லேபிள்கள்

புதன், 23 டிசம்பர், 2015

நல்லவற்றைப் பாராட்டுங்கள்!

கோவையைச் சார்ந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனம். அகில இந்தியாவிலும், எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் உண்டு. வெளிநாடுகளிலும் அலுவலகங்கள், உற்பத்தி செய்யும் ஆலைகள் உண்டு. பல நாடுகளுடன் கூட்டுத்தொழில் உண்டு. அப்படிப் பட்ட நிறுவனம் ஒரு குடும்பத்தாரால் நிறுவப்பட்டு, பல தலைமுறைகளாக வளர்க்கப்பட்டு, ஓர் ஆல மரமாக வளர்ந்துள்ளது. எல்லா நிறுவனங்களிலும் குடும்பத்தைச் சார்ந்தவர்களே நிர்வாக இயக்குநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு முக்கியமான நிறுவனத்தில் அவர்களது குடும்பம் சம்பந்தப்படாத ஒரு நபர் செயல் இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.
பல ஆண்டுகளாக அந்தக் குடும்பம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து, பதவி உயர்வு பெற்று இந்தப் பதவியை அவர் அடைந்திருந்தார். அவரது ஆளுமையின் காரணமாக . அவரது தலைமையில் அந்த நிறுவனம் பல மடங்கு வளர்ச்சி பெற்று முன்னேறியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள அந்த நிறுவனத்தில், மிகச்சிறந்த உறவுக ளோடும், நட்போடும் நிர்வாகம் நடந்ததற்கு அந்தச் செயல் இயக்குநர் தான் காரணம்.
நிர்வாகம் அவருக்குக் கொடுத்திருந்த சுதந்திரம், அதிகாரம் அனைத்தையுமே மனித நேயத்தோடும், சாதுர்யத்தோடும் தொழில் வளர்ச்சிக்காகவே ஒருமுனைப்படுத்தி, தொழிலாளர் களிடம் மிகுந்த மதிப்பைப் பெற்றிருந்தார். ஒருமுறை நடந்த விழாவின் போது அந்தச் செயல் இயக்குநரைக் =கடவுள்+ என்று ஒரு தொழிலாளி புகழ்ந்து சென்றார். ஒருவரைப் பிடித்துப் போய் விட்டால் நமது தமிழகத்தில் எல்லோரையுமே, =இந்திரன், சந்திரன், கடவுள், வழிகாட்டி+ என்று புகழ்வது வெகு இயல்பு. தகுதி வாய்ந்த ஒருவரைப் பாராட்டும்போது உணர்ச்சி வேகத்திலும், உற்சாகத்திலும் உயர்வு நவிற்சியில் =கடவுள்+ என்று சொன்னதில் தவறில்லை.
விழா முடிந்தபின் நிர்வாக இயக்குநர்களின் உறவினர் ஒருவர், =என்னங்க, உங்களை வைத்துக்கொண்டே மேடையில் உங்கள் செயல் இயக்குநரைக் கடவுள் என்று இப்படிப் புகழ்கிறார்களே! இது சரிதானா?+ என்று கொஞ்சம் வித்தியாசமான தொனியில் கேட்டிருக்கின்றார்.
அதற்கு மூத்த இயக்குநர், =அந்தப் பெருமை எங்களுக்குச் சேர்ந்ததல்லவா?+ என்றபடியே புன்னகைத்தபடி சென்றுவிட்டார்.
எவ்வளவு பெரிய மனது? எப்படிப்பட்ட உயர்ந்த குணம்?
ஒரு நிறுவனம் வெற்றிகரமாக நடந்து விட்டால், ஏதோ தன்னால்தான் இந்த வெற்றியெல்லாம் என்று ஆகாயத்தில் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்களை மிகவும் அலட்சியமாகப் பார்ப்பவர்கள் இருக்கக்கூடிய இந்த நாட்டில், நல்லவர்களைப் பாராட்டும்போது பெருமைப் பட்டு அதை ஆமோதிக்கின்ற அற்புத மனிதர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள். அவர்கள் நடத்தும் எந்தத் தொழிலுமே நிச்சயம் வெற்றி மேல் வெற்றி பெறும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பாராட்டுக்கு ஏங்கும் ஒரு பகுதி உண்டு. தான் சமைப்பதைக் குடும்பத்தில், உள்ளவர்கள் உண்டுதான் ஆக வேண்டும். அது அவர்கள் தலையெழுத்து என்று ஒரு குடும்பத் தலைவிக்குத் தெரிந்தாலும் =இன்னிக்கு கோழிக்குழம்பு சூப்பர்+ என்று கணவன் சொல்லும்போது ஏற்படும் உற்சாகம் எத்தனையோ மனவருத்தங்களை அழிக்கின்ற மாமருந்து அல்லவா?
ஆலையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலாளியாக இருந்தாலும் சரி, ஓர் அதிகாரியாக இருந்தாலும் சரி, தொடர்ந்து செய்யும் வேலைகளில் தவறு செய்தால் உடனே கண்டிக்கத் தெரிந்த மேலாளர்கள், நல்ல பணி ஒன்றைச் செய்யும்போது நான்குபேர் முன்னிலையில், பாராட்டும்போது ஏற்படுகின்ற மனநிறைவும், மகிழ்வும் சொன்னால் விளங்காது. அனுபவித்தால்தான் தெரியும். ஒருவரை உளமாரப் பாராட்டும்போது, பாராட்டுப் பெறுபவரும், பாராட்டுபவரும் அடைகின்ற மகிழ்ச்சி உற்சாகம், வெற்றி வெளிச்சத்தின் உச்சம் அல்லவா?
சில சமயங்களில் பாராட்டுக்குரியவரை, பாராட்டப்படவேண்டிய செயல்களை, பாராட்ட வேண்டிய பொருட்களைப் பாராட்டாமல் தவறில்லை.
ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் மற்றவர்களைப் பற்றி குறை சொல்லித் தூற்றும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.
வடநாட்டின் ஒரு பகுதியில் பிரசித்தி பெற்ற முகவர் எனது நண்பர். அவர் இறக்குமதியாகும் ஒரு புகழ்வாய்ந்த நிறுவனத்தின் இயந்திரங்களை நூற்பாலைகளுக்கு விற்றுவந்தார். இவர் இறக்குமதி செய்து விற்கும் இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனம் பெயர் பெற்ற நிறுவனமாக இருந்தாலும் குறிப்பிட்ட உற்பத்திக்கான தயாரிப்பில் அப்போது தான் ஈடுபட்டார்கள்.
ஏற்கனவே, இந்த நிறுவனத்தின் அளவு பெயர் பெற்ற, புகழ்வாய்ந்த நிறுவனம் ஒன்று அந்த இயந்திர உற்பத்தியில் முன்னோடியாக உள்ளது. சந்தையில் புதிதாக நுழைவதால், சில புதிய உபகரணங்களோடு சில முன்னேற்றங்களோடு நமது முகவர் பெருமை யோடும் உற்சாகத்தோடும் அறிமுக வேலையை ஆரம்பித்தார்.
அறிமுகத்திற்காக எழுதிய கடிதத்தில், தான் விற்கும் இயந்திரங்களை உபயோகித்தால் வருடத்திற்கு சில லட்ச ரூபாய்கள் சேமிக்கமுடியும் என்று கூறியிருந்தார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. இதற்குமுன் உபயோகித்து வந்த இயந்திரங்களால் அளவிடமுடியாத நட்டம் ஏற்படும் என்றும் அப்படியாகும் நட்டம், =கிரிமினல் வேஸ்ட்+ என்று குறிப்பிட்டுவிட்டார். =கிரிமினல் வேஸ்ட்+ என்று ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிட்டால், அது மிகப்பெரிய இழப்பாகவும், ஆலைக்கு மிகவும் ஆபத்தான பொருளாதாரத்தை ஏற்படுத்தும் என்பதோடு, மறைமுகமாக அந்த இயந்திரங்களைத் தேர்வு செய்து ஆலையை நடத்திவரும் நிர்வாகிகளைக் குறை சொல்வது மாதிரியும் அமைந்து விட்டது. இதனால் இவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராயிருந்த ஓர் ஆலையின் நிர்வாக இயக்குநருக்குப் பயங்கரமாகக் கோபம் வந்து விட்டது.
==என்னைக் =கிரிமினல்+ என்று எப்படி நீ அழைக்கலாம். உன்னுடைய இயந்திரங்களை வாங்காமல், பல காலமாக நான் உபயோகித்துப் பலன் அடைந்து வரும் இயந்திரங்களை உபயோகிப்பது கிரிமினல் குற்றமா? நாளை உன்னுடைய இயந்திரங்களை விடவும் சிறப்பான இயந்திரங்கள் சந்தைக்கு வந்தால், இன்று விற்பனையாகும் உனது இயந்திரங்களை வாங்குபவர்கள் =கிரிமினல்+களாகி விடுவார்கள் அல்லவா?
உனது இயந்திரங்களின் சிறப்பைக் கூறுவதை விட்டுவிட்டு, மற்றவற்றை இகழ்ந்து பேச நீ யார்? இனிமேல் எனது ஆலைக்குள் காலடி எடுத்து வைக்காதே. உன்னுடைய வேறு எந்தப் பொருளையும் வாங்கக்கூடாதென்று ஸ்டோர்ஸுக்கு உத்தரவு அளித்துள்ளேன்+ என்று காய்ந்து விட்டார்.
அவ்வளவுதான். இன்று வரை அந்த ஆலைக்குள் அவரால் நுழைய முடியவில்லை. அது மட்டுமல்ல. அந்த ஆலையின் நிர்வாக இயக்குனர். அவரது உறவினர் மற்றும் நண்பர்களையும் அழைத்து, இவரது கடிதத்தில் உள்ள வரிகளைப் படித்துக்காட்டி, இப்படிப்பட்ட ஆணவத்தோடு விற்பனை செய்யும் இவரை ஊக்குவிக்க வேண்டாம் என்று சிபாரிசும் செய்து விட்டார்.
நண்பர் மிகப்பெரிய வியாபார வாய்ப்புகளை மட்டுமல்ல. ஆண்டாண்டு காலமாகப் பழகிவந்த சில நல்ல நண்பர்களை, தனது வாடிக்கையாளர் களை இழந்துவிட்டார். ஒரே காரணம், மற்றவர்களை, அவர்களது தயாரிப்பை, சிறப்பை மதியாமல் போனதுதான்.
ஆயிரம் பொருட்கள் சந்தையில் உள்ளன. அத்தனை பொருட்களையும் யார் யாரோ வாங்கிச் செல்கிறார்கள். உபயோகத்தைப் பொறுத்தும், வாங்கும் சக்தியைப் பொறுத்தும் தரத்தை வாடிக்கையாளர்களே நிர்ணயித்து, அதற்குத் தகுந்த மாதிரி விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதில் எதையும் இகழ்ந்து பேசவோ, மதிப்பின்றிப் பேசவோ யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால், புகழ்ந்து பேசவும், பாராட்டவும் அனைவருக்குமே உரிமை உண்டு.
எதிர்மறையான எண்ணங்களும், வெளிப்பாடுகளும் நம்மை பாதிப்பது மட்டுமல்லாமல், நம்மைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதால் மனதைக்குறுகிய வட்டத்திற்குள் பிணைத்துவிடாமல், விசாலமாக்குவது மிக மிக அவசியம்.
ஜப்பான் நாட்டில் ஒரு பழக்கம் உண்டு. =டொயோட்டா+ நிறுவனம் தயாரிக்கும் கார்களில் மட்டும்தான் அங்கு பணிபுரிபவர்கள் வருவார்கள். அந்த நிறுவனத்துக்கும் உதிரிபாகங்கள், மூலப் பொருட்கள் வழங்குபவர்கள்கூட அந்த, =டொயோட்டா+ வாகனத்தை உபயோகப்படுத்த வேண்டுமென்றுகூட எதிர்பார்ப்பார்கள்.
இது நிறுவனத்தின் மீது உள்ள பக்தி, நம்பிக்கையின் வெளிப்பாடு, போட்டி நிறுவனமான ஹோண்டா, சுசூகி போன்றவற்றின் தயாரிப்புகளைப் பற்றிக் கேட்டால், குறை சொல்லமாட்டார்கள். =தெரியாது+ என்று புன்னகைத்தபடியே சென்று விடுவார்கள்.
ஏனோ, நமது தேசத்தில் மட்டும் நம்முடைய எல்லாமே, =ஒசத்தி+, மற்ற எல்லாமே தாழ்வு என்ற ஒரு அடிப்படை மனோபாவம் எல்லாச் செயல்களிலுமே பிரதிபலிக்கின்றது. நல்லதைப் பாராட்டும் குணநலன்களைப் பள்ளிப் பருவத்திலிருந்து குழந்தைகளுக்கு வீட்டிலும், பள்ளியிலும் கற்பித்து வந்தால் போதும், நமது எண்ணம் கூட மாறிவிட வாய்ப்புண்டு.
'ஷாங்காய் நகரில் பஞ்சாலை இயந்திரப் பொருட்காட்சி. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அதில் எங்கள் தாய் நிறுவனமான, =ஹெபாஸிட்+ பங்கு பெற்றது. அதில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, சைனாவில், =ஸ்பிண்டில் டேப்+ மற்றும் பெல்ட்கள் தயாரிக்கும், =நைபெல்ட்+ என்ற நிறுவனத்தின் அரங்கிற்குச் சென்றிருந்தேன். இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று மட்டும் அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களது, =ஸ்பிண்டில் டேப்+புகளைப் பற்றி விசாரித்து, அங்கிருந்து சாம்பிள்களைக் கையால் எடுத்துப் பார்த்தேன். உடனே அங்கிருந்தவர், =இது எங்களது புதிய தயாரிப்பு. இயகோகா டேப்புகளுக்கு இணையானது+ என்று கூறினார்.
நான் மிகவும் மகிழ்ச்சி என்று கூறிவிட்டு, எனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன். நான்தான் இயகோகா நிறுனத்தின் நிர்வாக இயக்குநர் என்று தெரிந்ததுமே, என்னை அமர வைத்து உபசரித்து, அங்குள்ள அவர்களது அதிகாரிகளை வரவழைத்து என்னை அறிமுகப்படுத்தி, இயகோகா டேப்புகள் சிறப்பானவை என்று கூறினார். ஒரு போட்டியாளர் என்று தெரிந்தும் அந்த நிறுவனத் தலைவர் அன்று என்னை நடத்திய விதம் எவ்வளவு பாராட்டுக் குரியது. போற்றத்தக்கது.
இன்று =நைபெல்ட்+ சைனாவில் நல்ல முன்னேற்றமடைந்து ஒரு சிறந்த நிறுவனமாக விளங்குகிறது. இயகோகா டேப்புகள் இந்தியாவி லிருந்து இன்றும் சைனாவிற்கு அதிகமாக ஏற்றுமதியாகின்றன.
வெற்றி வெளிச்சம் நல்லவற்றை பாராட்டு முனைபவர்களது முன்னேற்றத்தின் மீது என்றும் படிந்திருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
 இயகோகா சுப்பிரமணியன் - நமது நம்பிக்கை


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts