லேபிள்கள்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

குர்ஆன்ஏன் கொஞ்சம் கொஞ்சமாக அருளப்பட்டது

அகிலங்களைப் படைத்த அல்லாஹ் நுட்பமான ஞானமிக்கவன் இன்னும் அவன் நூண்ணறிவாளன். அவனது செயல்கள் அனைத்திலும் அதிநுட்பமான அவனது ஞானம் நிறைந்துள்ளது. அதில் சிலவற்றை மனிதர்களுக்கு அல்லாஹ் வெளிப்படுத்தியுள்ளான் அதில் ஒன்று தான் குர்ஆன் சிறிது சிறிதாக இறங்கியதில் உள்ள ஹிக்மத்.

குர்ஆனுக்கு முந்திய வேதங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் மொத்தமாக இறங்கியது என்பது தான் பெரும்பான்மை அறிஞர்களின் கருத்து. குர்ஆன் சிறிது சிறிதாக இறங்கியது தொடர்பாக இணைவைப்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தபோது அதனை அல்லாஹ் தெளிவுபடுத்திகூறினான்

மேலும், இறைநிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள்: "இவர் மீது குர்ஆன் முழுவதும் ஒரே நேரத்தில் ஏன் இறக்கி வைக்கப்படவில்லை? ஆம்! இவ்வாறு ஏன் செய்யப்பட்டிருக்கின்றது என்றால், இதனை நல்ல முறையில் உமது இதயத்தில் நாம் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்! மேலும் (இதே நோக்கத்திற்காகத்தான்) இதனை நாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்துடன் தனித்தனிப் பகுதிகளாக்கினோம். (அல்குா்ஆன்:- 25:32)

நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் சன்னம் சன்னமாக குர் ஆன் இறங்கியதில் ஏராளமான ஹிக்மத்துகள் அடங்கியுள்ளது அவைகள் பின்வருமாறு

1. நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தை உறுதிபடுத்துவது
நபி (ஸல்) அவர்கள் தமது அழைப்பை மக்களுக்கு முன் வைத்தபோது அவர்களிடம் வெறுப்பையும், வெருண்டோடுதலையும் கண்டார். முரட்டுத்தனத்தையும் பிடிவாதத்தையும் இயல்பாகக்கொண்ட அம்மக்கள் அவரது அழைப்பிற்கு முட்டுக்கட்டையானார்கள். அவர்களுக்கு ஏராளமான தொல்லைகளை கொடுக்க ஆரம்பித்தார்கள். தான் சுமந்துகொண்டிருக்கின்ற நன்மையை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற அவரது விருப்பத்திற்கு தடை ஏற்படுத்தினார்கள். அதைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்

(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளா விட்டால் இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே! (அல்குா்ஆன்:- 18:6)

சத்தியத்திய மார்க்கத்தில் நபியவர்களின் உள்ளம் உறுதியாக இருப்பதற்காக வஹி நபி (ஸல்) அவர்களுக்கு கட்டம் கட்டமாக இறங்கியது, அதன் மூலம் அறிவீலிகளின் அக்கிரமங்களை பொருட்ப்படுத்தாமல் சத்திய பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டுமென்றும் இதற்கு முந்திய இறைதூதர்களும் இவ்வாறு தான் பொய்ப்படுத்தப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள் ஆனாலும் அவர்கள் அல்லாஹ்வின் உதவி வரும் வரை பொறுமைகாத்தார்கள் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு ஆறுதலளிக்கும் விஷயமாகும்.

(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை; ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப் பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர்; அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது; (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன. (அல்குா்ஆன்:- 6:33-34)

எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர். (அல்குா்ஆன்:- 3:184)

இதுபோன்ற நிலையில் முன் சென்ற நபிமார்கள் பொறுமைகாத்ததைப்போன்று பொறுமைகாக்கவேண்டுமென்று நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்
"நபியே! நம் தூதர்களில் மனஉறுதிமிக்க இறைத்தூதர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! (அல்குா்ஆன்:- 46:35)

நபிமர்களின் வரலாறை கூறுவதிலுள்ள ஹிக்மத் நபியவர்களுக்கு ஆறுதல் வழங்குவது தான்

(நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன. (அல்குா்ஆன்:- 11:120)

குர்ஆனில் கூறப்படும் வரலாறும் நிகழ்வுகளும் நபியவர்களின் கவலையைப்போக்கி அவரை ஆறுதல்படுத்தவும் அவரது அழைப்புப் பணியில் உறுதியாக இருக்கச்செய்து அல்லாஹ்வின் உதவியின் மீது நம்பிக்கைகொள்வதற்கும் தான் எனவே தான் அல்லாஹ் குர்ஆன் ஏன் சிறுக சிறுக இறங்கியது என்று கேள்வி எழுப்பிய முஷ்ரிக்கீன்களுக்கு இவ்வாறு மறுப்புக்கூறுகிறான்

இன்னும்: "இவருக்கு இந்த குர்ஆன் மொத்தமாக ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?" என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம். (அல்குா்ஆன்:- 25:32)

2.  குர்ஆனின் அற்புதத்தை நிலைநாட்டுவது, அதன் மூலம் சவால் விடுவது.
தங்களது வழிகேட்டில் பிடிவாதமாக இருந்த இனைவைப்பாளர்கள் நபியவர்களை சோதிப்பதற்காக ஆச்சரியமான சவாலான பல கேள்விகளை கேட்டார்கள் மறுமை எப்போது,அல்லாஹ்வின் வேதனை உடனே வரவேண்டும் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள் இதற்கெல்லாம் பதிலாகவும் விளக்கமாகவும் அல்லாஹ் இவ்வாறு கூறினான்

இந்நிராகரிப்பவர்கள் (எத்தகைய கேள்விகளைக் கேட்டு அதற்காக ஆச்சரியமான) எந்த உதாரணத்தை உங்களிடம் அவர்கள் கொண்டு வந்த போதிலும் (அதைவிட) உண்மையான விஷயத்தையும், அழகான விளக்கத்தையும் நாம் உங்களுக்கு கூறாமல் இருக்கவில்லை. (அல்குா்ஆன்:- 25:33)

3. குர்ஆன் மனனம் செய்வதை எளிதாக்குவது எழுதவும் படிக்கவும் தெரியாத சமுதாயத்திற்கு அதனை விளங்குவதை எளிதாக்குவது
எழுதவும் படிக்கவும் தெரியாத உம்மி சமுதாயத்திற்கு தான் குர் ஆன் இறங்கியது அம்மக்கள் அதனை தங்களது நினைவில் பதியவைத்துக் கொண்டார்கள்
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (அல்குா்ஆன்:- 62:2)

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ (அல்குா்ஆன்:- 7:157)

எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்திற்கு குர்ஆன் மொத்தமாக ஒரே நேரத்தில் இறக்கியிருந்தால் அதனை மனனம் செய்வது இயலாத காரியமாகும் எனவே அந்த சமுதாயத்தின் நிலைக்கேற்ப அவர்கள் இக்குர்ஆனை புரிந்துகொண்டு மனனம் செய்வதற்கு தோதுவாக சிறுக சிறுக இறக்கப்பட்டது அவ்வாறு இறங்கிய குர்ஆனை ஸஹாபாக்கள் மனனம் செய்தார்கள் அதன் பொருளை விளங்கினார்கள் இன்னும் அதன் சட்டங்களையும் புரிந்துகொண்டார்கள் இதுவே தாபியீன்களுக்கான பயிற்றுவிப்பு முறையாகவும் இருந்தது

عَنْ أَبِي الْعَالِيَةِ قَالَ: قَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: " تَعَلَّمُوا الْقُرْآنَ خَمْسًا خَمْسًا، فَإِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ نَزَلَ بِالْقُرْآنِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسًا خَمْسًا " قَالَ عَلِيُّ بْنُ بَكَّارٍ: " قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ: مَنْ تَعَلَّمَ خَمْسًا خَمْسًا لَمْ يَنْسَهُ " البيهقيُّ في شعب الإيمان1807

உமர் அவர்கள் கூறினார்கள் குர் ஆனை ஐந்து ஐந்து வசனங்களாக கற்றுக்கொள்ளுங்கள் நிச்சயமாக ஜிப்ரீல் அவர்கள் நபியவர்களிடத்தில் ஐந்து ஐந்து வசனங்களைக்கொண்டு இறங்கினார்கள் இதை இமாம் அபுல் ஆலியா அவர்கள் அறிவித்தார்கள் நூல் அல்பைஹகி 1807

அபூ ஸஈத் அல் குத்ரி அவர்கள் காலையில் ஐந்து வசனம் மாலையில் ஐந்து வசனம் என கற்றுக்கொடுக்கக்கூடியவராக இருந்தார்கள் மேலும் மேலும் ஜிப்ரீல் அவர்கள் நபியவர்களிடத்தில் ஐந்து ஐந்து வசனங்களைக்கொண்டு இறங்கினார்கள் என்றும் கூறினார்கள் நூல் இப்னு அஸாகிர்

4, சட்டங்களை படிப்படியாக கடமையாக்குவது
முதலாவதாக குர்ஆன் ஈமானின் அடிப்படைகளை தெளிவுபடுத்தியது அல்லாஹுவை நம்புவது மலாயிக்காவை,வேதங்களை,தூதர்களை, மற்றும் மறுமையை நம்புவது மறுமையில் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது,விசாரணை,கூலி வழங்குதல்,சொர்க்கம், நரகம் என்று இதற்கான ஆதாரங்களை நிறுவி முஷ்ரிக்கீன்களின் உள்ளங்களில் குடிகொண்டிருந்த சிலைவழிபாட்டை வேரறுத்து இஸ்லாமிய அகீதாவை நிலை நாட்டியது இன்னும் நற்பண்புகளை ஏவியது அதன் மூலம் தான் உள்ளங்கள் தூய்மையாகி சீர்பெறும் அத்துடன் மானக்கேடான அருவருப்பான செயல்களை விலக்கவும் செய்தது. இதன் பின்னர் படிப்படியாக ஏனைய சட்டங்களும் கடமையாக்கப்பட்டன. எடுத்த எடுப்பிலேயே இச்சட்டங்கள் கடமையாக்கப் பட்டிருந்தால் மக்கள் அதனை ஏற்றிருக்கமாட்டார்கள். எனவே தான் சட்டங்கள் படிப்படியாக கடமையாக்கப்பட்டன. இதனை அன்னை ஆயிஷா அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

ஒசுஃப் இப்னு மாஹக்(ரஹ்) அறிவித்தார்
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து, '(இறந்தவருக்கு அணிவிக்கப்படும்) 'கஃபன்' துணியில் சிறந்தது எது? (வெள்ளை நிறமா? மற்ற நிறமா?)' என்று கேட்டார். ஆயிஷா(ரலி), 'அடப்பாவமே! (நீங்கள் இறந்ததற்குப் பின்னால் எந்தக் கஃபன் துணியால் அடக்கப்பட்டாலும்) உங்களுக்கு என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! தங்களிடமுள்ள குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள்?' என்று கூறினார். (அன்னை) அவர்கள், 'ஏன்?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'அதனை (முன்மாதிரியாக)க் கொண்டு நான் குர்ஆனை (வரிசைக் கிரமமாக) தொகுக்க வேண்டும். ஏனெனில், (தற்போது) வரிசைப் பிரகாரம் தொகுக்கப்படாமல் தான் குர்ஆன் ஓதப்பட்டு வருகிறது' என்று கூறினார். ஆயிஷா(ரலி), '(வரிசைப்படுத்தப்படாமல் உள்ள குர்ஆன் அத்தியாயங்களில்) எதை நீங்கள் முதலில் ஓதினால் (என்ன? எதை அடுத்து ஓதினால்) என்ன கஷ்டம் (ஏற்பட்டு விடப்போகிறது?)' என்று கேட்டார்கள்.

'முஃபஸ்ஸல்' (எனும் ஓரளவு சிறிய) அத்தியாயங்களில் உள்ள ஒன்றுதான் முதன் முதலில் அருளப்பட்டது; அதில் சொர்க்கம் நரகம் பற்றிக் கூறப்பட்டது. அடுத்து மக்கள் இஸ்லாத்தை நோக்கித் திரும்பி (அதன் நம்பிக்கைகளின் மீது திருப்தியடையத் தொடங்கி)யபோது அனுமதிக்கப்பட்டவை மற்றும் விலக்கப்பட்டவை குறித்த வசனங்கள் அருளப்பட்டன.

எடுத்த எடுப்பிலேயே 'நீங்கள் மது அருந்தாதீர்கள்' என்று வசனம் அருளப்பட்டிருந்தால் அவர்கள், அல்லது, 'விபச்சாரம் செய்யாதீர்கள்' என்ற (முதன் முதலில்) வசனம் அருளப்பட்டிருக்குமானால், நிச்சயம் அவர்கள், 'நாங்கள் ஒருபோதும் விபசாரத்தைக் கைவிடமாட்டோம்' என்று கூறியிருப்பார்கள். (எனவேதான் அல்லாஹ், படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான்.) நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோதுதான் மக்காவில் முஹம்மத்(ஸல்) அவர்களுக்க '(இவர்களின் கணக்கைத் தீர்ப்பதற்காக உண்மையில்) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மேலும், அந்த நேரம் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதும், கசப்பானதுமாகும்' எனும் (திருக்குர்ஆன் 54:56 வது) வசனம் அருளப்பட்டது.

(சட்டங்கள் சம்பந்தமான வசனங்கள் இடம் பெற்றுள்ள) அல்பகரா (2 வது) அத்தியாயமும், அந்நிஸா (4 வது) அத்தியாயமும் நான் (மதீனாவில்) நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களின் மனைவியாக) இருந்தபோதுதான் இறங்கின என்று கூறிவிட்டு, ஆயிஷா(ரலி) தம்மிடமிருந்த அந்தக் குர்ஆன் பிரதியை (இராக் நாட்டவரான) அந்த மனிதருக்காகக் கொண்டுவந்து அவருக்காக ஒவ்வோர் அத்தியாயத்தின் வசனங்களையும் எழுதச் செய்தார்கள்.ஸஹீஹுல்

புஹாரி4993

இவையல்லாத இன்னும் பல ஹிக்மத்துகள் உள்ளன (அல்லாஹ் அளம்)

http://www.islamkalvi.com/?p=124186


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

எடை போடப்படும் நன்மையும்– தீமையும்!

S.A Sulthan   الوزن அல்வஸ்ன் – எடை, ميزان மீஸான் – தராசு, توازن தவாஸுன் – எடைக் கருவி, மனிதன் தனது வாழ்க்கையில தவிர்க்...

Popular Posts