லேபிள்கள்

வியாழன், 1 டிசம்பர், 2011

உம்ராச் செய்யும் முறை!


எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள்

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எமது இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!.
இஸ்லாமிய சகோதரனே! புனித மக்காவிற்குச் சென்று உம்ராச் செய்வதில் அதிக நன்மை உண்டு. அந்நன்மைகளை அடைந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நாம் மக்காவிற்குச் சென்று உம்ராச் செய்கின்றோம். நாம் செய்கின்ற உம்ரா நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய முறைப்படி இருக்க வேண்டும். அப்போதுதான் அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே உம்ராவிற்கு செல்பவர்கள் இப்பிரசுரத்தை படிப்பதன் மூலம் உரிய முறையில் தங்களது உம்ராக்களை நிறைவேற்றலாம் என எண்ணுகின்றேன்.
உம்ராச் செய்யும் முறைகள்:
உம்ராச் செய்ய நாடுபவன் “மீகாத்” எல்லையை வந்தடைந்ததும் குளித்து, தன்னை சுத்தம் செய்து கொள்வது ஸுன்னத்தாகும். பெண்களும் ஆண்களை போன்று இவ்வாறு குளித்து, தங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய், பிள்ளைப்பேறு இரத்தப்போக்கு ஏற்பட்ட பெண்கள் கூட குளிப்பது ஸுன்னத்தாகும். பின்னர் சிறந்த நறுமணங்களைப் பூசிக் கொள்ள வேண்டும். இது ஸுன்னத்தாகும். இஹ்ராம் அணிந்ததன் பின்னர் அதன் சுகந்தம் இருந்தால் அதில் குற்றமில்லை.
உம்ராச் செய்ய செல்லும் ஆண்கள் தைத்த ஆடைகள் அணியக்கூடாது. தைத்த ஆடைகள் அனைத்தையும் கழற்றி விட்டுப் தைக்காத, சுத்தமான இரண்டு வெள்ளை ஆடைகளை மாத்திரம் அணிந்து கொள்ள வேண்டும். இது தான் ஸுன்னத்தாகும்.
இதற்கு ‘இஹ்ராம் ஆடை’ எனச் சொல்லப்படும். பெண்கள் வழமையில் தாங்கள் அணிகின்ற, விரும்பிய எந்த ஆடையானாலும் அதை அவர்கள் அணியலாம்.
பின்னர் மீகாத் எல்லையில் உம்ராவிற்காக நிய்யத் செய்யுமுன் அவ்விடத்தில் பள்ளிவாசல் இருந்து, கடமையான தொழுகை நேரமாக அது இருந்தால் அத்தொழுகையை நிறைவேற்ற வேண்டும். தொழுகை நேரமில்லையென்றால் பள்ளிக் காணிக்கையான “தஹிய்யதுல் மஸ்ஜித்” இரண்டு ரகாஅத் தொழுது கொள்ள வேண்டும்.
பின்னர், உம்ராச் செய்யச் செல்பவன் மீகாத் எல்லையிலிருந்து “லப்பைக்க உம்ரத்தன் ” என்று உம்ராவிற்காக நிய்யத் செய்ய வேண்டும். மனதால் நிய்யத் செய்வதோடு நாவால் மொழிவதும் ஸுன்னத்தாகும்.
பின்னர் ஆண் பெண் அனைவரும் “தல்பியா” சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து, அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் இதை சப்தமிட்டும், பெண்கள் மற்றவர்களுக்குக் கேட்காமல் தங்களுக்குள்ளே கேட்குமளவிற்கு மெதுவாகவும் தல்பியா சொல்ல வேண்டும்.
மேலும் மக்காவை வந்தடையும் வரை அதிகமாக திக்ர் செய்வதும், அதிகமாக பிரார்த்தனை செய்வதும் ஸுன்னத்தாகும்.
தல்பியா சொல்லும் முறை:
“லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லாஷரீக லக்”
(பொருள்: “நான் வந்து விட்டேன். யா அல்லாஹ் நான் வந்து விட்டேன். நான் வந்து விட்டேன். உனக்கு இணையாக எவரும் இல்லை. நான் வந்து விட்டேன். நிச்சயமாக அனைத்துப் புகழும், ஆட்சியும், அதிகாரமும் உனக்கு மட்டுமே உரித்தது. (மீண்டும் கூறுகிறேன்) உனக்கு இணை எவரும் இல்லை”).
பின்னர் உம்ராச் செய்ய வருபவன் மக்காவில் மஸ்ஜிதுல் ஹராமை வந்தடைந்ததும் தனது வலது காலை வைத்து பிரவேசிக்கும் போது கீழ் வரும் துஆவை (பிராத்தனையை) ஓத வேண்டும். அதாவது:
“பிஸ்மில்லாஹ் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸுலில்லாஹ் அல்லாஹும்மஃக்பிர்லீ துனூபீ வஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக. அஊது பில்லாஹில் அளீம், வபிவஜ்ஹிஹில் கரீம், வபிசுல்தானிஹில் கதீம் மினஷ் ஷைதானிர் ரஜீம்”
(பொருள்: “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர் மீது உண்டாவதாக. யா அல்லாஹ் என் பாவங்களை மன்னித்து உன் கருணையின் கதவுகளை எனக்குத் திறந்து விடுவாயாக. சாபத்திற்கு ஆளான ஷைதானின் தீங்கிலிருந்து தப்பித்துக் கொள்ள சர்வ சக்தியும், உயர்ந்த பார்வையும், முழுமையான அதிகாரமும் படைத்த அல்லாஹ்வின் உதவியை நாடி நிற்கின்றேன்”)
பின்னர் அவன் தல்பியாக் கூறுவதை விட்டு விட்டு நேராக ஹஜருல் அஸ்வத் எனும் கல்லை முத்தமிட செல்ல வேண்டும். அக்கல்லை முத்தமிட முடியாமல் போனால் அதன் பக்கம் திரும்பி கையைக் காட்டுவது போதுமானது. அச்சமயம் அங்கிருப்போருக்கு தொல்லை தரும் விதத்தில் நடந்து கொள்வது கூடாது. மற்றவர்களைத் தள்ளிக் கொண்டு பலாத்காரமாக எதையும் செய்வதற்கு முற்படக் கூடாது. அனைத்தையும் மிக அமைதியாகச் செய்ய வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொடும் போது கீழ் வரும் துஆவை ஓத வேண்டும். அதாவது:
“பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்.அல்லாஹும்ம ஈமானன் பிக, வதஸ்தீகன் பிகிதாபிக, வவஃபாஅன் பிஅஹ்திக, வ இத்திபாஅன் லிஸுன்னதி நபிய்யிக முஹம்மதின் ஸல்லல்லாஸு அலைஹி வஸல்லம்”
(பொருள்: “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்; அல்லாஹ் மிகப் பெரியவன்; யா அல்லாஹ் உன்னை நம்பிக்கை கொண்டு, உன்னுடைய வேதத்தை உண்மைப்படுத்தி, உன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி, உன்னுடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களின் ஸுன்னத்தை பின்பற்றியவனாக இதை நான் செய்கின்றேன்”)
ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட முடியவில்லையென்றால் தனது கையால் சைக்கினை மாத்திரம் செய்து கொள்ள வேண்டும். கையால் சைக்கினை செய்து அக்கையை முத்தமிடக் கூடாது. பின்னர் தவாஃப் செய்ய வேண்டும்.
தவாஃப் செய்யும் முறை:
உம்ரா செய்பவன் தனது இடது பக்கமாக கஃபா இருக்கும் வகையில் தனது வலம் வருதலை “தவாஃப்”பை ஆரம்பிக்க வேண்டும். தவாஃப் என்பது அல்லாஹ்விற்கு வணக்கம் செய்யும் எண்ணத்தில் ஹஜருல் அஸ்வத் கல்லிலிருந்து ஆரம்பித்து இடது புறமாக கஃபாவை ஏழு முறை சுற்றி வருவதாகும். முடிக்கும் போது ஹஜருல் அஸ்வத் கல்லில் முடிக்க வேண்டும். தவாஃப் செய்யும் போது ஒழு அவசியம் .ஏனெனில் தவாஃப் தொழுகையைப் போன்றது. எனவே தவாஃபிற்கு ஒழு அவசியம். ஒழுவின்றி தவாஃப் கூடாது.
பின்னர் அவன் ஏழு தவாஃபுகள் (சுற்றுக்கள்) செய்ய வேண்டும். ருக்னுல் யமானியை அவன் வந்தடைந்ததும் முடிந்தால் அதைத் தொட்டு “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” எனக் கூறவேண்டும். அவ்வாறு தொட்டு தனது கையை எடுத்து முத்தமிடக் கூடாது. ருக்னுல் யமானியைத் தொட முடியவில்லையென்றால் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பக்கம் தனது கையால் சுட்டிக் காட்டவும், தக்பீர் சொல்லவும் கூடாது.
பின்னர் ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதுக்கும் இடையில் அவன் இந்த துஆவை ஓத வேண்டும். அதாவது:
“ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்”
(பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையை விட்டும் எங்களைக் காப்பாயாக!”).
ஹஜருல் அஸ்வதை அடைந்து விட்டால் தனது வலது கையால் அதைத் தொட வேண்டும். முடியா விட்டால் “அல்லாஹு அக்பர்” எனக் கூறி தனது கையால் சுட்டிக் காட்ட வேண்டும். இவ்வாறு ஹஜருல் அஸ்வதிலிருந்து தொடங்கி மீண்டும் ஹஜருல் அஸ்வதில் வந்து முடிப்பது கொண்டு தவாஃபின் ஏழு சுற்றுக்களில் ஒரு சுற்று முடி வடைந்து விடுகின்றது. மீதமுள்ள ஆறு சுற்றுக்களையும் இவ்வாறே சுற்றி, தனது தவாஃபை பூரணப்படுத்த வேண்டும்.
தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிக்க வேண்டும். ஏழு சுற்றுக்களைப் பூர்த்தியாக்கும் வரை முதல் சுற்றில் செய்தது போலவே செய்ய வேண்டும். ஹஜருல் அஸ்வதைக் கடந்து செல்லும் போதெல்லாம் தக்பீர் சொல்ல வேண்டும். இவ்வாறே ஏழாவது சுற்றுக்குப் பிறகும் தக்பீர் சொல்ல வேண்டும்.
முதல் மூன்று சுற்றுக்களிலும் சிறிது வேகமாக ஓடுவது ஸுன்னத்தாகும். இதற்கு அரபியில் “ரம்ல்” எனப்படும். மீதமுள்ள நான்கு சுற்றுக்களில் நடந்தே செல்ல வேண்டும்.
“ரம்ல்” என்பது கால் எட்டுகளை சுருக்கி வைத்து சற்று வேகமாக நடப்பதாகும். இவ்வாறு செய்வது முதல் மூன்று சுற்றுக்களுக்கு மாத்திரம் தான். மேலும் இது ஆண்களுக்கு மாத்திரம் உரிய சட்டமாகும்.
முதல் மூன்று தவாஃபின் போதும் மேல் அங்கியின் (இஹ்ராம் துணியின்) நடுப்பகுதியை தனது வலது அக்குளுக்குக் கீழ் சுற்றிக் கொண்டு வந்து, இரு ஓரங்களையும் இடது தோள் புஜத்தின் மீது போட்டுக் கொள்ள வேண்டும். வலது தோள் புஜம் மட்டும் திறந்திருக்க வேண்டும். முதல்
மூன்று சுற்றுக்களுக்கு மாத்திரம் இவ்வாறு செய்வது ஸுன்னத்தாகும். இதற்கு அரபியில் “இள்திபாஉ” எனப்படும். இதுவும் ஆண்களுக்குரியன் சட்டமாகும்.
பின்னர் தவாஃபை முடித்து விட்டு ‘மகாம் இப்ராஹீம்’ எனும் இடத்திற்குப் பின்னால் நின்று இரண்டு ரக் அத்கள் தொழுவது ஸுன்னத்தாகும். தொழுவதற்கு முன்னால் மேலங்கியை இரண்டு தோள் புஜங்கள் மீதும், நெஞ்சின் மீதும் போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு தொழும் போது முதல் ரக் அத்தில் சூரத்துல் ஃபாதிஹாவும், குல் யா அய்யுஹல் காஃபிரூன் எனும் சூராவும், இரண்டாவது ரக் அத்தில் சூரத்துல் ஃபாதிஹாவும் குல்ஹுவல்லாஹு அஹத் எனும் சூராவும் ஓத வேண்டும். இதுதான் ஸுன்னத்தாகும். கடுமையான நெருக்கடியினால் ‘மகாம் இப்ராஹீம்’ எனும் இடத்தில் தொழ முடியவில்லை யென்றால் பள்ளியின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். பின்னர் ‘ஸம்ஸம்’ நீரை வயிறு நிறைய அதிகமாகக் குடிப்பது ஸுன்னத்தாகும்.  பின்னர் ஸயீ செய்ய வேண்டும்.
ஸயீ செய்யும் முறை:
உம்ரா செய்பவன் ‘ஸயீ’ செய்ய ஸஃபா மலையின் பக்கமாகச் செல்ல வேண்டும். ஸஃபாவிலிருந்து ‘ஸயீ’ செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஸஃபாவிலிருந்து ‘ஸயீ’யை ஆரம்பிக்கும் போது பின்வருமாறு சொல்வது ஸுன்னத்தாகும். அதாவது:
“இன்னஸ் ஸஃபா வல் மர்வத மின் ஷ ஆ இரில்லாஹ்”.
(பொருள்: “ஸஃபா,மர்வா இரு குன்றுகளும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவையாகும்”)
கஃபாவைக் காணுமளவிற்கு ஸஃபா மலையில் ஏற வேண்டும். பிறகு கஃபாவை முன்னோக்கி தனது இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, தான் விரும்பிய துஆக்களைச் செய்ய வேண்டும். அத்துடன் பின்வரும் திக்ரை மூன்று முறை செய்ய வேண்டும்.அதாவது:
“லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்க் வலகுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர். லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹ் அன் ஜஸ வஃதஹ் வநஸர அப்தஹ் வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்”
(பொருள்: “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை ஆட்சியதிகாரம் அவனுக்குரியது. புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது. மேலும் அவன் அனைத்தின் மீதுமாற்றல் கொண்டவன். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் தனித்தவன். அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றினான். தன் அடியாருக்கு உதவினான். அவன் ஒருவனே எதிரிக் கூட்டத்தினரை தோல்வியுறச் செய்தான்”)
பின்னர் அவன் நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும். பிறகு அதிலிருந்து இறங்கி மர்வா மலையை நோக்கிச் செல்ல வேண்டும். அச்சமயம் பச்சை தூணை அடைந்தால் அடுத்த பச்சை தூணை அடையும் வரை முடிந்த அளவு விரைந்து செல்வது சுன்னத்தாகும். இவ்வாறு செய்யும் போது யாருக்கும் இடைஞ்சல் கொடுக்கக் கூடாது. விரைந்து செல்வது ஆண்களுக்கு மாத்திரம் உரியதாகும். பெண்களுக்கு அல்ல.
மர்வா மலையை வந்தடைந்து விட்டால் அதில் ஏறி கிப்லாவை முன்னோக்கி கைகளை உயர்த்தி ஸஃபாவில் கூறியது போலக் கூற வேண்டும். இவ்வாறு ஒருவர் செய்து விட்டால் ஏழு ஸயீக்களில் ஒன்றை அவர் முடித்து விட்டார். மர்வாவிலும் தூஆச் செய்து விட்டு பின்னர் அங்கிருந்து ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும். முந்திய தடவை ஸஃபாவில் இருந்து மர்வாவிற்கு வரும் போது செய்தது போலவே இங்கும் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஏழு தடவைகள் ஸயீ செய்ய வேண்டும். ஸயீயின் போது அதிகமாக துஆக்கள் செய்து கொள்வது ஸுன்னத்தாகும்.
(குறிப்பு: ஸஃபாவிலிருந்து மர்வா வரைச் செல்வது ஒரு முறையாகும். மீண்டும் மர்வாவிலிருந்து ஸஃபா வரை செல்வது ஒரு முறையாகும். இவ்வாறு ஏழு ஸயீக்கள் கணக்கிட்டு செய்ய வேண்டும்.       ஸஃபாவிலிருந்து மர்வாவிற்குச் சென்று, மீண்டும் ஸஃபாவிற்கு வந்தால் தான் முதலாவது ஸயீ முடிவடைகின்றது என மார்க்கத்தில் தெளிவில்லாதவர்களில் சிலர் செய்கின்றனர். இவ்வாறு செய்வது தவறாகும்).
ஸயீயை முடித்துக் கொண்ட பிறகு அவன் தனது தலை முடியை சிரைக்க வேண்டும். அவ்வாறு செய்வது தான் மிகமிக ஏற்றமானது. எனினும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது அருகில் இருக்குமாயின், அப்பொழுது சிரைத்தால் தலை முடி சீச்கிரம் வளராது என்பதனால், தலை முழுவதிலிருந்தும் முடியைக் கத்தரித்துக் கொள்ளலாம். பெண்கள் விரலளவு தமது தலை முடியை கத்தரித்துக் கொள்ள வேண்டும்.
இத்துடன் அவனுடைய உம்ரா முடிவடைந்து விடுகின்றது. இதன் பிறகு அவன் தனது உடைகளை மாற்றிக் கொள்ளவும், நறுமணங்கள் பூசிக் கொள்ளவும், தன் மனைவியுடன் உடலுறவை வைத்துக் கொள்ளவும், இஹ்ராம் அணிந்ததிலிருந்து உம்ராச் செய்து முடிக்கும் வரை அவனுக்குத் தற்காலிகமாக தடுக்கப்பட்ட, இஸ்லாத்தில் அனுமதியுள்ள ஏனைய அனைத்து காரியங்களிலும் ஈடுபடவும் அனுமதியுண்டு.
உம்ராவில் நிகழும் சில தவறுகள்:
அன்பின் சகோதரனே! உம்ராவிற்குச் செல்பவர்களில் சிலர் அறியாமையின் காரணமாக சில தவறுகளை உம்ராவின் போது செய்கின்றனர். அவற்றை இங்கே சுட்டிக் காட்டுவது நல்லது எனக் கருதுகின்றேன். அவற்றில் சில பின்வறுமாறு:
1) உம்ராச் செய்ய ஆகாய மார்க்கமாக பிரயாணம் செய்து வருபவர்கள் தங்களுக்குக் குறிப்பிடப்பட்ட எல்லையில் ‘இஹ்ராம் நிய்யத்’ செய்யாமல் ஜித்தா விமான நிலையத்தை வந்தடைந்ததும் தங்களது உம்ராவிற்கான ‘இஹ்ராம் நிய்யத்’ செய்கின்றனர். இது தவறாகும்.
எத்திசையிலிருந்து வந்தாலும் அவர்களுக்கென ‘இஹ்ராம் நிய்யத்’ செய்ய ஒரு எல்லையை இஸ்லாம் நிர்ணயித்திருக்கின்றது. அவ்விடத்தை அடைந்ததும் அவர்கள் ஆகாயத்தில் இருந்தாலும்  அங்கிருந்தே அவ்வெல்லையைக் கடந்து விடுமுன்னர் ‘இஹ்ராம் நிய்யத்’ செய்ய வேண்டும்.
எல்லையில் ‘இஹ்ராம் நிய்யத்’ செய்யாது எல்லையைக் கடந்து விட்டால் அதற்குக் குற்றப் பரிகாரமாக மக்காவில் ஓர் ஆட்டை அறுத்து ஏழைகளுக்குப் பங்கிட்டு கொடுக்க வேண்டும்.
2) பெண்கள் இஹ்ராமுக்கென வெள்ளை, அல்லது பச்சை போன்ற ஆடைகளைக் குறிப்பிட்டு அணிவது. இது தவறாகும். சரியான முறை யாதெனில் அலங்காரமின்றி, பெண்கள் தாங்கள் விரும்புகின்ற எந்த ஆடையையும், எக்கலரிலும் அணியலாம்.
3) ‘இஹ்ராம் ஆடை அணிவது தான் உம்ராவிற்கு நிய்யத் செய்வது’ என சிலர் கருதுகின்றனர். இது தவறாகும். உம்ராவிற்கு இஹ்ராம் ஆடை அணிவதோடு, அதற்காக நிய்யத்தும் செய்ய வேண்டும்.
4) ‘தல்பியாச் சொல்வது ஹஜ்ஜூக்கு மாத்திரம்தான்; உம்ராவிற்கு அல்ல’ எனக் கருதி, உம்ராவில் தல்பியாவை விட்டு விடுவது. இது தவறாகும். உம்ராவிற்கும் தல்பியாச் சொல்ல வேண்டும்.
5) ‘இஹ்ராம் கட்டியதற்காக ஒரு தொழுகை உண்டு; அதற்காக இரண்டு ரக் அத் தொழ வேண்டும்’ எனக் கருதி தொழுவது. இது தவறாகும். இஹ்ராத்திற்கென ஒரு தொழுகை கிடையாது.
6) ஏழு தவாஃபுகளுக்கும் வலது தோள் புஜத்தைத் திறந்து இருப்பதும், வேகமாக நடப்பதும். இதுவும் தவறாகும். முதல் மூன்று தவாஃபின் போது மாத்திரம் தான் வலது தோள் புஜம் திறந்திருப்பதும், சற்று வேகமாக நடப்பதும் ஸுன்னத்தாகும்.
7) மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் உம்ராவிற்காக இஹ்ராம் நிய்யத் செய்யாது மீகாத் எல்லையை கடந்து விடுவது. இது தவறாகும். மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் “மீகாத்” எல்லையில் உம்ராவிற்காக இஹ்ராம் நிய்யத் செய்து கொள்ள வேண்டும். ஹஜ்ஜில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் செய்வது போன்று கஃபதுல்லாஹ்வைத் தவாஃப் செய்வதைத் தவிர ஏனைய அனைத்து விடயங்களையும் அவள் செய்ய வேண்டும். தான் சுத்தமான பிறகு தான் தவாஃபைச் செய்ய வேண்டும்.
8) தவாஃபை ஆரம்பிக்கும் போதும், ஸயீயை ஆரம்பிக்கும் போதும் நிய்யத்தை, சத்தமாக நாவால் மொழிவது. இது தவறாகும். நிய்யத் செய்வது உள்ளத்தால் மாத்திரம் தான். நாவால் அதை மொழிய வேண்டியதில்லை.
9) ருக்னுல் யமானியை முத்தமிடுவதும், அவ்விடத்தில் தக்பீர் சொல்வதும். இது தவறாகும். ருக்னுல் யமானியை கையால் தொடுவது தான் ஸுன்னத்தாகும். முத்தமிடுவது ஸுன்னத்தல்ல. கையால் தொட முடிய வில்லையானால் அதன் பக்கம் சைக்கினை செய்வதோ, அல்லது அதற்கு நேராக நின்று கொண்டு தக்பீர் சொல்வதோ ஸுன்னத்தல்ல.
10) ஒருவரையெருவர் தள்ளிக் கொண்டு, தவாஃப் செய்பவர்களுக்கு நோவினை கொடுத்துக் கொண்டு ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது. இது தவறகும். யாருக்கும் நோவினையின்றி ஹஜருல் அஸ்வதை முத்தமிட முடிந்தால் முத்தமிடுவது. இல்லையேல் கையால் சைக்கினை மாத்திரம் செய்து கொண்டால் போதுமானது.
11) தவாஃப், ஸயீயின் போது பிரார்த்தனை (துஆ)ப் புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு அதில் உள்ள துஆக்களையும், திக்ர்களையும் ஒவ்வொரு தவாஃப், ஒவ்வொரு ஸயீயின் போதும் கூட்டாகவும், சப்தமாகவும் ஒதுவது. இது தவறாகும். ஏனேனில் இவ்வாறு செய்யுமாறு நாயகம் (ஸல்) அவர்கள் எமக்குக் கட்டளையிடவில்லை. நாயகம் (ஸல்) அவர்கள் எமக்கு கட்டளையிட்டதெல்லாம் தவாஃப், ஸயீயின் போது நாம் விரும்பிய அனைத்தையும் அல்லாஹ்விடம் தனியாகவும் அமைதியாகவும் கேட்க வேண்டும் என்று தான். குறிபிட்டு முதலாவது தவாஃபிற்கு இந்த துஆ, இரண்டாவது தவாஃபிற்கு இந்த துஆ என்றெல்லாம் நாயம் (ஸல்) அவர்கள் எமக்கு கற்றுத் தரவில்லை.
12) தவாஃப் செய்யும் போது ஹிஜ்ர் இஸ்மாயீல் எனும் இடத்திற்குள்ளேயும் நுழைந்து தவாஃப் செய்வது. இது தவறாகும். யாராவது இவ்வாறு தவாஃப் செய்தால் அவருடைய தவாஃப் கூடாது. ஏனெனில் அவன் கஃபதுல்லாவை முழுமையாக தவாஃப் செய்யவில்லை. அதன் சில பகுதியைத் தான் தவாஃப் செய்தவனாகின்றான். எனவே ஹிஜ்ர் இஸ்மாயீல் எனும் இடத்திற்குள் நுழையாமல் தங்களது தவாஃபுகளைச் செய்ய வேண்டும்.
13) ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராகப் போடப் பட்டிருக்கும் கோட்டில் நின்று கஃபதுல்லாவின் பக்கம் முன்னோக்கி, தவாஃப் செய்பவர்களுக்கு நோவினை கொடுத்துக் கொண்டு, நீண்ட நேரம் பிரார்த்தனை புரிவது. இது தவறாகும்.
14) தொழுகைகாக, அல்லது ஒழு செய்வதற்காக, அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக தவாஃபை இடையில் நிறுத்தினால், நிறுத்திய இடத்திலிருந்து தொடராமல் மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே தவாஃப் செய்வது. இது தவறாகும். ஆரம்பத்திலிருந்தே தவாஃபைச் செய்யாமல் எதில் தவாஃபை நிறுத்தினானோ அதிலிருந்தே மீண்டும் தொடங்க வேண்டும்.
15) தவாஃபை முடித்து விட்டு கூட்டாக, ஒருவர் பிரார்த்திக்க மற்றவர்கள் அனைவரும் ‘ஆமீன்’ கூறுவது. இது தவறாகும். இது நபி வழிக்கு முற்றிலும் மாற்றமாகும்.
16) ஸஃபா, மர்வா மலையில் ஏறி, கஃபதுல்லாவை முன்னோக்கி, உரத்த் குரலில், மூன்று தக்பீர்களைச் சொல்வது. இது தவறாகும். திக்ர், துஆ, தக்பீர் ஆகியவைகளை அமைதியாகவும், மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமலும் செய்ய வேண்டும்.
17) உம்ராவை முடிப்பதற்காக தலை முடி வெட்டும் போது தலையில் அங்குமிங்குமாக ஒரிரு முடிகளையோ, அல்லது தலையின் சில பகுதிகளில் சில முடிகளை மாத்திரமோ வெட்டுவது. இது தவறாகும். ஸுன்னத் யாதெனில் தலை முடி அனைத்தையும் சிரைத்துக் கொள்வது.
அல்லது தலையின் எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக முடி வெட்டிக் கொள்வது.
மேலும் எமது சகோதரர்கள் செய்கின்ற முக்கிய தவறொன்றையும் இங்கே சுட்டிக் காட்டுவது மிகவும் பொருத்தம் என நினைக்கின்றேன். அதாவது தங்களுக்காக உம்ராச் செய்யச் செல்லும் அதிகமானோர், தங்களது உம்ராவை முடித்து விட்டு மக்காவில் இருந்தே ஆயிஷாப் பள்ளிக்குச் சென்று மீண்டும் ‘இஹ்ராம் நிய்யத்’ செய்து தங்களுக்காகவும், தங்களது உயிரோடுள்ள, மரணித்த பெற்றோர், உறவினர்களுக்காகவும் பல உம்ராக்களைச் செய்கின்றனர். இது தவறாகும். இது பித் அத்தான (நூதன) செயலாகும். இவ்வாறு நாயகம் (ஸல்) அவர்களோ, நபி தோழர்களோ செய்ததாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இது போன்ற பித் அத்தான செயல்களை செய்யாமல்  எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இஹ்ராமில் ஹராமாக்கப்பட்ட விஷயங்கள்:
  1. ஜிமாஉ செய்வது.
  2. இச்சையுடன் கட்டியணைப்பது, முத்தமிடுவது, இச்சையுடன் பார்ப்பது.
  3. தலை முடிகளையோ, அல்லது உடம்பில் ஏனைய முடிகளையோ, அல்லது நகங்களையோ வெட்டுவது.
  4. திருமணமோ, அல்லது திருமண ஒப்பந்தமோ செய்வது.
  5. வேட்டைப் பிராணிகளைக் கொல்வது, அல்லது அதை கொல்வதற்கு உதவியாக இருப்பது. மேலும் ஹரத்தின் எல்லைக்குள் உள்ள மரங்களை வெட்டுவது.
  6. இஹ்ராம் நிய்யத் செய்ததிலிருந்து உம்ரா முடியும் வரை, அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களை பூசுவது.
  7. ஆண்கள் சேட், தொப்பி, கால்சட்டைகள், தலைப்பாகை, காலுறைகள் போன்றவற்றை அணிவது. பொதுவாக தைத்த ஆடைகளை அணிவது.
  8. பெண்கள் முகத்தை மறைப்பது.
  9. ஆண்களும், பெண்களும் கையுறை அணிவது.
மேற்கூறப்பட்ட விஷயங்களில் நின்றும் தடுக்கப்பட்ட ஏதாவதொன்றை யாராவது மறதியாகவோ, அல்லது அறியாமையினாலோ செய்தால் அவன் மீது குற்றமில்லை. தடுக்கப்பட்ட இவ்விஷயங்களில் ஏதேனு மொன்றை யாராவது வேண்டுமென்றே செய்தால் அவனுக்கு குற்றப்பரிகாரம் உண்டு. குற்றப்பரிகாரமாக கீழ் வரும் மூன்றில் ஒன்றை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது மூன்று நாட்கள் நோன்பு பிடிப்பது, அல்லது மக்காவில் ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது ஓர் ஆடு அறுத்து மக்காவிலுள்ள ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பது எல்லாம் வல்ல ஏக அல்லாஹ் நம் அனைவருடைய உம்ராக்களையும் ஏற்றுக் கொள்வானாக.
அல்லாஹ் மிக அறிந்தவன்,
மூலம்: ஷேய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹ்)
மொழிபெயர்ப்பு: மௌலவி எம்.எச். சேஹுத்தீன் மதனீ.
பிரசுரம் வெளியீடு: அல்-கோபார் இஸ்லாமிய நடுவம், சவூதி அரேபியா.

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts