடுபடுகின்ற எந்த ஒரு செயலாயினும் அது இஸ்லாமிய வரையரைக்குள் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இஸ்லாம் தடை செய்துள்ள செயல்களில் ஈடுபடுவது ஹராமாகும். அந்த வகையில் இஸ்லாம் தடை செய்துள்ள பல செயற்பாடுகளை சுமந்து வருவதே இந்த உலக முட்டாள்கள் தினம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொய்:-
அந்தவகையில் இத்தினம் ஒருவரை முட்டாளாக்க வேண்டும் என்பதற்காக பொய் எனும் பாவத்திலிருந்தே ஆரம்பமாகின்றது. 'உலக முட்டாள்கள் தினம்' என அடையாளப்படுத்தப்பட்டாலும் இதனை 'உலக பொய்யர்கள் தினம்' எனவும் அழைக்கலாம். காரணம் இத்தினத்தில் ஒருவருக்கு ஒருவர் பொய்யான செய்தியை பரப்பி பிறரை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் பேசும் பொய்யினை உண்மைப்படுத்த பொய்ச்சத்தியங்களையும் செய்கின்றனர்.

படித்தவர் , பாமரரர் , சிறியவர் , பெரியவர் என்ற பாகுபாடுகளின்றி அனைவர் மனதிலும் பொய் பேசுவதனை விதைப்பதுடன் குழந்தைகளின் ஆழ் மனதிலும் பொய் பேசுவது சாதாரன விடயம் என்ற பதிவினை ஏற்படுத்தி பொய் கூறுவதற்கு உலகலாவிய ரீதியில் அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கும் தினமாகவே இத்தினம் காணப்படுகின்றது. ஆனால் இஸ்லாம் பொய் பேசுவதனையும் , பொய்யான செய்திகளை பரப்புவதனையும் வன்மையாக கண்டிக்கும் மார்க்கமாகும்.
அல்-குர் ஆனில் பல இடங்களில் அல்லாஹ் பொய் பற்றி எச்சரிக்கை செய்வதனை அவதானிக்கலாம்.

'பொய்யான வார்த்தைகளைவிட்டும் விலகியிருங்கள்' (ஸுரா அல்ஹஜ்: 30)
'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக' (ஸுரா ஆலுஇம்ரான்: 61)
'பொய்யான பாவிகள் ஒவ்வொருவருக்கும் கேடுதான்' (ஸுரா அல்ஜாதிய்யா: 07)
பொய்சத்தியம் பற்றி அல்லாஹ் இவ்வாறு எச்சரிக்கை செய்கிறான்
'அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது' (58:14,15)

இஸ்லாமிய மார்க்கம் ஒரு செய்தி பரப்பப்படுகின்றதென்றால் அதனை தெளிவுபுடுத்திக் கொள்ளவும் அதன் உண்மைதன்மையினை அறிந்து செயற்படவும் தூண்டுகின்றது.
'விசுவாசிகளே தீயவன் ஒருவன் ஒரு செய்தியை கொண்டு வந்தால் அதனை தெளிவுபடுத்தி கொள்ளுங்கள்' (ஸுரா அல்ஹுஜுராத்: 06)
இவ்வாறு பொய்யான பேச்சினை, சத்தியங்களை விட்டு விலகியிருக்குமாறும் , பொய்யர்களுக்கு அல்லாஹ்வின் சாபக்கேடு கிடைக்கும் என்றும் செய்திகளை உறுதிப்படுத்தி கொள்ளுமாறும் அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கின்றது.
ஆனால் பிறரை பொய் பேசி குறித்த தினத்தில் முட்டாளாக்க வேண்டும் என இஸ்லாம் தடுத்த பொய் 'உலக முட்டாள்கள் தினம்' எனும் போர்வையில் அரங்கேறுகிறது. ஆக பிறரை முட்டாளாக்க வேண்டும் என்பற்காக பொய் பேசுபவர்கள்தான் இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்களாவர்.
ஏமாற்றுதல்:-
உலக முட்டாள்கள் தினத்திற்கு 'ஏமாற்றும் தினம்' என்று அடையாளப்படுத்துவது சாலசிறந்ததாகும். ஏனெனில் பொய்யான செய்திகளை பிறர் மத்தியில் பரப்புவதன் மூலமாக பிறரை ஏமாற்றும் கைங்கரியமே இத்தினத்தில் நடந்தேறுகின்றது. அதாவது போலியான செய்தியொன்றை ஒருவரிடம் கூறி அவர் நம்புபடி பொய் மேல் பொய்களை அடுக்குவது மாத்திரமின்றி அவரை ஏமாற்றுகின்றனர்.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ' யார் ஏமாற்றுகிறாரோ அவர் எங்ளை சார்ந்தவர் அல்ல' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
இஸ்லாமிய மார்க்கம் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதை மோசடி செய்வதை தடைசெய்துள்ள மார்க்கமாகும். உலக முட்டாள்கள் தினம் எனும் நாமம் தாங்கி இஸ்லாம் தடைசெய்துள்ள காரியத்தில் எம்மவர்கள் ஈடுபடுவது கைசேதத்திற்குறிய விடயமாகும். ஆக உண்மையில் 'முட்டாள்கள் தினத்தில' ஏமாறுபவர்கள் முட்டாள்கள் அல்ல ஏமாற்றுபவர்களே இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்களாவர்.
கேலி செய்தல்:-
உலக முட்டாள்கள் தினத்தில் ஒருவரிடம் ஒருவர் பொய் கூறி , ஏமாற்றி , கேலி செய்யும் நண்பர்கள், உறவினர் வட்டாரங்கள் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்றன. இதனை யாராலும் மறுக்க முடியாது. இஸ்லாம் பிறரை கேலி செய்து பரிகாசிப்பவர்களை கடுமையாக கண்டிக்கின்றது.

'முஃமின்களே! ஒரு சமூகத்தார் மற்றைய சமூகத்தாரைப் பரிகாசம்செய்ய வேண்டாம் ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்' (ஸுரா அல்ஹுஜுராத்:11)
கேலி செய்யபவர்களைவிட கேலி செய்யப்படுபவர்கள் மேலாகவர்களாக இருக்கலாம் எனவும் பரிகாசம் செய்ய வேண்டாம் எனவும் அல்குர்ஆன் கட்டளை பிறப்பிக்கின்றது. இஸ்லாத்தின் பார்வையில் பொய்யான வார்த்தைகள் மூலம் ஏமாற்ற , முட்டாளாக்க , கேலி முயற்சிப்பவர்கள்தான் உண்மை முட்டாள்களாவர்.
மனம் புன்படச் செய்தல்:-
உலக முட்டாள்கள் தினம் எனும் போர்வையில் நடந்தேறும் காரியங்களின் தொடர் வரிசையில் பிறர் மனம் புன்படச் செய்து இன்புரும் செயலும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தினத்தினை கொண்டாடுவதன் மூலம் பிறர் மனதை புன்புடுத்துவதற்கு உலகலாவிய ரீதியில் அங்கீகாரத்தினை வழங்குகிறார்கள்.

ஆனால் இஸ்லாம் பிறர் மனம் புன்படும்படி நடந்து கொள்வதனை வன்மையாக கண்டிக்கின்றது. கேலிக்கை , விளையாட்டு எனும் பதாதைகளை ஏந்திக் கொண்டு செய்தாலும் அது இஸ்லாத்தின் பார்வையில் தடுக்கப்பட்டதே என்பதில் கடுகளவும் ஐயம் கிடையாது. இத்தினத்தில் பரப்பப்படும் பொய்களை நம்பி மனவேதனை அடைபவர்கள் உண்மையில் முட்டாள்கள் அல்ல இஸ்லாமிய கண்ணோட்டத்தில் உண்மையான முட்டாள்கள் மனம்புன்படும்படியான பொய்யான செய்திகளை பரப்புபவர்களே.
உறவுகள் பிரிதல்:-
குறித்த தினத்தில் பொய்யான செய்திகளை பரப்பி ஏமாற்றி கேலி செய்வதன் மூலம் மனம் புன்படுவது மாத்திரமின்றி உறவுகளுக்கிடையிலும் விரிசல்களும் ஏற்படுவதனை அறியலாம். நண்பர்கள் , உறவினர்கள் மத்தியில் இவ்வாறு பரிகாசமாக பொய் பேசுவதன் மூலம் எத்தனையோ உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு உறவுகள் விரிசலடையவும் உலக முட்டாள்கள் தினம் காரணியாக அமைந்துவிடுகிறது.

உண்மை பேசுவது உயர்வு தரும் உறவுகளின் மத்தியில் பினைப்பையும் உறுதியையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தும் ஆனால் பொய் பேசுவது உறவுகள் மத்தியில் பிரிவையும் இழிவையும் தரும் என்பதனை இத்தினத்தில் பொய் பேசியதனால் பிரிந்த எத்தனையோ உள்ளங்கள் சான்றுபகர்கின்றன.
மேற்கத்தேய கலாசாரத் திணிப்பு:-
அது மாத்திரமில்லாது ஐரோப்பாவில் தோற்றம் பெற்ற மேற்கத்தேய சலாசாரமான உலக முட்டாள்கள் தினம் அனைத்துலக மக்கள் மீதும் திணிக்கப்படுகின்றது. பொய்யர்கள் தோற்றம் பெற, பொய்க்கான சர்வதேச அங்கீகாரத்தினை வழங்குகின்றது.

இவ்வாறு பொய், ஏமாற்றம், கேலி , பிறர் மனம் புன்படல், உறவுகளில் விரிசல், மேற்கத்தேய கலாசாரத்திணிப்பு என பல இஸ்லாத்திற்கு முரணான அம்சங்களை 'உலக முட்டாள்கள் தினம்' என்ற முத்திரை பதித்து சுமந்துவரும் இந்த சர்வதேச தினம் முஸ்லிம்களால் புறக்கனிக்கப்பட வேண்டிய ஒன்றே. அதே போன்று இஸ்லாத்தின் பார்வையில் உண்மையான முட்டாள்கள் உலக முட்டாள்கள் தினத்தில் முட்டாளாக்கப்படுபவர்கள் அல்ல மாறாக பிறரை முட்டாளாக்குபவர்களே.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சமையலறைக் குறிப்புகள்.

சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்க்காமல் இருக்க நமது சமையலறையில் ' சர்க்கரை ' முக்க...

Popular Posts