லேபிள்கள்

வியாழன், 9 மார்ச், 2017

உங்கள் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருக்கிறதா?


டி.வி, ஏ.சி, மொபைல் போன், லேப்டாப் என வீட்டுக்குத் தேவையானவற்றை அதிக விலை கொடுத்து வாங்கும் வீடுகளில்கூட, சில நூறு ரூபாயில் கிடைக்கும் முதலுதவிப் பெட்டிகள் இருப்பது இல்லை. நமக்கு ஏதும் ஆகாது எனும் அலட்சியம் அல்லது என்றைக்கோ நடக்கும் விஷயத்துக்கு எதுக்கு எனும் மெத்தனம்தான் இதற்குக் காரணம். ஆபத்து, எந்த நொடியிலும் ஏற்படலாம். முதலில், அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியப் பொருளே முதலுதவிப் பெட்டிதான்.

கிருமிநாசினி
டெட்டால் போன்ற கிருமிநாசினிகள் அவசியம் இருக்க வேண்டும். உடலில் எந்த இடத்தில் அடிபட்டாலும், அடிபட்ட இடத்தின் வழியாக கிருமிகள் உடலுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க,  சிறிதளவு கிருமிநாசினியால் அடிபட்ட இடத்தைத் துடைக்க வேண்டும். வீடுகளில் ரத்தம் சிந்தியிருந்தாலோ, அசுத்தங்கள் நிறைந்திருந்தாலோ, தண்ணீரில் கிருமிநாசினி கலந்து, அந்த இடத்தில் தெளித்து, நன்றாகத் துடைத்தால் வீட்டுக்குள் கிருமிகள் அண்டாது.

பஞ்சு
காயங்கள் ஏற்பட்டாலோ, தோல் அரிப்பு, சிரங்கு, சீழ் வடிதல் போன்ற பிரச்னை ஏற்பட்டாலோ, பழைய துணிகளால் கட்டுப்போடுவது, அடிபட்ட இடத்தைத் பழைய துணியால் துடைப்பது கூடாது. பஞ்சை வைத்துதான் துடைக்க வேண்டும். பஞ்சைப் பயன்படுத்தியவுடன் உடனடியாகத் குப்பைத் தொட்டியில் எரிந்துவிட வேண்டும். பயன்படுத்திய பஞ்சுகளை, வீட்டுக்குள் வைத்திருக்கக் கூடாது. சிறிதளவு கெட்டித்தன்மை கொண்ட தரமான பஞ்சாகப் பார்த்து வாங்கவும்.

பேண்டேஜ்
எதிர்பாராதவிதமாக ஏற்படும் சின்னச்சின்னக் காயங்களுக்கு பேண்டேஜ் போட வேண்டியிருக்கும்.  சின்னக் காயங்களை  நன்றாகக்  கிருமிநாசினி வைத்துத் துடைத்த பிறகு, பேண்டேஜ் போடவும். நன்றாகப் புண் ஆறிய பிறகு, முதலுதவி செய்வதில் தேர்ந்தவர்கள் அல்லது மருத்துவர்கள் மூலமாக, பேண்டேஜை அகற்றலாம். வட்ட வடிவிலும், நீள வடிவிலும், சதுர வடிவிலும் பேண்டேஜ்கள்  கிடைக்கின்றன. பெரிய காயங்களுக்கு மருத்துவரின் அனுமதி பெற்ற பிறகுதான் பேண்டேஜ் அணிய வேண்டும்.

பாராசிட்டமால்
சாதாரண காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்கு எப்போதாவது பாராசிட்டமால் பயன்படுத்தலாம். ஓரிரண்டு மாத்திரைக்குள் நிவாரணம் கிடைக்காவிடில் மறுபடியும் பாரசிட்டாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள கூடாது. மருத்துவரை அணுக வேண்டும். அவசரத் தேவைக்கு மட்டுமே பாராசிட்டமால் பயன்படுத்த வேண்டும்.

ஐசார்டில்
மாரடைப்பு ஏற்பட்டால், இதயத் தசைக்கு ரத்தம் செல்வது தடைப்படும். மாரடைப்பு வரும் என உணரும் நொடியில் அல்லது மாரடைப்பு வந்த சில நொடிகளுக்குள் ஐசோசார்பைடு டை நைட்ரேட் (Isosorbide dinitrate)) இருக்கக்கூடிய ஐசார்டில் (Isordil) மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு, மிக விரைவாக மருத்துவமனையை நாடினால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது, ரத்தக்குழாய் அடைப்பைச் சற்று  தளர்த்தும். எனவே, உடல் எடை அதிகம் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வயதானவர்கள் வசிக்கும் வீடுகளில் கட்டாயம் ஐசார்டில் மாத்திரை இருக்க வேண்டும். இதயநோய் இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரையின்பேரில் இந்த மாத்திரையை மாரடைப்பு ஏற்படும் சமயங்களில் சாப்பிடலாம்.

தீக்காய மருந்து
தீக்காயம் ஏற்படும்போது, உடலில் நீர்ச்சத்து குறையும். எனவே, முதலில் குழாய் நீரில் தீக்காயம் ஏற்பட்ட இடத்தை நன்றாகக் கழுவ வேண்டும். அதன் பிறகு, தண்ணீர் குடிக்க வேண்டும். சில்வர் சல்ஃபாடையாசின் நிறைந்த களிம்புகளைத் தடவ வேண்டும். பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படும்போது, களிம்புகள் தடவக் கூடாது. மிக விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

வலி நிவாரணிகள்
வயிற்று வலி வந்தால், தற்காலிக நிவாரணம் கிடைக்க டைசைக்லமின் (Dicyclomine), டிரோட்டோவெரின்  (Drotoverine) உள்ள மாத்திரைகள் (உதாரணம்: பஸ்கோபான்) வாங்கி வைத்துக்கொள்ளவும். திடீர் காது வலி, பல் வலி, மூட்டுவலி ஏற்படும் சமயங்களில் வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படும்.

கையுறை
மருந்துகளைக் கையாளும்போதும், முதலுதவி செய்யும்போதும், தரமான கையுறை அணிந்துகொள்வது நல்லது. கையுறை அணிவதால் கையில் இருக்கும் அழுக்குகள் வழியாகக் கிருமிகள் மற்றவருக்குப் பரவாது. கையுறையைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

கத்திரிக்கோல்
காயம்பட்ட இடத்தில் முதலுதவி செய்யும்போது, பேண்்டேஜைக் கத்திரிக்க, கைக்கு அடக்கமான சின்ன கத்திரிக்கோல் தேவையாக இருக்கும். அவ்வப்போது துடைத்து, துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

டிட்பிட்ஸ்:
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முதலுதவிப் பெட்டியில் இருக்கும் மருந்துப் பொருட்களின் காலாவதித் தேதிகளை சோதித்து, அன்றைய தேதியில் இருந்து குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தள்ளி இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

வலி நிவாரணி, பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை வாங்கும்போது, 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையாக வாங்க வேண்டும். அப்போது
தான், காலாவதித் தேதியைச் சுலபமாக சோதனை செய்ய முடியும்.
இருமல் மருந்துகள் போன்றவற்றை, முதலுதவிப் பெட்டியில் வைக்க வேண்டாம்.
ஒன்று அல்லது இரண்டு வேளை தலா ஒரு மாத்திரை சாப்பிட்டும் பயனளிக்கவில்லை எனில், மருத்துவரை அணுக வேண்டும். தொடர்ந்து சுயமாக மாத்திரை சாப்பிடக் கூடாது.
முதலுதவிப் பெட்டிகளை, குழந்தைகள் கைக்கு எட்டாதவாறு வைக்க வேண்டும். முதலுதவிப் பெட்டியில் உள்ளவற்றை அவசர நேரத்தில் எப்படிப் பயன்படுத்துவது என, வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும் பெற்றோர் ் சொல்லித்தர வேண்டும்.
வலிப்பு, ஆஸ்துமா, ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பெண்கள் சமையலறையில் கேஸ் அடுப்பு பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

கேஸ் அடுப்பை பயன் படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமானது. கேஸ் அடுப்பை கையாளும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற...

Popular Posts