லேபிள்கள்

ஞாயிறு, 5 மே, 2013

வேறு என்ன சொல்ல...?



வேறு என்ன சொல்ல...?

- கான் பாகவி

உலக நாடுகளுக்கு உபதேசம் செய்வதிலும் அவற்றில் நாட்டாண்மைத் தனம் செய்வதிலும் அமெரிக்காவுக்கே முதலிடம். ஜனநாயகம், சுதந்திரம், அணு ஆயுதம், பயங்கரவாதம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு சிறிய நாடுகளுக்குள் புகுந்து அவற்றை அழிப்பதும் அவற்றின் வளங்களைச் சுருட்டுவதுமே அமெரிக்காவின் பிழைப்பு.

அண்மைக் காலத்தில் அமெரிக்காவின் அராஜகத்திற்கு ஆளான நாடுகள் வரிசையில் இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அடுத்து ஈரான் ஆகிய முஸ்லிம் நாடுகள்தான் இடம்பெறுகின்றன. இதே அணுஆயுதம், பயங்கரவாதம், அடுத்தவரை இழிவுபடுத்தல், அடுத்தவரின் உரிமைகளைப் பலம் கொண்டு பறித்தல் ஆகிய எல்லாக் கொடுமைகளையும் அமெரிக்காவே செய்யும்போது ஐ.நா.சபை வேடிக்கை பார்க்கும்.

 

அவ்வாறுதான், வளரும் நாடுகளுக்குச் சுற்றுச்சூழல் பற்றியும் சுகாதாரம் பற்றியும் அமெரிக்கா அடிக்கடி அறிவுரை சொல்லும். பூமி வெப்பமாதலுக்கு இந்தியாவும் சீனாவும்தான் காரணம் என்று காரணம் காட்டி, கார்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்; பெரிய ஆலைகளைக் கட்டுப்படுத்துங்கள் என்றெல்லாம் அமெரிக்கா ஆணையிடுவதுண்டு.

 

ஆனால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, சுகாதாரத்தைக் கெடுப்பதில் அமெரிக்காவுக்கு நிகர் இருக்க முடியாது. அணுக்கழிவுகள் உள்ளிட்ட நச்சுகளைக் கடலில் கொட்டி, கடல்நீர், கடல்வாழ் உயிரினங்கள், காற்று ஆகியவற்றை மாசுபடுத்துவதிலும் அமெரிக்காதான் மற்றவர்களுக்கு வழிகாட்டி . அமெரிக்காவைப்போல் சுயநலமிக்க நாடு ஒன்றை நீங்கள் உலக வரைபடத்தில் காணமுடியாது.

 

அந்தப் பட்டியலில் அமெரிக்காவின் மான்சாண்டோ (MONSANTO) நிறுவனத் தயாரிப்புகளால் விளையும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரக் கேடுகள் பற்றிய ஆய்வு இதயமுள்ள ஒவ்வொருவரையும் கதிகலங்கச்செய்துவிடும். மான்சாண்டோவின் ஐந்துவகை தயாரிப்புகள் பற்றியும் அவற்றால் விளையும் தீமைகள் பற்றியும் இங்கு காண்போம்.

 

மான்சாண்டோவின் ஐந்து தயாரிப்புகள்:

 

1901 ஆம் ஆண்டு மான்சாண்டோ நிறுவனம் சாக்ரின் (SACCHARIN) என்றொரு இனிப்பைத் தயாரித்தது. இது, இயற்கையான கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையைவிட 200 முதல் 700 மடங்கு அதிக இனிப்புள்ள செயற்கைக் கரிமச் சேர்மம் ஆகும்.

 

சாக்ரினின் சோடியம் அல்லது கால்சியம் உப்பு நீரிழிவு நோயாளிகளுக்கான இனிப்பாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையும் உலகின் பிற நிறுவனங்களும் அங்கீகரித்துள்ளன. சாக்ரினை சர்க்கரைக்குப் பதிலாக கோகாகோலா நிறுவனமும் பாக்கெட்டில் அடைத்த உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

 

ஆனால், 1907ஆம் ஆண்டே சாக்ரின் ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிக்கும் தன்மை கொண்டது என்பதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கண்டுபிடித்தது. இது புற்றுநோய் ஊக்கி ஆகும் என்பதால் இதன் பாதுகாப்பு சர்ச்சைக்குரியதானது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் முதலாவது பொறுப்பாளர் ஹார்வி வாய்லி கூறுகிறார்:

 

சாக்ரினைப் பயன்படுத்துவோர் சர்க்கரையைத்தான் நாம் சுவைக்கிறோம் என்று நம்பினால், அவர்கள் ஏமாந்துபோவர். உண்மையில் சாக்ரின் என்பது, தார் மற்றும் நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. உணவு மதிப்பீடு அதில் அறவே கிடையாது. எனவே, இது அடியோடு ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

 

கட்டுப்பாடின்றி சாக்ரினைப் பயன்படுத்திய நீண்டகால அனுபவத்திற்குப்பின் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில், எச்சரிக்கை வாசகம் உறையில் பொறிக்காமல் சாக்ரின் விற்பனை செய்யக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. எலிகளுக்கு சாக்ரினைக் கொடுத்து சோதித்ததில், சாக்ரின் புற்றுநோயை ஊக்குவிக்கக்கூடியது என்று கண்டறியப்பட்டதே இதற்குக் காரணம்.

 

அப்படியிருந்தும், மூன்று தசாப்தங்களாக மான்சாண்டோ நிறுவனம் போராடி, மேற்கண்ட முடிவை மாற்றுவதில் 2001 ஆம் ஆண்டு வெற்றியும் கண்டது. என்னதான் அவர்கள் முடிவை மாற்றிக்கொண்டாலும், தார் மற்றும் நிலக்கரி மூலம் எடுக்கப்பட்ட ஒருபொருள் எப்படி பாதுகாப்பான உண்பொருளாக இருக்க முடியும்?

 

சாக்ரின் கலந்த பொருளை இனியாவது பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.


2.பாலிஸ்டைரின் (POLYSTYRENE):

கடந்த நூற்றாண்டின் நாற்பதுகளில் மான்சாண்டோ நிறுவனம் பிளாஸ்டிக் தயாரிப்பில் இறங்கியது. வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் குறிப்பிட்ட வடிவங்களில் வார்த்து எடுக்கக்கூடிய பாலிமர்களே பிளாஸ்டிக்குகள் (PLASTICS) ஆகும். பிளாஸ்டிக்குகள் இரண்டு பெரும் பிரிவுகளில் அடங்குகின்றன.

 

பாலிஸ்டைரின் போன்ற தெர்மோ பிளாஸ்டிக்குகள் ஒரு பிரிவு. இவற்றை உருக்கி மீண்டும் மீண்டும் உருவாக்க முடியும். மற்றொரு பிரிவு, பாலியரித்தேன் போன்ற தெர்மோ செட்டிங் பிளாஸ்டிக்குகள். இவற்றை மீண்டும் உருக்கி வார்ப்பதில்லை; அழிக்கத்தான் செய்வர்.

 

நுரைத்த பாலிஸ்டைரின், அல்லது ஸ்டைரோஃபோம் (உணவுக் கொள்கலன்கள்) சுற்றுச்சூழலைக் கடுமையாக பாதிக்கக்கூடியதாகும். இதைவிட சுற்றுச்சூழலை அதிகமாகக் கெடுக்கும் பொருள் வேறொன்றுமில்லை. தெர்மோ பிளாஸ்டிக்குகளில் உள்ள பாலிஸ்டைரின் மக்குவதுமில்லை; மாறுவதுமில்லை. இதை மறுசுழற்சி செய்வதே ஒரு தனித்தொழிலாக வளர்ந்திருக்கிறது.

 

அழியாமல் இருக்கும் பிளாஸ்டிக், சிறுசிறு துண்டுகளாகி உயிரினங்களை அழித்துவருகிறது; கடல்வாழ் ஜீவன்களுக்கு இடரளிக்கிறது; புற்றுநோய்க்குக் காரணமாகும் பென்ஸின் எனும் பொருளை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் காற்றில் கலக்கச் செய்கிறது. நிறமற்ற நீர்மமான பென்ஸின் நச்சுத் தன்மை கொண்டது. நீண்டகாலம் புழங்கினால் வெள்ளணுப் புற்று வர வாய்ப்பு உண்டு.

 

2007 ஆம் ஆண்டு சாண்பிரான்ஸிஸ்கோ நகரின் மேற்பார்வை அவையின் தலைவராக இருந்த ஹாரன் பஸ்கீன் அப்போதே கூறினார்:

 

சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கும் நுரைத்த பாலிஸ்டைரினை, உணவுகளை அடைக்கும் பெட்டிகளாக்ப் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. அமெரிக்கா நாடாளுமன்றம், இதை உற்பத்தி செய்வதற்கு ஆதரவான நிலையை எடுத்திருப்பதுதான் அதிர்ச்சிதரும் செய்தியாகும்.

 

3. ஏஜென்ட் ஆரஞ்சு (AGENT ORANGE)


இது களைக்கொல்லி மருந்துகளின் கலவை; 2,4 – டைக்ளோரோ ஃபினாக்ஸி அசிடிக் அமிலமும், 2,4,5 – டிரைக்ளோரோ ஃபினாக்ஸி அசிடிக் அமிலமும் சமஅளவில் கொண்டது. இதில் டைஆக்ஸினையும் சிறிதளவு காணலாம்.


இது, ஆரம்பத்தில் களைக்கொல்லியாக அறிமுகமாகி வளர்ச்சியடைந்து, போகப்போக எதிரிகளையும் எதிரி நாடுகளையும் அழிக்கும் மிகப் பெரிய ஆயுதமாக மாறியதுதான் கொடுமையிலும் கொடுமை.

 

வியட்நாம் போரின்போது, எதிரிகளின் நடமாட்டத்தை மறைக்கும் வகையில் செறிந்திருந்த வியட்நாம் காடுகளை அழிக்கவும், எதிரியின் உணவு ஆதாரங்களான பயிர்களை அழிக்கவும் 30 லட்சம் காலன் அளவுள்ள ஏஜென்ட் ஆரஞ்சு, அமெரிக்க ராணுவத்தால் தெளிக்கப்பட்டது.

 

வியாட்நாம்மீது அமெரிக்கா தொடுத்த கடும்போர் ஒன்பது ஆண்டுகள் நீடித்தது. இக்கால இடைவெளியில் வியட்நாம் நகரங்கள், காடுகள், பயிர்கள், நீர்நிலைகள் ஆகியவற்றின்மீது அமெரிக்க வீரர்கள் இந்த உயிர்க்கொல்லியைத் தெளித்தார்கள். கடுமையான விளைவுகளை உண்டாக்கக்கூடிய வேதியல் பொருட்கள் இந்தக் களைக்கொல்லியில் கலந்திருக்கின்றன.

 

ஒரு கோடி வியட்நாமியர்களிடையே இயல்புக்கு மாறான அளவில் நிகழ்ந்த கருச் சிதைவுகள், தோல் நோய்கள், புற்றுநோய், பிறவிக் குறைபாடுகள், வளர்ச்சிக் குறைபாடுகள், தாறுமாறான உருவமைப்பு ஆகிய உலகம் கண்டிராத சித்திரவதைகளுக்கு இந்த ஏஜென்ட் ஆரஞ்சே காரணமாயிற்று.

 

அமெரிக்க அரசின் வேதியல் ஆயுதங்கள் பிரிவின் முன்னாள் விஞ்ஞானியான டாக்டர் ஜேம்ஸ் ஆர். கிளாரி கூறுகிறார்:

அறுபதுகளில் களைக்கொல்லி திட்டத்தை இராணுவ விஞ்ஞானிகள் தொடங்கியபோதே, இதனால் ஏற்படும் கடும் விளைவுகளை நாங்கள் தெளிவாகப் புரிந்திருந்தோம். களைக்கொல்லியில் உள்ள டியோக்ஸின் எனும் பொருள் சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்கும். அவ்வாறிருந்தும், எதிரிகள் மீது இதைப் பயன்படுத்துவதற்கு எங்களில் யாரும் சற்றும் கலக்கம் அடையவில்லை.

வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “4.8 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாயினர்; 4 லட்சம் பேர் பலியாயினர்; 5 லட்சம் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறந்தனர்என்று கூறப்பட்டுள்ளது.

 

4. மாடு வளர்ச்சி ஹார்மோன் (BOVINE GROWTH HORMONE):


செயற்கை வளர்ச்சி ஹார்மோன் (இயக்குநீர்) கொடுக்கப்பட்ட பசுக்களின் பாலை விற்பனை செய்வதற்கு அனுமதித்த முன்னேறிய நாடு அமெரிக்கா மட்டுமே.


பிரேசில் தவிர, இதர முன்னேறிய நாடுகள் அனைத்தும் செயற்கை ஹார்மோன் செலுத்தப்பட்ட பாலின் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளும் கனடா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இவ்வாறு தடை செய்துள்ளன.


வளர்ச்சி ஹார்மோன் (GH) உருவாக்கப்படும் முறை என்ன தெரியுமா? உடம்பில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியின் முன்முண்டுப் பகுதியில் சுரக்கும் சோமடோட்ரோப்பின்எனும் பெப்டைட் ஹார்மோன் புரதம் உருவாவதைத் தூண்டுவதன் வாயிலாகவும், கொழுப்பைச் சிதைப்பதன் வாயிலாகவும் எலும்பு மற்றும் உடம்பின் மற்றத் திசுக்களின் வளர்ச்சிக்கு வகை செய்யப்படுகிறது.


இது அளவுக்கு அதிகமாக உற்பத்தியானால் பூதாகாரம், அக்ரோமெகாலி போன்ற கோளாறுகள் உண்டாகும்; அளவு குறைந்தால் குள்ளத் தன்மை உண்டாகும். இது செயற்கை உடல் வளர்ச்சியினால் விளையும் விபரீதம்.

செயற்கை ஹார்மோன் ஊட்டப்பட்ட பசுக்களின் பாலில் புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோன்கள் அதிக அளவில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவேதான், இயற்கையான பால் என இனம்காட்ட லேபிலில் ஹார்மோன் கலக்காததுஎன முத்திரையிட வேண்டும் என அமெரிக்க நீதி மன்றங்கள் உத்தரவிட்டன.


ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர் டாக்டர் ஜான்மா டாவேசம்போ கூறகிறார்:


நாம் இன்றைக்கு அருந்திவரும் பாலானது, இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் அருந்திவந்த பாலுக்கு முற்றிலும் வேறுபட்டதாகும். நாமெல்லாம் நம்பியிருப்பதைப் போல் இது சிறந்த ஊட்டச்சத்து அல்ல.


அமெரிக்காவில் அறுபது விழுக்காடு மக்கள் ஹார்மோன் இல்லாத பாலையே அருந்துகின்றனர்; ஹார்மோன் ஊட்டப்பட்ட செயற்கைப்பாலை 40 விழுக்காட்டினரே பயன்படுத்துகின்றனர் என்கிறது அமெரிக்கா உணவு பாதுகாப்பு மையம்.


5. மரபு மாற்று விதைகள்


உலக வரலாறு காணாத பேரழிவாக மான்சாண்டோ நிறுவனம் விதைகளிலும் மாற்றத்தை உருவாக்கியது.கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் மரபு மாற்று விதைகளை (GENETICALLY-MODIFIED SEEDS) இந்த நிறுவனம் தயாரித்தது.

மற்ற நிறுவனங்களை எல்லாம் அழிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கான டாலர்கள் செலவிட்டு விதவிதமான விளம்பரங்களின் துணையால் மான்சாண்டோ சந்தையை வளைத்துப் போட்டது. உலகில் பட்டினியை ஒழிக்க உணவு உற்பத்தியில் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம் என்றுவேறு இந்தக் கம்பெனி மனிதநேயம் பேசியது.

உண்மை என்ன? மரபு மாற்று விதைகளிலிருந்து விளையும் தானியங்களை மனிதர்கள் உட்கொண்டால் - அந்த மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகள் கண்பார்வையை இழக்கும் அவலம் ஏற்படும் என்கிறார் நியூயார்க் டைம்ஸ் இதழின் மைக்கேல் போலன்.


அதுமட்டுமின்றி இந்த மரபு மாற்று விதைகளை ஏழைநாடுகள் ஒவ்வோர் ஆண்டும் வாங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காக, மான்சாண்டோ பயன்படுத்தும் தொழில்நுட்பம் ஆபத்தானது. விதைகளில் மலட்டுத் தன்மையை உருவாக்கி, குறிப்பிட்ட காலத்திற்குள் அதன் வீரியத்தைச் சாகடித்துவிடுகிறது இந்தத் தொழில்நுட்பம். இதனால் பசியும் பட்டினியும்தான் உலகில் பரவும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.


இவ்வாறு அமெரிக்கவின் மான்சாண்டோ கம்பெனியின் கொடுமைகளுக்கு அளவே இல்லை. உலக மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எனக்குத் தேவை விற்பனை. அதையடுத்து குவியும் டாலர்கள்.

உலகமயமாக்கல்


அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் பொருளாதார கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் தாராளமயமாக்கள். இது இந்தியாவில் செயல்பாட்டுக்கு வந்த 20 ஆண்டுகளாகியும் மக்களின் வாழ்க்கை நிலை உயரவில்லை.


தேசிய மாதிரி சோதனை நிறுவனம் (NSSO) நடத்திய ஆய்வில் தெளிவந்துள்ளதாவது:


இந்தியாவில் கிராமப் பகுதிகளில் நாளொன்றுக்க ரூ.17க்கும் குறைவான (மாதம் ரூ. 503) வருமானத்தில் வாழ்வோர் 10 விழுக்காட்டிற்கும் அதிகம். இது 2011 -12ஆம் நிதியாண்டில் நடத்தப்பட்ட ஆய்வு. நகர்ப்புறங்களில் சராசரி மாத வருமானம் ரூ. 702 (நாளொன்றுக்கு ரூ. 23.40)

எக்ஸ்-பிளேன்


அமெரிக்கா எதிரிநாடுகளை அழிக்க புதிய போர் விமானம் ஒன்றைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது.

இதன் பெயர் எக்ஸ்-பிளேன். ஹைபர் சானிக் பாமர்ஸ்எனப்படும் இந்த நாசகார விமானத்தை அமெரிக்காவிலிருந்து உலகின் எந்த மூலைக்கு அனுப்பினாலும் ஒரு மணி நேரத்துக்குள் சென்று குண்டுகளை வீசி அழித்துவிடுமாம்!

 

ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு வேகமாகப் பாய்ந்து செல்லும் இந்த விமானத்தை 30 ஆண்டுகள் கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ளார்களாம்! அணு ஆயுதத்தை முதலில் தயாரித்ததே அமெரிக்காதான். வேதியியல் உயிரி ஆயுதங்களை வைத்திருப்பதும் அமெரிக்காதான்.

பொதுவாக அமெரிக்காவின் தத்துவமே என்ன தெரியுமா? நான் நன்றாக வாழ வேண்டும்; சுகபோகத்தில் மிதக்க வேண்டும். இதற்காக யாரையும் எதுவும் செய்யலாம். இந்த அமெரிக்காதான் உலக நாடுகளுக்கு மனித நேயம் குறித்தும் மனித உரிமை குறித்தும் பாடம் நடத்துகிறது.


ஷைத்தான் வேதம் ஓதுகிறது. வேறு என்ன சொல்ல?

கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts