லேபிள்கள்

திங்கள், 27 மே, 2013

உங்கள் தலை முடியை பராமரிக்க சில ஆலோசனைகள்.
நரைத்த கூந்தல் எத்தனை அழகு என்பதை வழுக்கைத் தலையர்களிடம் கேட்டுப் பாருங்கள்என்கிறது ஆங்கிலப் பொன்மொழி ஒன்று. உண்மைதான்உறவு, நட்பு, பணம் மட்டுமில்லைஅழகின் அருமைகூட இருக்கும் வரை யாருக்கும் தெரிவதில்லை. போன பிறகு புலம்புவதால் பயனுமில்லை. கூந்தல் அழகும் ஆரோக்கியமும் கூட அப்படித்தான்! போனால் வராது. வருமுன் காப்பது மட்டுமே இந்த விஷயத்துக்கான ஒரே தீர்வு.
கவரிமான், தன் உடலில் இருந்து ஒரே ஒரு ரோமம் உதிர்ந்து விட்டாலும், அந்தக் கணமே உயிரை விட்டு விடுமாம். மானுக்கு மானம் சம்பந்தப்பட்ட அந்த விஷயம், மனிதருக்கோ அழகு சம்பந்தப்பட்டது. முடிதானே என்று அலட்சியப்படுத்தாமல், தக்க நேரத்தில் சுதாரித்துக் கொள்ளலாமே!
வழுக்கைப் பிரச்னையால் வாழ்க்கையே இழந்தவர்கள் பலர். ஆண்களை மட்டுமே காவு வாங்கிக் கொண்டிருந்த இந்தப் பிரச்னை, சமீப காலமாக பெண்களையும் குறி வைத்திருக்கிறது. பரம்பரைத்தன்மை, முடி பராமரிப்பில் அக்கறையின்மை, கவலை என ஆண்களின் வழுக்கைக்கு ஆயிரம் காரணங்கள் என்றால், பெண்களுக்கு ஏற்படும் வழுக்கைக்கோ அதைவிட அதிகமான காரணங்கள்… ‘‘முதல் காரணம் ஆன்ட்ரோஜென் என்கிற ஹார்மோன். ஆண்களுக்கு இருக்கக்கூடிய முக்கிய ஹார்மோனான இதுதான், பெண்களுக்கு வழுக்கை விழவும் காரணம்.
அடுத்து அதீத பொடுகு. முடி ஆரோக்கியமா வளர, ஆக்சிஜன் சப்ளையும், ரத்தம் மூலமா கிடைக்கிற சத்துகளும்தான் காரணம். பொடுகு வந்தா, கூந்தலோட வேர்க்கால்களுக்குப் போகற சத்துகள் தடைப்பட்டு, முடி மெலிய ஆரம்பிக்கும். இதுதான் வழுக்கைக்கு முந்தைய நிலை. இதை ஆரம்பத்துலயே பார்த்துட்டா, பொடுகுக்கான சிகிச்சையை எடுக்கறது மூலமா வழுக்கையிலேருந்தும் தப்பிக்கலாம்…’’ – ஒரு சின்ன பிரச்னை, ‘தலையாய பிரச்னையாக எப்படி உருவெடுக்கிறது என்கிற விளக்கத்துடன் பேசுகிறார் அழகுக்கலை நிபுணரும், அரோமாதெரபிஸ்ட்டுமான கீதா அஷோக்.
மன அழுத்தத்துக்கும் மண்டை முடிக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்கிறார் இவர். ‘‘அதீத மன அழுத்தத்துல இருக்கிறப்ப, எண்ணெய் அதிகம் சுரக்கும். அது நம்ம சருமத்தோட ரெண்டாவது லேயரான டெர்மிஸ்ல சேர்ந்து, மண்டைப்பகுதி சுவாசிக்க முடியாமப் போய், முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு, உதிர ஆரம்பிக்கும். அடுத்து புழுவெட்டு. மிளகு சைஸ்ல ஆரம்பிச்சு, திடீர்னு மண்டை முழுக்கப் பரவி, வழுக்கையை ஏற்படுத்தும். இது ஆரம்பத்துலயே கவனிக்கப்படணும். தலைமுடியில என்ன பிரச்னைன்னாலும், இப்ப அதைக் கண்டுபிடிக்க ஸ்கேனிங் வசதி இருக்கு. முடியோட வேர்க்கால்கள் எப்படியிருக்கு, அதுக்கு உயிர் இருக்கா, மறுபடி வளரச் செய்ய முடியுமான்னு எல்லாத்தையும் அதுல தெரிஞ்சுக்கலாம்’’ என்கிற கீதா, வழுக்கை வராமலிருக்க சில ஆலோசனைகளையும் சொல்கிறார்.
* தினசரி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலை குளியல் அவசியம்.
* தலைமுடியை இழுத்து, இறுக்கமா பின்றதோ, கட்டறதோ கூடாது. தளர்வான பின்னலும், ஹேர் ஸ்டைலும்தான் நல்லது.
* எலுமிச்சை விதைகள் 50, மிளகு 50, கைப்பிடி சின்ன வெங்காயம் எல்லாத்தையும் கரகரப்பா அரைச்சு, வழுக்கை விழுந்த இடத்துல தேய்ச்சு, 10 நிமிஷம் கழிச்சு அலசினா, உயிர்ப்புள்ள வேர்க்கால்கள் திறந்து, மறுபடி வளர ஆரம்பிக்கும்.
* குமுட்டிக்காய்னு ஒண்ணு கிராமங்கள்ல கிடைக்கும். அதை வெட்டினா உள்ளுக்குள்ள ஈரப்பதம் இருக்கும். வழுக்கைப்பகுதி மேல அதைத் தேய்ச்சு, கொஞ்ச நேரம் ஊறவச்சுக் கழுவினா, உதிர்ந்த இடத்துல முடி வளரும்.
* சுகந்த கோகிலா, பே ஆயில், சிடர் உட் ஆயில் இந்த மூணு அரோமா ஆயில்களையும் தலா 3 சொட்டு எடுத்து, வெள்ளை மிளகுப்பொடியில கலந்து, வழுக்கை விழுந்த இடத்துல தடவிக் காய விட்டுக் குளிக்கலாம்.
நீள முடி வைத்திருப்பதைப் பட்டிக்காட்டுத் தனமாக நினைத்த இளம் பெண்கள் மத்தியில் இன்று மீண்டும் அது ஃபேஷன்! நீளக்கூந்தலும் வேண்டும்அதே நேரம் மாடர்னாகவும் தெரிய வேண்டும் என்கிறவர்களே அதிகம் இன்று. குட்டைக் கூந்தல் அழகிகளும் புதிய ஸ்டைல்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஹேர் கட்ஸிலும் ஸ்டைலிலும் என்னவெல்லாம் லேட்டஸ்ட்?
பேஜ் 3’ பியூட்டி சலூனின் சீனியர் ஹேர் ஸ்டைலிஸ்ட் சுமன் விளக்குகிறார்.
‘‘பொண்ணுங்க மத்தியில நீளமான முடி வச்சுக்கிறது மறுபடி ஃபேஷனாயிட்டிருக்கு. ஆனா, படிய வாரி, பின்னல் போட்டுக்கிறதையோ, அப்படியே விரிச்சு விடறதையோ அவங்க விரும்பறதில்லை. டிஸ்கனெக்ட் லேயர்னு ஒரு ஸ்டைல் இப்ப ரொம்பப் பிரபலம். இதுல கூந்தலோட நீளம் அப்படியே இருக்கும். முன்னந்தலையில சின்னச் சின்ன மாறுதல்களைப் பண்ணி, மாடர்ன் தோற்றத்தைக் கொண்டுவரலாம்.
அதே போல குட்டையான கூந்தல் உள்ளவங்க மோஹாக்னு ஒரு ஸ்டைலை விரும்பறாங்க. கூந்தலோட நடுப்பகுதி கொஞ்சம் நீளமாகவும், பக்கவாட்டுல சின்னதாகவும் இருக்கிற மாதிரியான ஸ்டைல் இது. ரொம்பவும் குட்டியான பாப் கட்ஸ்லயும் இப்ப மாற்றங்கள் வந்திருக்கு. ஏ சிமெட்ரிங்கிற ஸ்டைல்ல, அத்தனை குட்டி முடியையும் படிக்கட்டு மாதிரி வெட்டிக்கிறதுதான் இப்ப ஃபேஷன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை ஸ்ட்ரெயிட்டனிங் மோகம் பாடா படுத்திட்டிருந்தது. இப்ப அது போயாச்சு. அலை அலையான, சாஃப்டான முடியைத்தான் பொண்ணுங்க விரும்பறாங்க. பளபளா முடியும் இப்ப ஃபேஷன்ல இல்லை. மேட் ஃபினிஷ்லுக்தான் ஹாட்!’’ என்கிற சுமன், ஹேர் கலர்களில் புதுசு என்ன என்றும் பேசுகிறார்.
‘‘பிரைட் கலர்களுக்கு இப்போ மவுசு இல்லை. பிரவுன், ஹனி, காப்பர், காப்பர் ரெட் மாதிரியான வார்ம் கலர்கள்தான் ஃபேஷன். கலரிங் பண்ணவும் ஆசை. அதே நேரம் ஒருவேளை அது பிடிக்கலைன்னா மறுபடி மாத்தணுமேங்கிற குழப்பம்இப்படி நிறைய பேர் உண்டு. அவங்க கிளிப் ஆன் கலர்ஸ்ட்ரை பண்ணலாம். தலைமுடியில விருப்பமான இடங்கள்ல அப்படியே கிளிப் பண்ணிக்கிற மாதிரி ரெடிமேட் மாடல்கள் கிடைக்குது. எல்லா கலர்கள்லயும் இருக்கு. ஏதோ ஒரு பார்ட்டி, போட்டோ ஷூட்னா, இதை கிளிப் பண்ணிட்டுப் போகலாம். முடிஞ்சதும் கழட்டி வச்சிடலாம்…’’ – கிளிப் ஆன் கலர் முடிக்கற்றைகளை நமக்குக் காட்டுகிற சுமன், மணப்பெண் ஹேர் ஸ்டைல்களிலும் ஃபேஷன் மாறியிருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.
‘‘70, 80-கள்ல சினிமா ஹீரோயின்கள் மத்தியில பிரபலமா இருந்த ஹேர் ஸ்டைல்ஸ் இப்ப மறுபடி ஃபேஷனாக ஆரம்பிச்சிருக்கு. முன்பக்கம் கொஞ்சம் தூக்கின மாதிரியான உயரமான ஹேர் ஸ்டைல், பின் பக்கம் பின்னலோட சேர்ந்த கொண்டைன்னு கல்யாணப் பொண்ணுங்க அந்தக் காலத்து ஹேர் ஸ்டைலை ட்ரை பண்றதுல ஆர்வமா இருக்காங்க. தவிர வட இந்தியக் கலாசாரத்தோட தாக்கத்தால, இன்னிக்கு எல்லா கல்யாணங்கள்லயும் மெஹந்தி ஃபங்ஷன், பேச்சிலர்ஸ் பார்ட்டி, ரிசப்ஷன்னு நாலஞ்சு நாள் விசேஷங்கள் சகஜமாயிட்டிருக்கு. ஒவ்வொரு விசேஷத்துக்கு ஒவ்வொரு விதமான ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்கிறதும் இப்ப ரொம்ப ரொம்ப லேட்டஸ்ட்தனக்குப் பொருத்தமா இருக்குமா, இருக்காதான்னு தெரிஞ்சுக்க ட்ரையல் பார்க்கற வசதிகளும் வந்தாச்சு. போட்டோவையோ, வீடியோவையோ பார்த்து, ‘அடடாஇது நமக்கு பொருத்தமாவே இல்லையேவேற ஸ்டைல் பண்ணியிருக்கலாமோன்னு வருத்தப்படற அவசியமும் இல்லை…’’ – சுமன் சொல்கிற தகவல்கள், கல்யாணத்துக்குத் தயாராகிற பெண்களுக்குக் கட்டாயம் உதவும்.
படிய வாரிய கூந்தலையோ, மடித்துக் கட்டிய பின்னலையோ இன்றைய பெண்கள் விரும்புவதே இல்லை. பத்து வயதிலேயே கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங் என பார்லர்களுக்கு படையெடுக்கிறார்கள். விளைவு? முப்பது பிளஸ்சிலேயே முன்னந்தலையில் வழுக்கை, பின்னந்தலை முடியோ எலிவால் மாதிரி மெலிந்து போவது என எல்லாம் வருகிறது. ‘‘கலரிங் ஆகட்டும், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் மாதிரியான விஷயங்களாகட்டும், கெமிக்கல் சிகிச்சைகள் எல்லாமே கூந்தல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடியவைதான். ஆசைக்காக வாழ்க்கையில ஒரு முறை வேணா அதை ட்ரை பண்ணி அழகு பார்க்கலாம். ஆனா, நிரந்தரமா அதே தோற்றம் வேணும்னு அடிக்கடி கெமிக்கல் சிகிச்சைகளை எடுத்துக்கிறது கூந்தலுக்கு நல்லதில்லைஎன்கிறார் அழகுக்கலை நிபுணர் உஷா.
‘‘ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங்னு எந்த சிகிச்சையை செய்யறதுன்னு முடிவெடுத்தாலும், முதல்ல நம்பகமான அழகுக்கலை நிபுணர்கிட்ட ஆலோசனை எடுங்க. உங்க கூந்தலோட தன்மை எப்படிப்பட்டது, அதுக்கு கெமிக்கல் சிகிச்சையைத் தாங்கற அளவுக்கு சக்தி இருக்கா, பக்க விளைவுகள் என்னென்னஇப்படி எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. சில வகை கெமிக்கல் சிகிச்சைகளுக்கு, அது முடிஞ்ச பிறகான பராமரிப்பும் முக்கியம். அந்தந்த சிகிச்சைக்கேத்த மாதிரியான ஷாம்பு, கண்டிஷனர், சீரம்னு எல்லாத்தையும் முறைப்படி உபயோகிக்கணும். இல்லைன்னா முடி உடையும், வறண்டு போகும், கொட்டும். போஸ்ட் கேர்னு சொல்லப்படற சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்புக்குத் தயாராகிறவங்க மட்டும் கெமிக்கல் சிகிச்சைகளைப் பத்தி யோசிக்கலாம். மத்தவங்களுக்கு அது நல்லதில்லை…’’ – எச்சரிக்கிறார் உஷா.
முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்என ஒரு பிரபல வாசகம் உண்டு. முடியில்லா சீமாட்டிகளும் விதம் விதமாக முடியலாம் இன்று.  எப்படி?
‘‘மண்டைப் பகுதி தெரியற மாதிரி கம்மியான முடி உள்ளவங்க, எலி வால் மாதிரி மெலிஞ்சு போன கூந்தல் உடையவங்க, முன்னந்தலையில முடி கொட்டி வழுக்கை விழுந்தவங்கஇப்படி எல்லாருக்கும் இத்தனை நாளா, ‘விக்மட்டும்தான் ஒரே தீர்வா இருந்தது. இப்ப ஹேர் எக்ஸ்டென்ஷன்வந்து, பெண்களோட டென்ஷனை விரட்டிடுச்சு…’’ – நல்ல விஷயத்துடன் ஆரம்பிக்கிறார் அழகுக்கலை நிபுணர் மேனகா.
‘‘விக், தலை முழுக்க மறைக்கும். கனமா இருக்கும். செயற்கையா தெரியும். எப்படா எடுத்துப் போடப் போறோங்கிற அளவுக்கு இம்சையா இருக்கும். ஹேர் எக்ஸ்டென்ஷன்ல இப்படி எந்தப் பிரச்னைகளும் இருக்காது. சிலருக்கு பின் பக்கம் முடி கம்மியா இருக்கும். பின்னலும் போட முடியாது. போனி டெயிலும் போட முடியாது. பின்பக்க முடியை அடர்த்தியா காட்டற மாதிரி ஹேர் எக்ஸ்டென்ஷன் வைக்கலாம். ஒரு சிலருக்கு முன் பக்கம் மண்டை தெரியற அளவுக்கு முடி கம்மியா இருக்கும். அந்த இடத்தை மட்டும் எக்ஸ்டென்ஷனால மறைக்கலாம். வேற சிலருக்கு ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் பண்ணிக்கணும்னு ஆசையா இருக்கும். ஆனா, முடி கொட்டுமேங்கிற பயத்துலயே தவிர்ப்பாங்க.
அவங்களும் எக்ஸ்டென்ஷன் உபயோகிக்கலாம்.  அளவெடுத்து தைக்கிற டிரெஸ் மாதிரிதான் இதுவும். அவங்கவங்க மண்டைப் பகுதியை அளவெடுத்து, அவங்க முடியோட தன்மை, கலர்னு எல்லாத்தையும் மேட்ச் பண்ணி செய்யணும். செயற்கை முடி, ஒரிஜினல் முடின்னு ரெண்டுலயும் பண்ணலாம். நிஜ முடியில பண்றதுன்னா அதை அலசலாம். கலர் மாத்தலாம். செயற்கை முடியில அதெல்லாம் சாத்தியமில்லை. கல்யாணப் பெண்கள்லேருந்து, மாடல்கள், நடிகைகள்னு பலரும் இப்ப ஹேர் எக்ஸ்டென்ஷன் உதவியோடத்தான் நடமாடிக்கிட்டிருக்காங்க’’ என்கிறவர், இதில் ஒரு சதவிகிதம்கூட பக்க விளைவில்லை என்பதை ஹைலைட்டாக சொல்கிறார்.
‘‘3 – 5 கிளிப் இருக்கும். அதை தலையில தேவையான இடத்துல நாமளே பொருத்திக்க வேண்டியதுதான். வெளியிடத்துல உங்க கூந்தலை யாராவது இழுத்துப் பார்த்தாலோ, தொட்டுப் பார்த்தாலோ கையோட வந்துடுமோங்கிற பயமே வேண்டாம். இதைப் பொருத்திக்கிட்டு நீச்சலடிக்கலாம், டான்ஸ் ஆடலாம், விளையாடலாம்ராத்திரி படுக்கப் போகறதுக்கு முன்னாடி கழட்டி வச்சிட்டு, காலையில கிளம்பற போது, ஹேர் பேன்ட், கிளிப் வச்சுக்கிற மாதிரி, இதையும் வச்சுக்கிட்டு ரெடியாகலாம். அளவு, முடியோட தன்மையைப் பொறுத்து 500 ரூபாய்லேருந்து, 50 ஆயிரம் வரைக்கும் ஹேர் எக்ஸ்டென்ஷன் கிடைக்குது’’ என்கிற மேனகா, விருப்பமுள்ளோருக்கு ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்வதில் ஒரு வாரப் பயிற்சியும் அளிக்கிறார்.
The hair is the richest ornament of women
   என்றார் மார்ட்டின் லூதர். இருப்பவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ,
இல்லாதவர்களுக்கு நிச்சயம் புரியும் இந்த உண்மை!

கருத்துகள் இல்லை:

தயிர் மற்றும் யோகர்ட் என்ன வித்தியாசம்? எது ஆரோக்கியமானது?

தயிர் மற்றும் யோகர்ட் இடையே உண்மையான வேறுபாடு உள்ளதா அல்லது இரண்டும் ஒன்றா ? நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்கும் மிகவும் ஒத்த அத...

Popular Posts