லேபிள்கள்

புதன், 21 மே, 2014

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

உங்கள் செல்வாக்கு வட்டம்
"யுத்தம் என்று வரும்போது, அதில் எல்லாமே எளிது. ஆனால், எது மிகவும் எளிதோ அதுதான் மிகவும் கடினம்". இது சீனப்பழமொழி. ஒரு தயாரிப்பு, பயன்படுத்த மிகவும் எளிது என்பதே வாடிக்கையாளர்களுக்கு சொல்லப் படுகிற செய்தி.
ஆனால் அந்தத் தயாரிப்பை அவ்வளவு எளியதாய் வடிவமைக்க எவ்வளவோ கடினமான நிலைகளை அவர்கள் கடந்து வந்திருக்க வேண்டும்.
மார்க்கெட்டிங் என்பது, ஒரு தயாரிப்பைக் கையாள்வது எவ்வளவு சுலபம் என்பதை கஷ்டப் பட்டு சொல்கிற காரியம். சந்தைப்படுத்துவதில், சரியான உத்திகள் கையாளப்பட்டால் அதுவரை எத்தனை சிரமப்பட்டிருந்தாலும் அத்தனையும் மறக்கும் விதமாக மாபெரும் வெற்றி சாத்தியமாகி விடும்.
அமெரிக்க சந்தையில் கால்வைப்பது என்று டொயோட்டா நிறுவனம் முடிவு செய்தபோது டொயோபெட் என்ற காரைக் கொண்டுவந்தது. அமெரிக்க சந்தையில் அது பெரும் தோல்வியைக் கண்டது. ஆனாலும், நீண்டகால அடிப்படையில், அமெரிக்காவின் கார் தயாரிப்பில் காலூன்ற அந்த அனுபவத்தை டொயோட்டா அடிப்படையாகக் கொண்டது.
விதம்விதமான முயற்சிகளால் சந்தையில் தன்னை தக்க வைத்துக் கொள்கிற எந்தத் தயாரிப்பும், தான் எட்டிய உயரம் பாதுகாப்பானது என்று நின்றுவிட முடியாது. தான் அடைந்திருக்கும் இடத்தைத் தக்க வைக்க அவ்வப்போது சிலவற்றை சரிபார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
"எளிதாகக் கையாளலாம்", "எங்கும் கிடைக்கிறது" என்பது போன்ற உத்திகளைத் தாண்டி, உங்கள் தயாரிப்பை தேடிப் பெறுவதில் வாடிக்கையாளர்கள் தனி அக்கறை காட்டுகிறார்களா என்பதை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு, போட்டி தயாரிப்புகள் மத்தியில் பெயர் சொல்லி கேட்டு வாங்கப்படுகிறதா என்பதைப் பார்ப்பது மிகவும் முக்கியம்.
"கடைக்காரரே! நல்லெண்ணெய் கொடுங்க!"
"எந்த நல்லெண்ணெய்மா". இந்த விளம்பரம் உங்களுக்கு நினைவிருக்கும். தயாரிப்பை பெயர் சொல்லிக் கேட்டு வாங்கும் அளவு அவர்களுடைய மனங்களில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் சூத்திரம்.
ஹியாட் ஹோட்டல்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளன. அதில் பணிபுரியும் உயர் அலுவலர்கள், ஒவ்வோர் ஆண்டும், ஒரு வார காலம், அந்த ஹோட்டல்களில் ரூம்பாய் வேலை பார்ப்பார்கள். வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நேரடியாய் அறிந்து கொள்வதற்கான உத்தி இது.
போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசப் படுவதற்கான முயற்சிகளை ஒரு தயாரிப்பை உருவாக்கிய பிறகும் தொடர முடியும். தயாரிப்பின் தன்மையில், தோற்றத்தில், உள்ளடக்கத்தில் அவ்வப்போது செய்துவரக்கூடிய மாற்றங்கள், சந்தையின் தேவைக்கேற்ப புதுமைகளைப் புகுத்தி தயாரிப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
அதேநேரம், ஒரு தயாரிப்போ சேவையோ ஆரம்ப நிலையிலேயே சந்தையில் தனித்த முத்திரை பதிக்கும் விதமாக உருவெடுத்து அதனாலேயே அபரிமிதமான வளர்ச்சியை அடையவும் முடியும்.
உலகின் பல பகுதிகளிலும் உருவான ஹாலிடே இன் தொடக்கத்திலேயே ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தது. எந்த ஊரில் ஹாலிடே இன் தொடங்கப்பட்டாலும், ஊருக்கு வெளியே, ஊரின் எல்லை தொடங்கப்படும் இடத்தை ஒட்டி ஹாலிடே இன் விடுதிகள் அமைக்கப்பட்டன.
சுற்றுலா பயணிகளுக்கும் வழியில் தங்கிச் செல்லும் பயணிகளுக்கும் இது மிகவும் வசதியாக இருந்தது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், புற வழிச்சாலைகள் பெரிய அளவில் உருவாகத் தொடங்கியபிறகு, ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமாய் இத்தகைய உணவகங்கள் அதிக அளவில் வளர்கின்றன.
சந்தையை அடையாளம் காணுவதில் புதிய புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். உருவாகும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் என்பதையே இது காட்டுகிறது.
சந்தையில் வாடிக்கையாளர்கள், தொடர்ந்து வாங்கும் விதமாகவும் தேடி வாங்கும் விதமாகவும் உங்கள் தயாரிப்பை நிலை நிறுத்துவதில் இருக்கும் நன்மைகளை, ஒரு சிறு கணக்கின் வழியாகக் கண்டு கொள்ளலாம்.
வாரம் ஐம்பது ரூபாய்க்கு ஒரு தயாரிப்பை ஒருவர் தொடர்ந்து வாங்குகிறார் என்றால், அவர் மட்டும் 2400 ரூபாய்கள் ஒரு வருடத்தில் தருகிறார். அவரது குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் என்று பலரையும் சென்றடைய அந்த நிறுவனம் பெரிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. அவருடைய மனநிறைவே அதற்கு வழி செய்து கொடுத்து விடும்.
அந்தத் தயாரிப்பையே அளவிலோ தரத்திலோ கொஞ்சம் மேம்படுத்தி பழைய பெயருக்கு முன்போ பின்போ இன்னொரு சொல்லை இணைத்து விலையை அதிகரித்து அறிமுகம் செய்தால், இதே வாடிக்கையாளர் தொடர்ந்து வாங்குவதோடு இன்னும் புதிய வாடிக்கையாளர்களையும் அந்த நிறுவனம் தன்னுடைய செல்வாக்கு வட்டத்துக்குள் கொண்டு வர முடியும்.
சந்தையில் இருத்தல், சந்தையை மதிப்பீடு செய்தல், சந்தையை ஈர்த்தல் ஆகியவற்றை ஒரு நிறுவனம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். மார்க்கெட்டிங் அலுவலர் வெற்றி பெறுவது தயாரிப்பின் பலத்தாலும் தன்னுடைய பலத்தாலும்தான். இந்த இரண்டும் இணைகிற போது ஒரு தயாரிப்பு தன்னை நல்லவிதமாக நிலை நிறுத்திக் கொள்கிறது.
'பெரியோர்களே! தாய்மார்களே!!' என்ற பொதுப் பிரச்சாரத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாது. தனி மனிதர்களாகவே எந்த நிறுவனமும் வாடிக்கையாளர்களை மதிப்பிட முடியும். இதற்கு, Particle Market என்றொரு புதிய பெயரை மார்க்கெட்டிங் உலகம் சூட்டியிருக்கிறது. ஒரு சமூகம் ஒரு குடும்பம் என்ற அளவு கோல்களைத் தாண்டி, ஒரு தனிமனிதர் எடுக்கிற முடிவுகூட அந்தக் குடும்பத்தின் நுகர்வுக் கலாச்சாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
இன்று ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறார்கள் எனில் அவர்களிடம் குறைந்தது ஆறு செல்ஃபோன்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரின் வயது- விருப்பம்- வருமானம் இவற்றுக்கேற்ப வெவ்வேறு தயாரிப்புகளில் செல்ஃபோன்கள் அவர்கள் கைகளில் தவழ்கின்றன.
இதையே வேறு விதமாகப் பார்த்தால், ஒவ்வொரு தனிமனிதரையும் மனதில் கொண்டு, அவர்கள் ரசனைக்கேற்ப ஒவ்வொரு நிறுவனமும் செயல்படுகிறது என்றே சொல்ல வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு, போட்டி தயாரிப்புகள் மத்தியில் பெயர்சொல்லி கேட்டு வாங்கப்படுகிறதா என்பதைப் பார்ப்பது மிகவும் முக்கியம்.
நன்றி: நமதுநம்பிக்கை


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts