லேபிள்கள்

திங்கள், 13 மே, 2013

பாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார்



பாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார்
பாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் துணை பாஸ்போர்ட் அதிகாரி க . ருக்மாங்கதன் (பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம், சென்னை).

பாஸ்போர்ட் விண்ணப்பித்ததிலிருந்து எத்தனை நாள் கழித்து கிடைக்கும்? கட்டணம் எவ்வளவு?
இரா.ஸ்ரீதர், திருப்பத்தூர்.
''பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் கிடைக்கும். இதில், போலீஸ் விசாரணைக்கான காலம் சேராது. புது பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கட்டணம் ரூ.1,000. விரைவாக, உடனடியாக பாஸ்போர்ட் வேண்டும் என்றால் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதில் உடனே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2,500.''
எனது மகள் பிறந்தநாள் 23.4.1994. இது கோயம்புத்தூர் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் 22.4.1994 என்று உள்ளது. நான் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தபோது ஒரு

நாள் வித்தியாசம் உள்ளதால் தர மறுத்துவிட்டார்கள். பாஸ்போர்ட் பெற நான் என்ன செய்ய வேண்டும்?
- ராஜேந்திரன், கோயம்புத்தூர்.
''முதலில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் சரியான பிறப்பு சான்றிதழை பெறவேண்டும். அந்த சரியான பிறப்பு சான்றிதழைக் கொண்டு பள்ளி, கல்லூரி சான்றிதழ்களில் மாற்றவேண்டும். அதன்பிறகு பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.''

''எனக்கு ஒரு கம்பெனி மூலம் வெளிநாட்டுக்குப் போக வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் படித்தது நான்காம் வகுப்பு. பிறப்பு சான்றுவேண்டும் என்று கேட்கிறார்கள். என்னிடம் அது இல்லை. இந்நிலையில் நான் என்ன சான்று கொடுத்து பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கலாம்?
இரா.சுதாகரன், கோயம்புத்தூர்.

''எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண்ணப்பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.''

எனது பாஸ்போர்ட் புத்தகத்தில் செல்வகுமாரி என்பதற்குப் பதிலாக செல்வகுமார் என அச்சாகி உள்ளது. அதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
செல்வகுமாரி, நத்தமேடு, சிதம்பரம் தாலுகா.
''நீங்கள் கொடுத்த ஆவணத்தில் செல்வகுமாரி என்று இருந்தால், புது பாஸ்போர்ட் கட்டணம் எதுவும் இல்லாமல் வழங்கப்படும். ஆவணத்தில் தவறு இருந்தால் சரியான ஆவணத்துடன் மீண்டும் கட்டணம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும்.''

எனது தங்கை      பஞ்சாயத்து மூலம் எழுதிவாங்கி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். எனது தங்கை மகன் கல்வி மாற்றுச் சான்றிதழில் (டிசி) முதல் அப்பாவின் பெயர் உள்ளது. ரேஷன் கார்டில் இரண்டாவது அப்பா பெயர் உள்ளது. பாஸ்போர்ட் எடுப்பதில் ஏதாவது சிக்கல் வருமா?
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.
''தங்களின் தங்கை மகனின் முதல் அப்பா அதாவது, உயிர்கொடுத்த அப்பாவின் பெயருள்ள சான்றிதழ்களைக் கொடுத்து பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட்டில் ரத்த உறவு கொண்ட பெற்றோர்கள் (பயோலாஜிக்கல் பேரன்ட்ஸ்) பெயர்தான் இடம்பெறும்.''

எனது மகள் திருச்சியில் பி.இ. மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். எனக்கு புதுச்சேரியில் நிரந்தர முகவரி உள்ளது. திருச்சி முகவரியில் என் மகளுக்கு பாஸ்போர்ட் வாங்கினால் முகவரி மாற்ற வேண்டியது வரும். நாங்கள் எந்த முகவரியில் வாங்குவது என்று கூறவும்?
கே.உஷா கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி.
''ஒருவர் தற்போது எந்த முகவரியில் வசிக்கிறாரோ அந்த முகவரியைக் குறிப்பிட்டுதான் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில் திருச்சி கல்லூரி முகவரியைக் குறிப்பிட்டு பாஸ்போர்ட் வாங்கிக்கொள்ளலாம். படிப்பு முடிந்தவுடன் நிரந்தர முகவரிக்கான தக்க ஆவணங்களை சமர்ப்பித்து முகவரியை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.''

கருத்துகள் இல்லை:

நல்ல பாம்பு: பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் காணப்படக்கூடிய 338 பாம்பினங்களில் 71 (22 சதவீதம்) பாம்புகள் தான் நஞ்சுடையவையாக அறியப் பட்டிருக்கின்றன. இவற்றில் 4 (...

Popular Posts