லேபிள்கள்

வெள்ளி, 23 ஜூன், 2017

பணம் அதிகம் புரளும்போது பண்ணக்கூடாத தவறுகள்!

பி.பத்மநாபன், நிதி ஆலோசகர், Fortuneplanners.comவினை விதைத்தவன் வினை அறுப்பான்; திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்பது பழமொழி. கையில் நிறைய பணம் இருக்கும்போது, அதை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல், பல தவறுகளை செய்கிறோம். எல்சிடி  டிவி ஒன்று 30,000 ரூபாய் என்றாலும் அதிகம் யோசிக்காமல் வாங்குகிறோம். 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காருக்கு ஆசைப்படுகிறோம். ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் என்று எதை எதையோ வாங்குகிறோம்.

ஆனால், கையில் உள்ள பணமெல்லாம் தீர்ந்தபிறகுதான், வாங்கிய பொருட்களினால் நமக்கு என்ன பிரயோஜனம் என்று யோசிக்கத் தொடங்குகிறோம். அப்போது வாங்க நினைக்கும் அத்தியாவசிய பொருளினை வாங்குவதற்கு பணமில்லாமல் தவிக்கிறோம். மீண்டும் கடன் வாங்கும் கட்டாயச் சூழலுக்குத் தள்ளப் படுகிறோம்.
சிலர் வேடிக்கையாக இப்படிச் சொல்வார்கள்... பணக்காரர்கள் ரிஸ்க் எடுக்க வேண்டிய நிலையில் இல்லை; இருந்தாலும் அவர்களிடம் பணம் அதிகம் இருப்பதால், அவர்களால் ரிஸ்க் எடுக்க முடி கிறது. அதனால் அவர்களிடம் மேலும்மேலும் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. ஏழை எளியவர்களிடம் பணம் இல்லை; அதனால் அவர்களால் ரிஸ்க் எடுக்க முடிவதில்லை. எனவே, அவர்கள் மென்மேலும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சற்றே சிந்தித்தால், இது வேடிக்கை அல்ல; முற்றிலும் உண்மை என்று தெரியும்.

நம் வாழ்கைக்குப் பணம் மிக முக்கியம். ஆனால், பணத்தை எப்படி நிர்வாகம் செய்வது, எதற்காக செலவழிப்பது, எதற்காக செலவழிக்கக் கூடாது, பணத்தை எப்படி பல மடங்காகப் பெருக்குவது என்பதைப் பற்றி நமக்கு பாடப் புத்தகத்திலோ அல்லது கல்லூரியிலோ யாரும் சொல்லித் தருவதில்லை. எனவேதான், அதிகமான பணம் நம் கையில் புரளும்போது அதை எப்படி செலவழிப்பது என்று தெரியாமல் பல தவறுகளை செய்கிறோம். நம் கையில் அதிகமான பணம் புரளும்போது நாம் என்னென்ன தவறுகளை செய்கிறோம், அந்தத் தவறுகளை செய்யாமல் இருப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சரியாகத் திட்டமிடாமல் இருப்பது!
பணம் என்பது ஒரு மூலதனம். அது நம்முடைய கையில் இருக்கும்போது, நாம் அதை நன்றாகத் திட்டமிட்டுச் செலவழிக்க வேண்டும் அல்லது சேமிக்கவோ முதலீடு செய்யவோ வேண்டும். ஆனால், இன்றைய நிலையில் எத்தனை பேர் அதைச் செய்கிறோம்? பணம் கைக்கு எப்போது வரும் என்று காத்திருந்து, அதை உடனே தேவையில்லாத விஷயங்களுக்குச் செலவு செய்வதில் நாட்டத்தைச் செலுத்துகிறோம். இதனால் நம் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பணத்தினை இழந்து நிற்கிறோம்.
நம் வாழ்வில் இன்றியமையாத எதிர்கால இலக்குகள் எனில்
  நம்முடைய ஓய்வுக்காலத்துக் கான திட்டமிடல், நம்முடைய குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களது திருமணம்தான். இன்று கல்வி வியாபாரமாகி விட்ட நிலையில், நாம் விரும்பிய வற்றைப் படிக்க நமக்குப் பணம் தேவைப்படுகிறது.
மேலும், திருமணம் என்பது மிகப்பெரிய அளவில் செலவு
  பிடிக்கும் விஷயமாக மாறிவிட்டது. அது ஒருவருடைய நீண்ட காலச் சேமிப்பை ஓரிரு நாட்களில் கரைத்துவிடும். ஆகையால், பணம் கையில் இருக்கும்போது மேலே குறிப்பிட்ட எதிர்காலத் தேவை களுக்குச் சரியாகத் திட்ட மிடுவதே முதல் கடமையாகும். திட்டமிடாமல் இருக்கும் தவறினை மட்டும் நாம் செய்யவே கூடாது.

தங்கத்தில் அதிக முதலீடு!
தங்கம் என்பது ஒரு உலோகம். அதை அணிந்துகொள்வது சமுதாயத்தில் அந்தஸ்து என்பது மட்டுமே. ஆனால், மக்கள் இதைக் கருத்தில்கொள்ளாமல், அதை முக்கியமான முதலீடாகக் கருதுகிறார்கள். இதனால் பணம் கைக்கு வரும் சமயங்களில் முதல் வேலையாக தங்கத்தை வாங்கி வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
நம்முடைய இந்திய ரூபாயின் தொடர் வீழ்ச்சியினால்தான் தங்கத்தின் மதிப்பானது தொடர்ந்து உயர்ந்துவருகிறது. ஆனால், கடந்த நான்கு ஆண்டு களில் எந்தவித லாபமும் தங்கத்தினால் கிடைக்கவில்லை. இருந்தாலும், தங்கத்தின் மேல் உள்ள மோகம் குறையவில்லை.

நகையாக வாங்கும் சமயத்தில் நாம் செய்கூலி மற்றும் சேதாரத்தில் ஏறக்குறைய 20% இழக்கிறோம். எப்படிக் காய், கனிகளுக்கு ஏசி போடப்பட்டு விலை அதிகம் விற்கப்படுகிறதோ, அதேபோலத்தான் நகைக்கடைக் காரர்கள் விளம்பரம், கடைக் கான பராமரிப்பு என மற்ற அனைத்து செலவுகளுக்கும்  நம்மிடம் இருந்தே வெவ்வேறு உருவத்தில் பணத்தைக் கறக்கிறார்கள். நம் வீட்டுக்குத் தேவையான அளவு கொஞ்சம் தங்கத்தை வாங்குவதில் தவறில்லை. ஆனால், கையில் இருக்கும் பணம் அனைத்துக்கும் தங்கம் வாங்கும் தவறை  செய்யக் கூடாது.

ஒன்றுக்கு மேல் வீடு!
ஒருவருக்கு ஒரு வீடு என்பது இன்றியமையாதது. ஆனால், இரண்டு, மூன்று, நான்கு என்று சேர்த்துக்கொண்டே போவது தவறான முதலீடாக முடிய வாய்ப்புண்டு. நம் பெற்றோரை விட நாம் இன்று வேலை மற்றும் பணம் சேர்ப்பதில் நன்றாகவே இருக்கிறோம். எதிர்காலத்தில் நம்மைவிட நம் குழந்தைகள் கண்டிப்பாக நன்றாக இருப்பார்கள். இந்த உண்மை நமக்கு தெரிந்திருந்தாலும் பிள்ளைகளின் நலனுக்காக என கையில் பணம் புரளும் போதெல்லாம் சில நூறு சதுர அடி இடத்தை வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

இப்படி செய்வது தவறு என்பதற்குக் காரணம், கடந்த நான்கு வருடங்களில் ரியல் எஸ்டேட் மூலம் சொல்லும்படியான லாபம் எதுவும் கிடைக்கவில்லை.
  சொல்லப்போனால், மும்பை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் ரியல் எஸ்டேட் மதிப்பு 15 முதல் 20 சதவிகிதம் குறைந்திருக்கிறது. சென்னை யிலும் ஏறக்குறைய அதே நிலைதான்.  என்றாலும்  நம்மில் பலர் பணத்தை மண்ணிலோ அல்லது பொன்னிலோ போடத்தான் நினைக்கிறார்கள்.  இருப்பதற்கு ஒரு வீடு கிடைத்து விட்டால், அடுத்தடுத்து வீடுகளைச் சேர்க்க வேண்டிய தவறினை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

தேவையில்லாமல் இன்ஷூரன்ஸ் எடுப்பது!
இன்ஷூரன்சின்
  முக்கியத் துவத்தை இன்றைக்கு  பெரும்பாலான மக்கள் நன்கு உணரவே செய்திருக்கிறார்கள. ஆனால், தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே வேதனை. இதனால் கையில் பணம் கிடைக்கும்போதெல்லாம் தன் பெயரிலும், தன் வீட்டு உறுப்பினர்களின் பெயரிலும் பல வகையான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள்.
குறிப்பாக, குறைந்த கவரேஜ் கொண்ட, ஆனால் பிரீமியம் அதிகமுள்ள பாலிசிகளை எடுத்துவிடுகிறார்கள்.

ஒருவர் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியது அவசியம்தான். அதுவும் கையில் பணம் இருக்கும்போது முதலில் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள் வோம் என்று நினைப்பது சரியான முடிவுதான். ஆனால், ஆயுள் காப்பீட்டு  வகைகளில் உயிர் பாதுகாப்புக்கு மிகச் சரியான  டேர்ம்  இன்ஷூரன்ஸை யும், உடல் பாதுகாப்புக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸையும் எடுத்துக்கொள்வதுதான் நல்லது. குறிப்பாக, குழந்தைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி மற்றும் பென்ஷன் பாலிசி திட்டங்கள் வேண்டவே வேண்டாம். இன்ஷூரன்ஸ் திட்டங்கள் பாதுகாப்புக்கே தவிர, ஒரு போதும் முதலீடாகிவிட முடி யாது. தயவுசெய்து குழப்பி கொள்ளாதீர்கள்.

செலவு எனும் மாய வலை!
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் சேமிப்ப தற்காகச் சம்பாதிப்பதில்லை. செலவு செய்வதற்காகவே சம்பாதிக்கிறார்கள். ஆடம்பர மான இந்த உலகத்தில் அவர்கள் தங்களைப் பொருத்திக் கொண்டு, அதில் கிடைக்கும் மாயச் சுகத்தை அனுபவிப்ப தற்காகச் சம்பாதிக்கும் சம்பளம் அனைத்தையும் செலவுசெய்து சீரழிகிறார்கள்.
பணம் கையில் புரளும் இந்த நேரத்தில் இவர்கள் மட்டுமல்ல, வயதில் மூத்தவர்கள்கூடச் சற்று தடம்மாறி செலவுசெய்யும் ஆசைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். ஆனால்,
  அனாவசியமாக செலவு செய்வதைத் தவிர்த்து, சம்பாதிக்கத் தொடங்கிய காலத்திலேயே சேமிக்கவும் முதலீடு செய்யவும் தொடங்கி னால்,  ஓய்வுக்காலத்தின்போது பெரிய தொகை நம்மிடம்  சேர்ந்திருக்கும். தவிர, இடை யிடையே ஏற்படும் தேவை களுக்கும் இந்த முதலீட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்தத் தவறையும் நாம் செய்யக் கூடாது.

பணவீக்கம் என்னும் எதிரி!
பணவீக்கத்தை நம் கண்ணுக்குத் தெரியாத எதிரி என்று சொல்லலாம். ஏனெனில் பணத்துக்கென்று எந்தவொரு நிலையான மதிப்பும் கிடையாது. அதற்கு பர்ச்சேஸிங் பவர் மட்டுமே உண்டு. அது நாள் ஆக ஆகக் குறையும். இதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை. எனக்கு வங்கியில் உத்தரவாதமாக 8% வட்டி கிடைக்கிறது. அது எனக்குப் போதும் என்றே பலரும் சொல்கிறார்கள்.
ஆனால், உண்மையான பணவீக்கம், அதாவது விலைவாசி உயர்வு 8 சதவிகித மாக இருக்கும்போது, வங்கி டெபாசிட் மூலம் கிடைக்கும் வருமானம் விலைவாசி உயர்வுக்கே சரியாகப் போய் விடும் என்பதை பலரும் புரிந்து கொள்வதே இல்லை. எனவே, பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் நமக்குக் கிடைக்கும் முதலீட்டினை நாம் தேர்வு செய்தாக வேண்டும். உத்தர வாதம் தரும் முதலீடு என்று நினைத்து, பணவீக்கம் என்னும் எதிரியிடம் நாம் தோற்றுப் போகும் தவறினை செய்யவே கூடாது. அப்படிச் செய்தால், எதிர்காலத்தில் நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது.
  

பேராசை கூடவே கூடாது!
பணம் கையில் இருக்கும் போது முதலீடு செய்ய ஒருவர் நினைத்தாலும், எதில் முதலீடு செய்கிறோம், தற்போது அந்த முதலீட்டுத் திட்டத்தின் வருமானம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால், இதைப் பார்க்காமல் பணம்தான் கையில் இருக்கிறதே, ரிஸ்க் அதிகமுள்ள திட்டத்தில் போட்டால்தான் என்ன என்று நினைக்கும் தவறினை செய்து
  பிரச்னையில் சிக்கிக்கொள்ளக் கூடாது.
இன்றைக்கும் தமிழகம் முழுக்க பல பொன்சி திட்டங்கள் கனஜோராக நடந்து வருகின்றன. இந்தத் திட்டங்களில் பணத்தைப் போட்டால், சில ஆண்டுகளில் இரு மடங்காகும், மூன்று மடங்காகும் என்று கவர்ச்சி காட்டுகிறார்கள். அட, இவ்வளவு லாபம் கிடைக்குமா என்று மயங்கும் மக்களும் சற்றும் யோசிக்காமல் இந்தத் திட்டங்களில் பணத்தை போடு கிறார்கள். சில நகரங்களில் உள்ள அப்பாவி மக்கள் தங்கள் வீட்டை விற்றுக்கூட இது மாதிரியான திட்டங்களில் பணத்தைப் போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆனால், ரிசர்வ்
  வங்கியிடமோ அல்லது அரசிடமோ எந்த வகையிலும் முறையாக அனுமதி வாங்காமல் நடத்தப்படும் இந்த நிறுவனங்களில் பணத்தைப் போடுவது கஷ்டப்பட்டு சம்பாதித்த நம் பணத்தை சாலையில் வீசி எறிவதற்கு சமம்.

எந்தவொரு தனியார் நிறுவனமாக இருந்தாலும் அதில் நாம் பணத்தைப் போடும்முன், அந்த நிறுவனம் என்ன தொழில் செய்கிறது, இரு மடங்கு, மூன்று மடங்கு லாபம் தரும்  என்கிறார்களே, எப்படி சாத்தியம், அரசிடம் முறைப்படி எல்லா அனுமதி களையும் வாங்கி இருக்கிறார்களா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். இவற்றையெல்லாம் பார்க்காமல் விட்டுவிட்டு, பிற்பாடு பணத்தை இழந்து விட்டோமே என்று வருத்தப் படக்கூடாது.

குறைந்த அளவு முதலீடு!
பங்குச் சந்தை என்றால் பலரிடமும் தேவையற்ற பயம் இருக்கிறது. அதை சரியாக புரிந்து கொள்ளாமல் அதில் முதலீடு செய்துவிட்டு, பிற்பாடு சூதாட்டம் என்று புலம்புகிறவர் கள் அதிகம்.
பங்குச் சந்தை முதலீடு என்பது நாம் ஒரு சொந்த தொழிலுடன் இணைந்தி ருப்பதற்குச் சமமானது. சொந்த தொழிலில் வருமானத்தைத் தொடர்ச்சியாகப் பெற கால அவகாசம் எடுத்துக்கொள்வது போல, பங்குச் சந்தை முதலீட்டுக்கும்
  கால அவகாசம் தரவேண்டும். குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டு காலம் முதலீடு செய்து காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் அதன் மதிப்பு குறைந்தால் நம் கையில் பணமிருக்கும் பட்சத்தில் அதில் முதலீடு செய்வது நல்லது.

எல்லா மக்களும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஏற்ற இறக்கம் உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக அதில் முதலீடு செய்வதில்லை. ஏற்ற இறக்கம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சம். ஆனால் நீண்ட காலம் இருப்பதன் மூலம் அந்த ஏற்ற இறக்கத்திலிருந்து  நம்மால் தப்பிக்க முடியும்.
தவிர, ஒரு முதலீட்டில் நீண்ட காலத்துக்கு இருக்கும்போது, கூட்டு வட்டியினால் ஏற்படும் பலன் நமக்குக் கிடைக்கிறது. எனவேதான், உலகின் மிகப் பெரிய விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,
  "கூட்டு வட்டியானது உலகின் எட்டாவது அதிசயம்'' என்றார். இந்த உண்மையைப்  புரிந்துகொண்டவர்கள்  பணத்தைப் பெருக்குகிறார்கள். புரியாதவர்கள் பணத்தை இழக்்கிறார்கள்.
கையில் அதிக பணம் இருக்கும்போது செய்யக்கூடாத தவறுகளை சொல்லிவிட்டோம்.
  இனியாவது இந்தத் தவறுகளை நீங்கள் செய்யாமல் இருப்பீர்கள் அல்லவா?


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சமையலறைக் குறிப்புகள்.

சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்க்காமல் இருக்க நமது சமையலறையில் ' சர்க்கரை ' முக்க...

Popular Posts