லேபிள்கள்

செவ்வாய், 23 மே, 2023

இரண்டு வகை மனிதர்கள்


இவ்வுலகில் இரண்டு வகையான மனிதர்கள் உண்டு! ஒன்று நற்காரியங்களுக்கு (நன்மைக்கு) முன்னோடியாகவும், கெட்ட காரியங்களுக்கு (தீயவைகளுக்கு) தடையாகவும் இருப்பவர்கள்.

இன்னொன்று கெட்ட காரியங்களுக்கு (தீமைக்கு) முன்னோடியாகவும், நன்மையான காரியங்களுக்கு தடையாகவும் இருப்பவர்கள்.

"மனிதர்களில் சிலர் நலவுக்கு திறவுகோலாகவும், தீமைகளுக்கு தடையாகவும் உள்ளனர், வேறு சிலர் தீமைகளுக்கு திறவுகோலாகவும் நலவுக்கு தடையாகவும் உள்ளனர், அல்லாஹ் எவரின் கரத்தினால் நலவின் வாயில்களை திறந்து விடுகிறானோ, அவருக்கு சுவசோபனம் உண்டாகட்டும், மேலும் எவன் மூலம் தீமைகளின் வாயில்கள் திறக்கப்படுகிறதோ அவன் மீது நாசம் உண்டாகட்டும் என்று அல்லாஹுவின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), (இப்னு மாஜாஹ்).

((عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ مِنَ النَّاسِ نَاسًا مَفَاتِيحَ لِلْخَيْرِ مَغَالِيقَ لِلشَّرِّ ، وَمِنَ النَّاسِ مَفَاتِيحَ لِلشَّرِّ مَغَالِيقَ لِلْخَيْرِ ، فَطُوبَى لِمَنْ جَعَلَ اللَّهُ مِفْتَاحَ الْخَيْرِ عَلَى يَدَيْهِ ، وَوَيْلٌ لِمَنْ جَعَلَ مِفْتَاحَ الشَّرِّ عَلَى يَدَيْهِ ". أخرجه ابن ماجة ، وابن أبي عاصم في السنة))

நன்மையான காரியமோ அல்லது தீமையான காரியமோ எதுவாகினும் அது மனிதனால்தான் உருவாக்கப்படுகின்றது, எந்த காரியமும் மனிதன் துவங்காமல் அது தானாக உருவாகுவது இல்லை!

இந்த உலகில் நடைமுறையில் இருக்கும் எல்லாக் காரியங்களும் அது இஸ்லாம் அனுமதித்த காரியமாகட்டும் அனுமதிக்காத காரியமாகட்டும் அனைத்தும் துவக்கத்தில் ஒருவரால் துவங்கப்பட்டதுதான். அது சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களிலிருந்து காரியங்களை வடிவமைப்பவர் (Designer) வரை அது ஒருவரால் துவங்கப்பட்டதுதான்.

முதல் வகை
உதாரணமாக: ஏக இறைவனுக்கு (அல்லாஹுவுக்கு) இணைவைத்தலை ஏற்படுத்தியது, அல்லாஹுவின் தூதர் (ஸல்) காட்டாத செயல்களை மார்க்கத்தின் பெயரால் உருவாக்கியது, மதிமயக்கும் மது பழக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தியது, பெண்களின் அரைகுறை ஆடை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது, விபச்சாரம் பரவுவதற்கு காரணமான காரியங்களை துவங்கியது, விரும்பினால் ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கொடுமையை (மேலை நாடுகளில்) சட்டமாக்கியது, ஜாதிகளை உருவாக்கி மனிதர்களுக்குள் பல ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியது, இதுபோன்ற கெட்ட காரியங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.., இந்த அனைத்து தீமைகளும் முதலில் ஒருவனால் துவங்கப்பட்டது. இதற்கு திறவுகோல் அவன்தான். ஒரு கட்டிடத்தின் திறவுகோலை சாவியைக்கொண்டு முதலில் ஒருவன் திறந்த பிறகுதான் அனைவரும் அதன் உள்ளே போகமுடியும். அதற்குத்தான் அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் திறவுகோல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்கள்.

இந்த கொடுமைகளை அவன் துவங்கியது மட்டுமில்லாமல் நன்மையான காரியங்களுக்கு அவன் தடையாகவும் இருக்கின்றான். எது வரை…? அவன் தவ்பா (பாவமன்னிப்பு) தேடி இஸ்லாமிய வழிகாட்டுதலுக்குள் வரும்வரை நற்காரியங்களுக்கு அவன் தடையாக இருக்கின்றான்.

இரண்டாம் வகை:
நன்மையான காரியங்களுக்கு திறவுகோலாகவும் நற்செயல்களுக்கு முன்மாதிரியாகவும் இருப்பது. இதுதான் மிகவும் சிரமமான கஷ்டமான காரியம்.

கெட்ட காரியங்களுக்கு திறவுகோலாக இருப்பதற்கு இந்த உலகில் பலவகையிலும் அங்கீகாரமும் ஆதரவும் எளிதில் கிடைத்துவிடும். நற்செயல்களுக்கு அங்கீகாரமும் ஆதரவும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அவர் பல சிரமங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும், பல துன்பங்களை சந்திக்கவேண்டிவரும். சிலசமயம் பலவிதமான இழப்புகளையும் சந்திக்கநேரிடும் அதனால்தான் அவருக்கு நற்செய்தி என்பதாக அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். என்ன நற்செய்தி:

مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌ ۚ وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ

நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமையின் அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 6:160)

நற்காரியங்களுக்கு திறவுகோலாக இருப்பவருக்கு பத்து மடங்கு நற்கூலியும், தீமைகளுக்கு திறவுகோலாக இருப்பவருக்கு அதே அளவுக்கு தண்டனை (நாசம்) உண்டாகும் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

இவ்வுலகில் செய்யும் நன்மையான காரியங்கள் அனைத்திற்கும் மறுமையில் கூலியை அடைவதற்கு அவர் இறைநம்பிக்கை அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டவராக இருக்கவேண்டும். ஒருவன் அல்லாஹுவை ஏற்றுக்கொள்ளாமல் முஹம்மத் (ஸல்) அவர்களை ஏற்றுக்கொல்லாமல் மக்களுக்கு பலவிதமான நல்லறங்களைச் செய்து சலுகைகளை வாரிவாரி வழங்கி அவன் இமயமலை அளவு நற்செயல்களை கொண்டுவந்தாலும் அதனால் மறுமையில் அவருக்கு எவ்வித பலனும் இல்லை!
oOo

http://www.islamkalvi.com/?p=126571


--

கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts