லேபிள்கள்

திங்கள், 19 பிப்ரவரி, 2018

சிறுநீரகக்கல்

சிறுநீரகக்கல்

ஆயுர்வேதம் சித்த மருத்துவம்.

கல்லும் மெல்லக் கரையும்
பொறுக்க முடியாத அடி வயிற்று வலியோடு, ஒரு நடுத்தர வயதுக்காரர் இரவு இரண்டு மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டினார். நான் உறக்கத்தை விட்டு எழுந்து வந்து அவரை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு, உங்கள் சிறுநீர்ப்பையில் கல் உள்ளது. அதனால்தான் இந்த வயிற்றுவலி என்றேன். உடனே அவர் அருகில் நின்று கொண்டிருந்த தன் மனைவியிடம் மிகக் கோபமாகச் சொன்னார்: அரை ரூபாய்க்கு ஆசைப்பட்டு அந்தப் பெட்டிக்கடை அரிசியை வாங்க வேண்டாம்னு தலையில அடிச்சி அடிச்சிச் சொன்னேன். கேட்டியா? அரிசியில் சரிபாதிகல்லு! அதை வச்சி இட்லி செய்துபோட்டா கிட்னியில் கல்லு வராம என்ன செய்யும்?

இப்படி அரிசியில் உள்ள கல்தான் சிறுநீரகக் கல்லாக உருவாகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை. நாம் குடிக்கும் தண்ணீரிலும் உண்ணும் உணவிலும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பேட், ஆக்ஸலேட், யூரிக் அமிலம், சிஸ்டைன், ஜான்தைன், ஸ்ட்ரூவைட் என்று பல தாது உப்புகள் உள்ளன. சாதாரணமாக இவை சிறுநீரில் கரைந்து வெளியேறிவிடும். சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் எல்லையைத் தாண்டும் போது, அடர்த்தி அதிகமாகிவிடும். இதன் விளைவால், தண்ணீர்க் குழாயில் பாசி சேருகிற மாதிரி இவை சிறுநீரகப்பாதையில் உப்புப்படிகமாகப் படிந்து, மணல் போல் திரண்டு விடும். ஆரம்பத்தில் சிறு கடுகு போலத் தோன்றும், நாளடைவில் பெரிய நெல்லிக்காய் அளவிற்கு அது வளர்ந்துவிடும். சிலருக்குக் கிரிக்கெட் பந்து அளவிற்கும் கல் உண்டாவது உண்டு.

சிறுநீரகக்கல் உருவாவதற்குப் பல காரணங்கள் உண்டு. தினமும் உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிக்காதது முதல் காரணம். கற்களை உண்டாக்கும் உப்புகள் மிகுந்த உணவுகளை அதிகமாக உண்பது அடுத்த காரணம். சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி கிருமித்தொற்று ஏற்படுவது இன்னொரு காரணம். இது எப்படியென்றால், கிருமிகள் சிறுநீர்ப்பாதையின் தசைச்சுவரை அரித்துப் புண்ணாக்கும்போது, அங்கு பல்லாங்குழிகளைப் போல பல குழிகள் உண்டாகும். இவற்றில் சிறுநீரின் உப்புகள் தங்கும். அப்போது சிறுநீரகக்கல் உருவாகும். அடுத்ததாக, ஆண்களுக்கு 50 வயதிற்கு மேல் புராஸ்டேட் சுரப்பி வீங்கிக் கொள்ளும். அப்போது சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். இதனால் சிறுநீர்ப்பையிலும் சிறுநீர் தேங்கும். விளைவு, சிறுநீரகக்கல்! இன்னும் சிலருக்கு பேராதைராய்டு இயக்குநீர் மிகையாகச் சுரந்து ரத்தத்தில் கால்சியத்தின் அளவை அதிகரித்துவிடும். இதனாலும் சிறுநீரகக்கல் உண்டாகும்.

சிறுநீரகக்கல் சிறுநீரகத்தில் இருக்கலாம். சிறுநீர்ப்பையில் இருக்கலாம். அல்லது இந்த இரண்டையும் இணைக்கின்ற சிறுநீர்க்குழாயில் இருக்கலாம். ஏன், சிறுநீர்த் தாரையிலும் இருக்கலாம். எங்கிருந்தாலும் சரி அது சும்மா இருப்பதில்லை. விருந்துக்கு வந்த வீட்டிலேயே திருடின கதையாக, அது தங்கியிருக்கும் இடத்தையே பழுதாக்கும். மேலும் அது சிறுநீர்ப்பாதையை அடைத்து, சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்து, சிறுநீரகத்திற்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். வீங்கிய சிறுநீரகத்தில் நோய்க் கிருமிகள் எளிதாகத் தொற்றிக்கொள்ள அது விரைவிலேயே செயலிழந்துவிடும்.

சிறுநீரகத்தில் கல் இருந்தால் வலது அல்லது இடது பக்கக் கீழ்முதுகில் வலி ஏற்படும். சிறுநீர்க்குழாயில் இருந்தால் வலி விலாவிலிருந்து வயிற்றுக்கும் விரைக்கும் பரவும். சிறுநீர்ப்பையில் இருந்தால் அடிவயிறு வலிக்கும். அத்தோடு நீர்க்கடுப்பு, வாந்தி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல் ஆகிய அறிகுறிகளும் சேர்ந்து கொள்ளும். சமயங்களில் கற்களோடு நோய்த்தொற்றும் கைகோர்த்துக் கொண்டால் குளிர்காய்ச்சலும் வரலாம். எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கல் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமாக 3 - 6 மி.மீ. அளவில் கல் இருந்தால் அது மெல்ல மெல்லக் கரைந்து தானாகவே வெளியேறிவிடும். 2 செ.மீ. வரை உள்ள கற்களை லித்தோட்ரிப்சி எனும் மின் அதிர்வு அலைகளைச் செலுத்தி, கல்லை உடைத்து, அது தானாகச் சிறுநீரில் வெளியேறும்படிச் செய்யலாம். சிறுநீர்க்குழாயில் உள்ள கல்லை லித்தோகிளாஸ்டி எனும் கருவியை சிறுநீர்த்தாரை வழியாகச் செலுத்தி உடைத்து விடலாம். 2 செ.மீ.க்கு மேல் உள்ள கல்லை சாவித்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்.

உணவு உட்கொள்ளும் முறை:
பொதுவாக, பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களுக்கே சிறுநீரகக்கல் உருவாவதற்கு 3 மடங்கு வாய்ப்பு அதிகம். அதிலும், அலுவலகத்தில் பணிபுரிபவர்களைவிட வெயிலில் வேலை செய்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகமாக வருகிறது. ஆதலால் இவர்கள்தான் சிறுநீரகக் கல்லைக் கரைக்கவும் தடுக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக கோடை காலம் சிறுநீரகக் கல்லுக்கு வசந்த காலம். வெயில் காலத்தில் வியர்வை மூலம் அதிக நீரிழப்பு ஏற்படுவதால் சிறுநீரின் அளவு குறைந்துவிடும். இதனால் சிறுநீர்ப் பாதையில் சிறுநீரகக்கல் உருவாக வாய்ப்புக் கிடைக்கும். இந்தச் சமயத்தில் தினமும் 10 தம்ளர் - அதாவது 2 லிட்டர் - தண்ணீர் குடிக்க வேண்டும். அத்தோடு இளநீர், பார்லி நீர், எலுமிச்சைச் சாறு, நீர் மோர், பழரசங்கள் சாப்பிட வேண்டியதும் முக்கியம். தினமும் இரண்டு வேளை காபி போதும். தேநீர் அறவே வேண்டாம். நாளொன்றுக்கு 250 மி.லி. பால் போதும். அதுபோல் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களைக் குறைத்துக் கொண்டால் நல்லது. கோக்கில் தயாரிக்கப்பட்ட பானங்கள் ஆகாது.

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்பு அதிகம். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். அசைவம் அவசியம் என்று ஒற்றைக் காலில் நிற்பவர்கள் சிறிதளவு கோழிக்கறி சாப்பிடலாம். மீன் சாப்பிடலாம். முட்டை எந்த வடிவத்திலும் வேண்டாம். மேலும் கால்சியம், ஆக்சலேட், பாஸ்பேட், யூரிக் அமிலம், சிஸ்டின் ஆகிய உப்புகள் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, ஐஸ்கிரீம் ஆகியவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளது. கருப்புத் திராட்சை, வெள்ளரிக்காய், நெல்லிக்காய், தக்காளி, அவரை, பீட்ரூட், கீரைகள் (குறிப்பாகப் பசலைக்கீரை), இலந்தைப்பழம், சீத்தாப்பழம், முந்திரி போன்ற உலர்ந்த பழங்கள், தேநீர், கோக், சாக்லேட் முதலியவற்றில் ஆக்சலேட் மிகுதி. காலிஃபிளவர், பூசணி, காளான், கத்தரிக்காய், வெண்டைக்காய், பேரிக்காய், கொய்யா ஆகிய காய்கனிகளிலும் முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா பருப்பு போன்ற உலர்ந்த கொட்டைகளிலும் ஆட்டு இறைச்சியிலும் யூரிக் அமிலம் அதிகம். இந்த உணவுகளை எல்லாம் தவிர்த்து விடுங்கள். இயலாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள்.

முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவை சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கின்றன. ஆகையால் இவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள். காய்களில் காரட், பாகற்காய், வாழைப்பூ முதலியவற்றைச் சேர்க்கலாம். பழங்களில் வாழைப்பழம், அன்னாசி, ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

சிறுநீரகக்கல் உள்ளவர்கள் வாழைத்தண்டு சாறு சாப்பிடுவது நல்லது. இது சிறுநீர்ச் சுரப்பை அதிகப்படுத்தும். கல்லைக் கரைக்கும் தன்மையும் இதற்குண்டு. சிறுநீரகக்கல்லுக்கான அறிகுறிகள் தொடங்கிய உடனேயே இந்தச் சாறைச் சாப்பிட்டால் மிளகு அளவில் இருக்கும் கற்கள் அதி விரைவில் கரைந்து சிறுநீரில் வெளியேறிவிடும். அதற்காக திராட்சை அளவிற்கு வளர்ந்துள்ள கல்லும் இதனால் கரைந்துவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts