லேபிள்கள்

திங்கள், 14 மே, 2012

கடைப்பிடிக்க சில நல்ல பழக்கவழக்கங்கள்


எப்பொழுதும் நோய் வந்த பின் அதினின்று விடுபட பரிகாரம் தேடுவதைக் காட்டிலும், நோய் வராமல் தடுத்துக்கொள்வதே மேல். அதற்கென் உடலை நல்ல முறையில் பாதுகாப்பது மிக மிக அவசியமாகும். அதற்கு நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சில நல்ல பழக்கவழக்கங்களை நாமும் கடைப்பிடிக்க பழகலாமே. தொடர்வோம்.

அவரவர் கடைப்பிடித்து வரும் ஒழுக்கம், பழக்கம், உணவு, உடை, வாழ்க்கையின் சூழ்நிலை இவைதான் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவதற்கும், நோயின்றி வாழ்வதற்கும் முக்கிய காரணங்களாக அமைகின்றன.

தம் வருவாய்க்கு தக்கவாறு எளிய உணவை உண்டு ஆடம்பரமில்லாத வாழ்வைக் கடைப்பிடித்து மன அமைதியோடு வாழ வழி தெரிந்தால் எவ்வித நோயுமில்லாது என்றும் இளமையோடு வாழலாம். அதைத் தெரிந்து கடைப்பிடிக்க உள்ளுக்குள் அடங்காத ஆவல் ஏற்பட வேண்டும்.
 

மலச்சிக்கல், மனச்சிக்கல் இவை இரண்டும் மிக நெருங்கிய நண்பர்கள். ஏன் உடன்பிறந்த சகோதரர்கள் என்று கூடச் சொல்லிவிடலாம். மலச்சிக்கல் ஏற்பட்டால் உடனே மனவேதனையுமம் உண்டாகி விடும். நோய்கள் பலவற்றிற்கும் அடிப்படைக் காரணம் மலச்சிக்கலேயாகும். அதனால் மலச்சிக்கலை ஒழித்துவிட்டால் மனவேதனை ஏற்படாதல்லவா?!

மலம் கழிக்க வேண்டிய உணர்ச்சி ஏற்பட்ட உடன் தாமதம் செய்யாமல் அதனைச் செய்ய வேண்டும். தள்ளிப் போடுதல் கூடவே கூடாது. அப்படித் தள்ளிப்போடுவதுதான் மலச்சிக்கல் உண்டாக முக்கிய காரணம். அதே போல அவசரப்படாமல் நிதானமாகவே மலம் கழிக்க வேண்டும்.

மலச்சிக்கலைத் தவிர்க்க இரவு படுக்கப் போகுமுன் இரண்டொரு வாழைப்பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் வாழைப்பழம் சாப்பிட்டால்தான் மலம் போகும் என்கிற அளவுக்கு பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. படுக்கைக்குப் போகும் போது ஒரு டம்ளர் வெந்நீர் சாப்பிடுவது நலம். காய்ச்சி ஆறிய நீராகவோ அல்லது சுத்தமான பில்டர் வாட்டராகவோ இருந்தால் மிகவும் நல்லது.

பொதுவாக நாள்தோறும் தண்ணீர் நன்றாக பருகி வந்தாலே மலச்சிக்கல் வராது. அவ்வண்ணமே நிரம்ப நீர் குடிப்பதால் சிறுநீரும் மலமும் தாராளமாகக் கழிக்க முடியும். அதனால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

அடுத்து, நாள்தோறும் நாம் உண்ணும் உணவில் ஏதேனும் ஒரு கீரையைப் பயன்படுத்தி வரவேண்டும். தினம் என்றில்லாவிட்டாலும் ஒருநாள் விட்டு ஒரு நாள் கீரை சாப்பிட்டு வந்தால் கூடப் போதும்.

சமையலில் மிளகையும், எலுமிச்சம் பழ ரசத்தையும் தாராளமாக பயன்படுத்திக் கொண்டு, புளியையும் மிளகாயையும் தவிர்த்து விடலாம். அப்படி சாத்தியமில்லாவிட்டால் கூடுமானவரை மிளகாயையும் புளியையும் குறைத்து விடுதல் நல்லது. அடிக்கடி இல்லாமல் அவ்வப்போது மிளகையும் எலுமிச்சைச் சாறையும் பயன்படுத்தி வருதல் வேண்டும்.
 

தக்காளிப்பழம், வெங்காயம் இவைகளை உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உள்ளிப் பூண்டையும் சேர்த்துக் கொள்வது நல்லதுதான். ஆனால் அதன் வாசனை அநேகருக்குப் பிடிப்பதில்லை. இருந்தும் எந்த வகையிலேனும் அது உள்ளுக்குப் போனால்தான் உடம்புக்கு நல்லது.

மன நிம்மதியுடன் உணவை நன்றாகச் சவைத்து சுவைத்து சாப்பிட வேண்டும். வாயில் போட்டுக்கொண்டு லபக்கென்று விழுங்கி விடுதல் கூடாது. மென்று அவசரப்படாமல் விழுங்க வேண்டும்.

உணவுக்கிடையே அவ்வப்போது தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. பாதியளவிற்கு மேல் உணவு உண்டபின் தண்ணீர் குடிக்கலாம். அதையும் தவிர்ப்பது நல்லது. உணவு உண்டு முடித்தபின் நீர் பருகினால் நல்லது. நீரும் போக காற்றுக்கும் வயிற்றில் இடம் எஞ்சியிருந்தால் நல்லது.
 

ஒவ்வொருவதும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதுவும் வெந்நீராகவோ அல்லது காய்ச்சி வடிகட்டிய நீராகவோ இருப்பது மிகவும் நல்லது.

அடிக்கடி காபி, டீ குடிப்பதை நிறுத்திவிட்டு தண்ணீர் பருகுதலே சிறந்தது. அதனால் உடலில் இருக்கும் நோயும் போகும். இனி நோய் வராமலும் இருக்கும். மலச்சிக்கல், தூக்கமின்மை, செரியாமை இவற்றிற்கெல்லாம் தண்ணீர் பற்றாக்குறையே முக்கிய காரணமாகும் என்பதைப் புரிந்துகொண்டால் அனைவருக்கும் நல்லது.
 

தூங்குவதற்கு முன்பும் தூங்கி எழுந்த பின்னும் தண்ணீர் குடிக்கவேண்டும். காலையில் எழுந்ததுமே வாய் கொப்பளித்து முகம் கழுவிவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் நாள் முழுவதும் மலச்சிக்கலும் அதன் காரணமாக ஏற்படும் கை கால் அசதி, முழங்கால மூட்டுகளில் வலி முதலியவையும் அணுகவே அணுகாது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்றுக்கும் கவலைப்படாமல் அமைதியுடன் வாழப் பழகுங்கள். மேன்மை உண்டாகும்.
 

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

Very useful....

sahabudeen சொன்னது…

THANK U MR.rajarathinam krishnan

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts