லேபிள்கள்

சனி, 27 ஏப்ரல், 2013

வெற்றிக்கு முதல் படி…! எது முக்கியம், தம்பி?


வாழ்வில் எது முக்கியம் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
யாராவது புதிய மனிதர்களை எங்காவது சந்தித்தோமானால் முதலில் நமது பெயரைக் கேட்கிறார்கள். அடுத்து அவர்கள் என்ன கேட்கிறார்கள்?
"என்ன செய்கிறீர்கள்? எங்கே வேலை பார்க்கிறீர்கள்?" என்பதைத்தான்.
'என்ன வேலை செய்கிறோம், எங்கே வேலை பார்க்கிறோம்' என்பதிலிருந்து நம்மைப் பற்றி ஒரு அனுமானத்திற்கு வர முயல்கிறார்கள். நாம் செய்யும் வேலை தொழில் நம்மை அடையாளம் காட்டுகிறது.
ஏதாவது தொழில் செய்தால்தான் நாம் பிழைக்கலாம். நமக்கு வயிறு இருக்கிறது. நம்மை நம்பி பெற்றோரும் மனைவி மக்களும் இருக்கிறார்கள். எனவே "வாழ்வில் எது முக்கியம்" என்று நூற்றுக்கணக்கான பேரை சர்வே செய்தபோது, "தொழில் தான் முக்கியம்" என்றார்கள்.
நீங்கள் கொஞ்சம் சொல்லிப் பாருங்கள்.. "நான் ரசிகர் மன்றம் வைத்திருக்கிறேன்!" என்று. அல்லது நான் "கட்சியில் இருக்கிறேன்" என்று. அது ஒரு தொழிலா என்று கொஞ்சம் நீங்களே யோசித்துப் பாருங்கள்!
எப்படி நல்ல வேலையைப் பெறலாம்? நல்ல தொழிலில் இறங்கலாம்?
நல்ல படிப்பு வேண்டும். எழுதப் படிக்கத் தெரிய வேண்டும். ஊர் உலக வரலாறு தெரிய வேண்டும். நமது ஊர், நமது மாவட்டம், மாநிலம், நாடு, உலகம் என்று உலகியல் தெரிய வேண்டும். அறிவியல் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட கல்வியை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகத் தெரிந்து கொண்டிருக்கிறோமோ, அவ்வளவு நாம் எடுக்கும் வேலையைத் திறமையுடன் செய்ய முடியும். படிப்புக்கேற்றபடி சம்பளம் கிடைக்கிறது.
இந்தியா முன்னேறும்
இந்தியா முன்னேறும் என்று சொல்பவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள். அதாவது இந்தியர்கள் தங்கள் குழந்தைகளைப் "படி படி" என்று சொல்லி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் இன்று அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, அவர்கள் குழந்தைகள் பெரிய ஆபிசராகவோ, கலெக்டராகவோ, விஞ்ஞானியாகவோ நாளை ஆவார்கள். இந்தியா முன்னேறிவிடும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
பள்ளிப் படிப்பு என்பது ஒன்றும் கஷ்டமானதல்ல. கோடிக்கணக்கானவர்கள் உலகம் முழுவதும் செய்கிற வேலையைத்தான் நாமும் செய்கிறோம். அப்படியே படிப்பு வராவிட்டாலும் குறைந்தது எழுதப் படிக்கவாவது நமக்குத் தெரிய வேண்டும். அன்றாடப் பத்திரிக்கையைப் படிக்கிற அளவுக்கு பிறருக்கு ஒரு கடிதம் எழுதுகிற அளவுக்கு நமக்கு படிப்பு தேவை. பத்திரிக்கை படிக்கும்போது நாம் உலக ஞானம் பெறுகிறோம். ஊர் உலகம் இப்படிப் போகிறது என்று தெரிந்துகொள்ளும்போது நாமும் பயப்படாமல் இறங்கி பிழைத்துக்கொள்ள முடியும். இன்று இருக்கும் பெரிய தொழிலதிபர்கள் சிலர் அதிகம் படிக்காதவர்கள்தான். ஆனால், எதையும் சமாளிக்கும் உலக ஞானம் அவர்களிடம் நிறைய உண்டு.
அவர்கள் எல்லாம் வாழ்வில் ஒரு குறிக்கோளை, "நான் பெரிய பணக்காரனாக ஆகப் போகிறேன், நான் பெரிய கலெக்டராக ஆகப் போகிறேன்; பெரிய கம்பெனி வைத்து நடத்தப் போகிறேன்" என்று சின்ன வயதிலேயே ஆசைப்பட்டவர்கள்.
அவர்கள் சினிமா மோகத்திலோ, பெண்ணாசையிலோ, கள்ளச் சாராயம் காய்ச்சுவதிலோ, குடிப்பதிலோ இறங்குவதில்லை.
அவர்களுக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்று தெரியும். கண்ணுக்குப் பட்டை போட்ட குதிரை எப்படி நேர் சாலையைப் பார்த்துக் கொண்டு ஓடுகிறதோ அதைப் போல கண்ணுங் கருத்துமாக தங்கள் தொழிலில், தாங்கள் முன்னுக்கு வருவதில்தான், கவனம் செலுத்துவார்கள்.
ரசிகர் மன்றங்கள்
நமது நாட்டில் தமிழ் நாட்டில்தான் சினிமா ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. பக்கத்து மாநிலமான கேரளாவில் கூட இதெல்லாம் இல்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதெல்லாம் இல்லை; சினிமா நடிகர்களையும் நடிகைகளையும் "ஆகாஓகோ!" என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் இளைஞர்கள் இங்குதான் ஏராளம். தான் காதல் கொண்ட நடிகர், நடிகை நடித்த முதல் காட்சிக்கு அவர் படத்தின் முன் தூப தீப ஆராதனை எல்லாம் செய்கிறார்கள். ஒரு நாலு ஊரில் ஒரு ரசிகர் மன்றம் இருந்தால்கூட, "அகில உலக" ரசிகர் மன்றம் என்று பெயர் வைப்பார்கள்!
தங்கள் நேரத்தை, பணத்தை, உழைப்பை எல்லாம் இந்த ரசிகர் மன்றத்துக்கு வீணடிப்பார்கள். பிற நாடுகளில் இப்படி இருக்கிறதா? இல்லை! இல்லவே இல்லை!!
அங்கெல்லாம் அவர்களுக்கு அவர்கள் தொழில்தான் முக்கியம். அவர்கள் குடும்பம் மனைவி மக்கள்தான் முக்கியம். வீட்டில் சினிமாக்காரர்கள் படமோ, அரசியல் தலைவர்கள் படமோ மாட்டப்பட்டிருக்காது. மாறாக குடும்பப் படம், அவர்களை வளர்த்த அவர்களின் பெற்றோர் படம் இவைதான் இருக்கும்.
சினிமா நடிகர் என்பவர் பஸ் டிரைவரைப் போல, ஓட்டல் சர்வரைப் போல ஒரு தொழில் செய்கிறார், அவ்வளவுதான். ஒரு ஓட்டல் சர்வர் பிரமாதமாக நல்ல காப்பி போட்டுத் தருகிறார் என்று நாம் அவருக்கு ரசிகர் மன்றம் வைக்க முடியுமா? ஒரு பஸ் டிரைவர் மிக நன்றாக ஓட்டுகிறார் என்பதற்காக ஒவ்வொரு முறை பஸ் புறப்படும்போது அவருக்கு மாலை போட்டு தீபம் காட்டி அவரை வழி அனுப்புகிறோமா?
செய்வதில்லை!
அதுபோலத்தான் ஒரு நடிகரும் சரி, அரசியல்வாதியும் சரி. அவர்கள், அவர்கள் வேலையை தொழிலைச் செய்கிறார்கள். நாம் நம் தொழிலில் கவனம் செலுத்தினால்தான் நாம் பிழைக்க முடியும்; நமக்கு சாப்பாடு கிடைக்கும்!
சினிமா கனவு!
நமது ஊரில் இளைஞர்கள் எல்லாரும் சினிமாவில் சேர்ந்து நடிகராகிவிடலாம், கை நிறைய சம்பாதித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். வீட்டுக்கு வீடு எல்லாரும் நடிகர்களும் நடிகைகளுமாக மாறி விடுகிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உங்கள் அப்பா, நீங்கள், உங்கள் தம்பி, உங்கள் அம்மா, அத்தை, தங்கை எல்லாரும் நடிகர்கள் நடிகைகள் என்று யோசித்துப் பாருங்கள்!
பக்கத்து வீட்டிலும் இப்படியே! ஊர் முழுவதும் எல்லாரும் இப்படி ஆசைப்பட்டு தமிழ்நாடு நடிகை, நடிகர்களால் நிறைந்திருக்கிறது என்றால் பிழைப்பு எப்படி நடக்கும்?
வீட்டிலுள்ள எல்லாரும் உழைத்து அதிகமான நெல்லையோ, வாழைக்காயையோ, மல்லிகைப் பூவையோ உற்பத்தி செய்தால், மிகுந்ததை வெளி நாடுகளுக்கு அனுப்பி நாம் பணம் பெற முடியும். அந்தப் பணத்தை வைத்து நாம் நமக்கு வேண்டிய வெளிநாட்டுப் பொருளை வாங்கிக்கொள்ள முடியும்.
மாறாக, நம் நாடு நடிகர்களாலேயும் வழக்கறிஞர்களாலும், டாக்டர்களாலும், ஆசிரியர்களாலும், காப்பிக் கடைகாரர்களாலும், பார்பர் கடையினாலும் நிறைந்திருக்கிறதென்றால் என்ன ஆகும்? இந்தத் தொழில் எல்லாம் முதலில் கூறிய உற்பத்தி செய்கிறவர்களுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கு, குடும்பத்திற்கு உதவுகிற தொழில்கள்தான். அதாவது பிறருக்குத் தொண்டு செய்கிற தொழில்கள். ஆகவேதான் பொருளாதாரத்தை "உற்பத்தி செய்கிற இனம்" என்றும் அவர்களுக்கு உதவியாக "தொண்டு செய்கிற இனம்" என்றும் இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள்.
நம் நாட்டில் உற்பத்தி என்றைக்கு அதிகமாகிறதோ அன்றுதான் எல்லாரும் அதிகமான வளத்தைக் காண முடியும். எல்லாரும் அந்த அதிக விளைச்சலைப் பங்கு போட்டுக் கொள்ள முடியும். நம் வருமானம் அதிகமாகும்.
எல்லா நாடுகளிலும் உற்பத்திக்கும் தொண்டு வேலைக்கும் ஒரு விகிதம் இருக்க வேண்டும். தொண்டு வேலைக்கு ஆள் அதிகம் இருக்கிறார்கள். உற்பத்திக்குப் போதிய ஆள் இல்லை. நாம் எல்லாரும் வசதியுடன் வாழ வேண்டுமானால் நம் நாடு நிறைய உற்பத்தியாளர்களால் நிறைய வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு பணக்கார நாடாக, பஞ்சாப் போல, குஜராத் போல ஆக முடியும்.
நமது வருமானம் போல இரண்டரைப் பங்கு சம்பளம் அதிகமாக அங்கே பஞ்சாபில் இருப்பவர்கள் பெறுகிறார்கள். அதனால் தான் அந்த மாநிலத்து மக்கள் சொந்த வீடு வைத்துக் கொண்டும், மோட்டார் சைக்கிள், கார் வைத்துக் கொண்டும், நல்ல வேட்டி சட்டை போட்டுக் கொண்டும், வசதியுடன் வாழ்கிறார்கள். நாமோ, நமது ஊர்காரர்களோ அவர்களுக்கு வேலை செய்ய டெல்லிக்கும் பம்பாய்க்கும் போய்க் கொண்டிருக்கிறோம்!
சினிமா! சினிமா!
சமீபத்தில் நான் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். ஒரு புத்தக வெளியீட்டாளரான இளைஞர் சொன்னார் :
"ஐயா! எத்தனையோ நல்ல புத்தகங்கள் போட்டேன். விற்பனை இல்லை; வாங்குவோர் இல்லை. சில மாதம் முன் "சினிமாவில் சேருவது எப்படி?" என்று ஒரு புத்தகம் எழுதினேன். சின்னப் புத்தகம்தான். ஆனால், சில மாதங்களில் அது மூன்று பதிப்பு வெளி வந்துவிட்டது. விற்பனை 'ஓகோ!' என்று போகிறது!" என்றார்.
"சுயமாக உழைத்து முன்னேறுவது எப்படி?", "நீங்களும் எப்படி ஒரு தொழில் அதிபர் ஆகலாம்?" என்று நான் ஒரு இருபது ஆண்டுகளாக தன் முன்னேற்ற நூல்கள் எழுதி வருகிறேன். இப்போது நிறைய பேர் இப்படி எழுதி வருகிறார்கள். இந்தப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன என்று பதிப்பாளர்கள் சொல்கிறார்கள்.
இருந்தாலும் "சினிமாவில் சேருவது எப்படி?" ஓராண்டிற்குள் மூன்று பதிப்பு விற்பனை ஆகிறதென்றால், நம் இளைஞர்கள் உழைத்து முன்னேறுவதில் நம்பிக்கை வைக்கிறார்களா? நிரந்தரமாக வெற்றி பெறுவதில் நம்பிக்கை வைக்கிறார்களா? அல்லது திடீர்ப் பணக்காரராவதில் நம்பிக்கை வைக்கிறார்களா? அல்லது நிரந்தரமில்லாத ஒரு தொழிலில் மோகம் கொண்டு திண்டாட முன் வருகிறார்களா, யோசித்துப் பாருங்கள்!
வாழ்வில் எது முக்கியம், எது சரியான வழி என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தொழில் நிர்வாகத்தில் மெத்தப் படித்தவர்கள் தொழில் வெற்றி பெறுவதன் இரகசியம் "எது முக்கியம்?" என்பதை உணர்வதுதான். அதைத்தான் ஆங்கிலத்தில் 'பிரையாரிட்டி' (Priority) என்று அடிக்கடி சொல்வார்கள். நீங்களும் 'எது முக்கியம்?' என்று நாலுமுறை சொல்லிப் பாருங்கள் ஒரு வேலை தொடங்குவதற்கு முன்னால், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
- டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி


--
*more articles click*
www.sahabudeen.com



கருத்துகள் இல்லை:

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts