எழுதியது ஈரோடு கதிர்
பள்ளி செல்லும் சிறுவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை என்றால், அது நினைவாற்றல் குறைபாடுதான். ஒரு வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பாடத் திட்டம்தான். பாடம் நடத்துபவர் ஒரே ஆசிரியர்தான். கேள்வித்தாளும் ஒன்றேதான். விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியரும்கூட ஒருவரேதான். ஆனாலும் ஒரு வகுப்பில் படிக்கும் அனைவரும் சமமான ஒரே மதிப்பெண்களைப் பெற்றுவிடுவதில்லை. அனைத்து மாணவர்களும் சமமான மதிப்பெண்களை பெறாமல் போவதற்கு பற்பல காரணங்கள் இருந்தாலும், அதில் மிக முக்கியமானது படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் மறந்துபோவது. பல ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த எளிய யோசனைகள் நம் செல்லங்களுக்கு உதவும்
முக்கியமான சொற்கள்:
பொதுவாக பாடத்தில் இருக்கும் மொத்தப் பகுதியையும் படித்து நினைவில் வைத்துக்கொள்ளுதல் அவசியம். சிலருக்கு முழுவதுமாக மனனம் செய்யப்பட்டு நினைவில் இருக்கும், ஆனால் முதல் வார்த்தை நினைவுக்கு வராமல் தடுமாற்றம் ஏற்படும். ஒட்டுமொத்தமாக நினைவில் இருக்கும் பாடத்தை எளிதாக மீட்டெடுக்கும் வழிதான் முக்கியமான வார்த்தைகளைத் (keywords) தெரிவுசெய்து நினைவில் வைத்துக்கொள்ளுதல். அப்படி நினைவில் வைத்திருக்கும் சொற்களை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்திக் கொண்டால், குறிப்பிட்ட பகுதி எளிதில் எளிதில் நினைவில் வந்துவிடும்.
முழுமையாகப் படித்தல்:
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தி முடித்தபின், தனக்கு முழுவதுமாக புரிந்துவிட்ட பாடமாக இருந்தாலும் கூட, அன்றே அந்தப் பாடத்தை முழுமையாக ஒருமுறை படித்து நினைவில் நிறுத்திக்கொள்ளுதல் முக்கியம். ஆசிரியர் நடத்தி, தெளிவாகப் புரிந்த பாடத்தை முழுமையாக மீண்டும் ஒருமுறை படிக்கும்போது, அப்பாடம் ஆழமாக மனதில் பதிந்துவிடும்.
எழுதிப்பார்த்தல்:
படித்த பாடத்தை, புரிந்துகொண்ட பாடத்தை, நினைவில் வைத்திருக்கும் பாடத்தை இறுதியாக தேர்வில் நாம் எழுதிக்காட்டித்தான் வெளிப்படுத்தப் போகிறோம். ஆகவே படித்த, புரிந்த, நன்கு நினைவில் இருக்கும் பாடத்தை அவ்வப்போது எழுதிப் பார்ப்பது பலமுறை படிப்பதற்குச் சமம்.
சந்தேகம் கேட்டல்:
ஆசிரியர் பாடம் நடத்தும்போதே கூர்ந்து கவனித்தல் மிக முக்கியம். அதோடு ஆசிரியர் நடத்தும் பாடத்தில் வரும் மிகச்சிறிய சந்தேகங்களையும் உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டு அல்லது சக மாணவர்களிடம் விவாதித்து தெளிவு படுத்திக்கொள்ளுவதும் மிக மிக முக்கியம். இவ்வாறு ஆசிரியரிடம் சந்தேகம் கேட்டு தெளிவு பெற்ற பாடங்கள் மிகத் தெளிவாக மனதில் பதிந்துவிடும். எளிதில் மறக்காது
மீண்டும் மீண்டும் படித்தல்:
பிடித்த ஒரு சினிமா படத்தையோ, பாடல் காட்சியையோ ஒரே ஒரு முறை பார்ப்பதோடு நிறுத்தி விடுகிறோமா? பொழுதுபோக்கு அம்சமாய் இருக்கும் திரைப்படம், பாடல் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை குழந்தைகள் அளிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் பாடத்தை ஒருமுறை மட்டுமே படிப்பது எப்படி போதுமானதாக இருக்குமா? மனதில் ஆழமாகப் பதிந்த பாடமாகவே இருந்தாலும், நினைவில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, அந்தப் பாடத்தை மீண்டும் மீண்டும் படித்து நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். பாடங்களை மீண்டும் மீண்டும் வாசிக்க, ஒரு கால அட்டவணையைத் தயாரித்துக்கொள்ள வேண்டும். அந்த அட்டவணைப்படி பாடத்தை குறிப்பிட்ட இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் படித்தல் அவசியம்.
உணவு மற்றும் ஓய்வு:
தேர்வு சமயங்களில் எளிமையான சத்தான உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான உணவு என்ற வகையில் அதிகப்படியான பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை முடிந்தவரையில் தவிர்த்தல் நலம். தனது உடலுக்குத் தேவையான அளவிற்கு நிச்சயம் தூங்க வேண்டும். அதேபோல் தேர்வை நினைத்து பயப்படாமல், மனதையும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வு எழுதுவது குறித்து திட்டமிட்டுக்கொள்ளலாம். ஆனால் பயப்படத் தேவையில்லை.
ஆசிரியராக மாறுதல்:
தனக்குப் புரிந்த, நினைவில் இருக்கும் பாடத்தை நண்பர்களிடம் விவரிப்பது போல தனக்குத் தானே ஆசிரியராக மாறி, ஒரு வகுப்பு எடுத்தல் இன்னும் நல்ல பலன்களைத் தரும். தானே மாணவனாகவும் தானே ஆசிரியராகவும் மாறி ஒரு பாடத்தை விளக்கிவிட்டால் அது மறந்து போகுமா என்ன?
நண்பர்களிடம் விவாதித்தல்:
தனக்கு முழுவதுமாகப் புரிந்துவிட்டது, அதனால் இனி பிரச்சனைகள் இருக்காது என நினைப்பதுதான் சில நேரங்களில் பூதாகரமான பிரச்சனையாக மாறிவிடுகிறது. புரிந்துகொண்ட பாடத்தை, மீண்டும் மீண்டும் படிப்பதோடு, தான் படித்த, புரிந்துகொண்ட பாடத்தை, சக மாணவர்களிடம் விவரிப்பது என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ள ஒரு எளிய வழி.
தன்னம்பிக்கை:
பொதுவாக பிடித்த பாடம் பிடிக்காத பாடம் என்பதே புரிதலின் அடிப்படையில் உருவாகும் ஒன்று. புரிந்துகொண்ட பாடங்கள் அனைத்தும் பிடித்த பாடங்களாகவே அமைந்துவிடும். அடுத்து பாடங்களைப் படிக்கும்போது இதை நான் எளிதில் புரிந்துகொள்வேன், எனக்கு நினைவில் நிற்கும், தேர்வில் கேள்விகளுக்கு மிகச்சிறப்பாக விடை எழுதுவேன் எனும் தன்னம்பிக்கையோடு படிக்க வேண்டும். தன்னம்பிக்கைக் குறைவுதான் பெரும்பாலும் தேர்வு நேரங்களில் வீணான பதட்டத்தைக் கொண்டுவந்து பாடங்களை மறந்துபோகச் செய்கின்றது.
வழிமுறை அட்டவணை:
பொதுவாக ஒரு பாடத்தை மனதிற்குள் ஒரு வரைபடம்போல் வரைந்துகொள்ள வேண்டும். Flowchart எனப்படும் வழிமுறை அட்டவணை முறையில், பாடத்தில் இருக்கும் முக்கியச் சொற்களை அட்டவணைப் படுத்திக்கொண்டால் மிக எளிதாக முழுப் பாடத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக